மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது,பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் பல மில்லியன் ரூபாய்கள் குறையும் என்ற காரணத்தினால் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பு ஒன்றில், உரையாற்றிய வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வரும் அதே வேளையில், வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், முக்கியமாக சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

எனினும், இந்த வாகனங்களின், சந்தை விலை, கொள்வனவு செய்த மாதங்களுக்குள் இரண்டு முதல் மூன்று மில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளன என்று மெரின்சிகே கூறியுள்ளார். இது, சீன மின்சார வாகன சந்தையில் நிலவும் விரைவான மாதிரி மாற்றங்கள் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

சீன வாகன தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மேம்படுத்தல்களை வெளியிடுகிறார்கள், இது பழைய மாடல்களின் விரைவான மதிப்பிழப்புக்கு வழிவகுக்கிறது.

ஜப்பானிய வாகனங்களில் அவ்வாறான நிலை இல்லை. அந்த நாட்டின் வாகன தயாரிப்பாளர்கள் சிறிய மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும் நிலையான சந்தை மதிப்பைப் பராமரிக்கிறார்கள் என்றும், வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, குறிப்பிட்டார்.

20 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு சீன மின்சார வாகனம், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் அதன் மறுவிற்பனை மதிப்பில், 7 முதல் 8 மில்லியன் ரூபாய்கள் குறையக்கூடும் என்று மெரின்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

குருணாகலில் எஹெட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19.06.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருணாகல் – மொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் எஹெட்டுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பலரையும் வியக்கவைத்த பெரிய மூக்கு பூனை பார்னி பப்பிள்!!

வடக்கு அயர்லாந்தில் பெரிய மூக்கு கொண்ட பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூனையின் பெயர் “பார்னி பப்பிள்” என அழைக்கப்படுகிறது.

இந்த பூனைக்கு கிரிப்டோகாக்கஸ் என்ற தொற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாகவே பூனையின் மூக்கு இவ்வாறு பெரிதாக இருப்பதாக பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பூனைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இணைய உலகினை கதிகலங்கச் செய்யும் அதிர்ச்சித் தகவல் : கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்!!

இணைய உலகினை கதிலங்கச் செய்யக்கூடிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பதிவான தகவல் திருட்டுகளில் மிகப்பெரிய அளவிலான தகவல் திருட்டு சம்பவம் இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இணைய உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 16 பில்லியன் கடவுச்சொற்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 30 பாரிய அளவிலான தரவு தளங்களில் இருந்து இந்த தகவல்கள் கசிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னணி சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் தகவல்கள் இவ்வாறு தளவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயனர் விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகில் சுமார் 5.5 பில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும் பெரும் எண்ணிக்கையிலான பயனர்களின் தகவல்கள் களவாடப்பட்டு இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பயனர்கள் உடனடியாக தங்களது கடவுச் சொற்களை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் சைபர் குற்றவாளிகள் இந்த கடவுச்சொற்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட தகவல்களில் தனிப்பட்ட நபர்களின் தரவுகள் மட்டுமின்றி அரசாங்கங்களின் நாடுகளில் அரசாங்கங்களின் தகவல்களும் களவாடப்பட்டு இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா, சீனா, இந்தியா இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட 29 நாடுகளின் அரசாங்க இணையதள தகவல்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களவாடப்பட்ட தகவல்களைக் கொண்டு நேரடியாக பயனர்களின் கணக்குகளுக்குள் பிரவேசிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், நெட்ப்ளிக்ஸ், பேபால், ரோபோலாக்ஸ் டிஸ்கோர்ட் உள்ளிட்ட முக்கிய இணையதளங்களின் பல்வேறு முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் இவை சுமார் 47 கிகாபைட்ஸ் அளவிலான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயனர்கள் உடனடியாக தங்களது கடவுச்சொற்களை மாற்றி அமைப்பதன் மூலம் சைபர் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த தரவு திருட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னணி நிறுவனங்கள் தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இள வயது காதலன்!!

