வவுனியாவிற்கு நாளை வருகைதரும் ஜனாதிபதி : மன்னார் வீதியில் அவசரமாக இடம்பெற்ற திருத்தப் பணிகள் : காணாமல் போன குழிகள்!!

மன்னார் வீதி..

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட அவசர புனரமைப்பு நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் காணாமல் போயுள்ளன.

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை (11.02) விஜயம் செய்யவுள்ளார்.

இதனையடுத்து வவுனியாவில் இருந்து மன்னார் வீதி ஊடாக பல்கலைக் கழகம் செல்லும் வரை உள்ள பகுதியில் வீதி புனரமைப்பின் போது நீண்ட நாட்களாக திருத்தப்படாது விடப்பட்டிருந்த பகுதிகள் மழைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக திருத்தப்பட்டு வீதிகளில் குழிகளின்றி மட்டப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் மன்னார் – வவுனியா வீதி புனரமைப்பின் போது முழுமை பெறாது காணப்பட்ட 7 இடங்கள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் தற்போது சிரமமின்றி மக்கள் பயணம் செய்யப் கூடியதாகவும் உள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை ஜனாதிபதி விஜயம்!!

ஜனாதிபதி விஜயம்..

வவுனியாவிற்கு நாளை (11.02) ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸ விஜயம் செய்யவுள்ளார். வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கே விஜயம் செய்யவுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைகழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது. இதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது முன் அனுமதி பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளாவிய ரீதியில் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற் சங்கங்களைச் சேர்ந்தோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கள் கிழமை முதல் பணிபுறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (10.02) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் சுகாதார சேவையைச் சேர்ந்த 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பளப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வேண்டும், சுகாதார நிர்வாக சேவையை நிறுவுக, உரிய காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்கு, சம்பள முரண்பாட்டினை நீக்கு,

மருந்துகளின் விலைகளை உடனடியாக குறை’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை முன் வைத்து கோசங்களை எழுப்பியதுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், தமது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காது விடின் தமது போராட்டம் தொடரும் எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நண்பனின் மனைவியை மறுமணம் செய்த இளைஞர் : குவியும் பாராட்டுகள்!!

கர்நாடகா..

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சேத்தன் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மனமுடைந்து போன அம்பிகா, தற்கொலைக்கு முயன்றார், இதிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ் காப்பாற்றினர். மேலும் சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவிக்கவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பழமையான நிழல் தரு மரங்கள் அழிப்பு!!

நிழல் தரு மரங்கள்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்பட்ட பழமையான நிழல் தரு மரங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது தற்போது மரநடுகை அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பதிலீடான எந்தவொரு மர நடுகையுமின்றி வவுனியா புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி முன்பாக காணப்பட்ட பழமையான மரங்கள் பல கடந்த சில நாட்களாக வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

பயணிகளுக்கு பயன்பட்ட வீதியோர நிழல் மரங்களே இவ்வாறு வெட்டிச் செல்லப்படுகின்றன. வவுனியாவிற்கு அழகு சேர்ப்பதாகவும், அடையாளங்களாகவும் காணப்பட்ட பழமையான மரங்களே அழிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயம் ஒன்றின் தேர் பாதையில் காணப்பட்ட மரம் ஒன்று வெட்டப்பட்டபோது வவுனியா பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இங்கு வீதியோரமாக காணப்படும் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது. இது தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தம்மால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை. குறித்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது எனத் தெரிவித்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, பதில் வழங்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் எவரும் அலுவலகத்தில் இல்லை எனத் தெரிவித்தனர்.

வவுனியா பிரதேச செயலாளர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பேயில்லை : வெளியான உறுதியான தகவல்!!

தங்கத்தின் விலை..

தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில்,

சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அதேநேரம் இலங்கையின் நாணயப்பெறுமதி டொலருக்கு நிகராக குறைந்த நிலையில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கையை முன்வைத்து தாதியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு!!

பணிப் பகிஸ்கரிப்பு..

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்கள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று (07.02) பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போது ருபா 3000/= ஆக உள்ள விசேட கடமைக்கொடுப்பனவை ரூபா 10000/= ஆக உயர்த்துதல் , மேலதிக நேர கொடுப்பனவு கணிக்கும் போது சம்பளத்தின் 1/80 ஆக கணக்கிடல்,

தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல்,

ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டை தீர்த்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன் வைத்து இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தாதியர்களின் இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை , நோயாளர் விடுதிகள் என்பனவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு : மோப்ப நாயுடன் பொலிசார் தீவிர விசாரணை!!

நகை மற்றும் பணம் திருட்டு..

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று ((07.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் உறவினர் ஒருவரின் பூப்புனித நிராட்டு விழாவிற்கு காலை சென்றிருந்தனர்.

அயல் வீட்டாரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தமையால் கடந்த சில நாட்களாக வீட்டில் இருக்கவில்லை.

இதனையறிந்த திருடர்கள் பட்டப்பகலில் மதில் ஊடாக குறித்த வீட்டிற்குள் நுழைந்து, படி மூலம் வீட்டின் மேற் கூரைப்பகுதிக்கு சென்று சமையலறை ஓட்டை அகற்றி அதனூடாக உட்கூரைப் பகுதியை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள்.

நுழைந்தவர்கள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் நகை பணம் என்பவற்றை சல்லடை போட்டு தேடியுள்ளதுடன், வீட்டில் இருந்த நான்கு பவுண் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு கதவினை திறந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்ற வீட்டார் வீட்டை திறந்த போது அங்கு பொருட்கள் பரவிக் கிடந்ததுடன், சமையலறை கூரை உடைக்கப்பட்டும், கதவு திறக்கப்பட்டும் இருந்ததை அவதானித்துடன் நகை மற்றும் பணம் திருடப்பட்டு இருந்தமையையும் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தெரிவித்தையடுத்து அவர்கள் ஊடாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் தலையில் வெட்டுக் காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் மீட்பு!!

செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07.02) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (06.02) மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற இளம் குடும்பஸ்தர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு பிணைவழங்கியது!!

குண்டுகளை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.02) பிணை வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் பொலிஸாரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி.எச்.ஆர்.டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது. இந் நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபைக்கு குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7:1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.

இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ.கேதீஸ்வரன் ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் பதில் நீதிபதி க.தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியா – பம்பைமடு பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் கட்டுப்பாட்டையிழந்து விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுனள்ளனர். இன்று (07.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி சென்ற ஹன்ரர் ரக வாகனம் ஒன்று வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழகம் முன்னால் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஹன்ரர் வாகனத்தின் சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பணத்தகராறால் நேர்ந்த விபரீதம் : சந்தேகநபரை தேடி பொலிஸார் வலை வீச்சு!!

தலவாக்கலையில்..

தலவாக்கலையில் நபரொருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தலவாக்கலை, வட்டக்கொடை – மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முருகையா சரவணன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணத்தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்!!

வெள்ளவத்தையில்..

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம் தொடர்பில் மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம், காணாமல் போன மாலைதீவைச் சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளையில் வசித்து வந்த 24 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந் நிலையில் வெள்ளவத்தை பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களில் ஒன்று மாலைதீவு பிரஜையுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றைய சடலத்தை இதுவரை பொலிஸார் அடையாளம் காணாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

எரிபொருளின் விலை..

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும்,

ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு : பொலிஸார் விசாரணை!!

எரிவாயு அடுப்பு வெடிப்பு..

வவுனியா கூமாங்குளம் இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் இரண்டாம் குறுக்குத் தெரு உள்ள வீடு ஒன்றில் ராமசாமி நந்தகோபால் என்பவர் தனது சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது இன்று (06.02) காலை திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை

இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.