இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தனிஷா காந்தி (17), 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் படு கெட்டிக்காரியான தனிஷா, நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தனிஷா, காலை பள்ளி இடைவேளையின் போது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார்.
படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அசௌகரியமாக உணர்ந்துள்ளார், உடனடியாக அவரது தோழிகள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தினரும் தனிஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் மாரடைப்பு காரணமாக தனிஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறவும், நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த போது தனிஷா அசௌகரியமாக உணர்ந்துள்ளார், படியில் ஏறவும் முடியவில்லை.
உடனடியாக அவரது தோழிகள் கூறியதும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
தனிஷா அற்புதமான பிரகாசமான மாணவி, மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பம், இதற்காக நீட் தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருந்தார். தனிஷாவின் தாய் கோவிட் தொற்றால் உயிரிழந்துவிட்டார், தந்தை இயற்பியல் ஆசிரியர் என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் பிரயன்ஷ் விஸ்வகர்மா (Priyansh Vishwakarma). பாஜகவில் இவர் முக்கிய பொறுப்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறும் நிலையில், கடந்த 19-ம் தேதி அங்கே பிரபல மாடலாக அறியப்படும் வேதிகா தாக்கூர் என்ற 25 வயது இளம்பெண் பிரயன்ஷை காண அவரது அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்குள்ளும் என்ன விவகாரம் என்று தெரியவில்லை, திடீரென பிரயன்ஷ் தன்னை காண வந்த வேதிகாவை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கிய வேதிகாவை அவர் தனது காரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 26) பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் வேதிகா உயிரிழப்பதற்கு முந்தைய தினம் வேதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது இந்த நிலைமைக்கு காரணம் பிரயன்ஷ் விஸ்வகர்மா தான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் உடனடியாக பாஜகவை சேர்ந்த பிரயன்ஷ் விஸ்வகர்மாவை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது.
இந்த விவகாரம் சூடு பிடிக்கவே, காவல்துறை அவரை கைது செய்து, அவர்மீது 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், வேதிகாவை சுட்டதும் அவர் இறந்துவிட்டதாக எண்ணி, அவரது உடலை வைத்து அவரது காரிலே சுமார் 7 மணி நேரம் சுற்றியிருக்கிறார்.
மேலும் அவரது உடல் உள்ளிட்ட ஆதாரங்களை எப்படி அழிக்கலாம் என திட்டம் தீட்டியிருக்கிறார். ஆனால் வேதிகா உயிருடன் இருப்பதாய் அறிந்த பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு தனது கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் சென்று அனுமதித்து விட்டு திரும்பியுள்ளார்.
அவரது காரில் பாஜக கொடி இருந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிரவலையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இந்த விவகாரம் பெரியதாக மாறிய நிலையில், பிரயன்ஷ் விஸ்வகர்மா பாஜகவை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பாஜகவில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை என்றும் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் பிரயன்ஷ் விஸ்வகர்மாவின் காரில் பாஜக கொடி இருப்பது மட்டுமின்றி, அவர் உருவம் பொறித்த பாஜக பேனரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தவும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
என்னதான் கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும் பொதுமக்கள் அதனை கடைப்பிடித்தால் தான் நன்மை. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரபரப்பான சாலையில் ஒரே பைக்கில் குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சீர்திருத்த சட்டப்படி சிறிய விதி மீறல்களுக்கு கூட கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் இளைஞர்கள் பலர் பைக்கில் சாகசங்கள் செய்தபடி பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்த செயல் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற சாலைகளில் சாகசம் செய்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தாலும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இரு சக்கர வாகனத்தில் 3 குழந்தைகள் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை ஏற்றிக் கொண்டு மும்பையின் பரபரப்பான சாலையில் சென்றது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆபத்தான பயணத்தை முனவர் ஷா என்பவர் மேற்கொண்டு இருந்தார். 2 குழந்தைகள் முன்பக்கம் நின்ற படியும் 3 பேர் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டும், மேலும் இரு சிறுவர்கள் பின்பக்கம் உள்ள கம்பியில் நின்ற படியும் பயணம் செய்தனர்.
