வவுனியா நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கைதுநடவடிக்கை நேற்று (19.11.2025) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்ப்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டநிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் கமராக்கு பின்னால் தமிழர்களை கொன்றவர்களிடம் கைகோர்த்து பழகுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த நபர் பரீட்சையில் எழுத தெரியாமலேயே சித்தியடைந்து விட்டு நாடாளுமன்ற கமராக்கு முன்னாள் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழரின் கலாசாரமான ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கூட நிறுவ முடியாதவரே அவர் எனக் கூறியுள்ளார்.
முகநூலில் ஒழுங்காக தமிழில் கூட எழுத முடியாதவர் தான், நான் சிங்களத்தில் கதைக்கும் போது விட்ட பிழையை பெரிதாகக் கூறினார் என தெரிவித்தார்.
அத்துடன், யாரை திருமணம் செய்துள்ளேன் என கூற முடியாத ஒருவர் எப்படி தமிழ் கலாசாரத்தை மேலோங்க செய்வார் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, இன்று மின்சாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இளங்குமரன் எம்.பி சம்பந்தமில்லாமல் பேசியதை யாரும் நிறுத்தவில்லை எனக் கூறினார்.
அத்துடன், தான் தமிழன், எனக்கு இனவாதம் இல்லை எனவும் தான் சிங்கள மக்களை காதலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, அர்ச்சுனா எம்.பியின் ஒலிவாங்கி நிறுத்தப்பட, நாடாளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை- தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாலம்போட்டாறு கண்டி திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பேருந்தில் ஓடி சென்று ஏறிய போது தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது தலை அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இவ்வாறு உயிரிழந்த பேருந்து நடத்துனர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார வயது (41) குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மிஹிந்தலையில் மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ஓடிய தந்தையே குளவி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஜகத் நிஷாந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளவி தாக்குதலில் இருந்து தனது மகனை பாதுகாக்க தந்தை தனது சட்டையைக் கழற்றி தனது மகனை சுற்றிக் கட்டியுள்ளார்.
ஏராளமான குளவி கொட்டுதல்களால் காயமடைந்த தந்தையை உள்ளூர்வாசிகள் மிஹிந்தலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 11 வயது மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மகனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த நேரத்தில், மகனும் உயிரிழந்த தந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் நள்ளிவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்து இளைஞனை பதிவு திருமணம் செய்து சென்ற நிலையில், இளைஞன் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததை அடுத்து இளைஞன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் புதன்கிழமை வீட்டிற்கு சற்று தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் இளைஞன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞனின் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் நள்ளிரவில் அரங்கேறிய இச்சம்பவம் யாழ்ப்பாணம் அம்மகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் நண்பர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தி, ரூ.300,000க்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமான தம்பதியினரே நேற்று (19) குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய தம்பதியினர் மற்றவர்களின் வட்ஸ்அப் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி நைஜீரிய நாட்டவருக்கு விற்றதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பந்தப்பட்ட நைஜீரிய நாட்டவர் மீது முன்னர் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.
நைஜீரிய நாட்டவரைக் கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட கொழும்பு தலைமை நீதிபதி, சந்தேகநபரை தலா ரூ.500,000 பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது. நேற்று (19) நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
ஜீவனின் பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகளின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்கு திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேவேளை மணமகள் ரா. சீதைஸ்ரீ நாச்சியாரும், ஜீவன் தொண்டமானும் ஒரே வைத்தியசாலையில் 07 வருட இடைவெளியில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி வடக்கு மாகாணத்தில் பதிவான சைபர் குற்றங்களில் 2020: 24 குற்றங்களும், 2021: 577 குற்றங்களும், 2022: 654 குற்றங்களும், 2023: 472 குற்றங்களும், 2024: 1,539 குற்றங்களும், மேலும், 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 2,368 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல், நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பொலிஸ் தலைமையகங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் வெளிப்படுத்தினார்.
மதுரை சிக்கந்தர் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன், மனைவி, திடீரென நாய் குறுக்கே வந்ததில் நடுரோட்டில் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பு–பத்மாவதி தம்பதியினர் அலங்காநல்லூர் நோக்கி நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.
இவர்களது இருசக்கர வாகனத்தில் காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது வாகனம் மோதி, இருவரும் கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் அதிவேகத்தில் மோதியது. இதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவர் உடல் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கியது.
மனைவி பத்மாவதி தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைப் பலனின்றி பத்மாவதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் மோதிய நாயும் இறந்தது. இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாலும்,
மதுரை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை சரிவர நடைமுறைப்படப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன என்று கூறுகின்றனர்.
ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(25). அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) எனும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மதுராந்தகத்தில் வீடு எடுத்து தங்கி வந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, மதுமிதா தொடர்ந்து செல்போனில் யாரோ ஒருவருடன் பேசுவதாக சரணுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மனைவியை பலமுறை கண்டித்தும், மதுமிதா அதையே தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தேகத்தின் காரணமாக சரண் மனதில் தாங்க முடியாத கோபத்தை வளர்த்துக் கொண்டு, மனைவியை இறுதியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.
சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்கிறோம் எனக் கூறி மதுமிதாவை ஆனந்தமங்கலம் அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சரண், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு விட்டார்.
சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்ததைப் பார்த்த சரண் அங்கிருந்து ஓடி தப்பினார். தகவல் பெற்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் தொடர்பு தொடர்பான சந்தேகத்தின் காரணமாக நான்கு மாதங்களே ஆன காதல் திருமணம் இப்படியாக கொடூரமாக முடிவடைந்தது மதுராந்தகம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இன்றும் தங்கம் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனபடி நேற்று புதன்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,813 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் சித்தாப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (29) தனது மனைவி ரோஜா (27) மற்றும் அவருடைய பெற்றோர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவிட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.
கணவர் கடந்த 12 ஆண்டுகளாக மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும், குடிப்பழக்கம் மற்றும் உடலுறவு பிரச்சனைகள் காரணமாக இருவரில் பிரிவு ஏற்பட்டது.
ரோஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மற்றும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சிரஞ்சீவி கோர்ட்டில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்க முயன்றதனால், அங்கு இருந்த வக்கீல்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, பின்னர் போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின் பின்னர் சிரஞ்சீவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) மூவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா நொச்சிமோட்டை ஆற்றுக்குள் வீழ்ந்து கார் ஒன்று இன்று (20.11.2025) விபத்திற்குள்ளாகியது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ் திசைநோக்கி சென்றுகொண்டிருந்த கார் நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்தது.
குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த விபத்தினால் அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாயில் வெடிப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் நீர் வெளியேறி வருகின்றது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பாரதி முன்பள்ளியின் கலை விழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா மாநகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாத்தறை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் விஜயரகுநாதன் ஸ்ரீவிசாகன்,
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெனிற்றா சியாமினி செபஸ்ரியாம்பிள்ளை, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் நந்தசேனா சத்தியதேவி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பபிரிவு உப அதிபர் புஸ்பகுமார் மாலதி,
கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் ஜெகதீபன் நிரஷஞ்சனா, மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிவராஜா பிரிந்திகா, பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் இராசலிங்கம் இளம்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்குத் தேவையான அதிவேக சார்ஜ் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக PRO AUTO PARK நிறுவனம் அதிவேக சார்ச் செய்யும் இயந்திரத்தினை நிறுவியுள்ளது.
படிப்படியாக மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை அவற்றுக்கான சார்ஜ் நிலையங்கள் இன்மையினால் வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்களும் வவுனியா ஊடாக வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கும் வாகனத்தினை அதிவேகமாக சார்ஜ் செய்யும் கேள்வியும் அதிகரித்துள்ளது.
இதனால் வவுனியா மாவட்டத்தில் வரவேற்பு இடத்தினை அண்மித்த பகுதியான ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ( வன்னி இரானுவ முகாம் முன்பாக) அமைத்துள்ள PRO AUTO PARK தமது நிறுவனத்திற்கு முன்பாக அதிவேகமாக வாகனத்திற்கு சார்ஜ் மேற்கொள்ளும் வசதியினை கொண்ட தன்னியக்க இயந்திரத்தினை நிறுவியுள்ளனர்.
வீடுகளில் சார்ஜ் செய்யும் சமயத்தில் அதிகளவில் நேரம் விரயமாகுவதுடன் மின்சார கட்டணமும் அதிகளவில் செலவாகும். இவ்வியந்திரம் மூலம் வாகனத்திற்கு சார்ஜ் செய்யும் போது நேரமும் , பணமும் சேமிக்கப்படும் என்பதுடன் வாகன பேற்றரியின் ஆயுள் காலமும் நிடித்து நிலைக்கும்
60KW சார்ஜ் தன்மையினை கொண்ட இவ் இயந்திரம் மூலம் 20 தொடக்கம் 30 நிமிடங்களுக்குள் வாகனத்தினை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் . மேலதிக விபரங்களுக்கு 0777123450 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.