வவுனியாவில் குத்துச் சண்டை போட்டிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!!

நிதியுதவி..

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும்.

ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால் விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழுந்திருக்காவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார்.

இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்.

பயிற்சியாளர் செல்வரத்தினம் நந்தகுமார் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் டுபாய் நாட்டில் எதிர்வரும் 25.02.2022ம் திகதி இடம்பெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு செல்லவுள்ள மூன்று வீரர்களுக்காக நிதியுதவி இன்று (03.02.2022) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வசிக்கும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சிறிகாந்தன் சிறிதர்சன் என்பவருக்கு ஒரு லட்சத்தி இருபத்தையாயிரம் ரூபாவும்,

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை உதயகுமார் ரினுசா என்பவருக்கு ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவும், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் குமார் கிருஷாந்தன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபா என மொத்தமாக மூன்றுலட்சத்தி எழுபதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டன.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2,75,000 ரூபா, எட்மன் 30000 ரூபா, கண்ணன் 25000 ரூபா,

டிலன்சன் 40000 ரூபா , நிஷாந்தன் 5000 ரூபா ஆகியவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்ததுடன் இவர்களுக்காக பணத்தினை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார் பயனாளிகளிடம் கையளித்தார்.

பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் யாழ். பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் தில்காந்தி!!

தில்காந்தி..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் மறைந்த தில்காந்தி நவரட்ணத்தின் இறுதிக் கிரியைகள் மொனராகலை மரகலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் கடந்த செய்வாய்கிழமை உயிரிழந்தார்.

அதிகாலை 5 மணி அளவில் சுகயீனம் காரணமாக மொனராகலை, சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி உயிரிழந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலிருந்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் கல்வி கற்று, தற்காலிக உதவி விரிவுரையாளராக தெரிவாகியிருந்தார்.

அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!!

சுதந்திர தின நிகழ்வுகள்..

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2022) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து பிரதேச செயலகத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மாணவர்கள் , முப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தன. மேலும் ஏ9 வீதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத்சந்திர தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொள்ளவுள்ளார்.

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு லட்சம் பணிகள் வேலைத்திட்டம் ஆரம்பம்!!

ஒரு லட்சம் பணிகள்..

2022ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட ஒரு லட்சம் பணிகள் திட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டத்திட்டத்திற்கேன 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

அதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட குகன் நகர் சனசமுக நிலைய கட்டிடத்தில் இன்று (03.02.2022) காலை 8.52 மணியளவில் இடம்பெற்றது.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியிருந்ததுடன் வேலைத்திட்ட பாதாகை திரைநீக்கம் , விருந்தினர்கள் உரையுடன் பயனாளிகளுக்கான அனுமதி கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நெளுக்குளம் கிராம சேவையாளர் சாந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக சாந்தகுமார், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுப்பிரமணியம்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சனசமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிராம மக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

வாக்குவாதம் முற்றியதால் வந்த வினை : மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!

சென்னை..

சென்னை தண்டையார்பேட்டை அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தளபதி – சண்முகபிரியா தம்பதி.

கணவர் தளபதி நேற்றிரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவி கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை தனது பெயரில் மாற்றி கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார். கணவரை கைது செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

2வது திருமணம் செய்து தலைமறைவான கணவர் : துணிச்சலாக மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

திருவள்ளூர்..

குன்றத்தூரை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (38). இவர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த மேத்தா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலேயே தன்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று ஜெயப்பிரகாஷ் கூறிவந்த நிலையில் தனது மாமனார், மாமியார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் தாய் வீட்டிற்கு மேத்தா வந்துவிட்டார்.

இந்நிலையில் கணவர் ஜெயப்பிரகாஷ் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டு தலைமறைவாக உள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு குன்றத்தூர் போலிஸில் புகார் அளித்த நிலையில் சிறுகளத்தூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணுடன் ஜெயப்பிரகாஷ் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் குன்றத்தூர் போலிஸார் தேடி வந்த நிலையில் இருவரையும் கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து மேத்தா திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் மற்றும் உடன் வேலை செய்து வந்த சண்முகப்பிரியா ஆகிய இரண்டு பேரையும் கண்டுபிடித்தனர்.

இவர்களிடம் போலிஸார் விசாரித்தபோது சண்முகப்பிரியாவை ஜெயப்பிரகாஷ் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றெடுத்ததும் தெரியவந்தது.