இதை சக வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காவல்துறையினர் வாகனத்தின் எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அதன்படி பைக்கை ஓட்டிச் சென்றவர் முனவர் ஷா. இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்ற 7 பேரில் 4 குழந்தைகள் அவரது பிள்ளைகள் என்றும் மீதம் உள்ள 3 பேர் பக்கத்து வீட்டு பிள்ளைகள் எனவும் தெரிவித்துள்ளார்.
காவலரின் மனைவியின் தலையை அவரது மாமனாரே துண்டாக வெட்டி காவல்நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங். 62 வயதான ரகுவீர் சிங்கிற்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி மாமனார் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.
ரகுவீரின் இளைய மகனான கவுரவ் சிங் பருக்காபாத் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக உள்ளார். கவுராவிற்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் இரு மருமகள்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சண்டை மாமனார் ரகுவீருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இளைய மருமகள் பிரியங்கா விதவையாக இருக்கும் தனது மூத்த மருமகளிடம் சண்டை போடுவதை ரகுவீர் தட்டி கேட்டு வந்துள்ளார்.
இவ்வாறு கடந்த திங்கள்கிழமை ஜூன் 26ஆம் தேதி இரவு இதே போல இரு மருமகள்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இடையே புகுந்த மாமனார் ரகுவீரை இளைய மருமகள் பிரியங்கா தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இரவு நடந்த சம்பவத்தால் அவமானம் தாங்காமல் ரகுவீர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மறு நாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்த போது ரகுவீர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து பிரியங்காவின் தலையில் வீசி துண்டாக்கியுள்ளார்.
பின்னர் அங்குள்ள காவல்நிலையத்தில் ரத்தக் கறையுடன் சென்று தாமாகவே சரணடைந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது பிரியங்காவின் கணவர் கவுரவ் தனது காவல்நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.
தொடர்ந்து பிரியங்காவின் உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. சம்பவம் தொடர்பாக மாமனார் ரகுவீரை சிறையில் அடைத்து விசாரித்து வரும் போலீசார், எப்ஐஆரில் கணவர் கவுரவ் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது கீர்த்தி. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் 24 வயது கங்காதரை காதலித்தார் . இதில் கங்காதர் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார்.
அத்துடன் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் கீர்த்தி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர்.
இது குறித்து கீர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கங்காதரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கீர்த்தி உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கீர்த்தியை நேற்று ஜூன் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் . நேற்று காலை 6 மணிக்கு இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.
கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், கீர்த்தி வீட்டுக்கு சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அவருடைய சகோதரர் ஆறுதல் கூறி கங்காதரை பைக்கில் அழைத்து சென்றார்.
திடீரென ஒரு இடத்தில் பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் அருகே தந்தையால் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் – பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக்.
கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் காரில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தாய் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதும், இந்த நிலையில் சிறுவனின் தந்தையே அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகர்கோவில் அருகே பிபினின் நண்பர் வீட்டிலிருந்த சிறுவன் ஆத்விக்கை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நீதியம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் மனைவி அமலோற்பமேரி. இந்தத் தம்பதியின் மகன் சார்லஸ். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் சார்லஸ் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்க, அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியிருக்கிறார்.
அதனால், பணம் கொடுத்தவர்கள் சார்லஸின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர். இதன் காரணமாக மனமுடைந்த அலெக்சாண்டர், அமலோற்பமேரி தம்பதி, திங்கள்கிழமை இரவு விஷம் குடித்திருக்கின்றனர்.
இதை தன்னுடைய மகன் சார்லஸிடமும் செல்போனில் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து விஷமருந்திய நிலையில், இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமலோற்பமேரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகன் பெற்ற கடனுக்காக பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கணவரின் நண்பருடன் தகாத உறவில் இருந்து வந்த இளம் பெண் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல் சத்யாவுடன் ரஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
இருவரும் லிவின் டுகெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜிதாவும் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ரஜிதா வெளிநாட்டிற்கு செல்வது, அதுல் சத்யாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து திரும்பி கேரளாவுக்கு வருமாறு அதுல் சத்யா, ரஜிதாவை வற்புறுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து ரஜிதாவும் ஊர் திரும்பியுள்ளார். இதில் இருந்துதான் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதுல் சத்யாவின் உறவை, ரஜிதா துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதுல் ரஜிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்தனபுரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ரஜிதாவை சந்தித்த அதுல், கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
மேலும் அப்போது ரஜிதாவின் அம்மாவுக்கு வீடியோ கால் செய்தும் அந்தக் காட்சியை காட்டி மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரது உறவும் ரொம்பவே மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரஜிதாவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த அதுல், அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது ரஜிதாவை காப்பாற்ற வந்த அவரது பெற்றோரையும் வெட்டியுள்ளார் அதுல்.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரஜிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதில் அதுல் சத்யாவுக்கும் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரையும் கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவால் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. புனேவின் சதாசிவ் போத் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணும், வாலிபரும் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த இளைஞர் உடனே மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வாகனத்தில் வந்த இளம் பெண்னை தாக்கியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை துரத்திச் சென்றுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பகுதி மக்கள் உடனே அந்த வாலிபரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் போலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முல்ஷி பகுதியைச் சேர்ந்த சாந்தனு லஷ்மன் என்பது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான பெண் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.
