2026ல் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரழிவுகள் : பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!!

உலகில் உள்ள பல தீர்க்கதரிசிகளில் பாபா வங்காவும் ஒருவர். ஏனென்றால், பாபா வாங்காவின் பல்வேறு கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.

ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்துள்ளார். அதன்படி, இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் தனது பார்வையை இழந்தார். ஆனால், பார்வை இழந்த பிறகு,

அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் மிகவும் குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்று தீவிர இயற்கை நிகழ்வுகள் தொடர்புடையது.

அந்த வகையில், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை பிரச்சனைகள் ஆகியவை கிரகத்தின் நிலப்பரப்பில் 7 முதல் 8% பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் உலகையே பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஆகியவையும் ஏற்படுமாம்.

இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 8% வரை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து உலகையே உலுக்குமாம்.

2026ல் சுற்றுச்சூழல் அமைப்புகள் அழிக்கப்பட்டால், அது அழிவின் தொடக்கத்தைப் போன்றது என்று தெரிவித்துள்ளார்.

வாழ பிடிக்கவில்லை : கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

இந்த உலகத்துல எனக்கு வாழவே பிடிக்கல” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளம் காலனி தெருவில் வசித்து வருபவர் அருள்ராஜ். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் காவ்யா(18) என 2 மகள்கள் இருந்தனர்.

இதில் காவ்யா, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர்.

தற்கொலை குறித்து மாணவி எழுதிய கடிதத்தில், “எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மனைவிக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றேன் : வைத்தியர் பரபரப்பு வாக்குமூலம்!!

கர்நாடகா மாநிலம், மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி கிருத்திகா உயிரிழந்தார். போலீசாரின் ஆரம்ப விசாரணையில் அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

பின்னர் தடய அறிவியல் அறிக்கையில், கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதினால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மகேந்திர ரெட்டியை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது நண்பருக்கு “கிருத்திகாவை கொன்றேன்” என குறுந்தகவல் அனுப்பி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

முதன்முறையாக 5 நாட்கள் காவலில் விசாரித்த போது, மகேந்திர ரெட்டி எந்த தகவலையும் கூறாமல் போலீசாரிடம் இருந்து மறைத்திருந்தார். இரண்டாவது முறையில் விசாரணை நடத்தும் போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

தனது மனைவியின் உடல் நிலை பாதிப்புகளை முன்னதாக தெரிந்திருந்தாலும், அதிகளவில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் மகேந்திர ரெட்டி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.

அதற்கமைய, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாயாக உயர்ந்தது.

எனினும் நேற்று, செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 330,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.

அதற்கமைய, நேற்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாக குறைந்துள்ளது.

என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் : அமைச்சரை எச்சரித்த சாமர சம்பத்!!

என்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீங்கள் எங்களை கொலை செய்யத்தான் முயற்சிக்கிறீர்கள். பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்கு பயமில்லை. கொலை செய்த பின்னர் பேயாக பின் தொடர்வேன்.

நீங்களும் பயங்கரவாதிகள் தான் உங்களின் பெயரையும் பயங்கரவாத பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். மறைக்கப்பட்ட விடயங்கள் எங்களிடம் அதிகம் இருக்கிறது. எமக்கும் அதிகமாக கதைக்க முடியும்.

அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.வெலிகம பிரதேச சபைத் தலைவர் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்.அவரை பாதாள குழுவில் சேர்க்க வேண்டாம்.நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.

முடிந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்து எந்த பாதாள குழு செய்தது என்று கூறுங்கள். அப்போது நாம் ஒத்துக் கொள்கிறோம். கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.

அதனால் பாதாள குழுவில் அவரின் பெயரை சேர்த்து அவரின் குடும்பத்தை அவமாத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!!

ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை – ஹொரண வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள துணை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள், ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பண்டாரகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியான பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை மருத்துவமனை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகளின் பரவல் தீவிரம் : சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!!

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும்.

பகல்நேர பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர் என குழந்தை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல சிறுவர்களுக்கு திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு ஏற்படுவதால் இந்த நோய் பல வடிவங்களில் தோன்றும்.

அதே நேரத்தில் சிலருக்கு சளி போன்ற அறிகுறிகள், காது தொற்று, சைனசிடிஸ் அல்லது மூச்சுத்திணறல், குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சில சமயங்களில் நீரிழப்பு ஏற்படலாம்.

