“இந்திய இசைக்குயில்” லதா மங்கேஷ்கர் மரணம்!!

லதா மங்கேஷ்கர்..

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் தனது 92 வயதில் காலமானார். முன்னதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு செயற்கை சுவாச இயந்திர உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும்,

அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. எனினும் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் காலமானதாக மருத்துவமனை இன்று அறிவித்துள்ளது.

இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுகிறார்.

1969இல் லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. 1999இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

2001இல் பாரத் ரத்னா விருது அவருக்கு கிடைத்தது. 1999ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை அவர் ராஜ்சபா உறுப்பினராக பதவி வகித்தார்.

புகையிரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்து!!

விபத்து..

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதய தேவி புகையிரத்துடன் கனரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று (05.02.2022 )பிற்பகல் வெலிகந்த, கடவத்மடுவ புகையிரத கடவையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவதானமாக இருக்கவும் : பொது மக்களிடம் சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள கோரிக்கை!!

கோவிட் தொற்று..

இலங்கையில் மீண்டும் ஒரு கோவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி கோவிட் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிதாபமாக உயிரிழந்த 15 வயது மாணவி : காதலன் கைது!!

15 வயது மாணவி..

பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். கந்தளாய், அக்போபுர பேரமடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வைத்தே இந்த சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுமியின் காதலர் என கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் தாயும் வீட்டில் இருந்தார் எனவும், சந்தேக நபர் வீட்டில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 9ம் திகதி வரையில் குறித்த இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடு ஒன்றில் இரு குழந்தைகள் கொலையில் உயிரிழந்த இலங்கையருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

அவுஸ்திரேலியாவில் தமது இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், தமது உயிரை மாய்த்துக்கொண்ட இலங்கையருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திக குணதிலக்க என்ற இந்த இலங்கையர், அவுஸ்திரேலிய பெண்ணான தமது மனைவிக்கு எதிரான குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த இரண்டு குழந்தைகளின் தாய் கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றில் குடும்ப வன்முறை தடை உத்தரவை கோரியிருந்தார் என்பது இப்போது தெரியவந்துள்ளது, இது கடந்த செப்டம்பரில் இரண்டு ஆண்டு உத்தரவு வடிவத்தில் இறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உத்தரவின்படி இந்திக குணதிலக்க, துப்பாக்கி உரிமம் அல்லது துப்பாக்கி உரிமம் பெறுதல் தொடர்பாக எவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தமது மனைவியை அச்சுறுத்தும் வகையில், புண்படுத்தும் வகையில் அல்லது உணர்ச்சி ரீதியில் துஷ்பிரயோகம் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளக்கூடாது, அல்லது 20 மீற்றருக்குள் அவரை நெருங்கக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நடைமுறைகளை மீறாதிருந்தால், இந்திக குணதிலக்கவுக்கு தமது குழந்தைகளை பார்ப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் தமது உத்தரவில் வழங்கியிருந்தது.

மாறாக இரண்டு வருடங்களுக்குள் குறித்த உத்தரவுகளை மீறினால், இந்திக குணதிலக்கவுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

தடுப்பூசி..

இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழ் சிறுமி!!

தமிழ் சிறுமி..

லண்டனில் புற்றுநோயுடன் போராடும், இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுமியின் பெற்றோருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் பிரபல கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் அளித்து வருகிறார்.

கால்பந்து நட்சத்திரமாக ஆஷ்லே மற்றும் காதலி சபியா வோராஜீ ஆகியோர் தங்கள் பெண் குழந்தை உயிரிழந்ததிலிருந்து பல நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த தம்பதியின் அன்பான குழந்தை அசேலியா கடந்த ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயான லுகேமியாவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார்.

