வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விஷேட பேரூந்து சேவை!!

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (23.06.2025) காலை முதல் நாளை (24.06.2025) காலை வரை இந்த விஷேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

கோடிக்கணக்கில் பணம் மோசடி : இன்ஸ்டா பெண் பிரபலம் கைது!!

குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 13 லட்சம் பாலோயர்களைக் கொண்ட கிர்தி படேல், டிக்டொக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்திலேயே, ஆந்தையை கையில் ஏந்தி வீடியோ வெளியிட்டு வனத்துறையிடம் ரூ.25,000 அபராதம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் இன்ஸ்டா பிரபலம் கிர்தி படேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம் : கதறும் தோழிகள்!!

வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ​​​​​​கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்யா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து கனடாவுக்கான இந்திய துணைத் தூதரகம் கால்கரி பல்கலைக்கழக இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.

இவரது திடீர் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான எரிபொருள் பவுசர் : வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்!!

புத்தளம் , பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். பாலாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அபூதாலிப் பாத்திமா ரிஸானா எனும் ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளது. விபத்தில் பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.

விபத்துச் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே வாகன விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய சிறுவர்கள்!!

யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி வியாழக்கிழமை (19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி,

குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞன் : காதலிக்கு கொடுத்த அதிர்ச்சி!!

நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியான, இளம் பெண்ணின் தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிக்கும் இளைஞன் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதனடிப்படையில், முறைப்பாடு அளித்த பெண் மற்றும் மற்றொரு பெண்ணின் தகாத புகைப்படங்கள் மற்றும் தகாத வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன், மடிக்கணினியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.

இதன்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும்​​, குறித்த இளைஞனை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸில் விசா இல்லாதவர்களை தேடும் பொலிஸார் : வீடுகளில் பதுங்கியுள்ள தமிழர்கள்!!

பிரான்ஸில் ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்யும் விசேட சோதனை திட்டம் ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆவணங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக விசா இல்லாமல் பிரான்ஸில் பணியாற்றும் தமிழர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கைக்காக சுமார் நான்காயிரம் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் கடுமையான குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்தி வரும் உள்துறை அமைச்சு, ஆவணங்கள் இல்லாதவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுபோன்று ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 700 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயும் மகளும் வெட்டிக்கொலை : அநுராதபுரத்தில் கொடூரம்!!

வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அநுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

யாழ்.ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் பயணித்த மனைவி, மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபாகரசர்மாவின் மகனான அக்ஷே கடந்த 1ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பிரபாகரசர்மாவின் மைத்துனர் நேற்றையதினம்(20.06.2025) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போரின் கொடூர முகம்; உணவின்றி மண்ணை உண்ணும் சிறுவன்!!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது.அக் காணொளியில் சிறுவன் பேசுகையில்,

காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள்.

எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மணலைச் சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டாலர். அந்த ஒரு ரொட்டித் துண்டு மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை” என்று பேசியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம். உணவுதான் கிடைப்பதில்லை என தெரிவித்து மண்ணை உண்கிறார்.

இந்நிலையில் சிறுவனின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்களால் 2000 பேர் பலி!!

கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்கள் காரணமாக சுமார் 2000பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக குறித்த காலப்பகுதியில் 7152 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற வாகனங்களில் பயணிப்பதும் விபத்துக்களை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவனின் மரணம் தொடர்பான தகவலை குற்றப் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறித்த மாணவன் துன்புறுத்தல் காரணமாகவே வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் காரணமாக மாணவன் உயிரிழக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறும் துன்புறுத்தல் தொடர்பான விடயங்களை வெளியே வெளிப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சரித் தில்ஷான் என்ற மாணவன், சம்பவத்திற்கு முந்தைய இரவு முழுவதும் துன்புறுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்தது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை மேலும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொட நீதிமன்றம் உத்தரவிட்டது.

எயார் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு!!

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது.

29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்தத் தம்பதியினர் லண்டனின் குராய்டனில் வசித்து வந்தனர், ஆனால் சமீபத்தில் படேல் பணிபுரிந்த ஹாம்ப்ஷயரில் உள்ள சவுத்தாம்ப்டனில் இருந்து குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்புக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்களின் நெருங்கிய நண்பர் நீரவ் படேல் கூறியுள்ளார்.

உலகை உலுக்கிய தூக்குத் தண்டனை : ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் ஆவி!!

ஈரான் – இஸ்ரேல் மோதல்  தொடர்வதால், மத்திய கிழக்கு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிற நிலையில் ஈரான் தற்போது எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு 16 வயது சிறுமியை தூக்கிகிலிட்டமையே காரணம் என கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் 585 பேர் கொல்லப்பட்டும், 1,326 பேர் காயமடைந்தும் உள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பல அணு விஞ்ஞானிகளும், ராணுவ அதிகாரிகளும் வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், பல ஆண்டுகளுக்கு முன் உலகை உலுக்கிய 16 வயது சிறுமி அடெஃபே சஹாலாஹ்வின் சோகக்கதை சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

ஓர் அப்பாவி குழந்தையின் ஆவியால் ஈரான் சபிக்கப்பட்டுள்ளது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். அடெஃபே ஒரு ஆணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஈரானின் மத ஒழுங்கு காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அடெஃபேவின் தாய் சாலை விபத்தில் இறந்துவிட்டார். தந்தை போதைக்கு அடிமையானதால், அவர் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார்.

பாசம் நிறைந்த ஓர் உறவுக்காக ஏங்கியதாக உளவியல் அறிக்கை கூறியது. ஈரானியச் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.

எனினும் , அடெஃபேவுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பை கொண்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, ஆவணங்களை திரித்து அவரது வயதை 22 என்று குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றினார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் பாவம் தான் தற்போது ஈரானை பழிவாங்கி வருகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு!!

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று (19.06.2025) காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகிய போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.