வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று (15.06.2025) இடம்பெற்றுள்ளதுடன் மீண்டும் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் நேற்று காலை 10 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) கிருஸ்ணமூர்த்தி, (செயலாளர்) மயூரதன், (பொருளாளர்) தியாகர் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்பார்த்தாவாறே மீண்டும் இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பதில் முதல்வர் தெரிவுகள் இன்றயதினம் இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவை. அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்கட்சிகளினால் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.
அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும், தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள்,ஜக்கியமக்கள் சக்தியின் இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.
எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும்,ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத்தேவையான 11ஆசனங்கள் உறுதியாகியுள்ள நிலையில் இன்று எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகின்றது.
வவுனியாவிலுள்ள ஐந்து சபைகளில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தவிர்ந்த ஏனைய நான்கு சபைகளான வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளையும் ஆட்சியமைக்கும் கட்சி தலைமைகளிலான விசேட கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (15.06.2025) காலை 11 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.
தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் பிரநிதிகளிற்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசிய கூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், அடுத்த இரு வருடங்களுக்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக்கட்சிக்கும் உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியகூட்டணிக்கும் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சிக்கு தவிசாளர் பதவியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட றிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தவிசாளர் பதவியும் தமிழரசுக்கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், றிசாட் பதியூதீன். முத்து முகமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (16.06.2025) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இந்த பகுதிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அமைய கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி, இரு இளைஞர்கள் காட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் 11 ஆம் திகதி அன்று மாலை வீடு திரும்பிய நிலையில், அவரது உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரும்பி வந்த இளைஞரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, அவர் வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன மற்றொரு இளைஞனை தேட, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து 11, 12, 13 ஆகிய தினங்களில் அதிகாலை முதல் மாலை வரை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தும், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல், காணாமல்போன இளைஞனை தேடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் காணாமல் போன வங்கி அதிகாரியின் சடலம் அவரது தாயாரின் கைவிடப்பட்ட வீட்டில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிபில்ல, யல்கும்புர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமானவராகும். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடுமுறையில் தனமல்வில பகுதியில் வங்கி அதிகாரியாக செயற்படும் தனது மனைவியை பார்க்கச் சென்றிருந்தார். பின்னர், பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கும் சென்று அங்கு தங்கியிருந்தார்.
அதன் பிறகு, வேலைக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புக்கு செல்வதாக கூறிய போதிலும், அவர் கொழும்பை சென்றடையவில்லை.
கையடக்க தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், குடும்ப உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி, ராகம மற்றும் பதுளை பொலிஸிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவரது சொந்த ஊரான பிபில்ல பகுதியிலும் அவர் தேடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவரது சொந்த ஊரைச் சேர்ந்த மக்களும் அவரை அந்தப் பகுதி முழுவதும் தேடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவரது சொந்த ஊரில் கைவிடப்பட்ட வீட்டில் நாய் குரைப்பதைக் கண்ட ஒருவர், ஜன்னலைத் திறந்து பார்த்த போது, வீட்டியில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காணாமல் போன இளைஞனின் சடலம் என கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்துறை கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை முச்சக்கரவண்டியுடன் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் நீர்கொழும்பு தழுபத பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் (12) இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான் விபத்தில் AI 171 இருக்கையில் அமர்ந்தவர் உயிரி பிழைத்த அதிசயம் நடத்துள்ளது.
நிலையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அதேபோன்று தாய் ஏர்வேஸ் விபத்தில் சிக்கியபோது 11A இருக்கையில் அமர்திருந்தவர் உயிர் பிழைத்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40), விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
அவசரகால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்திருந்த அவர், விபத்தின்போது விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, காயங்களுடன் தப்பித்துள்ளார்.
“நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்” என்று ரமேஷ் கூறினார். இந்தச் சம்பவம் உலக அளவில் வியப்பையும், 11A இருக்கை மீது ஒரு ராசி இருப்பதாகவும் நம்பவைத்தது.
தாய்லாந்து நடிகர்-பாடகர் ரூங்சக் லோய்சுசக் (47), 27 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1998 டிசம்பர் 11 அன்று, தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளானபோது, அவரும் 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர்.
