திருச்சியில் குதிரைப் பால் விற்பனை அமோகம் : 1 லிட்டர் பாலின் விலை எவ்வளவு தெரியுமா!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் குதிரை பால் விற்பனை அமோக வரவேற்பு பெற்று வருகிறது.தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த வாடிப்பட்டியில் இளைஞர் ஒருவர் குதிரைப் பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.

வங்கிப் பணியாளரான பாலசுப்பிரமணியன் நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுப்பது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அத்துடன் தற்போது தன்னுடைய வங்கி பணியை துறந்துவிட்டு முழுநேரமும் தன்னை குதிரை வளர்ப்பில் ஈடுபடுத்தி வருகிறார்.

மேலும் குதிரை சவாரி பயிற்சி அகாடமியையும் திறந்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் குதிரைப் பால் உடல் நலத்திற்கு நலம் தரக்கூடியது என்பதை உணர்ந்த பாலசுப்பிரமணியன் தேசிய குதிரைகள் தினமான டிசம்பர் 13ம் திகதி குதிரை பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.

நல்ல சத்துள்ள குதிரை ஒருநாளுக்கு 1லிட்டர் பால் மட்டுமே தரும் என்பதால், 1 லிட்டர் குதிரை பாலின் விலை 2,500 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளார்.பாலசுப்பிரமணியம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் 100மி.லி முதல் 200 மி.லி என்ற அளவில் விற்பனை செய்து வருகிறார்.

விற்பனையின் தொடக்க கட்டத்தில் சோதனை முறையில் குதிரைப் பாலை வாங்கி சென்ற மக்கள் தற்போது அதன் சுவை பிடித்து போய் வழக்கமாக வாங்கி வருவதாக தெரிகிறது.

தாய் கழுத்தறுத்துப் படுகொலை : சந்தேகத்தின் பேரில் மகள் கைது!!

வெள்ளந்துறையில்..

தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகள் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கஹவத்தை – வெள்ளந்துறையில் கடந்த 13ஆம் திகதி, வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய மகள் இன்று (16.12.2023) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார், இவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தறுத்துக் கொலை செய்து சில மணித்தியாலங்களின் பின்னர் சடலத்தை வீட்டின் பின்னால் கொண்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக்கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக் கழுவி அவர் சுத்தம் செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலையைச் செய்து விட்டு, முற்பகல் 11.40 மணிக்கு தனது பணியிடத்துக்குச் சென்ற சந்தேகநபர், மாலை 3.40 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் சந்தேகநபர் கஹவத்தை பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தாய் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இரத்தினபுரி மோப்ப நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்தது என்றும், மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியார் ஒருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : கதறும் தாய்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (16-12-2023) ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த 16 வயது விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தாயை எதிர்பார்த்து பேருந்து தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன், தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது, பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேருந்தின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும், சிறுவனின் தாய் யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களே அவதானம் : இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டல தளம்பல்நிலை அதிகரிப்பு!!

இலங்கையில்..

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலை விடுமுறைகள்..

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பில் அறித்தல் வெளியாகியுள்ளது. குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 3 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சொத்து வரியை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை!!

சொத்து வரி..

2025ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவதற்கு அடுத்த வருடம் முதல் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவது மிகவும் கட்டாயமானது என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான தலைவர் பீட்டர் போவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன், நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு பின்னரே அதற்கு வரி வசூலிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி விதிக்கப்படும் சொத்தை முறையாக பதிவு செய்திருப்பது அவசியம் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி அறிக்கைக்கமைய, இலங்கை எதிர்பார்த்த வரி வருவாய் இலக்குகளை இதுவரை எட்டாத காரணத்தால், சர்வதேச நாணய நிதியம் இதனைப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாணய நிதி நிதியம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவான கடன் தொகையில் இதுவரை இரண்டு தவணைகளில் 670 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த கடன் தவணைகளை அனுமதிக்கும் முன் அடுத்த மறுஆய்வு அடுத்த மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடையே செய்யப்பட உள்ளது.

2024இல் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் நெருக்கடி!!

இலங்கையில்..

கடந்த வருடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இரண்டு வேளைகள் உணவு உண்பதைப் போல, எதிர்வரும் ஆண்டில் ஒரு வேளை உணவினை மாத்திரம் உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,2023ஆம் ஆண்டைவிடவும் 2024ஆம் ஆண்டு படு பயங்கரமான ஆண்டாக அமையப்போகின்றது. பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைப்போகும் ஆண்டாக அமையப்போகின்றது. மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இருவேளைகள்தான் உண்கின்றனர். இந்நிலைமையும் அடுத்த ஆண்டு இல்லாமல்போகக்கூடும்.