லண்டனின் கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் இதே நோயை எதிர்த்து எட்டு மாதங்களாக போராடி வரும் ஐந்து வயது ஈஷா நடேஸ்வரனின் குடும்பத்துடன் இந்த கால்பந்து வீரர் ஒரு சிறந்த நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

லண்டனில் வாழும் ரிஷ்யா நடேஸ்வரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் இரண்டாவது மகளான ஈஷா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆசிய நாட்டவரின் தண்டு செல் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளவுள்ள இந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு பிரித்தானியாவின் பிரபல கால்பந்து வீரர் முன்வந்துள்ளார்.

“ஈஷா தான் எங்கள் ஹுரோ. அவரது போராட்டம் நம்ப முடியாத ஒன்றும். இந்த பயணம், முடிவில்லாத மரதன் ஓட்ட போட்டி போன்றது.

அது எப்போது முடிவடையும் என்று எங்களுக்குத் தெரியாது, அதனால் நம்மை நாமே கூட வேகப்படுத்தவும் முடியாது” என ஈஷாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எவ்வளவு காயப்பட்டாலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொள்ள வேண்டும். அதனையே அவர்கள் விரும்புகின்றார்கள்” என ஆஷ்லே கெய்ன் தெரிவித்துள்ளார்.

அதிகம் யோசிக்க வேண்டாம் ஈஷாவை ஆதரிக்க நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என ஈஷாவின் பெற்றோரிடம் கால்பந்து வீரர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் மருத்துவ தேவைக்காக தொடர்ந்து உதவி செய்து வரும் கால்பந்து வீரர், 100,000 பேர் நன்கொடை செய்ய பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகளையும் இந்த கால்பந்து வீரர் செய்து வருகின்றார். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், புற்று நோயுடனான போராட்டத்தில் ஈஷா மீண்டு வருவார் என நம்பிக்கையில் இருப்பதாக கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் பௌத்தத்திற்கு முன்னுரிமை : தமிழ் கலாசாரத்திற்கு 3ம் நிலை!!

சுதந்திரதின நிகழ்வில்..

வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டதுடன், தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02) இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வுக்கு அழைத்துவரப்பட்ட மதகுருமார்களில் பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அங்கு அழைக்கப்பட்டிருந்த இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதகுருமார்களுக்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தைதைப் போன்று சாதாரண இருக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் மூவின மக்கள், நான்கு சமயங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் வவுனியா மண்ணில் பௌத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதகுருமார்களுக்கு அவர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நாட்டிய, நடன நிகழ்வு இடம்பெற்ற போது சிங்கள கலாசார நடனம் முதலாவதாகவும், இஸ்லாமிய காலாசார நடனம் இரண்டாவதாகவும் இடம்பெற்றதுடன் தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாவதாக இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி உள்ளிட்ட அதிகளவானர்கள் தமிழர்களாக இருந்த நிலையில் தமிழ் காலாசாரத்தை மூன்றாம் நிலைக்கு கொண்டு சென்றமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 

வவுனியாவில் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!!

மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (04.02.2022) 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

அந்த வகையில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் பி.ஏ சரத் சந்திர, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதி , பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் பிரிவுகள், பாடசாலைகள், உள்ளிட்ட அரச திணைக்களங்களில் மரநடுகை இடம்பெற்றது.

வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் உள்ளிட்ட 18 பேர்!!

சுதந்திர தினக் கொண்டாட்டம்..

வவுனியாவில் மாணவிகள் உள்ளிட்ட 18 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2022) காலை இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், பொலிசார், இராணுவத்தினர் ஆகியோர் பிரதான நிகழ்வு கொட்டகைக்கு முன்னால் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு ஒணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர், பொலிசார், சிவில் பாதுகாப்பு தரப்பினர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால் வெயில் தாக்கம் காரணமாக 13 மாணவர்களும், 5 சிவில் பாதுகப்பு படை வீரர்களுமாக 18 பேர் மயங்கமடைந்திருந்தனர்.

அவர்களை உடனடியதாக செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டியில் வைத்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.