மேலும் முதல் மனைவி இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் ஜெயப்பிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தன்னை வரதட்சணை கொடுமை செய்ததாகவும் மேத்தா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் ஜெயப்பிரகாஷ் அவரது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் என 10 பேர் மீது குன்றத்தூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் மனைவி இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த ஜெயப்பிரகாஷை போலிஸார் கைது செய்தனர்.

வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர் : சுவாரஸ்ய செய்தி!!

இந்தியா..

இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மீன் வலையில் 121 Telia Bhola வகை மீன் சிக்கியது.

இதன் மதிப்பு சுமார் ரூ 2.8 கோடியாகும். ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு கிலோ மீன் ரூ.13 ஆயிரத்திற்கு விலை போய் உள்ளது.

கடந்த ஆண்டும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிசாவின் ராஜ் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் அரிய வகையான Telia Bhola மீன் சிக்கியது. அப்பொழுது கிலோ ரூ10 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இந்த Telia Bhola ரக மீனை அப்பகுதி மக்கள் மயூரி மீன் என அழைக்கிறார்கள். இந்த மீனின் வயற்றில் உள்ள சில பொருட்கள் மருத்துவ துறையில் சில அரிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் தான் இந்த மீனை பல மருத்துவ நிறுவனங்கள் நீயா நானா என்று போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

இறக்க அனுமதியுங்கள்… பரபரப்பை ஏற்படுத்திய திருநங்கை ஒருவரின் கோரிக்கை!!

அனீரா கபீர்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் காரணம் ஏதுமின்றி அவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, வேறு வழியேதும் இல்லை என முடிவு செய்த கபீர், ஜனவரி மாதம் மாநில சட்ட உதவி சேவைகளை அணுகி, கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் மாநில நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது நிலை குறித்து மேலதிக தகவல் தெரிந்து கொள்ள அரசு முன்வந்தது.

இந்த நிலையில் அவருக்கு அரசு சார்பில் மீண்டும் ஒரு வேலை ஏற்பாடு செய்து அளிக்கப்பட்டது. பாலக்காடு பகுதியில் பிறந்த அனீரா கபீர் தாம் ஒரு திருநங்கை என அடையாளம் கண்ட பின்னர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

குடும்பத்தினரிடம் இது தொடர்பில் தெரிவிக்கவும் அவரால் முடியாமல் போயுள்ளது. தன்னைப் போன்ற சமூக மக்களுடன் வாழ வேண்டும் என விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு நகருக்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியுள்ளது.

இதில் வெறுத்துப்போன அவர் ஒருகட்டத்தில் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். வேலைக்கான நேர்முகத் தேர்வில் பலமுறை அவமானங்களையே எதிர்கொண்டதாக கூறும் அனீரா கபூர்,

மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லக் கூடும் என அஞ்சுவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்கள் வேலை தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோழி ஏற்றிச்சென்ற வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து : பெண் ஒருவர் படுகாயம்!!

விபத்து..

மட்டக்களப்பு – கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கோழிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று(02.02.2022) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பகுதியிலிருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணித்த கனரக வாகனம் சம்பவதினமான இன்று அதிகாலை 5 மணியளவில் ஊறணிக்கு சென்ற மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு – ஊறணி சந்தியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சுமார் 50 மீற்றர் தூரம்வரை மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்ற நிலையில் கனரக வாகனம் வீதியைவிட்டு விலகித் தடம்புரண்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!!

விடுமுறை..

அரச தரம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, மார்ச் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஆரம்ப வகுப்புக்களைத் தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : நான்கு உயிர்கள் பலியான காரணம் வெளியானது!!

கோர விபத்து..

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் பூஸ்ஸ வெல்லபட புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கோர விபத்தில் புஸ்ஸ பழைய வீதியை சேர்ந்த காலிங்க ஜினதாஸ எனப்படும் 85 வயதுடைய தந்தையும், காலிங்க சுனிமல் என்ற 46 வயதுடைய மகனும், மகனின் மனைவியான லசிக்கா குமார என்ற 48 வயதுடையவரும், லசிக்காவின் தாயாரான 83 வயதுடைய எமிஸ்ஹாமி என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நால்வரும் கிராம சேவகரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் வீதிக்கு பாதுகாப்பு கடவை ஒன்று இல்லை எனவும், அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மகனால் முச்சக்கர வண்டி ஓட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கடவை இல்லாமையினால் பாதுகாப்பற்ற ரயில் வீதி ஊடாக பயணித்த போது ரயிலில் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அனைவரும் வீசப்பட்ட நிலையில் கிடந்தனர். பாதுகாப்பு கடவை இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கையில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணங்களை மேற்கொள்ளும் சாரதிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

பண்டாரிக்குளத்தில்..

