தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்!!

முல்லேரியாவில்..

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான அச் சந்தேக நபர் தனது சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான 48 வயதுடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு சந்தேகநபர் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது ​​பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேகநபர்களிடம் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.51 வயதான பிரதீபா என்ற பெண் கடந்த 27 ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று சிசிரிவி கமெராவை பரிசோதித்த போது அப் பெண் அங்கொடையில் இருந்து கடுவெலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடுவெல நகரில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின் அப் பெண் உணவை வாங்கிக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப் பெண் அன்றிலிருந்தே காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அக் கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.அப் பெண் இவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம் காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது ​​ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளி பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக இலங்கையில் உயிரைவிட்ட இளம் கணவன்!!

மொரகொல்லவில்..

தலாத்துஓய – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 30 வயதான இளைஞனின் சடலம் தனியார் காணியில் உள்ள முள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞனுக்கு திருமணமாகியுள்ள நிலையில் மனைவி வெளிநாட்டில் பணிக்காக சென்றுள்ளார்.

மனைவி இல்லாமல் மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பிரேதப் பரிசோதனை கண்டி பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு!!

இன்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் லீட்டருக்கு 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் லீட்டருக்கு 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 321 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 242 ரூபாவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (01.10.2023) வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது யுத்தத்தின் போது காணாமல் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பாகவும் நீதியான விசாரணைக்கு சர்வதேச விசாரணை தேவை எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சகோதரர்களை தேடும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பரிதாபமாக பலி!!

சென்னையில்..

சென்னை கண்ணகி நகர், 2 அடுக்கு, 54வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் இளைய மகன் செல்வா , தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

அவர்களது வீட்டில் குழந்தைகள் உறங்க கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டிவிட்டுள்ளனர். வீட்டில் தந்தை வேலாயுதம் கண்ணிற்கு மருந்து விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார் .

தாய் தனது மூத்த மகனை வெளியில் அனுப்பி விட்டு வீடு திரும்பினார். இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில், கட்டிவைக்கப்பட்டிருந்த புடவை ஊஞ்சலில் சிறுவன் செல்வா சுற்றி, சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கழுத்தில் சிக்கி கொண்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் செல்வா சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு சிறுவனின் பெற்றோர் கதறி துடித்தனர்.

தகவல் அறிந்து வந்த கண்ணகி நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊஞசல் விளையாட சென்ற சிறுவன் ஊஞ்சலே எமனாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலுள்ள இளம் கர்ப்பிணிப் பெண்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.

மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த அவந்தி கருணாரத்ன என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாவார். அவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் உள் இரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்!!

லிட்ரோ..

இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் உழவு இயந்திரம் புரண்டதில் ஒருவர் பரிதாபமாக பலி!!

திருகோணமலையில்..

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (01.10.2023) காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த மூன்று பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் விழுந்த மகனை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சோகம்!!

தமிழகத்தில்..

நேற்று மிலாடி நபி என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. லீவு விட்டாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் சிலநேரங்களில் இந்த கொண்டாட்டங்கள்விபரீதத்தில் முடிந்து விடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே லக்கிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ், மாணிக்கவள்ளி. இவர்களுக்கு கிஷோர் , கிரண்குமார் என 2 மகன்கள் உள்ளனர். கனமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நேற்று விடுமுறை என்பதால், மாணிக்கவள்ளி தனது மகன்களுடன் அருவியில் குளிக்கச் சென்றார். அப்போது அவர், தனது தோழியான ராதிகாவை அழைத்துக் கொண்டு 4 பேரும் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் கிரண்குமார், ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து தாய் மாணிக்கவள்ளி, உடனடியாக செயல்பட்டு மகனைக் காப்பாற்றி, ராதிகாவிடம் கொடுத்தார்.

