சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் : மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு!!

சென்னையில்..

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 4ம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கன மழையினால் தலைநகரமே ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. மேலும் கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த கன மழைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 4-ம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர் முருகன் உயிரிழந்தார். மூன்று நாட்களுக்கு பிறகு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

நிவாரண முகாமில் இருந்த முருகன், வீட்டில் இருந்த தந்தையைப் பார்த்துவிட்டு வரும் போது நீரில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்பு சேவை இல்லாததால் அவரின் நிலை குறித்து குடும்பத்தினர் தெரியாமலேயே இருந்துள்ளனர். இந்நிலையில், அவரது சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

வவுனியா ஊடான வடக்கிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் நிறுத்தப்படுகின்றது!!

கொழும்பு..

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

வடக்கு தொடருந்து பாதையின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மர்மமாக உயிரிழந்த15 வயதுச் சிறுமி!!

கொலன்னாவவில்..

கொலன்னாவ பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி நேற்றுமுன் தினம் மாலையில் இருந்து காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பெண் ஒருவரின் மோசமான செயல் அம்பலம்!!

மோசடி ..

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 44 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபா முதல் 20 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சீர்திருத்த இல்ல பெண் மேலாளர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – கல்முனை சீர்திருத்த இல்லத்தில் சிறுவன் ஆனந்ததீபன் தர்சாத் உயிரிழந்தமைக்கு காரணமாக பெண் மேலாளர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சிறுவனை விக்கட் பொல்லால் அடித்துக் கொன்ற பெண் போதைக்கு அடிமையானவர் என்றும், நன்னடத்தை இல்ல சிறுவர்களை துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்துபவர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாது போதைப் பொருளை உட்கொண்ட பின்னர் சிறுவர்களை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி துன்புறுத்துபவர் எனவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சாத் எனும் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நவம்பர் 30 ஆம் திகதி குறித்த இல்லத்திலுள்ள கூண்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்மேற்பார்வையாளர் ,பராமரிப்பு நிலையத்தில் சிறுவன் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்துகொண்டதனால், சிறுவன் மீது பொல்லால் தாக்கி அவரை கூண்டில் அடைத்ததாகவும் அதன் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் மேற்பார்வையாளரை சனிக்கிழமை (02) கைது செய்த கல்முனை பொலிசார் அவரை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்ற மூன்று சகோதரர்கள்!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் ஒரே சூழில் பிறந்த மூன்று சகோததர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் சாதாரண தர பரீட்சையில் 25 சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மாபலகமவில் வாழும் அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க ஆகிய சகோதரர்களே இவ்வாறு சித்தி பெற்றுள்ளனர். அதற்கமைய, அனுத 9 ஏ சித்திகளையும் அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 1 பி சித்தியையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்தனர்.

ஒன்றாக பிறந்த மூன்று சகோதரர்களும் நாகொடை ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஒன்றாகக் கற்று 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றனர். காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

வவுனியாவில் பெண்களிற்கெதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரி பேரணி!!

பெண்கள் மற்றும் சிறுமிகளிற்கெதிரான வன்முறைகளை தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் நேற்று(07.12.2023) காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டிவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள்… பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் பொருட்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையான 16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வு ஒன்றை நடைமுறைப்படுத்திவருகின்றோம்.

குறிப்பாக உலகில் அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகும் தரப்பாக பெண்களே உள்ளனர். அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வீட்டினுள்ளே முடங்கிக்கிடக்கும் நிலை தற்போது காணப்படுகின்றது.

எனவே வன்முறைகளை தடுத்து அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் ஆணும்பெண்ணும் இவ்வுலகில் சமமே, பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை இல்லாது ஒழிப்போம், போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயம்!!

வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதிக்கு வாகனம்ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர் அங்கு நின்ற இருவர் மீது விரட்டி விரட்டி வாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் ஒரேகுடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

கடல்தாண்டிச் சென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்!!

மலேசியாவில்..

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3 ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதுடன், தான் பிறந்த மட்டக்கள்ப்பு மண்னுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பி.எம்.எச்.இல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற அக்ஷதா, சர்வதேச மனக்கணக்கு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் 80ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில் 6 வயதுடைய அக்ஷதா போட்டியில் கலந்து கொண்டு 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியும் மாமாங்கம் யுசிமாஸ் மனக்கணக்கு கல்வி நிலையத்தில் மாணவி கல்வி கற்றுவவதாகவும் கூறப்படும் நிலையில் வெற்றிபெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

மகனுக்காக காத்திருந்த மருமகளை துஸ்பிரயோகம் செய்த மாமனார்!!

ஆனமடுவவில்..

தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,

கூலித் தொழில் செய்து வரும் தனது 18 வயது மகனுக்கு , 16 வயது நிரம்பிய சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக இரு குடும்பத்திரும் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் 18 வயதுடைய இளைஞன் தான் திருமணம் செய்ய காத்திருக்கும் சிறுமியை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இளைஞனின் தாயும் கர்ப்பமாக இருந்ததால், தனது தாயை சில நாட்களாக மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சமயத்தில் இளைஞனின் தந்தை, சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சிறுமி, தனது கணவராகபோகும் இளைஞரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (07) ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் உள்ள வீதி ஒன்றில் அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(07.12.2023) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே பாலம் உடைந்து விழுந்ததில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாலம் 2019ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக ஏறத்தாழ 11 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது வரிப்பணத்தில் பாரிய நிதியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் உடைந்தமை தொடர்பில் ஆதங்கம் வெளியிடும் மக்கள், தமது வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உடைந்த பாலத்தை உடனடியாக கரைச்சி பிரதேச சபையினர் நிரந்தரமான அபிவிருத்தி ஊடாக சீர்செய்து தர வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

குறித்த பாலம் உடைந்து விழுந்த நிலையில் காணப்படுவதால், மக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் வீதி மேலும் சேதமடையும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி : தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்!!

பதுளையில்..

பதுளையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை சந்தித்த முதல் நாளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதால் மனம் உடைந்த மாணவி உயிரை மாய்த்துள்ளார். இது தொடர்பில் நண்பிக்கு அனுப்பிய வட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுளை தர்மராஜா மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் நேத்து சாரங்கி என்ற மாணவி அதிகளவு மருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“அம்மா நான் உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கின்றேன். என்னால் எதுவும் செய்து கொள்ளாதீர்கள் அம்மா. கவனமாக இருங்கள், நீங்கள் எனக்கு ஒரு நல்ல அம்மா. நல்ல அம்மாவுக்கு என்னால் நல்ல மகளாக இருக்க முடியவில்லை, மன்னிக்கவும் அம்மா” என வட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி பதுளையில் உள்ள மலைக்கு முச்சக்கரவண்டியில் சென்ற நிலையில், பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை முதல் முறையாக சந்தித்துள்ளார். அங்கு அந்த இளைஞன் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாலை வீடு திரும்பிய மாணவி பாட்டியின் உயர் இரத்த அழுத்த மருந்தை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில், பதுளையைச் சேர்ந்த 23 வயதுடைய அவரது காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில்..

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சலும் இருந்தால் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தாலும் இது பொதுவான வைரஸ் காய்ச்சல் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் டெங்கு வைரஸ் தொற்றிய பின்னரும் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இருமல் மற்றும் சளி ஆகியவை புதிய அறிகுறிகளல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு தவிர, மற்ற வைரஸ் நோய்களும் இந்த நாட்களில் பரவலாக உள்ளன, எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி!!

குருநாகலில்..

குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஹார கவிந்து நெத்மல் பீரிஸ் மற்றும் விஹங்க செனல் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் ஆவார்கள். இவர்கள் மஹதெல்லவின் பாடசாலை நண்பர்களான இருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் விளையாட செல்வதாக கூறிவிட்டு இருவரும் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பம்புகுளிய பகுதியில் உள்ள ஏரி போன்ற நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருவரது ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் மாணவி தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணைகள் இடம்பெறுகின்றது : வலயக்கல்வி அலுவலகம்!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்தது.

வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் மாணவி மீது அதே பாடசாலையினை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன், இருதரப்பும் உடன்பட்டுக்கொண்டமையால் விடயம் சுமூகமாக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உடனடி நடவடிக்கையினை எடுத்த வலயக்கல்வி அலுவலகம் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றத்தினை வழங்கியது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது. இதேவேளை தற்போது அந்த ஆசிரியர் விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்றயதினம் குறித்த மாணவி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மாணவி உறவினர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா வடக்கு கல்விவலயத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த 56 வயது தாய்.. அமெரிக்காவில் நெகிழ்ச்சி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில், 56 வயதாகும் தாய் ஒருவர் மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக, ஒரு குடும்பம் என்றாலே அதில் தாத்தா, பாட்டியின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதில், குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

ஆனால், இங்கு ஒரு குடும்பத்தில் பாட்டியின் பங்களிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு வசிக்கும் நான்சி என்ற 56 வயதாகும் பெண் ஹேக் வெப் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் நான்சி, மகனின் குழந்தைக்கு வாடகைத்தாயாக மாறியுள்ளார்.

மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் நான்சி வாடகைத் தாயாக மாறியுள்ளார். அவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்னா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது, தனது மகன் மற்றும் மருமகளுடன் நான்சி மகிழ்ச்சியாக உள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நான்சி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனாலும் தற்போது இது கவனத்தை பெற்றுள்ளது.