ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு சுசந்திக்கா தெரிவு!

susanthika

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தெரிவாகியுள்ளார்.இந்தியாவின் புனேயில் நடைபெற்ற சம்மேளனத்தின் தேர்தலில் அவர் தெரிவாகியுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஸ் கல்மாடியை தோற்கடித்து கட்டாரின் ஜெனரல் தலான் அல் ஹமாட் இம்முறை வெற்றிபெற்றுள்ளார். செயலாளராக மொரிஸ் நிக்கலஸ் தெரிவாகியுள்ளார்.

சம்மேளனத்தின் வீதியோட்டம் உப குழுவிற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உப தலைவர் ஜீ.எல்.எஸ்.பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிட்ட இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் பின்னவலவிற்கு இம்முறை தேர்தலில் வெற்றிபெற முடியாமற் போனது.

 

அடுத்த வாரம் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்?

எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியிலான பஸ் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் உறுதியான பதில் எதுவும் அளிக்காவிட்டால் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண உயர்வு குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கனடாவில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்..!

நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க பேரவையின் தமிழ்விழாவின் உபநிகழ்வாக இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

தமிழகத்தில் இருந்து பேராளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கனேடிய நேரப்படி மாலை 3 மணி முதல் 5 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

26வது ஆண்டாக இடம்பெறும் இப்பெருநிகழ்வானது, முதன்முறையாக கனேடிய மண்ணில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து வழங்கும் ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை இப்பெருநிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் ‘போர் தவிர்ப்பு வலையம்’ ஆவணத்திரைப்படம் காண்பிக்கப்படுவதோடு, இயக்குனர் கலம் மக்றேவும் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் அவர்கள் புலம்பெயர்ந்த தேசமொன்றில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு நிகழ்வுகளாக நடனக் கலைஞர் பிரேம் கோபாலின் நடனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சிறப்புரை என்பனவும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் பங்கேற்கவென இரா.சம்பந்தன் இலங்கையில் இருந்து கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேஷ் ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் சம்மதித்தது எப்படி?

இங்க என்ன சொல்லுது படத்தில் விடிவி கணேஷின் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.
வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில், அவரே ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் கணேசுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படம் நடுத்தர வயதுடைய நபர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றியது.

இதில் ஹீரோயினாக மீராவை தவிர வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருக்காது என கருதினோம்.

எனவே உடனடியாக கேரளாவில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்று கால்ஷீட் கேட்டோம்.

ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததுடன், திகதி இல்லை என கூறிவிட்டார்.

பின்பு முழுவதுமாக கதையை கூறியவுடன், நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார், அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா!

விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது விடுதலைப் புலிகளுக்குத் தாம் இராணுவத் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

2006இல் ரொரொன்ரோவில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து போராட்டத்தின் போது நடு வீதியில் வைத்து பெண் நிருபர் பலாத்காரம்..!

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எகிப்தின் ஜனாதிபதி முகமது மொர்ஸிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயல் மாபெரும் எழுச்சி போராட்டத்தில் நடந்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் ஜனாதிபதி முகமது மொர்ஸி பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தலைநகரின் மைய பகுதியான தாஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி பேரணிகள் ஞாயிற்றுகிழமை புறப்பட்டது. இந்த நிலையில் பேரணியின்போது டட்ச் நாட்டை சேர்ந்த பெண் நிருபர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இலட்சக்கணக்கானோர் சூழ்ந்த முக்கிய போராட்ட பகுதியில் அன்றிரவு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரை போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். தற்போது அந்த பெண் பலத்த காயமுற்று அதன் விளைவாக அறுவை சிகிச்சைகளை பெற்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் எகிப்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் பாலியில் தொந்தரவிற்கு எதிரான அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் ஐந்து நபர்களால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த ஞாயிறு இரவு மட்டும் 44 பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு தரப்பு போராட்டத்தின் எழுச்சியை குறைக்க மற்றும் பெண்களின் பங்கேற்பை தடுக்க இத்தகைய இரக்கமற்ற அநாகரீகம் செயல்களை நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மலசலகூட கதவென நினைத்து விமான நிலைய கதவை திறந்தவர் அமைச்சர் ரம்புக்வெலவின் மகன்!

லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இரண்டாவதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதனால் பயணிகள் பதற்றமடைந்ததுடன் சக வீரர்கள் அவரை கதவை திறக்க வேண்டாம் என சத்தமிட்டுள்ளதாக விமானத்தின் பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும் ரமித் ரம்புக்வெல மலசலகூட கதவு என நினைத்து விமான நிலைய கதவை திறந்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு மலசலகூட கதவு இனங்காட்டப்பட்ட பின் அவர் பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் மன்னிப்பு கோரியதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய கிரிக்கெட் வீரர் மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

CRICKET-JAM-IND-SRI

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளை கண்டுள்ளது.

இந்த நிலையில் கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

உபாதை காரணமாக போட்டித்தொடரிலிருந்து டோனி விலகியதை அடுத்து நேற்றைய போட்டிக்கு விராத் கோஹ்லி தலைமை தாங்கினார். இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டுடை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களை விளாசித்தள்ளி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன 107 ஓட்டங்களையும் பெற்றுக்கெடுத்தனர்.

349 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்ளையும் இழந்து 187 ஓட்டங்ளை மட்டுமே எடுத்து படு தோல்வியைத் தழுவியது.

