பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் (14.06.2025) உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அனுராதபுரத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவனே கடந்த 13.06.2025 மாலை இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளான்.
சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது.
அங்கு, துரதிர்ஷ்டவசமாக குறித்த சிறுவனும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளான்.
அமெரிக்காவில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதி தங்களுடைய குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடினர்.
அமெரிக்காவில் வசித்து வந்த ஜான்சன் ரேமண்ட் தம்பதியினர் அவர்களுடைய 3 வயது மகள் விமானத்தில் ஏறும்போது தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தை மெதுவாக சாப்பிட்ட காரணத்திற்காக பெற்றோர் அடித்துக் கொலை செய்துவிட்டு தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.
அந்த குழந்தையுடன் விளையாடிய மற்ற குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அந்த தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராஜன்-பிந்து. இவர்களுடைய மகள் ஸ்ரேயா 12 ம் வகுப்பு படித்து முடித்துள்ளாள்.
இவர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பில் சேர தயாராக இருந்தார். அன்றைய தினம் காலை நேரத்தில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பிந்து உடனடியாக தன்னுடைய மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ஸ்ரேயா உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். மாணவி இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் அன்றே மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணைக் கொன்று, தோட்டத்தில் புதைத்த காதலனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மதுஸ்ரீயை ஹெதலகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 16ம் தேதி மதுஸ்ரீ உறவினர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பெற்றோர் பெட்டகேரி போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் கூறினர்.
இதையடுத்து சதீசை அழைத்து விசாரித்தபோது, மதுஸ்ரீ உறவினர் வீட்டுக்கு சென்ற பின்னர் நான் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கையை கண்காணித்தனர்.
இந்நிலையில், 6 மாதம் கழித்து கடந்த 13ம் தேதி சதீஷ், மதுஸ்ரீயை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. அதை வைத்து சதீசிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதாவது சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுஸ்ரீயை அழைத்து சென்ற அவர் தனது தோட்டத்தில் தங்க வைத்தார்.
இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி மதுஸ்ரீ, சதீசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த சதீஷ், துப்பட்டாவால் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் உடல் எலும்பு கூடாக மாறியது. அதை தோண்டி எடுத்து வெவ்வேறு இடத்தில் புதைத்து வைத்தது தெரியவந்தது. இவ்வாறு கடந்த 6 மாதமாக செய்து வந்ததாக தெரிய வந்தது.
தற்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுஸ்ரீயின் எலும்பு கூடுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அதை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கைதான சதீஷிடம் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம், அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி, அஹமதாபாதில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த கட்டிடத்திலிருந்தவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்த விமானத்தில் விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள் சிலர். ஆம், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விழுந்த இடத்தில் ஒரு மருத்துவக்கல்லூரியின் ஹாஸ்டல் இருந்ததால், அதிலிருந்தவர்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால், அந்த ஹாஸ்டலுக்கு சற்று தொலைவிலேயே, 18 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வாழும் மக்கள், தங்கள் கட்டிடத்தின் மீது விமானம் மோதாமல் தவிர்த்ததற்காக, விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள்.
விமானம் அந்த ஹாஸ்டலில் மோதாமல் தங்கள் குடியிருப்பில் மோதியிருக்குமானால், உயிரிழப்பு மேலும் நூற்றுக்கணக்கில் அதிகமாகியிருந்திருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
விமானம் விபத்துக்குள்ளாகப்போகிறது என்பதை அறிந்த விமானியான சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal), கடைசி நேரத்தில் தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல்,
வெறுமையாக இருந்த புல்வெளி ஒன்றில் விமானத்தை இறக்க முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
அப்படி அந்த புல்வெளியில் விமானத்தை இறக்கும்போது விமானம் அந்த ஹாஸ்டல் மீது மோதியிருக்கலாம் என்று கூறும் அவர்கள், தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல் தவிர்த்த விமானி சுமீத் தங்கள் உயிரைக் காத்த ஹீரோ என புகழ்கிறார்கள்.
கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளை பறித்துச் சென்ற குரங்கு மரத்தின் மீதிருந்து அதனை பறக்க விட்டுள்ளது.
தமிழக மாவட்டமான திண்டுக்கல், கொடைக்கானல் குணா குகைப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி குணா குகைப் பகுதியை பார்வையிட வந்தார்.
