யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

விபத்து..

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி செட்டியார் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞருடன் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளதாகவும், வீதி அபிவிருத்தி நிறைவடைந்த போதும் வீதியின் ஓரத்தில் போடப்பட வேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவத்தில் வட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன்,

அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் குளிர்பான பொருட்களை ஏற்றி வந்த லொறியுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதியதில் விபத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று (12) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, குளிர்பான பொருட்களை மன்னாரிற்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கூராய் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாந்திரீக நம்பிக்கையால் காவு கொள்ளப்பட்ட சிறுவன் : பரிசோதனையில் வெளிவந்த தகவல்!!

சிறுவன்..

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை சிறுவனை பெற்றோர் அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தி வந்துள்ள நிலையிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாகவும் அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சிறுவனின் தந்தை மற்றும் பாட்டியை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், உயிரிழந்த சிறுவனின் தாயை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் கொரோனா மரணங்கள்!!

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,754 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,259 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 625,804 ஆக அதிகரித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை!!

காதலர் தினத்தை முன்னிட்டு..

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.

குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காலை 9.00 மணிக்கு நடத்துகின்றன.

கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் மனிதாபிமான செயல்பாடு!!

மனிதாபிமான செயல்பாடு..

வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸ இன்று (11.02.2022) காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பைமடு இராணுவ சாவடிக்கு அருகாமையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் சம்பவ இடத்தில் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணோருவர் மயங்கி வீழ்ந்தமையினையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கட்டளைக்கினங்க பாதுகாப்பு கடமையில் நின்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி வீழ்ந்த பெண்ணிற்கு தண்ணீர் வழங்கியதுடன்,

அவரினை கைகளினால் பிடித்து முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவியும் விட்டார். அத்துடன் சக மற்றுமொரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அட்டை ஒன்றை எடுத்து அவருக்கு காற்றும் வீசிவிட்டுக் கொண்டிருந்தார்.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி உடனடியாக அவசர நோயாளர் சேவை பிரிவுக்கு தகவல் வழங்கி அன்புலன்ஸ் வண்டியினை வரவழைத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தனது வாகனத்தில் இருந்த தண்ணீர் போத்தல்களையும் வழங்கினார்.

மேலும் போராட்டம் நிறைவுற்றதும் அவர்களுக்கு கொரோனா தொற்று நீக்கி மருந்தும் வழங்கினர். வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் செயற்படும் பொலிஸாரின் இவ் மனிதாபிமான செயற்பாடுகள் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழ செய்யும் வகையில் அமைந்திருந்ததது.

வவுனியாவில் ஜனாதிபதி : “விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும்”!!

ஜனாதிபதி..

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படுகிறது.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கப்படுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல, மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும்.

இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில்நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர்வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கின்றோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும், அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் எனத்தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளத்தில் காருடன் பேரூந்து மோதுண்டு விபத்து : ஐவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (11.02.2022) மதியம் காருடன் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் கனகராயன்குளம் பகுதியில் வீதியில் மறுபக்கம் மாறமுற்பட்டுள்ளது.

இதன் போது அதே வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாதையினை விட்டு கீழிறங்கி அருகேயிருந்த ஓர் காணியினுள் புகுந்தது.

இவ் விபத்தில் ஐவர் காயமடைந்ததுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வருகைத்தந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : பலப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு!!

போராட்டம்..

வவுனியா பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ விஜயம் செய்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் போராட்டம் ஒன்று இன்று (11.02) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி சென்றிருந்த நிலையில் கறுப்பு கொடிகளுடன் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழகம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர்.

இதன்போது பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பம்பைமடு சோதனை சாவடிப் பகுதியில் வைத்து பல்கலைக்கழப் பகுதிக்கு செல்ல முடியாதவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸ் தடுப்பை உடைத்து செல்ல முற்பட்டமையால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும், போர்க்குற்றவாளியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, சர்வதேச விசாரணையே தேவை’ என அவர்கள் கோசம் எழுப்பயதுடன், பொலிசாருடன் கடும் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது, எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரயை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா,

எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள், நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று பொலிசாரை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஐனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும்,

அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்த போதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் வருகை தந்து, குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை. எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன், கொலைக்குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுது கோசமிட்டனர். அதில் ஒருவர் மயங்கி விழுந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மக்கள் குறைகேள் சந்திப்பு!!

