யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி துணி கட்டியிருந்த நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி : தேசிய மக்கள் சக்தி வெளிநடப்பு!!

வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06.2025) மாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் ஒருவரை பிரேரிக்குமாறு கோரப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கபட்டார்.

தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 15 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு 15 வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4 வாக்குகளும்,சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக 15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 12 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 15 வாக்குகள் கிடைக்கப்பெற்ற கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஜனநாயகம் மீறப்படுகின்றது : வெளிநடப்பு செய்த தேசிய மக்கள் சக்தி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுகளின் போது ஜனநாயகம் மீறப்படுவதாக குற்றம்சாட்டி தேசியமக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரதேசசபையின் முதல் அமர்வில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று (27.06.2025)நடைபெற்றது.

இதன்போது சபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சி சார்பில் பா.பாலேந்திரனின் பெயர் பிரேரிக்கப்பட்ட நிலையில் தேசியமக்கள் சக்தி சார்பில் ராஜலிங்கம் கார்த்தீபனின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என அவரால் கோரப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் கார்த்தீபன் தெரிவுகளை ரகசியமாக மாத்திரம் நடாத்துமாறு கோரிக்கை முன்வைத்தார்.

ஏனெனில் இது கட்சித்தலைவர்களால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உறுப்பினர்கள் நடக்கவுள்ளனர். இதனால் மக்களின் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே ரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலமே உறுப்பினர்களின் உண்மை நிலை வெளிப்படும்.

கொழும்பில் ஒரு நடைமுறை இங்கு ஒரு நடைமுறையா. என கேள்வி எழுப்பியதுடன் ஆணையாளர் நடுநிலையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு ஆதரவாக அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.

இதன்போது சட்டம் இவ்வாறே சொல்கின்றது. அதன்படியே தெரிவுகளை என்னால் நடாத்தமுடியும். அதில் உங்களுக்கு எதேனும் பிரச்சனை இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். எனவே இந்த நிகழ்வை குழப்ப வேண்டாம். தெரிவுகளை நடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளரால் பதில் வழங்கப்பட்டது.

இதனை ஏற்க்க மறுத்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவுகளை புறக்கணித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தேசியமக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களுடன், இலங்கை தொழிலாளர் கட்சியின் 2 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் இதன்போது வெளிநடப்புசெய்தனர்.

எனினும் சபையில் போதிய கோரம் இருந்த நிலையில் தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06.2025) காலை நடைபெற்றது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி,மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது. அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கியமக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும், ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும் சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பாலேந்திரன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை தமிழ்மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்!!

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கனரக வாகனம், அதிகாலை 5.00 மணியளவில் கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் 92ஆம் கட்டைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.

விபத்து நேரத்தில் ஓட்டுநர் ஒருவரே வாகனத்தில் இருந்ததாகவும், தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் விளைவாக தொலைத்தொடர்பு வயர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாற்றம் கண்ட தங்க விலை : தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்!!

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையிலும் இன்று (26) சிறிய அளவில் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இரத்தினபுரி, உருபொக்க – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பனமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய வெலேகே அஞ்சன சதுரங்க என்ற இளைஞன் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், அப்பகுதி மக்களால் எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் எம்பிலிபிட்டிய பனமுற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாய் இறைச்சி விற்க தடை விதித்த நாடு!!

நாடு முழுவதும் நாய் இறைச்சியை நுகர்வுக்காக விற்பனை செய்வதை தென் கொரியா தடை செய்துள்ளது.

இதனுடன் தொடர்புடைய சட்டமூலம் 2024 ஆம் ஆண்டில் வரையப்பட்டு கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

நாய் இறைச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த தொழில்துறையிலிருந்து வெளியேற 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தடை செய்யும் சட்டங்கள்

இருப்பினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த காலப்பகுதி போதாது என கூறியுள்ளனர்.

நாய் இறைச்சி உண்ணும் முக்கிய நாடாக மாறியுள்ள தென் கொரியா, 2027 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மனித நுகர்வுக்காக நாய்களை வளர்ப்பது, வெட்டுவது மற்றும் விற்பனை செய்வதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளது.

சட்டத்தை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் கொரிய வோன் (சுமார் 22,800 டொலர்) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

நாய் இறைச்சியை உட்கொள்வது குற்றமாகக் கருதப்படாவிட்டாலும், அது தொடர்பான அனைத்து வணிக நடவடிக்கைகளும் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன.

