திருமணமாகி 4 மாதம் தான்.. புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு வயது 30. இவர் படப்பை ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் காயத்ரிக்கும் 4 மாதங்களுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

கணவன்- மனைவி இருவரும் திருமணத்துக்கு பின் 3 மாதங்களுக்கு முன்பு பெருங்களத்தூர் புத்தர் தெரு என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

வழக்கம் போல் நேற்றும் பணிக்கு சென்ற சரவணன் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி காயத்ரி துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறித்துடித்தார்.

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டிற்கு விரைந்து வந்து பார்ப்பதற்குள் இவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குடியிருப்புவாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 வயது மகளுடன்கிணற்றில் குதித்த 5 மாத கர்ப்பிணி : மாமனாரும் தற்கொலை முயற்சி!!

மதுரையில்..

மதுரையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த கணவனின் துக்கம் தாங்க முடியாமல், இரண்டு வயது மகளுடன் கர்ப்பிணி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் ஜெயம் நகரைச் சேர்ந்த விவேக் (33), மதுரை செல்லூரைச் சேர்ந்த ஷாலினி (23) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் விஷாகா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஷாலினி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகள் விசாகாவிற்கு 2வது பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தடபுடலாக பிரியாணி உள்ளிட்ட உணவுகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

அன்று இரவே விவேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்கள் தீவிர சிகிச்சையிலிருந்து சிகிச்சை பலனின்றி, இதய நோயால் விவேக் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஷாலினி கணவன் இறந்த துக்கம் தாளாமல் மன வேதனையில் இருந்துள்ளார். உறவினர்கள் ஆறுதல் சொல்லியும் ஆறுதல் அடையாத ஷாலினி இரண்டு வயது பெண் குழந்தை விஷாகாவுடன் இன்று காலை வீட்டின் அருகே உள்ள பராமரிப்பற்ற கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஷாலினி குழந்தையுடன் கிணற்றில் குதித்த சம்பவம் அறிந்து உடனடியாக உறவினர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஷாலினி உடலை மீட்டனர்.

மேலும், குழந்தை விசாகாவின் உடல் கிடைக்காததால், கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து இரண்டு வயது குழந்தை விசாகா உடலை மீட்டனர். இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மகனும் இறந்து மருமகளும், பேத்தியும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த மாமனார் ரவிச்சந்திரனும் தூக்க மாத்திரை உட்கொண்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக்குறைவால் கணவன் உயிரிழந்ததால் மனம் உடைந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண், தனது இரண்டு வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனுடன் கருத்து வேறுபாடு : திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

Msc., Mphil பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கணேஷ் சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் படுத்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போடாததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை தட்டி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து வீட்டின் வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து உள்ளறையில் படுத்து இருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் கதவு திறக்காததை தொடர்ந்து கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நிலை கம்பில் சேலையில் தூக்கு போட்டு சுஜாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கணேசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே விலை உயர்ந்த காபி இதுதான்.. பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் 25000 ரூபாய்!!

இந்தோனேசியாவில்..

காபி இன்று மனித வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. சர்வதேச காபி தினம் அக்டோபர் 01 கொண்டாடப்படுகிறது. ஒரே காபி பலவிதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.

அதனால்தான் மக்கள் எப்போதும் காபியை விரும்புகிறார்கள். கோல்டு காபி, ஐஸ் காபி, பால் காபி என விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் காபி பிரியமான பானமாகிவிட்டது.

அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தை போக்க மட்டுமின்றி, ஆற்றலுக்கான முன் வொர்க்அவுட்டாக சில சமயங்களில் காபி குடிப்பார்கள். உலகம் முழுவதும் காபி பிரியர்களுக்கு பஞ்சமில்லை.

சாமானியனுக்கு டீயை விட காபி விலை கொஞ்சம் அதிகம். அதே நேரம், விலை உயர்ந்த ஓட்டல்களுக்குச் சென்று காபியை ரூ.500 முதல் ரூ.600 வரை கொடுத்து மிகவும் விரும்பி அருந்துபவர்களும் உண்டு.

ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த காபி பற்றி தெரியுமா? ஒரு கப் காபிக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். மேலும் இது என்ன காபி? இதன் சிறப்பு என்ன? அது ஏன் உலகின் மிக விலையுயர்ந்த காபி என்று பெயர் பெற்றது? என்ற அனைத்து கேள்விகளுக்கு இங்கே பதிலை தெரிந்துகொள்வோம்.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபி, ஒரு கோப்பைக்கு சுமார் 24000 இலங்கை ரூபாய் செலவாகிறது. இந்த காபியின் பெயர் ‘கோபி லுவாக்’ (Kopi Luwak). இந்த காபியின் சிறப்பு என்னவென்றால்., அது பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் காபி என்பது தான்.

