கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பன்னல – குளியாபிட்டிய பிரதான வீதியில் போவத பகுதியில் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
பன்னலவில் இருந்து பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் திங்கட்கிழமை (23.06) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரும் அவரது நண்பரும் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (22) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (22) உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் நடிகர் ஶ்ரீகாந்தை ஜூலை 7 வரை, தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதோடு வெளிநாடு செல்லமாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
இருப்பினும் பிணை வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் பிணை வழங்க கோரி, மனுதாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் , நிர்வாக உதவியாளர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவினால், செவ்வாய்க்கிழமை (24) பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, அதே மருத்துவமனையின் மேலாண்மை உதவியாளர் கெகுலந்தல லியனகே இந்திகா
மற்றும் மருத்துவரால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் நிமல் ரஞ்சித் ஆகியோர் ஜூன் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (24.06) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண்டு 22 கெரட் தங்கத்தின் விலை 248,000 ரூபாவாக குறைந்துள்ளது. அதேவேளை இது கடந்த ஜூன் 13 ஆம் திகதி தங்கத்தில் விலை 250,600 ரூபாவாக பதிவாகியிருந்து.
அதேபோல், 24 கெரட் தங்கத்தின் விலை கடந்த ஜூன் 13 ஆம் திகதி 271,000 ரூபாவாக இருந்தது. இந்த நிலையில், இன்று 268,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் (23) ஆலய பொங்கல் திருவிழாவில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு நாகதம்பிரானை வழிபட வருகை தந்திருந்தனர்.
வவுனியா மக்கள் மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் புதூர் நாகதம்பிரானை வழிபட பெரும் தொகையாக வருகை தந்திருந்ததுடன், காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர்களின் தாக்குதலால் நாகதம்பிரானை தரிசிக்க வந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி ஓடியிருந்தனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், ஆலய திருவிழாவில் இளைஞர்களின் மோசமான செயலுக்கு சமூக ஆர்வர்கள் விசனக்களை வெளியிட்டு வருவதுடன், பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சந்தையில் சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகள் கிடைக்காததால் நுகர்வோர் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிறு அரிசி ஆலைகளினால் சந்தைக்கு கிடைக்கப்பெறும் அரிசியின் இருப்பு தீர்ந்துவிட்டதால் இவ்வாறான பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாரியளவிலான அரிசி ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் இருந்து கடந்த நாட்களில் சந்தைக்கு குறைந்தளவிலான அரிசியே கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிறிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தைக்கு வெளியிடும் அரிசி இருப்பு தீர்ந்ததால், பெரிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தையில் அரிசி விலையை அதிகரிக்க தயாராகி வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி அங்குள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாதசாரி உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதியவுடன் சாரதி மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்யவதற்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிநபர் ஒருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16342 ரூபா தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்மூலமாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கமைய இந்த தொகையில் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது. குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மாதாந்தம் 16,626 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா எ9வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எ9வீதியில் வவுனியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில்இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டது.
பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்கின்ற நிலையில் பாலம் பூர்த்திசெய்யப்படாமையினால் அந்த வீதியூடாக போக்குவரத்துச்செய்யும் பொதுமக்களும் வாகனமோட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த வீதி பிரதான வீதியாக உள்ளமையினால் அதிகமான வாகனங்கள் அந்த வீதியை பயன்படுத்திவருகின்றது. இந்த சூழ் நிலையில் பாலம் அமைக்கும் பணி தாமதமாகின்றமையால் அந்த பகுதியில் தினமும் நெருக்கடி நிலை ஏற்ப்பட்டுவருகின்றது.
எனவே குறித்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாளையதினம் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் உபதவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்த வகையில் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று(24.06) இடம்பெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் சக்தி), இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஶ்ரீரெலோ(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆகிய கட்சிகளிற்கிடையில் ஏற்ப்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் செட்டிகுளம் பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம்.
அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்படவுள்ளதுடன், உபதவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேசசபையின் ஆட்சியை எமது கூட்டு நிச்சயமாக கைப்பற்றும். பலதேவைகள் அந்த பிரதேசத்தில் இருக்கின்றது.
அந்த தேவைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை இந்த கட்சிகள் கூட்டாக மேற்கொள்ளும்.
வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம். அந்த சபையின் தவிசாளர் யார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளது. அவற்றை நாம் ஆராய்ந்து பொருத்தமான முடிவினை எடுப்போம் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை, அத்துடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளபாடங்கள் இல்லாமல் உள்ளது,
இதன் காரணமாக மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவை கட்டிடத்திலுள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
பேரூந்து நிலையத்தின் மாகாணக்களுக்கிடையிலான கட்டிடத்தின் பயணிகள் அமரும் இருக்கைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக மாற்றப்பட்ட போதிலும் உள்ளூர் சேவை கட்டிடத்தின் பயணிகள் இருக்கைகள் நீண்டகாலமாக மாற்றப்பட்டவில்லை.
எனவே உரிய அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழுள்ள வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை துரித கதியில் புணரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரதான பேரூந்து நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து திங்கட்கிழமை (23) காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், இதில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.