அந்த விபத்தில் 146 பேரில் 101 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விபத்தில் 11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்ததை அறிந்த ரூங்சக்,
எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்றது மதிய நேரம் என்பதால் ஏராளமானோர் விடுதியில் உள்ள மெஸ்ஸில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் அவர்களை தேடும் பணியில் அவரது மகன் ஈடுபட்டு வருகிறார். விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் விபத்து நடைபெற்ற அன்று தனது 2 வயது பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார். இதில், விமான விபத்து நடைபெற்ற இடம் ஷர்லாபென் தாகூர் இருக்கும் இடம் தான்.
இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என மகன் அஞ்சுகிறார். கட்டட இடிபாடுகளை முற்றிலும் அகற்றினால் தான் எத்தனை பேர் உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவல் தெரியவரும்.
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது!
லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17 ஆம் திகதி, லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் இந்தியாவின் குஜராத்தில் வாழும் அவரது குடும்பத்தினர்.
ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முன்கூட்டியே செல்லலாம் என முடிவு செய்து தாவ்னியின் தந்தை ரஜ்னிகாந்த் பட்டேல், தாய் திவ்யாபென் மற்றும் சித்தி ஹேமாங்கி பென் ஆகியோர் வியாழக்கிழமையே புறப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் பயணித்த ஏர் இந்தியா விமானம்தான் அஹமதாபாதில் விபத்துக்குள்ளானது. அந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்த விமானம் விழுந்த மருத்துவர்களுக்கான ஹாஸ்டலில் இருந்தவர்கள் என குறைந்தது 251 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
பெற்றோர் தனது பட்டமளிப்பு விழாவுக்கு வருவார்கள் என காத்திருந்த தாவ்னிக்கு, அவர்களுடைய மரணச் செய்திதான் கிடைத்துள்ளது.
இந்த செய்தி, இன்னொரு குடும்பத்துக்கும் துயரத்தை உருவாக்கியுள்ளது. ஆம், தாவ்னியின் சித்தியான ஹேமாங்கியும் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
சோகம் என்னவென்றால், ஹேமாங்கியின் கணவர் எட்டு மாதங்களுக்கு முன்புதான் மரணமடைந்தார். ஆக, ஹேமாங்கியின் மகனான பார்த் பட்டேல், தன் தந்தை இறந்து எட்டு மாதங்களில், இந்த விமான விபத்தால் தன் தாயையும் பிரிந்துவிட்டார்.
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் தில்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13.06) இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணித்த எயார் இந்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்டாரியோ, எட்டோபிகோக் பகுதியை சேர்ந்த 32 வயதான வைத்தியர் நிராலி படேல் என தெரிய வந்துள்ளது. இந்தியாவிற்கு குறுகிய பயணம் மேற்கொண்டு மீண்டும் கனடா திரும்பிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
2019ஆண்டில் கனடாவில் குடியுரிமை பெற்ற நிராலி மிசிகாசாவிலுள்ள பல் வைத்தியாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பிரம்டனில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 242 பேர் பயணித்த பயணிகளில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள் ஒரு கனேடியர், 7 போர்துக்கல் பிரஜைகள் ஆகும்.
மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.
மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றிவிட்டு லண்டன் திரும்பும்போது ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி அவரும் பலியான நிலையில் அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள்.
தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.
லண்டனில், அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஏழு நாள்களுக்கு முன்புதான் பாரதி பென் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில், தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் பலியாக, பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை பற்றி அறியும் யார் ஒருவருக்கும் மனம் கலங்கத்தான் செய்கிறது.
வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் செயற்பாடு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதுவரை வவுனியாவில் செயற்பட்ட முச்சக்கரவண்டிகளில் மீற்றர் இல்லாததனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் மீற்றர் பொருத்துவதன் மூலம் நியாயமான கட்டண முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கட்டண திட்டத்தின் கீழ், முதல் கிலோமீற்றருக்கு 130 ரூபாவும் அடுத்து ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 100 ரூபா என்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.