சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி காரை ஓட்டிச் சென்ற சிறுவன் : மூவர் காயம்!!

கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (20.10.2025) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச் செல்லப்பட்ட கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் உட்பட மூவர்!!

மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, ​​அவர் பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், பண்டுவஸ்நுவர பகுதியை சேர்ந்த டி.எம். பிரதீப் சஞ்சீவ என்ற 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் மாலைத்தீவுக்குப் சென்றுள்ளார். அங்கு பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக வேலை செய்துள்ளார்.

அவர் 2 நாட்களாக மாலே பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு படகு அலைகளில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

படகில் 07 பேர் இருந்த நிலையில் நான்கு பேர் உயிர் தப்பினர், மீதமுள்ள மூவரில் இருவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விபத்தின் பின்னர் பிரதீப் சஞ்சீவா காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் நேற்று மதியம் மாலைத்தீவு மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த சஞ்சீவவின் உடலை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!!

தற்போது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, எதிவரும் வரும் நாட்களில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மானிங் சந்தை வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கடும் மழையால் பல பயிர்ச்செய்கைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது,” என குறிப்பிட்டுள்ளார்.

மழை பெய்யும் முன் விலைகள் குறைவாக இருந்ததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் ஆனால் தற்போதைய வானிலை மாற்றத்தால் விலை உயர்வு பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வானிலை மாற்றம் தற்போது மரக்கறி விலைகளில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பதுளை மாவட்டத்தின் கெப்பெட்டிப்பொல மற்றும் ஹபராகலா பகுதிகளில் உள்ள பல மரகதோட்டங்கள் கடும் மழையால் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை மாற்றத்தினால் சந்தையில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் இதனால் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டிறைச்சிக் கறியில் மாத்திரைகள் : தப்பிய கணவனை தூக்கிட்டு கொன்ற மனைவி!!

மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,

மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் கள்ளக்காதல், பாலியல் தொழில் தொடர்புகள் மற்றும் மருந்து மாத்திரை மாபியா உள்ளிட்ட பல்வேறு பின்னணிகள் உள்ளன என்று போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.

கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) டிரைவராகப் பணியாற்றி வந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மவுனிகா (30)வைக் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒன்பது மாதங்களாக மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அறிமுகமான அஜயுடன் கள்ள உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி நேரம் கழித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதே சமயம் பண தொடர்பான காரணங்களால் சுரேஷ் தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா தனது கணவரை கொல்ல தீர்மானித்தார். தனது பாலியல் தொழில் உறவினரான ஜாவாவுக்கு இதை தெரிவித்துள்ளார். பின்னர் சந்தியா என்ற தொழிலாளி மூலமாக மருந்து முகவர் சிவகிருஷ்ணா அறிமுகமானார்.

அவர்களின் யோசனையின்படி புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி 15 வயாகரா மாத்திரைகள் வாங்கி மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுக்க முயன்ற போது மட்டன் குழம்பில் அசாதாரண வாசனை இருந்ததால் அவர் மட்டன் குழம்பைத் தவிர்த்து விட்டார். இதனால் முதல் முயற்சி தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி சிவகிருஷ்ணாவின் ஆலோசனையின்படி, தூக்க மாத்திரைகள் அதிகளவில் மதுவில் கலந்து கொடுக்கப்பட்டது. மயக்கமடைந்த சுரேஷை புடவையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு மவுனிகா கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி, உல்லாசத்தின் போது மயங்கி விழுந்ததாக தனது தாயாரிடம் நாடகம் ஆடியுள்ளார். மருத்துவமனையில் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்ததும், போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் திட்டமிட்டு கள்ளக்காதலனும் பாலியல் தொழிலாளிகளும் மருந்து முகவரும் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மவுனிகா, அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு : தீபாவளி நாளில் சோகம்!!

நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில்,

செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, 10வது மாடியில் குறுக்கு மின்சாரம் காரணமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தீ வேகமாக 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவி அபார்ட்மெண்ட் குடியிருப்பாளர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்:வேதிகா சுந்தர் பாலகிருஷ்ணன் (6), கமலா ஹிரால் ஜெயின் (84), சுந்தர் பாலகிருஷ்ணன் (44), பூஜா ராஜன் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்த தகவலறிந்ததும், தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில், இதற்கு முன் மும்பை கஃப் பேரேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களில் மும்பை கடற்கரை சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது,

கந்திவாலியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் இறந்தது போன்ற தொடர் நிகழ்வுகள் மாநிலத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.

இலங்கையில் தங்கம் வாங்க தயங்கும் மக்கள் : விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

967

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ. 356,000 ஆக குறைந்துள்ளது.

சனிக்கிழமை, இது ரூ. 360,800 என மதிப்பிடப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை ரூ. 390,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 385,000 ஆகக் குறைந்துள்ளது.

அதன்படி கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த எச்சரிக்கை இன்று காலை 9 மணி முதல் அடுத்த வரும் 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கு மேல் மிக கனமழை பெய்யும்.

தொடர்ந்து காலநிலை தொடர்பான அறிவிப்புகளில் கவனம் செலுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சுவீடனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு பெண், தனது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவரிடம் பணம் இல்லாமல் கதிர்காமம் பகுதியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த அமிரா இங்கா மேரி டேவி என்ற பெண், கதிர்காம ஆலயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் வழங்கும் பழங்கள் மற்றும் உணவுகளை உண்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் நபர்களால் பாதிக்கப்பட்டு அவர் தனது பணத்தை இழந்துள்ளார்.

சுவீடனில் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தப் பெண், தன்னிடம் பணம் அல்லது கையடக்க தொலைபேசி இல்லாததால், நாடு திரும்ப உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்!!

தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்கள், அதனை புதுப்பித்து மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிதி நிறுவனங்களை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்புடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைப்பதற்கு கிடைக்கும் கட்டணமும் அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கான முன்பணம் 250,000 முதல் 260,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு செலுத்தப்பட்ட தொகை 220,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, 24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு சுமார் 210,000 ரூபாய் வழங்கப்பட்டது.

அடகு வைப்பதற்கான முற்பணம் அதிகரித்ததால், சில வாடிக்கையாளர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தற்போது அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு அதிக விலை பெற தங்கள் அடமானங்களை புதுப்பித்துள்ளதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்க நகைகள் இவ்வளவு அதிக விலையில் அடகு வைக்கப்படுவதால், அவற்றை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பால், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 400,000 ரூபாயைத் தாண்டியது, ஆனால் நேற்று முன்தினம் 390,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் நகைச் சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகைக்கடைகளில் பணியாற்றுவோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : வெளியான எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் நேற்றையதினம்(20.10.2025) உருவான தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த தாழமுக்கம் இன்று மாலை அல்லது நாளை அதிகாலை வடக்கு மாகாணத்திற்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை எதிர்வரும் 23.10.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் குறைந்தது வாகனங்களின் விலை!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகபட்சமாக ரூ.1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையிலும் வாகனங்கள் விலை குறைந்துள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத வாகனங்கள் சந்தையில் குவிந்துள்ளன என்றும், இதனால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 705 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளன.

“விலை மாற்றங்களின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத ஹோண்டா வெசல் Z Play 2025 SUV தற்போது ரூ. 23.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. முன்னர் இது ரூ. 25.5 மில்லியனாக இருந்தது.

டொயோட்டா யாரிஸ் (Toyota Yaris)ரூ. 11.5 மில்லியனிலிருந்து ரூ. 10.5 மில்லியனாக குறைந்துள்ளது. சுசுகி ஆல்டோ ஹைப்ரிட் (Suzuki Alto Hybrid) தற்போது ரூ. 7.9 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும், சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) ரூ. 7.8 மில்லியனிலிருந்து ரூ. 7.3 மில்லியனாகவும் குறைந்துள்ளது,” என மெரிஞ்சிகே குறிப்பிட்டார்.

