வாழைச்சேனை பாசிக்குடா முனை முருகன் கோவில் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது.
நேற்று இரவு 7.30 மணயிளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள் மற்றும் அரச காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தீயினை கல்குடா பொலிஸாரும்,இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர் மூவீஸ் தான் ரிலீஸ் செய்கிறதாம். அந்த 2 படங்களையும் பார்க்காமலே வாங்கியுள்ளனர். இந்நிலையில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள பட்டத்து யானை படத்தை வெளியிடுவது குறித்து வேந்தர் மூவீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் அவர்களோ முதலில் படத்தைப் போட்டுக் காட்டுங்கள் அதன் பிறகு வாங்குவது பற்றி முடிவு செய்யலாம் என்றார்களாம். இதைக் கேட்ட விஷால் கடுப்பாகிவிட்டாராம். விஜய், அஜீத் படங்களை மட்டும் பார்க்காமல் வாங்கியுள்ளீர்கள். அதே போன்று என் படத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டிது தானே என்றாராம் விஷால்.
அதற்கு வேந்தர் மூவிஸ் தரப்பில் அஜீத், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்கள். அவர்கள் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். உங்களுக்கு அப்படி இல்லையே என்று கூறினார்களாம். இதையடுத்து விஷால் படத்தை வாங்கும் முயற்சியை வேந்தர் மூவிஸ் கைவிட்டுவிட்டதாம். இப்போது ரெட்ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்களாம் பட்டத்து யானை தரப்பில்.
இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால் 2009ம் ஆண்டு மூடப்பட்டது. ஆயினும் காப்பகத்தில் இருந்த விலங்குகள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து பராமரிக்கப் பட்டு வருகின்றன.
தற்போது அங்கு நிறைய புலிகள் உள்ளன. இந்தக் காப்பகத்தில் 72 வயது நபர் ஒருவர் புலிகளுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறார். சம்பவத்தன்று, வழக்கம் போல் உணவளிக்கச் சென்ற அவரை கூண்டுக்குள் இருந்த 3 புலிகள் திடீரென தாக்கின.
புலிகள், முதியவரின் கழுத்தைக் கடித்துக் குதறுவதைப் பார்த்து அதிர்ந்து போன அவரின் மனைவி உடனடியாக, மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் இறந்து போன முதியவரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.
யாழ். குடாநாட்டில் கடந்த 6மாத காலப் பகுதியில் 142 பேர் காசநோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.யமுனானந்தா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மார்பு நோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இந்த வருடத்தில் 6மாத காலப் பகுதியில் 11 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சைக்கு உட்படுத்தியோரில்142 பேருக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட142 பேரும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த கையினை சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி இவ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இச் சத்திர சிகிச்சை சம்பவம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான் சிறிசேன தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவு செய்தது.
இதுவரை காலமும் இப்பொது வைத்தியசாலைக்கு இவ்வாறான சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் கண்டி மற்றும் கொழும்பு போன்ற மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி அஹமட் அல்கெந்தாவி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இளைஞர் பாராளுமன்றில் உரை நிகழ்த்தும் வகையில் அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் இளைஞர் விவகார செயற்பாடுகள் குறித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்பிப்பதும் இவரது விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
இளைஞர்கள் செயற்பாடு குறித்து இன்று (04) லக்ஷமன் கதிர்காமர் சர்வதேச கல்வி நிலையத்தில் செயலமர்வு இடம்பெறவுள்ளது.
இலங்கை வந்துள்ள அஹமட் அல்கெந்தாவி நாளைய தினம் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் பா.உ நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
2014இல் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டு குறித்து இந்த சந்திப்புக்களின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும் மற்றும் வடமாகாண சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளின் கால எல்லை அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின்போது குறித்த மாகாணசபைகளின் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் அதனை முன்கூட்டியே கலைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மோர்ஸியை இராணுவம் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து முபாரக் அதரடியாக நீக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முகம்மது கோர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மோர்ஸிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
இதனை அடுத்து ஜனாதிபதி மோர்ஸி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் மோர்ஸி பேசுகையில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பதவி விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களினால் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
ஜனாதிபதியை நீக்க வலியுறுத்தி நடைபெறற போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து இராணுவம் மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது. இராணுவம் விடுத்திருந்த கெடு முடிந்தநிலையில் இராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி பதவி விலகியதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் இராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி பதவி வகிப்பார் என இராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மோர்ஸியின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் வடக்கே இருக்கும் யாகுதியா பகுதியில் 11 குழந்தைகள் உள்பட 25 பயணிகள், 3விமான சிப்பந்திகளுடன் மிக் 8 ரக ஹெலிகாப்டர் சென்றது. அது திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.