மேலும் அரிதான சந்தர்ப்பங்களில், இன்ப்ளூயன்ஸா நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச சிக்கல்களுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

விரைவான அல்லது கடினமான சுவாசம், தொடர்ச்சியான வாந்தி, பசியின்மை அல்லது அசாதாரண மயக்கம் உள்ளிட்ட கடுமையான நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அடிக்கடி கை கழுவுதல், இருமல் வரும்போது கைகளை வைத்து மறைத்தல், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை வீட்டிலேயே வைத்திருத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானவையாகும்.

அதிக ஆபத்துள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன மற்றும் பரிந்துரைக்கப்படுகின்றன. பெரும்பாலான சிறுவர்கள் வீட்டிலேயே எளிய கவனிப்புடன் குணமடைகிறார்கள்.

ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது அடிப்படை நிலைமைகள் உள்ளவர்களுக்கு ஆரம்பகால மருத்துவ கவனிப்பு அவசியம்.

இந்த தொற்றுநோயின் போது ஏற்படும் சிக்கல்களுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடைமுறைகள் சிறந்த பாதுகாப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் அட்டைகளை வைத்திருப்பவர்களின் செலவினங்கள் அதிகரிப்பு!!

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ.2.89 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஜூலையில் பதிவான ரூ.373 மில்லியனிலிருந்து கூர்மையான அதிகரிப்பாகும்.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், கடன் அட்டைகள் மூலமான கடனில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்புடன், மாத இறுதிக்குள் மொத்த நிலுவையில் உள்ள கடன் அட்டை கடன் மொத்தமாக ரூ.164.17 பில்லியனாக அதிகரித்துள்ளது.

கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு சுமார் 26 சதவீதமாக இருந்தாலும், அவற்றின் கடனில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வு, நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவதை காட்டுகிறது.

அத்துடன், படிப்படியாக பொழுதுபோக்கு, உணவு மற்றும் ஓய்வு நடவடிக்கைகள் போன்ற விருப்பமான வகைகளுக்குத் திரும்புவதையும் பிரதிபலிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நைஜீரியாவில் கோர விபத்து : லொறி வெடித்து 40இற்கும் மேற்பட்டோர் பலி!!

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.

பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் 52 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜர் மாநில அவசர சேவைத் தலைவர் அப்துல்லாஹி பாபா அரா தெரிவித்துள்ளார்.

நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் லொறி வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தில் வீதியின் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், வடமேற்கு நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் லொறி வெடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழில் ஒருநாள் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (21.10) இடம்பெற்றுள்ளது.

கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டது.

இந்நிலையில் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனையடுத்து, வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவில் அழையா விருந்தாளியால் பரபரப்பு : மக்கள் அச்சம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

தோட்டக்காணியை உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்துள்ளது.

இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் நடுக்கடலில் பலியான குடும்பஸ்தர் : தொலைபேசியில் இறுதியாக மனைவிக்கு கூறிய விடயம்!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போர் காலத்தில் உதவி : காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயரிட்ட தந்தை!!

காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

20 வருடங்களுக்குள் விண்வெளிக்கு மனித குடியேற்றம்!!

2045ஆம் ஆண்டுக்குள் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என பிரபல தொழிலதிபர் ஜெப் பெஜோஸ் தெரிவித்துள்ளார். இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஓரிரு தசாப்தங்களில் இலட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள், இது வேகமாக நடக்கப்போகிறது.

இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை நமது வளர்ச்சியை ஆதரிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸில் இருந்து யாழிற்கு சைக்கிளில் வந்த ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரான்ஸில் இருந்து சுமார் 13 நாடுகளை சைக்கிளில் கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர் நேற்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

பாரிஸில் இருந்து யாழ்ப்பாணம் என்ற தலைப்பில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸில் வசிக்கும் நல்லூரை சேர்ந்த, 28 வயது இளைஞர் சூரன் என்பவரால் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் வந்தடை பிரான்ஸ் வாழ் இளைஞனுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “கடந் செப்டம்பர் முதலாம் திகதியன்று பாரிஸிலிருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன்.

பிரான்ஸ், ஜெர்மனி, ஒஸ்ரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகப் பயணம் செய்து, இன்று யாழ்ப்பாணத்தை அடைந்துள்ளேன். இதற்காக சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் பயணித்தேன்.

எனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதும் எனது நோக்கமாகும்.

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்துடன் வலுவான உணர்ச்சி மற்றும் கலாச்சார தொடர்புகளைப் பேணுவதற்கு ஊக்கமளிப்பதற்கும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை உருவாக்க விரும்புவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் மரணம்!!

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் இன்று (23) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், இன்று சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில்உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

தேவாவின் சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதது குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.