டொயோட்டா தற்போது இலங்கையின் இறக்குமதி வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது. ரைஸ் மற்றும் யாரிஸ் மொடல்கள் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிய வாகன பிரிவில் நிசான் (Nissan) பிராண்ட் விற்பனை வேகமாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால் சுசுகி வாகன் ஆர் (Suzuki Wagon R) மொடலில் புதிய பதிப்புகள் அறிமுகப்படுத்தப்படாததால் அதன் விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது ஹோண்டா, வெசல் SUV பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளதாகவும் மெரிஞ்சிகே கூறினார்.

தாயாரின் ஆண் நண்பரால் சிறுமிக்கு சித்திரவதை : தமிழர் பகுதியில் சம்பவம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சித்திரவதை செய்த சந்தேகநபர் தலைமறைவாகி யுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 5 வயது குழந்தை ஒன்றுக்குத் தாயான 23 வயதுப் பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து குறித்த பெண்ணுடன் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதியில் வைத்து அந்த நபர் , சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் நேற்றுமுன்தினம் (19) சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கொழும்பில் வைத்து தனக்கு அடித்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சிறுமிக்கு சூடு வைத்து அடித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரையுடன் இளைஞர் கைது!!

வவுனியாவில் மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (20.10) தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ண விஜயமுனி ஆலோசனையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் விமல் பியரட்ண தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த போதை மாத்திரைக்கள் கைப்பற்றப்பட்டன.

வவுனியா, ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த பொலிரோ ரக வாகனத்தை இ.போ.சபை சாலைக்கு அருகில் மறித்த பொலிசார் விசேட சோதனையை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தின் கருவாட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதை மாத்திரைகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மற்றும் வாகனம் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

குறித்த வாகனத்தில் இருந்து மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஆறாம் மாத நினைவஞ்சலி : அமரர். பொன்னுத்துரை உதயகுமாரன்!!

ஆறாம் மாத நினைவஞ்சலி : அமரர். பொன்னுத்துரை உதயகுமாரன்(குமார்)

மலர்வு : 17.10.1958 || உதிர்வு : 21.04.2025

பிறப்பிடம் : இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்.

வசிப்பிடம் : இல- 18, பார்குழி வீதி, தோணிக்கல், வவுனியா.

ஆறாம் மாத நினைவில் எங்கள் அப்பா!!

அப்பா…!!
உங்கள் நகைச்சுவையான பேச்சைக் கேட்காததனால் எம் உலகம் வெறிச்சோடி இருக்கிறது…!

உங்கள் அறிவுரைகள் இல்லாமல் எம் வாழ்க்கை துடுப்பின்றி தத்தளிக்கின்றன படகைப் போல் இருக்கிறது..!!

“உங்கள் அப்பா மிக்க
நல்லவர்” – என உங்களைப்பற்றி
மற்றவர்கள் இன்றுவரை
சொல்லும் போது, கவலையையும் மீறிய கர்வம் எனக்குள்
எத்தனை பேருக்கு
கிடைக்காத அப்பா
எமக்கு மட்டும் கிடைத்திருக்கிறாறென..!!

அப்பா நீங்களா உயிரோடு இருந்தவரை
இழப்பு என்று எதுவுமில்லை.. – உங்கள்
இறப்புக்கு பின்
இழப்பதற்கு எதுவுமில்லை..!!

நெடுங்காலமாக எமக்காக உழைத்த நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள் அப்பா..!!

உங்கள் நினைவுகள் எம் இதயத்தில் அழியாத கவிதை…!!

கண்ணுக்குள் ஒளியாய்.. நெஞ்சத்தில் நினைவாய்.. இன்றைக்கும் என்றைக்கும் இறைவனாயிருந்து- எம்மை வழிநடத்திடுங்கள் அப்பா…!!

நீங்காத நினைவில்..
குடும்பத்தினர்.

 

பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்!!

திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

மடத்தடி சுற்றுவட்டத்தின் ஊடாக திருஞானசம்பந்தர் வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள்மீது பிரதான வீதியின் வழியாக மடத்தடி சந்தியை நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசா என்பவரே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து : மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதியினர்!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் மின்சார சபையின் மின்கம்பங்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்பலகை என்பவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலைக்கு திருமண வீடொன்றுக்கு பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.