கோபி லுவாக் உலகின் மிக விலையுயர்ந்த காபி. இந்த காபி ஒரு சிறப்பு பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதே ஆச்சரியம். இன்னும் ஆயிரக்கணக்கான ரூபாய் இதற்காக செலவிடப்படுகிறது.

உண்மையில் காபி இந்தோனேசியாவில் கோபி என்று அழைக்கப்படுகிறது. இந்த காபியை உருவாக்கும் பூனை மலம் பாம் சிவெட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்தோனேசியாவில் லுவாக் என்று அழைக்கப்படுகிறது.

உண்மையில் இந்த காபியை தயாரிப்பதற்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவை. அதே சமயம் வழக்கமான காபியை விட இந்த காபி அதிக சத்தானது என கூறப்படுகிறது.

சிவெட் பூனையின் வயிற்றில் இருந்து காபி கொட்டைகள் வெளியே வரும்போது, ​​அதன் குடலில் உள்ள செரிமான நொதிகளும் அதனுடன் கலக்கின்றன. இந்த காபி மிகவும் சத்தானதாக மாறிவிடும். அதனால்தான் கோபி லுவாக்கின் விலை அதிகமாக உள்ளது.

இலங்கைக்குள் ஊடுருவிய கொலைகார போதைப்பொருள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில்..

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, இதனால் பாதிக்கப்பட்ட இலங்கை யுவதி ஒருவரின் காணொளி ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதோடு Zombie Drugs ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,‘Zombie Drugs’ என்பது விலங்குகளை அமைதிப்படுத்த, கட்டுப்படுத்த, மிருக வைத்தியர்களால் பாவிக்கப்படும் Tranqulizer வகை மருந்துகளை அதிக செறிவில், சட்டவிரோதமாக, ஏனைய போதைப் பொருட்களுடன் கலந்து இந்த Zombie Drug தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘Zombie Drugs’ நியூயோர்க், பிலடெல்பியா, லிவர்பூல், லண்டன் போன்ற உலக பெரு நகரங்கள் இப்போது இந்த zombie வகை போதைப் பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன.அதிலும் குறிப்பாக இள்ம் பராயத்தினர் இதற்கு அடிமையாவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்கால சந்ததியினர் என்பதால் இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த zombie வகை ட்ராக்ஸ்களின் பாவனையால், குறுகிய காலத்திலயே உடல் தசைகளை சிதைத்து விடும். காலப்போக்கில் தசை நார்கள் பலமிழந்து, உடல் இயக்கம் தடைப்பட்டு, சமநிலை இல்லாமல் போகும். தள்ளாடிய நடை வரும். இந்த போதைப் பாவனைகளுக்கு எதிராக தொழிற்படும் , மீட்டெடுக்கும் எந்த மருந்துகளும் தற்போது பாவனையில் இல்லை.

இதனால், இவ்வாறான சொம்பிக்கள் அதிக போதையினால் உயிரிழப்பை உடனடியாக சந்திக்க வேண்டி ஏற்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது ‘Zombie Drugs’ அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாகவே இது மாறியுள்ள நிலையில், நமது நாட்டில்நிலை என்னவென சிந்தித்து பார்க்கவேண்டும் எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள பாடசாலை சிறுவன் : பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை!!

கஹவத்தையில்..

கஹவத்தை – ஓபாத்த பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர் கடந்த (2023.03.13) ஆம் திகதி முதல் 7 மாத காலமாகக் காணாமல் போயுள்ளார் என்று அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.ஓபாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 13 வயதான நாகராஜ் திஷோர்காந்த் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.சிறுவன் ஏற்கனவே ஒரு தடவை காணாமல்போன நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சிறுவன் மீண்டும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில், 076 3718398 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி விபத்து : பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

கொள்ளுப்பிட்டியில்..

கொள்ளுப்பிட்டியில் பேருந்தொன்றின் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் பேருந்தின் சாரதிக்கும், நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இருவரையும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.கொழும்பு கொள்ளுப்பிட்டி – லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரம் விழுந்ததில் 5 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்தநிலையில், கொழும்பு நகரில் உள்ள மரங்களின் உறுதித்தன்மை தொடர்பில் விசேட குழுவொன்று அடுத்த வாரம் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி விபத்தில் பலியான தமிழர் : பிள்ளைகளுடன் கதறும் மனைவி!!

கொள்ளுப்பிட்டியில்..

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் நேற்று மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் மனைவியின் அழுகைக் குரல் பலருக்கு கண்ணீரை வரவழைத்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பாலகிருஷ்ணன் சுப்ரமணியத்தின் மனைவியான பேலியகொடையைச் சேர்ந்த தங்கஜோதி என்பர் தனது கணவரை மீட்டு தருமாறு கோரி கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அழுதுள்ளார்.