இதில் குழந்தைகள் உள்பட 19பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ரஷ்ய அதிகாரிகள் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் ஹெலிகாப்டர் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
யோகேஸ்வரன் மணிமாறன் இலங்கையில் வங்கியொன்றில் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், லண்டன் காடிப் மைதானத்தில் நடைபெற்றபோதே இவர் புலிக் கொடியுடன் மைதானத்திற்குள் பிரவேசித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் போஸ்டர், டிரெய்லர் எப்போது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு இன்னும் பல காலம் ஆகும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட விக்ரம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே ‘ஐ’ படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக விக்ரமை எந்த பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை.
அதுமட்டுமன்றி ஜி.வி.பிரகாஷின் திருமணத்தில் கூட விக்ரம் கலந்து கொள்ளவில்லை. தொலைபேசி மூலமாக தனது வாழ்த்தை தெரிவித்தார். விக்ரம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று விசாரித்ததில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்தன.
‘ஐ’ படத்தில் 85 வயது முதியவர் வேடம் ஒன்று இருக்கிறதாம். அதுவும் அந்த வேடத்தில் உடம்பை ஏற்றி ஜிம் போய்(Gym Boy) மாதிரி இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறாராம் ஷங்கர்.
இதற்காக எந்த நேரம் பார்த்தாலும் ஜிம்மே கதி என்று இருக்கிறாராம் விக்ரம். ஜிம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் படப்பிடிப்பு என்று கடந்த 3 மாதங்களாக இருந்து வருகிறார் விக்ரம்.
இந்த உடலமைப்போடு எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கோ, குடும்ப நிகழ்ச்சிக்கோ செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறாராம் ஷங்கர்.
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குளையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது இக்காணொளி மூலம் உங்களுக்கு புரியும்.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் விரைவாகவும் பலரின் அபிமானங்களை பெற்று வருவது தைத் தொலைபேசியின் வளர்ச்சியாகும். பல நிறுவனங்கள் போட்டி தமது உற்பத்திகளை பெருக்க புது புது உத்திகளை பயன்படுத்தி வருகின்றன.
இங்கு ஒரு யானை ஒன்று மிகவும் அலாதியாக கைத்தொலைபேசியை இயக்குகின்றது பாருங்கள்.
அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது 5 வயது பேரனும், 2 வயது பேத்தியும் அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த தாத்தா, இடையில் வேறு வேலை காரணமாக உள் அறைக்குச் சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.
எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கை பட்டு விட, அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவனது தங்கையின் முகத்தில் பாயந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக பலியானாள்.
மேலை நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெரியவர்களின் அஜாக்கிரதையாலேயே இத்தகைய உயிர் பலிகள் ஏற்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கமைத்துள்ள பாரிய பேரணியொன்று தற்போது கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஹை லெவல் வீதி வழியாக கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கிசென்று கொண்டிருக்கிறது.
இதன்போது பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் இலவசக் கல்வியை இலவசமாகப் பெறுவதற்காக போராடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கும் எதிர்ப்புத்தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பெருந்திரளானோர் பங்குபெற்றும் இவ் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நுகேகொட மற்றும் ஹை லெவல் வீதி பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது.
வவுனியா நெடுங்கேணிப் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிற்கு வந்த இருவர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது
நேற்று இரவு 9.10 மணியளவில் மதுபான நிலையம் பூட்டப்படும் வேளையில் இரு நபா்கள் வந்து தமக்கு சாராயம் வேண்டுமென்று கூறியுள்ளனர்.
அப்போது விற்பனையாளர்கள் உள்ளே சென்று சாராயம் எடுக்கும் வேளை சடுதியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் உட்பக்கமாக வாயில் கதவை பூட்டியதுடன் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்த 3 இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இம்மது விற்பனை நிலையத்தில் இரண்டாவது முறையாகவும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.