தற்போதுள்ள நாய் இறைச்சி பண்ணைகள், இறைச்சி கூடங்கள் மற்றும் உணவகங்கள் மூன்று வருட மாற்ற காலத்திற்குள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்,

மேலும் அவற்றின் நிலை மற்றும் மூடல் திட்டங்களை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய தேவைகள் உள்ளன என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

லொறி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம் : சாரதி கைது!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் சமர்செட் பகுதியில், தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (25.06) இரவு இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா ஒலிபண்ட் தோட்டத்திலிருந்து நானுஓயா சமர்செட் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி, வீதியை விட்டு விலகி தேயிலையுடன் சறுக்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த இருவரும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான லொறி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சட்டவிரோதமாக பயணித்த கனரக வாகனம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

பளை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த கனரகவாகனம் நேற்று முன்தினம்(24.06) இரவு மீசாலை- புத்தூர் வீதியின் கனகம்புளியடி சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று(24) இரவு வாகன சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த கனரக வாகனத்தை மறிக்க முற்பட்ட வேளை பொலிஸாரின் சமிக்கையை மீறி அச்சுறுத்தும் வகையில் பயணித்துள்ளது.

இதனையடுத்து, ஆணித்தடையை போட்டு கனரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சாரதியும், உதவியாளர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ் சென்ற எரிபொருள் தாங்கி கிளிநொச்சியில் விபத்து; ஓடிச்சென்று பெரல்களில் நிரப்பிய மக்கள்….!!

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று தடண்புரண்டது.

முத்துராஜவெலவிலிருந்து யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.00 மணிக்கு தடம்புரண்டது.

பெரல்களில் நிரப்பிய மக்கள்

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. டீசல் ஏற்றி வந்த எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானதால் பெருமளவான டீசல் வெளியேறியது. அதையடுத்து வீதியால் சென்ற மக்கள் எரிபொருளை கேன்களில் பிடித்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை ஈரான் – இஸ்ரேல் போரினால் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை வழக்கத்திற்கு அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பிரபல பாடசாலையில் ஆசிரியரின் கொடூரம் : மாணவனுக்கு நேர்ந்த கதி!!

கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் தொழில்நுட்பத் துறையில் 13 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ல சம்பவம் அதுஇர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் , நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்று (26) அன்று கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாணவன் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை (23) அன்று பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது ​​பாட ஆசிரியர் தன்னிடம் வந்து தனது குறிப்பேடுகளை கேட்டபோது , மாணவன் தான் பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியுள்ளார்.

இதன் காரணமாக கோபமுற்ற ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில், கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் அருகே வந்து,

தன்னை வலுக்கட்டாயமாக பாடசாலைக்கு அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாகவும் மாணவன் கூறியுள்ளார்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என அழுத்தம்

அதேவேளை ஆசிரிய தாக்கியதில் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் அதிபர் , பல மாதங்களாக பாடசாலைக்கு செல்லாததால், ஆசிரியர் குறித்த மாணவன் உட்பட சில மாணவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை கினிகத்ஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் , ​​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தான் தாக்கப்பட்டதாகக் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் தவறான பதிவை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் , பாதிக்கப்பட்ட மாணவனிடம் வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

ஈவிரக்கமின்றி இரண்டாவது கணவனுடன் சேர்ந்து பிள்ளைகளுக்கு சூடு வைத்த தாய்!!

ஊவாபரணகம, லுனுவத்த, அம்பிட்டிகொடவைச் சேர்ந்த 11 வயது மற்றும் 2 மாதக் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், தாயும், தாயின் இரண்டாவது கணவரும் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக ஊவாபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் இடது கண்ணுக்குக் கீழே, கன்னம் பகுதியில், ஒரு கையில் மணிக்கட்டு அருகே மற்றும் வலது கையில் மேல் கைக்குக் கீழே தீக்காயங்கள் உள்ளிட்ட காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்காக வெலிமட மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தாயும் இரண்டாவது கணவரும் வெலிமட நீதவான் நீதிமன்றத்தில் இன்று 26 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பண்டாரவளை மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் வழக்கறிஞர் ரோஷன் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஊவாபரணகம, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் CCTV ஆல் சிக்கிய திருடர்கள்!!

வவுனியா கோவில் குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள நேற்றிரவு (25.06.2025) வீடொன்றில் புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

திருட்டு இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஓமந்தை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பாவிற்கு பயணம் : யாழ் இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது!!

இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் இருவரும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (25) அன்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையகள் என கூறப்படுகின்றது.

அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே அதிகாரிகள் சோதனையில் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!!

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். விபத்தை அடுத்து , கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.