தினமும் வேலைக்கு செல்லும் கணவர் இனி வீட்டிற்கு வரப்போவதில்லையா என தனது 2 மகள்களையும் சிறிய மகனையும் பிடித்துக் கொண்டு அழுததாகவும் அவரது புலம்பல் அங்கிருந்தவர்களை கண்ணீரை வரவழைத்ததாகவும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 61 வயதுடைய சுப்ரமணியம் ரத்மலானை மோனா பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.“எனது கணவர் யாரையும் புண்படுத்தும் நபர் அல்ல. குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்.

இப்போது அவர் இல்லாமல் நாம் எப்படி வாழ முடியும் . ஏன் கடவுளே என் கணவர் பயணம் செய்த பேருந்திற்கு இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தினீர்” என மனைவி அழுததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த மற்றவர்களில் ஒருவர் மாலைக்குள் மருந்துவமனையை விட்டுச் வெளியேறியுள்ளார். மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டாக்காலி மாட்டுடன் முச்சக்கர வண்டி மோதியதில் தாய் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளத்தில்..

புத்தளம் – மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை 06) இடம்பெற்ற வீதி விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மூவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

புத்தளம் – சவீவபுரம் பகுதியைச் சேர்ந்த ரிஜான் சித்தி நிஹாரா ( வயது 40) எனும் ஆறு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த அத் தாய் தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புத்தளத்தில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றில் புத்தளம் – மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதிக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அப் பகுதியில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்த போது வீதியின் நடுவே தரித்து நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன் அதில் பயணம் செய்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட இளம் தாயும், இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முச்சக்கர வண்டி சாரதி மற்றும் உயிரிழந்த தாயின் இரண்டு பிள்ளைகளுக்கும் சிறிய அளவிலான காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளம் தாய்க்கு ஏற்கனவே தலைப் பகுதியில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த தாயின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பனவற்றின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் கடற்றொழிலாளர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்!!

மன்னாரில்..

மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.இன்றைய தினம் (07.10.2023) சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.பெரும்பாலும் இவ்வகை மீன்கள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும்.

ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.இவ் வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு, உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவிஸில் இருந்து 40 வருடங்களின் பின் யாழிற்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சுவிஸில்..

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர், 40 வருடங்களின் பின் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது காணிக்குள் புதிதாக முளைத்திருந்த புத்தர் சிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது.உளநாட்டு போர் காரணமாக குடாநாட்டு மக்கள் பல்லரும் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் 40 வருடங்களுக்கு பின்னர் தற்பொழுது அந்த பகுதியானது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.அத்துடன் அப் பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்திற்கு முன்பாக ஒரு அரச மரம் உள்ளதுடன் அந்த அரச மரத்தின் கீழ், ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,”நாங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 40 ஆண்டுக்கு முன்னர் புலம்பெயர்ந்து சுவிஸிற்கு சென்றுவிட்டு, எமது காணிகளை பார்ப்பதற்காக வந்துள்ளோம். இந்த ஞானவைரவர் ஆலயம் எங்களது குல தெய்வம்.

இந்த ஆலயத்திற்கு சற்று தள்ளி முன் பக்கமாக ஒரு ஆலமரம் மாத்திரமே நின்றது. ஆனால் தற்போது ஆலயத்தின் முன் பக்கமாக தற்போது அரச மரம் உள்ளதுடன், அதன் கீழ் புத்தர் சிலையும் உள்ளது.இது நாங்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் நாட்டப்பட்ட மரமாகத்தான் இருக்க முடியும்” என தெரிவித்தனர்.

அந்த பகுதியில் இருந்த இராணுவத்தினர் தமக்கு வழிபட வேண்டிய தேவை இருந்தால் புத்தர் சிலையை வேறு ஒரு இடத்தில் வைத்து வழிபட்டிருக்க முடியும்.ஆனால் அவர்கள் இந்து ஆலயத்திற்கு முன்பாக அரச மரத்தினை வைத்து வளர்த்து, அதன் கீழ் புத்தர் சிலையை வைத்துள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாங்குயிலே.. பூங்குயிலே.. தலையில் சிலிண்டரை வைத்து கரகம் ஆடும் பெண்.. வைரல் வீடியோ!!

இணையத்தில்..

காலையில் எழுந்து குட்மார்னிங் பல்தேய்ப்பது முதல் இரவு பீசா சாப்பிடுவது வரை எல்லாமே செல்பி மயம். இன்றைய இளசுகளுக்கு ஆறாம் விரலாய் கைகளில் வசமாகியிருக்கும் மொபைல் இன்றி வாழ்க்கையே இல்லை. எந்நேரமும் செல்பி , போஸ்ட், லைக்ஸ், ஷேர்ஸ் என ஓடிக் கொண்டிருக்கிறது.

சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார்கள். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டிங். அந்த வகையில் ஒரு பெண் தலையில் சிலிண்டரை கரகம் போல் வைத்து ஆடியுள்ளார். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகமே சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் என ட்ரெண்டாகி வரும்.

சமீபத்தில் துர்கா என்ற பெண்மனி தலையில் சிலிண்டர் வைத்து நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதேபாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்து, கருத்துக்களை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளனர்.

பலரும் இந்த வீடியோக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஏன் இதுபோன்று பாதுகாப்பற்ற சாகசங்களை வீட்டில் செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் : 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி!!

கொழும்பில்..

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகவீனமடைந்ததையடுத்தமையினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் விரைந்து செயற்பட்ட பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக 70 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பேருந்தில் திடீரென சுகவீனமடைந்த சாரதி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த சமிந்த பிரபாத் சரத்சந்திர என்ற 49 வயதுடையவர் எனவும் அவர் பேருந்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி நிலாந்தி நிலவலவினால் சடலத்தின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது பேருந்தில் பயணித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி துஷார பிரதீப் வீரகோன் கூறியதாவது,“மாலை வேலை முடிந்து சுமார் 6.40 மணியளவில் பேராதனையிலிருந்து பேருந்தில் ஏறினேன். ​​

பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன, சுமார் 30 பேர் நின்று கொண்டிருந்தனர். திடீரென அலறல் சத்தம் கேட்டது. முன்னால் சென்று பார்த்தபோது சாரதி ஆசனத்தில் இருந்தவர் ஒரு பக்கம் சாய்ந்து கிடப்பதை பார்த்தேன்.

அவரது கட்டுப்பாட்டை மீறி பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது.இதன் போது பேருந்தில் இருந்த ஒருவர் வந்து சாரதி இருக்கையை நோக்கி சாய்ந்து பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார்.

பேருந்தில் ஒரு மருத்துவரும் பயணித்த நிலையில் அவர் அடிப்படை சிகிச்சை அளித்து, நோயாளியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

முச்சக்கரவண்டியில் அவரை பேராதனைக்கு அழைத்து வந்தேன். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்தது.

இந்த பேருந்து கடுகன்னாவ வளைவுக்கு அருகில் சென்றடைந்த போது ஓட்டுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.சரியான நேரத்தில் பயணி எடுத்த நடவடிக்கையால் 70 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் தனியே நின்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பூநகரி பகுதியிலுள்ள பஸ் நிறுத்தும் இடம் ஒன்றில் நின்றிருந்த பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்று அவரிடமிருந்த,

தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை பெண்ணை கடத்திச் சென்ற மூவர் குறித்த தகவல் இதுவரை இல்லை எனவும் பூநகரி பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ் இளைஞர் உயிரிழப்பு!!

பிரான்ஸில்..

யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து முகவர் ஊடாக காட்டு வழியாக லண்டன் சென்ற போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04.10.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் காடு மற்றும் கடல் வழியாக லண்டன் சென்று குடியேறி வருகின்றனர். இந் நிலையில் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சண்முகராசா டினேஸ் என்ற இளைஞர் லண்டன் செல்லும் நோக்கத்துடன் பயணித்த போது உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டவில்லை சடலத்தை பெறுப்பேற்க உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.குறித்த பயணம் மிகவும் ஆபத்து நிறைந்த பயணம் என்று தெரிவிக்கப்படுகின்றது

ஒரு நிமிடமே பேருந்தை நிறுத்தினோம் : கொள்ளுப்பிட்டி விபத்து தொடர்பில் நடத்துனர் கூறும் விடயம்!!

கொழும்பில்..

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானபோது பேருந்தில் மொத்தம் 36 பேர் வரை இருந்தனர் என அந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினரின் கேள்விக்கு பதில் வழங்கும் போது நடத்துனர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பயணச்சீட்டு வழங்கப்பட்டது 26 பேருக்கு, அதனைத் தவிர பேருந்தில் மேலதிகமாக 10 இற்கும் மேற்பட்டோர் இருந்தார்கள்.பேருந்து தரிப்பிடத்திலேயே பேருந்தினை நிறுத்தியிருந்தோம். ஒரு நிமிடம் மாத்திரமே அந்த தரிப்பிடத்தில் நாங்கள் பேருந்தினை நிறுத்தியிருந்தோம்.

சிறுவர்கள் எட்டு பேர் வரை பேருந்தில் இருந்தனர் என பேருந்தின் நடத்துனர் தொடர்ந்தும் தெரிவித்தார்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மொத்தமாக ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் நட்ட ஈடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.