அவரை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியை இளைஞர் துரத்தித் துரத்தி தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பமும், நாகரீகமும் எத்தனையோ வளர்ந்து விட்ட போதிலும் பல இடங்களில் மூடநம்பிக்கைகளும் குறைந்தபாடில்லை. மாதம் மும்மாரி மழை பெய்ததாக கதைகளில் படித்துள்ளோம்.
ஆனால் இப்போதெல்லாம் பருவமழையே காலம் தவறி தான் பெய்கிறது. இதுதவிர புயல் மழை எனில் கொட்டி தீர்க்கிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில் மழை பெய்யாமல் விவசாயம் தடைபடுகிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. மழையின் அளவை அதிகரிக்க மூடநம்பிக்கை அடிப்படையில் இந்த செயலை செய்துள்ளனர்.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தை திருமணம் நடத்தினால் மழை பெய்யும்.
இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இதன் பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர். இது குறித்து உள்ளூர்வாசிகள் “கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனம் அடைந்து உள்ளது.
நடப்பாண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த நடைமுறை நமது பாரம்பரியம் தான். காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை” என கூறுகின்றனர்.
2 சிறுவர்களில் ஒருவரை சூர்யதேவன் வேடத்திலும், மற்றொருவரை சந்திரமதியாகவும் வேடமிட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மைதா மாவை வாங்கி வந்தனர். அதன்பிறகு அந்த மாவை கொண்டு அப்பம், ரொட்டி தயாரித்தனர்.
திறந்தவெளியில் சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி நூதன வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் மழை வேண்டி ஆடிப்பாடி அப்பம், ரொட்டியை மக்கள் போட்டி போட்டு எடுத்து சாப்பிட்டனர். இதனால் வருண பகவான் மனமிரங்கி மழை பொழிய வைப்பார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜயகலா மகேஸ்வரனுடன் வானில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாடு வாங்குவதற்காக ஆர்வம் கொண்டிருந்த மல்லாவியை சேர்ந்த நபரிடம் வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பதற்கிருப்பதாக தெரிவித்து பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளனர்.
மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதன்போது மாடுகள் இருந்தால் கூறுங்கள் என மல்லாவியை சேர்ந்தவர் அவரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கு இருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை. ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளர்.
இந்நிலையில் நகைகளை அடைவு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார்.
குறித்த மாடுகளுடன் வேறு இருவரும் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்கச் சென்ற சமயம் மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார். இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.
அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர் மாட்டையும் காணாமல் கொண்டு சென்றவர்களையும் காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார். எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.
இந் நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பத்து இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (28.06.2023) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர்.
இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அயந்தன், வயது 23 என்ற இளைஞரே மரணித்துள்ளார். அவர் இன்று காலை தொழிலுக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (28.06) காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல்,
வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இக் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள்,
வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
அதன் பின்னர் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார் எனினும் மக்கள் கிராம சேவையாளர் இவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில்,
பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளியமையுடன் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.
எனினும் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசிய பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து,
பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார் எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் பதிலுக்கு உடன்படவில்லை என்பதுடன் நான் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
கிளிநொச்சியில் பெண் ஒருவரின் தங்க நகைகள் அபரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த திருடன் நகைகளை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபரை கிளிநொச்சி பொலிஸார் தேடி வருகின்றனர்.