ஜனாதிபதி மக்கள் குறைகேள் சந்திப்பு..

வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இன்று (11.02) காலை 10 மணிக்கு வவுனியா பல்கலைக் கழகத்தின் விடுதியில் அமைந்துள்ள மைதானத்தில் விசேட உலகுவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், மற்றும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஜனக நந்தகுமார ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

இதனையடுத்து மைதானப் பகுதிக்கு வருகை தந்திருந்த மக்களிடம் காணிப்பிரச்சனை, விவசாயப் பிரச்சனை மற்றும் அவர்களது தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி இருந்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!!

வவுனியா பல்கலைக்கழகம்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்று (11.02) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பெயர்ப்பலகை ஐனாதிபதியின் வருகைக்கு முன்னரே திறந்து வைப்பு!!

வவுனியாப் பல்கலைக்கழம்..

வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெயர்ப்பலகை ஐனாதிபதியின் வருகையின் முன்னரே இலங்கை வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகமானது கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டிருந்ததுடன் இதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இன்று ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (09.02.2022) இலங்கை வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெயர்ப்பலகை திறப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் உயிரிழப்பு!!

ஓஷதி குருப்பு..

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஓஷதி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு!!

கேரளாவில்..

இந்தியா – கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் – பாலக்காட்டையை சேர்ந்த 28 வயதுடைய பாபு எனும் இளைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு 3 நண்பர்களுடன், நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர்.

இதன்போது மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்துள்ளதுடன்,அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றுள்ளதுடன், இளைஞன் சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியாத நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது.

நீண்ட நேரத்திற்கு பின்னர் வாலிபர் சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டு உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 43 மணி நேரமாக போராடிய பாபுவை மலையேற்ற பயிற்சி பெற்ற இராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

30 வருடங்களின் பின் இலங்கையில் பெற்றோரை தேடும் நோர்வேயில் வாழும் மகன்!!

30 வருடங்களின் பின்..

கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை மகன் தற்போது இலங்கை பெற்றோரை தேடி வருகின்றார்.

நோர்வே நாட்டிற்கு சென்று அங்கு வளர்ந்த பின்னர் அதே நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 31 வயதான இளைஞன் நாட்டில் எங்காவது இருக்கும் தனது பெற்றோரை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இளைஞன் தன்னை பெற்ற தாயின் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். அந்த தகவலுக்கமைய தனது தாய் பலாங்கொடை வைத்தியசாலையில் பிறந்துள்ளதாகவும் தற்போது தாய்க்கு 49 வயதாகின்றது. இந்த குழந்தையை பெறும் போது தாய்க்கு 19 வயதாக இருக்கலாம்.

அவரது பெயர் களுபஹனகே சீதா ரஞ்சனி என மகன் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் தனது குழந்தையை பிரசவிப்பதற்காக அநுராதபுரம், புலியங்குளம், வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டார்.

1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அவர் அங்கு குழந்தை பிரசவித்துள்ளார். குழந்தைக்கு சமன் திஸாநாயக்க என பெயரிடப்பட்டுளளது. பிறப்பு சான்றிதழில் அநுராதபுரம், மஹகடவல பிரிவு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது தந்தையின் பெயராக களுபஹனகே தெனேரிஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனது தாய் தந்தை தொடர்பில் தகவல் அறிந்தால், 0772114995 (என்ரூ சில்வா) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் 10 வயது சிறுவனை வீட்டில் வைத்து தொடர் பிரார்த்தனை : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்..

இலங்கையில் படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரே கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அழுகிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை சிறுவனை பெற்றோர் அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தி வந்துள்ள நிலையிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாகவும் அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம் : இடம்மாறிய தமிழ் மொழி!!

கல்வெட்டில் திடீர் மாற்றம்..

வவுனியா பல்கலைக்கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக் கழகத்திற்கு நாளை (11.02) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடியில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வீதியில் இருந்து உட்செல்லும் போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழியும், மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ் மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அக்கற்பட்டு மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.