காதலில் ஏற்பட்ட தகராறில், இலங்கை அகதி இளைஞரால் கல்லூரி வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே அறை எடுத்து தங்கி, விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் செல்லபாண்டியன் மர்மமான முறையில், கொடுமுடி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், செல்லபாண்டியனின் தாய்மாமன் மகளுக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பெண்ணை, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயனின் மகன் கஜேந்திரன், 23, என்பவர் விரும்பியதாக தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த, கஜேந்திரனுக்கும், செல்லபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் கஜேந்திரன், செல்லபாண்டியனை இரும்பு ஆயுதத்ததால் தாக்கி கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.
தலைமறைவாக இருக்கும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கஜேந்திரனை, பொலிஸார் தேடி வருகின்றனர்.
மலையம்பாளையம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவக்குமார் கூறியதாவது, காதலில் ஏற்பட்ட தகராறில், இரும்பால் தாக்கியதில் செல்லபாண்டியன் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக இருக்கும் கஜேந்திரனை தேடி வருகிறோம், என்றார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (04) இரவு கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த இரு பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இனம்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டனர்.
அதன் பின்னர் பஸ் புறப்பட்டு எழுதுமட்டுவாள் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டது என குறித்த பயணி குறிப்பிட்டார்.
இத் தாக்குதல் சம்பவம் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பிறகே தம்மை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் காத்திருந்தே பயணத்தை தொடர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன.
இவ்வாறான கற் தாக்குதல் இதற்கு முன்னதாகவும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட அந்த உடன்பாட்டையும், சட்டத் திருத்தத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது என்று பிபிசிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு,இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என்றும் கூறும் அவர் இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்தன ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார் அமைச்சர் நாராயணசாமி.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது சட்டத் திருத்ததை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி இளவரசன், திவ்யா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பெண் கடத்தப்பட்டதாக திவ்யா தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதனை விசாரித்த பொலிசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து, தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்த நிலையில், இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி வெளியேறியுள்ளார்.
ஆனால் வீடு திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று பொலிசில் இளவரசன் புகார் கொடுத்தார். இதற்கிடையில் திவ்யாவின் தாய் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின்படி கடந்த மார்ச் மாதம் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன் ஆஜராயினர்.
அப்போது கணவனுடன் செல்வதாக கூறி திவ்யா சென்றார். பின்னர் மீண்டும் இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலனுடன் செல்ல விருப்பம் இல்லை. தாயுடன் செல்கிறேன் என்று திவ்யா நீதிபதிகளிடம் கூறினார். இதனால் காதல் ஜோடிகள் பிரிந்தனர். திவ்யா தாயுடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து அந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஜெயசந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தாயுடன் நேரில் ஆஜரானார். திவ்யா சார்பாக வக்கீல் கே.பாலு ஆஜராகி, மகள் தாயுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் நாங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.
இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க கூடாது. திவ்யா வன்னியர் சங்க வக்கீல்கள் வசம் உள்ளார். எனவே வக்கீல்கள் கூறுவதை திவ்யா அப்படியே நீதிமன்றத்தில் கூறுகிறார். அவருக்கு அறிவுசார் கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு கூறுவதாக அறிவித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திவ்யா கதறி அழுதார். பின்னர் கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன். இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. என்னால்தான் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மன உளைச்சலாக உள்ளது.
எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து எனது காலத்தை கழிக்க விரும்புகிறேன். என்னால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே விரும்புகிறேன். எக்காரணத்தை கொண்டும் இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
இந்தநிலையில் இளவரசனின் சடலம் தருமபுரி அரசக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி திவ்யாவின் காதல் கணவரான இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம் சந்தானம்.
சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து, ஹரி- சூர்யாவின் கூட்டணியில் உருவான சிங்கம்-2 நாளை வெளிவர உள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ஹரி கூறுகையில், படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படவில்லை.
ஆபத்தான காட்சிகளில் கூட சூர்யா டூப் வேண்டாம் என்று கூறி தானே நடித்தாராம்.
கடலில் 40 கிமீ தூரத்தில் மோட்டார் போட்டில் சென்று சூர்யா சேஸ் செய்யும் காட்சி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக படத்தில் அனுஷ்காவும், சந்தானமும் டூயட் பாடுகிறார்களாம்.
Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை.
Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம்.
1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும்.
Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
2. Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
3. Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.
அமெரிக்காவில் உரிய சான்றுகள் இல்லாமல்,சட்ட விரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இதே போல் 43 வயதான ஆன்டோனியோ லோபெஸ் சஜ் அமெரிக்காவில் குடியேறி லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு பாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘பவுன்சர்கள்‘இவரை கொடூரமாக தாக்கினர். அப்போது ஒரு பவுன்சர் அவரை கீழே தள்ளி,தலையை மாறி மாறி தரையில் மோதினான். இந்த அசுர தாக்குதலில் அவரின் 25சதவீத மண்டையோடு நொறுங்கியது.
இந்த அளவுக்கு கொலை வெறி தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீண்ட கால தீவிர மருத்துவ சிகிச்சை பிறகு மறு பிறவி எடுத்த போதும், அவர் தனது பேச்சு திறனை இழந்து விட்டார். இந்த தாக்குதல் அவரின் நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர் 24மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி,பவுன்சர்களை பணியில் அமர்த்தும் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் மீது ஆன்டோனியோ வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஆன்டோனியோவுக்கு 58மில்லியன் டாலர் (சுமார் ரூ. 5 கோடியே80 லட்சம்) வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பாதுகாப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்திய பவுன்சர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எந்த வித முறையான பயிற்சியும் பெற்றவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக தொடர்ந்து அரியணை ஏறினர்.
1953-ம் ஆண்டு அரச குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டு, எகிப்து நாடு குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. 1939-ம் ஆண்டு ஈரான் இளவரசர் முகமது ரெசா பாலவியை பாவ்சியா மணந்தார்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1945-ல் விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து 1949-ம் ஆண்டு எகிப்து நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரியை மணந்த பாவ்சியா எகிப்திலேயே தங்கியிருந்தார்.
எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் மரணம் அடைந்த பாவ்சியாவின் உடல் கெய்ரோவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்து உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணி சிம்பாப்வே சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 24-ந் திகதி முதல் ஆகஸ்ட்3-ந் திகதி வரை நடக்கிறது.
முதல் போட்டி 24-ந் திகதியும், 2-வது ஒருநாள் போட்டி 26-ந் திகதியும், 3-வது ஆட்டம் 28-ந் திகதியும் ஹராரேயில் நடக்கிறது. 4-வது போட்டி 31-ந் திகதியும், 5-வது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 3-ந் திகதியும் புலவாயோவில் நடக்கிறது.
சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டில் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்கின்றனர். காயம் அடைந்த டோனி அதில் இருந்து குணமடைந்து விட்டாரா என்பது தெரியவில்லை. அவர் உடல் தகுதியுடன் இல்லையென்றால் கோலியே கேப்டனாக நீடிக்கப்படுவார். கோலி தலைமையில் இந்திய அணி 2 ஆட்டத்திலும் தோற்றாலும் அவரே கேப்டனாக நீடிக்கப்படலாம்.
சிம்பாப்வே தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க முதலில் திட்டமிட்டதாக தெரிகிறது. அந்த முடிவை தற்போது தேர்வு குழுவினர் கைவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரெய்னா அல்லது ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. மேற்கிந்திய தீவுகளில் விளையாடும் வீரர்களே இடம் பெற வாய்ப்பு உள்ளது.
சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2.
அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம்2உருவாகி இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது அதில் ஹன்சிகா கலந்துகொண்டார். அனுஷ்காவால் பங்கேற்க முடியவில்லை.
இப்படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபம் அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை என்று இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை. இப்படத்தில் இரண்டு பேருக்கும் சமமான அளவில் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. அனுஷ்கா தெலுங்கில் நடிக்கும் படம் ஒன்றிற்காக குதிரை ஏற்ற பயிற்சி,வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.
இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டிருந்தது. இதனால்தான் அவரால் அன்றைக்கு வரமுடியவில்லை. சிங்கம் 2 நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் பங்கேற்றார். டி.வி நேரடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பேட்டி அளித்திருக்கிறார்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடமாகாணத்திலுள்ள 12 வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகள் மட்டுமே இந்த தடகளப் போட்டிக்கு பங்குபற்றவுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில்,
கடந்த வருடம் ஆறாவது இடத்தில் இருந்த வடமாகாணம் இந்த முறை குறைந்தது நான்காம் இடத்திற்கு முன்னேற வேண்டும். அத்தோடு இந்தப் போட்டிக்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொண்ட வீர,வீராங்கனைகள் சிறந்த பெறுபேற்றை ஈட்டி தமது பாடசாலைகளுக்கும், வடமாகாணத்திற்கும் பெருமையை தேடித்தர வேண்டும் என்றார்.