மாத்தறை – வாஹல்கட பிரதேசத்தில் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இளவயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதான காதலனும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 24 வயதான இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 160,000 ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வென்னப்புவ பகுதியை சேர்ந்த வயதான பெண், அந்தப் பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Missed call மூலம் ஏற்பட்ட தொடர்பு சுமார் ஒரு வருடம் நீடித்த நிலையில் அது காதலாக மாறியிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன் சாதகமான பயன்படுத்திய சந்தேக நபரான காதலன், வாஹல்கட குளக்கரைக்கு வயதான பெண்ணை அழைத்து நகைகளை திருடியுள்ளனர்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக வயதான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவு வெளியானது!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செனவிரத்ன, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எந்த மாற்றமும் இல்லாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும், அது 2029 க்குப் பிறகும் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சையுடன் தொடர்புடைய தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை பரீட்சைத் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முறையாகக் குறைப்பதற்கும், புலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித் தன்மையால் மாணவர்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த பெண் மருத்துவர்!!

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த மருத்துவர் பாமதி ஞானசெல்வத்திற்கு கிடைத்துள்ளது.

மருத்துவர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் ஞானசெல்வத்திற்கு “குயீன் புக்” எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருதைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது.

தற்போது மருத்துவர் பாமதி ஞானசெல்வம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு சேவையாற்றிய வைத்தியர் விபத்தில் உயிரிழப்பு : சோகத்தில் மக்கள்!!

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (17.06.2025) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தோப்பூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிர் திசையில் அதே பக்கத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபருடன் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக மறுபக்கத்திற்கு முச்சக்கர வண்டியை செலுத்த முற்படுகையிலேயே எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவர் சேருவில வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் நிமால் கெல்வின் (வயது 59) எனவும் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உதவியாளர் என்.லாபீர் (வயது 55) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த வைத்தியரின் பூதவுடல் சேருவில வைத்தியசாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

உயிரிழந்த வைத்தியர் மிகுந்த சேவை நோக்கம் கொண்ட வைத்தியர் எனவும் அவருடைய இழப்பு பாரிய இழப்பு எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியர் தனது சொந்த இடத்தை விட்டு வந்து 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் அவருடைய இழப்பு அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்து – லொறி மோதி விபத்து : பலர் காயம்!!

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் எஹெலியகொடை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18.06.2025) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியின் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் கேக் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்!!

யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோ அசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் இன்றையதினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான தகவல்!!

அகமதாபாத் குஜராத் விமான விபத்தில் பலியான, 270 பேரில், 162 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த 12ம் திகதி புறப்பட்ட, ‘ஏர் – இந்தியா’ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்தார். 241 பேர் பலியாகினர். மேலும், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 29 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தின்போது, விமானம் தீப்பிடித்து எரிந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண முடியாததுடன், உடல் உருக்குலைந்தது. இதனால் அவர்களை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து ஆமதாபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ”நேற்று காலை வரை நடத்தப்பட்ட மரபணு சோதனையில், 162 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

இதில், 120 பேரின் உடல்கள் குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டையு பகுதிகளை சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில், ஐந்து பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள்,” என்றார்.

வட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் ஸ்டேடஸில் புதிய அப்டேட்!!

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது.

அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது. முதலில் குறுஞ்செய்தி மட்டும் பகிரும் வசதி இருந்தது.

அதன்பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரும் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் அப்பின் இந்த ஸ்டேட்ஸ் வைக்கும் வசதியை பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் வருவது போல வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்கள் தோன்றும். தனிப்பட்ட சாட்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வைத்தியசாலையில் வாங்கிய சாப்பாடு பொதியில் காத்திருந்த விருந்தாளி!!

குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சகோதரியைப் பார்க்கச் சென்ற போது மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து சாப்பாட்டு பொதி ஒன்றினை வாங்கியுள்ளார்.

