வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த வருட இறுதியில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 250,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஒரு திருமண வீட்டில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்ததில் மணமகனுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மணமக்கள் திருமணம் தொடர்பான சடங்குகளில் பங்கேற்றிருந்த நிலையில், கையில் பல வண்ணங்களுடைய பலூன்களுடன் மணமகன் நடந்துவர, அவர் அருகே மணமகள் வந்துகொண்டிருந்திருக்கிறார்.
மணமகன் குஷாக்ரா, தன் கையில் ஒரு கொத்து பலூன்களை வைத்திருந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக, திடீரென அந்த பலூன்கள் வெடித்துள்ளன.
பலூன்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகளான டான்யாவின் முகம் மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது ஒருபக்க தலைமுடியும் கருகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அவர்கள் வைத்திருந்தது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள். ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கும் வாயு ஆகும். யாரோ ஒருவர் மணமக்களுக்குப் பின்னால் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்க, தீப்பொறி பட்டு பலூன்கள் வெடித்துள்ளன.
தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும், அது தங்கள் திருமணத்துக்கு இடையூறாக வரக்கூடாது என முடிவெடுத்த தம்பதியர் திருமணம் செய்துகொண்டு பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள மணமகள் டான்யா, தீப்பற்றிய முடியை வெட்டி, காயங்களை மறைக்க அடுக்கடுக்காக மேக் அப் போட்டுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார்.
இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதாகவும் டான்யா தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பேராதெனியாவில் உள்ள விகாரையிலுள்ள தேரர் நேற்று (25) காலை 10.05 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
குறித்த விமானம் கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, அவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அதே விமானத்தில் இருந்த இரண்டு சீன பிரஜைகள் அவரது இருக்கையை நெருங்கி, பையிலிருந்து பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதனைடுத்து தேரர் விமான அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இரண்டு சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த 33 வயதுடைய இளைஞர் மீது தென்னை மரம் விழுந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காலி – பலப்பிட்டிய கல்வி பிரிவுக்குட்பட்ட கந்தேகொடை மகா வித்தியாலத்தில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் விழுந்ததில் மாணவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வதுகெதர, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த , கந்தேகொடை மகா வித்தியாலத்தின் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று விழுந்து, நோய்வாய்ப்பட்டதில் பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் சிறுநீரகத்தை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் டிக்டோக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கோபாவக்க பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலத்சிங்கள, அதுர பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சமூக ஊடகமான டிக்டொக் மூலம் சந்தேக நபருடன் நட்பை ஏற்படுத்தியதுடன் அது காதல் உறவாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர். இதன் போது காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காதலியான சிறுமியை, சந்தேக நபரான காதலன் தவிர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் மூன்று வணிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களின் பொதிகளில் இருந்து 119,000 பிளாட்டினம் வகை சிகரெட்டுகள் அடங்கிய 595 சிகரெட் அட்டைப் பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30ஆம் திகதி வரை வெள்ளப்பெருக்கு அபாயம்
நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று ( 25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து
நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும், நேற்றைய தினம் 99.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளையதினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளதாக யாழ்.
பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும்,
அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.
ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது.
காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம்.
நாட்டின் அனைத்து கடற்றொழிலாளர்களும் நாளை முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.
நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம். எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் தேவாலயத்துக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பூசாரி கைது
சம்பவத்தில் , பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை, வெளிமுவபொத்தானை, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.
16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி, பெண் பூசாரி, சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண் பூசாரி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அபாயம்
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.
மின்னல் தாக்கம்
அதிக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (25) முதல் 30ஆம் திகதி வரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது (25) இன்று ரூ.6,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று, அதே விலை ரூ.303,600 ஆக இருந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று ரூ.330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக்குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (24.11.2025) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா.பிரதீபராஜா,தற்போதைய வானிலைச் சூழல் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
‘இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கை ஊடாக நகர்ந்து செல்லும் நிகழ்வானது கடந்த 130 ஆண்டுகளில் இப்போது தான் நிகழ்கின்றது.
இது ஓர் அபூர்வமான மற்றும் ஆபத்தான வானிலை நிகழ்வாகும். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும்’ என அவர் எச்சரித்தார்.
மேலும், ஏற்கனவே பெய்த மழையால் மண் ஈரமாகியுள்ளதால், பலத்த காற்று வீசும் போது மரங்கள் வேரோடு சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கடல் நீர்மட்டம் இந்தக் காலப்பகுதியில் உயர்வாக இருக்குமென்பதால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத சூழல் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களினதும் தற்போதைய நிலவரம் ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணம்: கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு: சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களை அகற்றுவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதாத நிலையில் உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கிளிநொச்சி: இரணைமடுக் குளம் அதன் கொள்ளளவில் நான்கில் ஒரு பகுதியையே கொண்டுள்ளதால் வெள்ள அபாயம் இல்லை எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
வவுனியா மற்றும் மன்னார்: தற்போதைய நிலையில் மிகப் பெரிய இடர்கள் இல்லை எனவும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயர்தரப்பரீட்சை இடையூறு ஏற்பாடு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன.
இடர் நிலைமை ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதன்போது, பரீட்சை நிலையங்கள் இல்லாத பாடசாலைகளையும், பொது மண்டபங்களையும் இடம்பெயரும் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும்; குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேநேரம் கடல் நீர்மட்டம் இன்னமும் உயர்வடையாமையர், யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
கடற்படை மற்றும் விமானப்படையின் உதவி
கடந்த காலங்களில் தீவகப் பகுதிகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அவசர மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னதாகவே, உள்ளூராட்சி மன்றங்கள் வாய்க்கால்களைத் துப்புரவு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.
அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களுக்கு ஆளுநர் பணித்தார்.
மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர். இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல், நிதி), முப்படைப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந் நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.