மேலும் இந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண செயலாளர் இளங்கோவன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள்,விளையாட்டு நடுவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எகிப்தின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக, அந்த நாட்டின் தலைமை நீதிபதி அட்லி மொன்சூர் பதவியேற்றுள்ளார்.
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முகமது முர்ஸி, அந்நாட்டின் இராணுவ புரட்சியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக மொன்சூர் பொறுப்பேற்றுள்ளார்.
இயக்குனர் யார் என்பதை பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன் என்றார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியது:
என்னை பொறுத்தவரை இயக்குனர்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதை இயக்குபவரை பொறுத்துதான் அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். அந்த வகையில்தான் ‘நான் ஈ’ஸ்கிரிப்டை இயக்குனர் ராஜமவுலி மீதான நம்பிக்கையில் ஏற்றேன்.
அது உண்மை என நிரூபணமானது. ‘மற்ற ஹீரோயின்கள் இந்திக்கு செல்வதுபோல் நீங்கள் செல்வீர்களா?’ என்று கேட்கிறார்கள். நிறைய இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால்,தென்னிந்திய படங்களில் நடிப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்தி படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை. நடிகர் சித்தார்த்துடனான உறவு பற்றி கேட்கிறார்கள். அவர் எனது நெருங்கிய நண்பர்.
இதனால் பொது இடங்களுக்கு ஜோடியாக வந்தேன். எங்கள் உறவு பற்றி சரியான நேரம் வரும்போது சொல்வேன். இதற்கிடையே, இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒன்றை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். எனது திருமணம் 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடக்கும்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் – கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும் – ஏற்பாடு செய்திருந்தன.
படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள்,பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை அப்பட்டமாக சித்திரிக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபெல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்போட் காலனானார். “வீடியோ கொன்ஃபரன்ஸிங்” எனப்படும் காணொளி தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்தவரான டக்ளஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88.
மின்னஞ்சல், இணையம் எல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு நெடுங்காலம் முன்பாகவே இப்படியான வசதிகள் வரும் என்று கணித்துச் சொன்னவர் அவர்.1968ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானிகள் ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றியதில் பிரபலமானவர் டக்ளஸ் எங்கெல்போட் ஆவார். அவரது அந்த உரை பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தது.
கணினியில் பயன்படுத்தப்படுகின்ற மௌஸ் எனப்படும் சுட்டுக் கருவியை உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்ததோடு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு இடத்துடன் காணொளி இணைப்புடன் கூடிய தொடர்பாடல் வலயமைப்பையும் அவர் செயல்படுத்திக் காட்டினார்.
தனது இந்தக் கண்டுபிடிப்புகளால் அவர் செல்வந்தர் ஆகவில்லை.
மௌஸுக்கு இவர் பெற்றிருந்த அறிவுசார் காப்பீட்டு உரிமையின் காலம் முடிந்த பின்னர்தான், நாம் அன்றாடம் கணினியில் பயன்படுத்தும் ஒரு கருவியாக அது உருவெடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய அப்ரிடிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதே நேரம் சோயிப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்ரிடியுடன் உமர் அக்மல், அஹ்மத் சாஷாத் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் அப்ரிடி மீண்டும் இடம் பிடித்துள்ளார். அணியில் இடம் பிடித்துள்ள மற்றவர்கள் விக்கெட் காப்பாளர் ரிஸ்வான் அஹ்மத் , ஹரிஸ் சொஹைல், ஜுல்பிகர் பாபர் ஆகியோர் ஆவர்.
முன்னாள் அணித் தலைவரான சோயப் மாலிக் சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன் கிண்ண போட்டியில் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டுள்ளார். அத்தொடரில் அவர் 25 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.
அதேபோல் விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல், தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பர்ஹத் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
அப்ரிடிக்கு மீண்டும் இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 மாதமாக அணியில்இடம் பிடிக்க போராடி வந்தார் அப்ரிடி.
இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் விளையாட வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.