எனவே, அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் ஆணையுடன் ஆட்சியொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன நடக்கின்றது? பொருட்களின் விலைகள் எல்லாம் எகிறிவிட்டன. மக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கள்வர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். விலைமனு கோரல்களில் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. எனவே, இந்நாட்டை மேலும் நாசமாக்காமல் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை : ஜனவரி முதல் மாற்றம்!!

டிஜிட்டல்..

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய நிதியத்துடன் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் பயோமெட்ரிக் தகவல்களின் தரவுகள் அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.முன்னதாக டிஜிட்டல் அடையாள அட்டை விண்ணப்பிப்பதில் 76 சுயவிபர தரவுகள் கோரப்பட்டிருந்தாலும், புதிய டிஜிட்டல் அட்டை பெற 6 தரவுகள் மட்டுமே தேவை.

அதற்கமைய, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் வழங்க வேண்டும்.விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாக பலி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.ஓஷத ஜயசுந்தர என்ற 31 வயதுடைய இலங்கை இளைஞர் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசுக் கார்!!

நானுஓயாவில்..

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று (16.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில் சென்ற சொகுசு காரே சீரற்ற காலநிலை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சொகுசு காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் தொடரும் மழையால் பெருமளவானோர் பாதிப்பு!!

வவுனியாவில்..

தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று (16.12) இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, மாறாஇலுப்பை பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும், சின்னடம்பன் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் இடம்பெயர்ந்த நிலையில் இரு பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நைனாமடு பகுதியில் 02 குடும்பங்களை சேர்ந்த 06 பேரும், நெடுங்கேணியில் 06 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் பொருட்களின் விலைகள் 2 முறையில் அதிகரிக்கும்!!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை..

ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. அதற்கமைய, VAT அதிகரிப்புடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டண அதிகரிப்பு அதிகமாக உள்ளது.

மேலும் மருந்துகள், கோதுமை மாவு, குழந்தை பால் மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பெற்றோல், டீசல் 60 ரூபாவினால் அதிகரிப்பதால், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பினால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

மின்சாரக் கட்டணத்திற்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் போது மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்!!

இலங்கையில்..

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் வசூலிக்கும் கடை குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மையானதென உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் கட்டண ரசீது தேசிய நுகர்வோர் முன்னணியிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இது ஒன்று தான் தெரிந்த விடயமாக பேசப்படுகின்றது. மக்கள் அவசரத்திற்கு சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரை குடிக்கின்றார்கள். இப்படி ஒரு கோப்பை தண்ணீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

இது மிகப்பெரிய அநியாயம். இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக நுகர்வோர் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளோம். நுகர்வோர் சட்டத்தில் கூட இப்படி ஒரு தண்ணீருக்கு பணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. இதற்கு தொழிலதிபர்களை குறை சொல்ல முடியாது.

நாமெல்லாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதனால் அனைவருக்கும் கடினமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு செய்கின்றார்கள்.

எனினும் இதனை அனுமதிக்க முடியாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். இதை இங்கிருந்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும். சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். முறையான கட்டுப்பாடு இல்லாதது தான் இதற்கு காரணமாகும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் பயணிகள் உயிருக்கு உலைவைக்கும் பேருந்து ஓட்டுநர் : வெளியான காணொளியால் அதிர்ச்சி!!

இலங்கையில்..

நாட்டில் வாகன விபத்துக்களால் பலர் அநியாயமக உயிரிழந்து வரும் நிலையில் தமிழர் பகுதியில் இ.போ.ச பேருந்து ஓட்டுநர் ஒருவர் தொலைபேசியில் மூழ்கியபடி பேருந்து ஓட்டும் கானொளி சமுக்கவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் (11.12) பகல் 12.30 மணியளவில் கிளிநொச்சி – வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண்டு சாரதி பேரூந்தை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில், பயணிகளின் உயிரை பற்றி சிந்திக்காது ஓட்டுநரின் தொலைபேசியில் மூழ்கியபடி வாகனம் ஓட்டிச்சென்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று முன்தினம் (11.12.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டப்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் கோசிகன் (33 வயது) என்பரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின் தடை..

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.இருப்பினும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டமை தொடர்பில் ஆராய வௌியக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.