பல மாணவர்கள் மயங்கி விழுவதை அவதானித்த நிகழ்வின் அதிதியாகிய கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் வெயிலில் நின்ற மாணவர்களுடன் உரையாடி விட்டு உடனடியாக அம் மாணவர்களை அங்கிருந்து சென்ற பின் ஏனைய நிகழ்வுகளை நடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதன் பின் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிசார், இராணுவத்தினர் மைதானத்தில் இருந்து கலைந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கையின் 74வது சுதந்திரதினம் அனுஷ்டிப்பு!!

74வது சுதந்திரதினம்..

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2022) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றது.

தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தமையினையடுத்து தேசிய கீதம் சிங்கள மாணவர்களால் தமிழ் மொழியிலும் தமிழ் மாணவர்களால் சிங்கள மொழியிலும் பாடப்பட்டது.

மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்புடன் சர்வமதத் தலைவர்களின் உரை, தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை என்பவற்றுடன் மூன்று இனங்களையும் பிரதிப்படுத்தும் வகையிலான நடனமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கு.திலீபன் கலந்துகொண்டதுடன் சர்வமதத் தலைவர்கள், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி,

விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார்,

பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

வவுனியா சிறைச்சாலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதி ஒருவர் விடுதலை!!

கைதி ஒருவர் விடுதலை..

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார். 74 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197 சிறைக்கைதிகள் இன்று (04.02.2022) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,

65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மல்லாவி பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு : பலப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு!!

சுதந்திர தின நிகழ்வுகள்..

வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4 மணிநேரம் மூடப்படிருந்தது.

சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வினையடுத்து ஏ9 வீதியின் மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான பாதையும் , நகரசபை வீதி , நூலக வீதி ஆகியன காலை 6.30 மணி தொடக்கம் காலை 10.30 மணிவரையிலான காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

மேலும் சுதந்திரதின நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் நிகழ்வுகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டிருந்தன.

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகிய பழக்கடை!!

பழக்கடை..

வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று (03.02.2022) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன் உரிமையாளர் வியாபாரம் முடிந்து பூட்டி விட்டு சென்று சிறிது நேரத்தில் குறித்த பழ வியாபார நிலையத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

பழ வியாபார நிலையம் தீப்பிடித்து எரிவதை அவதானித்த அயலவர்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன் வியாபார நிலைய உரிமையாளருக்கும் தெரியப்படுத்தினர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதும் பழ வியாபார நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பழங்களும் தீயில் கருகியுள்ளன. சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் நின்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் வந்த போதே குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்ததை அவதானிக்க முடிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலையில் கிடுகிடுவென ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை..

டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு,

சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கமைய, தங்கத்தின் விலையானது நீண்ட கால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய, தங்கத்தின் விலையை போலவே, வெள்ளி விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மேலும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

வவுனியாவில் வைத்து வட்ஸ்அப் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல்போன மாணவன்!!

காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த மேற்படி மாணவன், வீடு திரும்பவில்லை. இதனால், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமல்போன மாணவனின் சென்றிருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா – கல்மலை கடலோரத்தில் இருந்து மறுநாள் 29 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் கடும் பிரயத்தனம் எடுத்து மாணவனை தேடி ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

காணாமல்போன மாணவனை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும்,

அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவைகளை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மாணவனின் வட்ஸ் அப் ஒன்லைன் காட்டிய போது மாணவனுக்கு மெஸேஜ் அனுப்பப்படுகின்ற போது அதனை பார்த்து விட்டு மெஸேஜ் அனுப்பப்படும் இலக்கங்கள் புலொக் பண்ணப்பட்டு வந்தது.

இவ்வாறான விடயங்களை அவதானித்த பொலிஸார் மாணவன் எங்கேயோ தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

காணாமல்போன மாணவனை பொலிஸார் 5 நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (01.02) மாலை வவுனியா பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.

பெற்றோரை திசை திருப்பவே கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்று வரும் இம் மாணவன் கடந்த கபொ.த. சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளான்.

கண்டுபிடிக்கப்பட்ட மாணவனை பொலிஸார், பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.