இந்த சாப்பாட்டினை குறித்த நோயாளி உண்ணும் போது பொதியில் இறந்த நத்தை ஓட்டுடன் இருப்பதை கண்டுள்ளதுடன் குறித்த நோயாளிக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டுள்ளது.

இது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தபட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளரை கடுமையாக எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரவை சந்தித்த விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்!!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விமானத்தில் சந்தித்த விமானப் பணிப்பெண் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார். “என் தாய்நாடான இலங்கைக்குச் செல்லும் வழியில் நமது ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் தோஹாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். நானும் எனது நண்பர் இமாரத்தும் அவருடன் புகைப்படம் எடுக்கச் சென்றோம், ஆனால் அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார், அதனால் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

சிறிது நேரம் கழித்து, அவர் விழித்தெழுந்து குளியலறைக்கு புத்துணர்ச்சி பெறச் சென்றார், அதனால் நாங்கள் வெளியே காத்திருந்தோம். அவர் எங்களுடன் புகைப்படம் எடுக்க அனுமதி தந்தார், மேலும், அவர் நின்றுகொண்டே எங்களுடன் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார்.

அவர் மிகவும் அன்பானவர், நாங்கள் ஜனாதிபதியுடன் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்துவிட்டோம். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் மேற்பார்வையாளர் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்கிறோமா என்று பார்க்க வந்தார்.

ஆனால் ஜனாதிபதி சிரித்துக்கொண்டே, “இல்லை, பரவாயில்லை, இவர்கள் என் மக்கள்” என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.

நான் பணிபுரியும் அதே விமானத்தில் இருந்த நமது நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது ஒரு உண்மையான பாக்கியம் என அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

குழந்தையை கொலை செய்யப் போவதாக 2 மில்லியன் கப்பம் கோரிய கும்பல்!!

குழந்தைகளை கொலை செய்யப் போவதாக மிரட்டி 2 மில்லியன் ரூபா கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவில் வசிக்கும் நபரின் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கபபட்டுள்ளன.

இது தொடர்பாக, நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, சீதுவ பொலிஸ் பிரிவில் உள்ள தம்பத்துரை பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

இதன்போது 10 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் 32 மற்றும் 46 வயதுடையவர்களாகும்.

விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை எனவும் முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவந்தது.

மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட போலி துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் கப்பமாக பெற்ற பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளில் உள்ள அனைத்து சிம் அட்டைகள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ATM அட்டைகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

படல்காமா பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் இரு சகோதரிகளின் உயிரை பறித்த சாரதி : மகள்கள் படுகாயம்!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், பாதசாரி கடவை ஊடாக பாதையைக் கடக்கும்போது மது போதையில் சாரதியொருவர் செலுத்திச் சென்ற காரொன்று மோதி உயிரிழந்துள்ளனர்.

இறந்த பெண்களில் ஒருவரின் இரண்டு பிள்ளைகளும் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹொரணை – கொழும்பு வீதியில் உள்ள கோரளயிம பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு வந்த இரண்டு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு

உறவினர் வீட்டிற்குத் திரும்புவதற்காக பாதசாரி கடவையில் பாதையைக் கடக்கும் கோனபொலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட நான்கு பேர் உடனடியாக வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரு பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து மரணித்த பெண்ணின் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்களும், அவரது சகோதரியும் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். இதன்போது சகோதரியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதான பண்டாரகம, ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்த அவரது சகோதரி பேருவளை, மாகல்கந்த, அலுத்ஹேன பகுதியில் வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தாயான 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சுரங்கிகா தமயந்தியின் இரண்டு பிள்ளைகளாவர். அவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய வாகன சாரதி தனது மூன்று வயது மகளுடன் உணவு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​பாதசாரிகள் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பிறகு, அவர் தனது மகளை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்துவிட்டு, பொலிஸார் அங்கு வந்தவுடன் சரணடைந்தார். விபத்து தொடர்பாக 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக மொரகஹஹேன பொலஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இன்று (16) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.