கணநேரத்தில் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் மாணிக்கவள்ளியை இழுத்துச் சென்றது. ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். இதுகுறித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணிக்கவள்ளியை சடலமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

தலைமை ஆசிரியை கையை கடித்து குதறிய வேதியியல் ஆசிரியை!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வருகிறது சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஜெயசெல்வி. இவர் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியுள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியையும் ஆபாசமாக பேசியுள்ளார்.

அத்துடன் நில்லாமல் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிசாரை கண்டதும் தப்பியோடிய இளைஞன் விபத்தில் பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வீதியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்!!

இலங்கையில்..

ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் (02) மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ATM இயந்திரங்களுக்கு அருகில் குழந்தையுடன் சிக்கிய பெண் : விசாரணையில் வெளியான தகவல்!!

ஹொரணையில்..

பல நகரங்களில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ATMகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்கும் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஹொரணை பொலிஸார் ATM இயந்திரங்களுக்கு அருகில் யாசகம் பெற்று அந்த பணத்தில் இருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அந்த பெண் பொல்கசோவிட்ட பாலமகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்படும் போது அவருடன் 8 மாத ஆண் குழந்தையும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்து மாதங்களுக்கு முன்னர் பொல்கசோவிட்ட பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் பணிபுரிந்த மாயா, அங்கு பணிபுரிந்த காலத்தில் அழகு நிலையம் வைத்திருக்கும் பெண்ணுடன் போதைப்பொருள் குடித்து பழகியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் யாசகம் பெற்று 2500 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த பணத்தில் தான் ஒரு நாளைக்கு இரண்டு முறை போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருளுக்கு 600 ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனால் ஒரு நாளைக்கு 1200 ரூபாய் போதைப்பொருளுக்கு மட்டுமே செலவிடுவதாகவும் கூறியுள்ளார்.

தனது நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு ATM இயந்திரங்களைச் சுற்றி யாசகத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார். மேலும் தனக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கணவர் தன்னை கைவிட்டு சென்றுவிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர் நேற்று ஹொரணை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொடரும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

காலநிலை..

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் (01.10.2023) 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும்சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானதுதென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடன் தொல்லையால் நேர்ந்த பரிதாபம்.. மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!

புதூரில்..

மதுரை புதூரில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் முன்னாள் ராணுவ வீரரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி விசாலினி. மகள் ரமிசா ஜாஸ்பெல். இவர்கள் வாடகை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ரமேஷ் அதன் பின்பு வீட்டுக்கதவை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கதவை தள்ளி பார்த்த போது அது உள்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர்.

3 பேரும் விஷம் குடித்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்தது. கடனால் மன உளைச்சல் காரணமாக அவர்களின் 3 பேரின் உடல்களை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரமேஷ் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை. போலீசார் அங்கிருந்த 25 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நரிமேட்டில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பெண் தரப்பில் பணம் கேட்டு தொல்லை செய்ததால் தற்கொலை கொண்டதாகவும் அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக தெரிவித்தனர். அந்த பெண் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

தாயை 30 இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த மகள் பரபரப்பு வாக்குமூலம்!!

சிட்னியில்..

50 வயதாகும் தாய் பிரெண்டாவை அவரது மகள் சிட்னி பவல் கொலை செய்துள்ளார். சிட்னி பவல் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச் மாதத்தில் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரெண்டா பவல் சடலமும், பெற்ற மகளே தாயை குத்திக்கொலை செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவியான சிட்னி பவல் பல்கலைக்கழக நடத்தைகளை மீறியதாக கூறி கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் தனது தாய்க்கு தெரியாமல் சிட்னி மறைத்து வைத்திருந்தார்.

எனினும் தாய் பிரெண்டா கண்டுகொண்டதோடு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். இதனால் மகள் ஆத்திரத்தில் தாயை கொல்ல முடிவு செய்தார்.முடிவு எடுத்த வேகத்தில் சிட்னி, தன் கையில் கிடைத்த இரும்பு வாணலியால் தாயின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்த தாயை சமையலறை கத்தியை எடுத்து சராமாரியாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதனால் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓஹியோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது சிட்னிக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2 நாளில் தண்டனை விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.