அவர் கையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை வைத்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலா பயணி கையில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பிடுங்கிச் சென்று மரத்தின் மீது ஏறி அமர்ந்தது.
பின்னர் அங்கு இருந்து கொண்டே ரூபாய் நோட்டு கட்டுகளை பிரித்து ஒவ்வொரு தாளாக கீழே வீச தொடங்கியது. அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ரூபாய் தாள்கள் கீழே பார்ப்பதை ஆச்சரியமாக பார்த்தனர்.
இதையடுத்து, பணப் பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணி பொறுமையாக காத்திருந்து மேலிருந்து கீழே விழும் ரூபாய் தாள்களை சேகரித்தார். அவருக்கு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் உதவினர்.
கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படும் மனைவியும் மகளும் பலாங்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இரத்தினபுரி, பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மனைவியும் மகளும் இரத்தினபுரி பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பிரதேசத்தில் உள்ள தனது கணவரின் வீட்டிற்குச் சென்று கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வாகனத்தின் மீது தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கணவன், பிரதேசவாசிகளின் உதவியுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளானது முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ள நிலையில் கெப் வாகனத்திற்கு சிறிய சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கணவனும் மனைவியும் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்கேத நபர்களான 43 வயதுடைய மனைவியும் 23 வயதுடைய மகளும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வென்னப்புவை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 25 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொலைசெய்யப்பட்டவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் இத்தாலியில் வசிப்பதால் கொலைசெய்யப்பட்ட நபர், நீண்ட காலமாக வீட்டை பராமரித்து வந்துள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (13) இந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது பராமரிப்பாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையாளிகள், வீட்டில் இருந்த பல கோடி ரூபா மதிப்புள்ள வேனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட வேன் கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத இருவர், இந்த வேனை கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சிகள் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா – சீதுவை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக வேனை கொள்ளையிட முயன்ற போது வீட்டுப் பராமரிப்பாளரை கொலை செய்ததாக சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று (16) நடைபெற்று வருகிறது.
அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுளந்தாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான நபர் ஒருவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் காதலனின் நண்பரான ,சிரிகல பொத்துவில்106 பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 8 ஆம் திகதியன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளதுடன் அவர் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் சிறுமி 10 ஆம் திகதி வீட்டிற்கு வந்ததையடுத்து அவரது தாயார் அவளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது, குறித்த சிறுமி அவரது காதலனின் நண்பர்கள் இருவரை சந்திக்க தனது மூன்று தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் சிறுமியின் காதலனின் நண்பர்கள் இருவர், காதலன் அனுப்பிய பணத்துடன் வந்துள்ளனர்.
சிறுமியின் தோழிகள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதுடன் சந்தேக நபருடன் வந்தவரும் சென்றுள்ளார்.
சந்தேக நபர் இரவு வரை பேருந்து நிறுத்தத்தில் சிறுமியுடன் இருந்துள்ளதுடன் பின்னர் அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சிரிகல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு சென்றுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்த நபருடன் தொடர்பு கொண்டதையடுத்து அவர் இருவரையும் பின் கதவு வழியாக வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.
குறித்த சிறுமி குறித்த வீட்டில் சந்தேக நபருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதுடன் இதன் போது பல தடவைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான AI315, இன்று(16) காலை ஹொங்கொங்கிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர், நிலையான பாதுகாப்பு நெறிமுறையின்படி, விமானம் புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பயணிகளை அவர்களின் இலக்கான டெல்லிக்கு விரைவில் கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தொழில்நுட்பக் கோளாறின் தன்மை அல்லது விமானத்தின் கால அட்டவணையை மாற்றியமைத்தல் குறித்து ஏர் இந்தியா இன்னும் பொது அறிக்கையை வெளியிடவில்லை.
முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ(Luckmow) வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் குறித்த இடம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.
சவூதியிலிருந்து 250 ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட SV 3112 விமானம், நேற்றையதினம்(15) இரவு 10:45 மணியளவில் புறப்பட்டு, இன்று காலை 6:30 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகரும் நேரத்தில், இடது பக்க சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான நிலைய பணியாளர்கள் கவனித்தனர்.