இலங்கை சார்பாக ஹேரத் 3 விக்கெட்களையும், சேனநாயக்க மற்றும் மலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என அனைத்து துறைகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றை போட்டியில் பெற்ற அபார வெற்றி மூலம் ஒரு போனஸ் புள்ளியையும் சுவீகரித்துக்கொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஏற்கனவே அணித்தலைவர் தோனியை இழந்துவிட நிலையில் நேற்றைய படுதோல்வி மூலம் இனிவரும் போட்டிகளில் கடுமையாகப் போராடவேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

mahela

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவர்த்தன, ஒருநாள் போட்டிகளில் தனது 16 வது சதத்தை இன்று பெற்றுக் கொண்டார். இவர் 107 ஓட்டங்களைப் பெற்றவேளை அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அத்துடன் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவும் இந்தப் போட்டியில் தனது 13 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க ஆட்டமிழக்காது 159 பந்துகளில் 19 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதுவே இவர் பெற்ற அதிக ஓட்டங்களாகும்.

இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட்டை மாதிரம் இழந்து 348 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்தது.

துருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம்.
இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது.

முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது.

அதன் பின் அமலா பால் தான் நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி சில நாட்களிலேயே, கௌதமின் ஆஸ்தான நடிகை சமந்தா தான் நடிக்க போகிறார் என பேசப்பட்டது.

இதற்கிடையே சமந்தாவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அசினை நடிக்க வைக்கலாமா என்று கௌதம் மேனன் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அசினும் பாலிவுட்டில் ஒன்றும் சரியாகப் போகாததால் அங்கிருந்து கிளம்பி இந்த பக்கம் வரத் தான் காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிப்பில் கலக்கும் தனுஷின் ராஞ்சனா நாயகி சோனம் கபூரை நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ரோபோ, அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே குதித்து படுக்கையின் ஓரத்தில் இருக்கும் டேபிளில் உட்காருகிறது. பின்னர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் காதருகில் பயங்கர சத்தத்துடன் அலாரம் அடிக்கிறது. அதற்காக இந்த ரோபோ மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அது தூங்குபவரின் படுக்கைக்கு வர வசதியாக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 3அடி உயரம் வரை எழும்பி தாவக்கூடியவை. தூங்குபவர் எழுந்து அதன் சுவிட்சை அணைக்கும் வரை அதாவது ஆப் செய்யும் வரை அலாரம் அடிப்பது நிற்காது. அதன் விலை ரூ.3,500 (இந்திய ரூபாய் ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

robotClock

நீச்சல் குளத்தில் மீன் போன்று நீச்சலடிக்கும் 16 மாத பெண் குழந்தை (வீடியோ இணைப்பு)..!

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆதம் கிறிஸ்டன்சன் என்பவரின் 16 மாத பெண் குழந்தை எலிசபெத். ஆதமும், அவரது மனைவியும் சேர்ந்து குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளனர். குட்டி எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சியை ஆதம் வீடியோ எடுத்துள்ளார்.

எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை ஆதம் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டாலும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீச்சல் குளத்தில் எலிசபெத் நீந்துவதைப் பார்த்தால் இது என்ன மீன் குட்டியா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எலிசபெத்தை நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு தாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை என்று ஆதம் தெரிவித்துள்ளார். தனது மகள் நீச்சல் குளத்தில் இறங்கினால் மிகவும் சந்தோஷமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா!!

Nayan

ஆர்யாவும், நயன்தாராவும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.

தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ இயக்கும் “ராஜா ராணி” யில் மறுபடியும் இணைந்துள்ளது ஜோடி. இந்தப் படத்தில் முன்பைவிட இருவரும் மிக நெருக்கமாக நடித்துள்ளனர்.

ஏற்கெனவே இருவரும் காதலிக்கிறார்கள் என வதந்தி பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் நெருக்கமாக நடித்திருப்பது வதந்தியை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டதற்கு, “நெருக்கமாக நடிப்பது என்பது கதையைப் பொறுத்தது. எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது. அந்தப் புரிதல்தான் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.

இதுவரை என்னுடன் நடித்த நடிகர்களிலேயே ஆர்யா தான் பெஸ்ட். அவருடன் நடிக்கும்போது ‘கெமிஸ்ட்ரி’ நன்றாக இருக்கிறது. அந்தக்கால ரஜினி – ஸ்ரீப்ரியா, கமல் – ஸ்ரீதேவி ஜோடி போல எங்கள் ஜோடியும் பேசப்படும்” என்றாராம்.

மேலும், ஆர்யாவின் அறிவுரைப்படி வயதான ஹீரோக்களுடன் சேர்ந்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்.

வயதான ஹீரோக்களுடன் நடித்தால் உனக்கும் வயதாகிவிட்டதாக மற்றவர்கள் நினைப்பார்கள். இளம் ஹீரோக்கள் உன்னுடன் நடிக்கத் தயங்குவார்கள் என ஆர்யா அட்வைஸ் செய்ததே இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!

siva

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை எதிர்நீச்சல் படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். பட்டத்து யானை ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இதைப் பார்த்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

 

சட்டவிரோத பணியாளர்களுக்கான சவுதியின் மன்னிப்புக் காலம் நீடிப்பு..!

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மன்னிப்புக் காலம் நாளை நிறைவடையும் நிலையில் இந் நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை..!

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளவதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி இனங்காணப்பட்டால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை இலங்கை அணி வீரர் ஒருவர் திறக்க முற்பட்டு குழப்பம் விளைவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.