பசுமையான இலங்கை ‘ஒரு மரம் – ஒரு மனிதம்’ தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் நேற்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

பண்டாரிக்குளம் காவல் அரண் பொறுப்பதிகாரி திலகரத்ன தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக பண்டாரிக்குளம் குளத்தின் கீழ் மரம் நடுகை இடம்பெற்றிருந்ததுடன்,

பிரதம மற்றும் கௌரவ விருந்தினர்கள் மரம் நாட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்துடன் பொதுமக்களின் வீடுகளில் நடுவதற்கான மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே மற்றும் கௌரவ விருந்தினர்களாக உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே,

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர ஆகியோரும்,

விருந்தினர்களாக கிராம சேவையாளர், நகரசபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மணிபுரம் அன்னை திரேசா வீதி ஒரு வார காலமாக முடக்கம் : மாற்று வழியின்றி மக்கள் அவதி!!

அன்னை திரேசா வீதி..

வவுனியா மணிபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட அன்னை திரேசா வீதியின் அபிவிருத்தி பணிகள் கடந்த ஒரு வாரகாலமாக எவ்வித மாற்று நடவடிக்கையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியா தெற்கு பிரதேச சபையின் கீழ் குறித்த வீதி கல்லிட்டு தாரிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்றுப்பாதை எவையும் ஏற்படுத்தி வழங்காது வீதியின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்து செல்லப்படுகின்றமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கற்கள் பரவப்பட்டு வீதியின் கரையிலும் கற்கள் சிதறி காணப்படுவதனால் அப்பாதையூடாக மக்கள் நடந்து செல்வது கூட முடியாமையுள்ளதுடன் மேலும் ஒரு வார காலமாக மந்த கதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுவதனால்,

தமது வாகனங்களை கூட குறித்த வீதியூடாக எடுத்துச்செல்ல முடியாதமையினால் வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை அப்பகுதி மக்களுக்கு உருவாகியுள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மக்கள் வீதியின் கரையூடாக நடந்து செல்வதற்காவது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் புதிய அறநெறிப் பாடசாலை திறப்பு விழா!!

அறநெறிப் பாடசாலை..

வவுனியா கற்குளம் படிவம் 4 இல் ஸ்ரீ நாகம்பாள் அறநெறி பாடசாலை மாணவர்கள் மரநிழலில் இருந்து கற்றுவந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அறநெறி பாடசாலை புதிய கட்டிடம் இன்று (01.02.2022) மாணவர்களின் அறநெறி செயற்பாடுகளுக்காக கையளிக்கப்பட்டது.

நயினாதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு இராமலிங்கம் நடராசா அவர்களின் ஓராண்டு திதியை முன்னிட்டு தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இவ் அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்ததுடன் மாணவர்களுக்கான கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

வவுனியா வைத்தியசாலை முன்பாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மாயம் : 2 மணிநேரத்தில் அதிரடியாக செயற்பட்ட பொலிசார்!!

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று காணாமல் போன நிலையில், முறைப்பாடு கிடைத்து இரண்டு மணிநேரத்தில் பொலிசார் அதிரடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்து மோட்டர் சைக்கிளையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியசாலைக்கு காலையில் சிகிச்சைக்காக வந்த நபரொருவர் தனது மோட்டர் சைக்கிளை வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

காலை 10.30 இற்கு மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனையடுத்து தனது மோட்டர் சைக்கிளை பல பகுதிகளிலும் தேடிய பின் மாலை 3.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்று மாலை 4 மணியளவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ஜெயக் கொடி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி,

ஜெயான் ரணவீர தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்கா, பொலிஸ் கான்டபிள் தயாளன் ஆகியோர் துரித விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தனர்.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் காவலாளியாக கடமை புரிந்த புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன்,

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன மோட்டர் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீடு உடைத்து திருட்டு!!

திருட்டு..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மதியம் வெளியே சென்ற சமயத்தில் அதனை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றினை திருடிச்சென்றுள்ளனர்.

மாலை நேரம் வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய சமயத்தில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் 1000 ரூபா பணமும் வீட்டு வாயிலில் காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து வீட்டு உரிமையாளர் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.