வெகு சீக்கிரத்தில் சிந்தித்து நடவடிக்கை எடுத்த விமானி, விமானத்தை நிறுத்தியுள்ளார். விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு அணி (ARFF) உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று 20 நிமிடங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 250 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், விமானத்தில் பயணித்தவர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் நிலவியுள்ளது. இந்த சம்பவம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த துயரமான நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.
தொடர்ச்சியான இந்த விமான சம்பவங்கள், விமானப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த யுவதி கருத்து தெரிவிக்கையில்,”நான் இந்த ஆண்டு Union National Meet இல் 10 ஆயிரம் மீட்டர்கள் வேகநடை போட்டியில் மூன்றாமிடம் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளேன்.
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பாடசாலை மட்ட ரீதியாக 5 ஆயிரம் மீட்டர்கள் வேகநடைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். அதைவிட மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டேன்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் முப்படை வீரர்களுடன் போட்டியிட்டே இந்த மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன்.
எனது ஆரம்பகால பயிற்றுனராக சுபாஸ் ஆசிரியர் மற்றும் நிசாந்தன் அண்ணா, பிரதீஸ் அண்ணா ஆகியோர் காணப்படுகின்றனர். தற்போது யாழ்ப்பாணம் மாவட்ட விளையாட்டுத்துறை பொறுப்பாளர் விஜிதரன் ஆசிரியர் எனது பயிற்றுவிப்பாளராக காணப்படுகின்றார்.
நான் முன்னர் போட்டிகளில் வெற்றுக் கால்கள் மூலமாகவே போட்டியிட்டேன். பின்னர் நிதி அனுசரணையாளர்கள் மூலம் எனக்கு இந்த போட்டிக்கு தேவையான சப்பாத்து வாங்கி தரப்பட்டது.
விக்டோரியா கழகம், குணா அண்ணா, மதி அண்ணா ஆகியோரே எனக்கு நிதி உதவிகளை வழங்குகின்றனர்.
கடந்த வருடம் நான் ஆசிய தெரிவுப் போட்டிக்கு சென்று முப்படையினருடன் போட்டியிட்டு 10 பேருக்குள் வந்தேன். அதில் பழிவாங்கும் முகமாக என்னை மைதானத்துக்குள் இறங்குவதற்கு விடாமல் செய்தார்கள்.
பின்னர் பயிற்றுவிப்பாளர் விஜிதரன் ஆசிரியரே கதைத்து என்னை போட்டியிட அனுமதி பெற்றுத் தந்தார். இருப்பினும் திட்டமிட்ட சதி போல போட்டியிலிருந்து இடைநிறுத்திவிட்டார்கள்.
தமிழர் – சிங்களவர் என்ற பாகுபாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்வதாக நான் நினைக்கிறேன். இம்முறை பொட்டு எதுவும் நெற்றியில் வைக்காமல் ஒரு சிங்கள யுவதி போலவே சென்றேன். இந்தமுறை போட்டியிலிருந்து இடைநிறுத்தவில்லை.”என கூறியுள்ளார்.
பண்டாரவளையில் பாடசாலை மாணவி ஒருவர், கழிவறைக்கு அருகில் மயங்கி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவி, கடந்த 12 ஆம் திகதி பாடசாலை முடிந்ததும் வீடு திரும்பவில்லை, என அவரது தாயார் ஒரு ஆசிரியைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து இது குறித்து விசாரித்ததன் பின் ஆசிரியர்,
மாணவர்கள் மற்றும் சிறுமியின் தாயாருடன் சேர்ந்து, பாடசாலை வளாகத்தில் தேடிய போது, அந்த மாணவி கழிப்பறைக்கு அருகில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
ஆசிரியரும் மாணவர்களும் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மயக்கமடைந்த மாணவி, தனது பாடசாலை தோழியுடன் பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் கழிப்பறைக்குச் சென்றபோது, முகத்தை முழுமையாக மூடியிருந்த பாடசாலை சீருடையும் அணிந்திருந்த ஒருவனும்,
மற்றுமொருவர் தனது முகத்தை மறைத்ததாகவும், பின்னர் தான் மயக்கமடைந்ததாகவும் மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சாரதியிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை போதனா மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த தடயவியல் மருத்துவர், அவர் எந்த துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு, வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (16.06.2025) காலை நடைபெற்றது.
இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசியமக்கள்சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது.
பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.