இந்தியாவை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் பல இடங்களில் நாச வேலைக்கு சதித்திட்டம் தீட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயற்பட்ட டொக்டர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அவர் குண்டுவெடிப்பில் இறந்தாரா அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி எனவும் அரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் நண்பர் எனக் கூறப்படுகிறது.

மேலும் கார் வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார் மாலை 6.48 மணிக்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகுவெடித்துள்ளது.  இவ் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, முகமது உமரின் தாய், சகோதரியை காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டள்ளனர். டெல்லி கார் வெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் உள்நாட்டு பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!!

கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11.11.2025) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 325,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப்பவுணின் விலை 293,200 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணின் விலை 317,000 ரூபாவாகவும் இருந்துள்ளது.

இந்த தகவல்படி கடந்த செவ்வாய்க்கிழமையை விட இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சுமார் எட்டாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி : பெற்றோர் செய்துள்ள நெகிழ்ச்சியான செயல்!!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவியின் திடீர் மரணத்தையடுத்து அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் வேறு நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளது. கண்டியை சேர்ந்த 24 வயது மாணவி ஜெயதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தில் தாதி மற்றும் குடும்ப சுகாதார பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.

கடந்த 5 ஆம் திகதி பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பிய மாணவி, தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்துள்ளார்.

மறுநாள் அதிகாலை 2.00 மணியளவில் கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பெற்றோரின் விருப்பப்படி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறுப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

முதுகெலும்புகள் அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், இதுவோரு திடீர் மரணம் என கண்டி தேசிய மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி உறுதி செய்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு!!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது.

சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

உயர் தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீர் மரணம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி என தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த மாணவி தம்புள்ளை தேசியப் பள்ளியில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது 19 என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவி தனது அறையில் ஞாயிற்றுக்கிழமை (09) படித்துக் கொண்டிருந்ததாகவும், மறுநாள் தேர்வுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்துவிட்டு தூங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் எழுந்திருக்காதது குறித்து அவரது பெற்றோர் எழுப்பியபோது, ​​அவர் மயக்கமடைந்திருப்பதாகக் கருதி தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், வெளிநோயாளர் பிரிவில் உள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை பரிசாக கொடுத்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் பேருந்து மோதி பலி!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமாரின் ஒரே மகன் வைபவ் ஷா (17). பிளஸ்-1 படித்து வந்த வைபவ், நன்றாக படிப்பதாக உறுதி கூறிய நிலையில், மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புல்லட் பைக் ஒன்றை வாங்கி தந்தார் சந்தோஷ் குமார்.

புதிய பைக்கை ஓட்டி வருவதில் ஆர்வம் கொண்டிருந்த வைபவ், நேற்று காலை 7 மணியளவில் தனது பிறந்தநாளையொட்டி நண்பர் ஒருவருடன் ஆயிஷானா பகுதிக்குச் சென்றார்.

அப்போது நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது எதிரே வந்த ஆம்னி பேருந்து திடீரென மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் புல்லட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் வைபவ் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருடன் சென்றிருந்த சிறுவன் தீவிர சிகிச்சையில் உள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப முயன்ற பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மகனை இழந்த பெற்றோர் துயரத்தில் கதறினர்.

கணவனுடன் சண்டை : தாயிடம் உருக்கமாக பேசிவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வசரண் (25). டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே சிறிய குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தகராறு காரணமாக, செல்வசரண் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல். வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, மனஉளைச்சலால் தற்கொலை முடிவு செய்ததாக தெரிகிறது. தற்கொலை செய்யும் முன்,

தாயாருக்கு போன் செய்து, “நான் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன்” என கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதைக் கேட்ட தாயார் உடனடியாக அருகிலிருந்த உறவினர்களுக்கு இது குறித்து தகவல் அளித்தார்.

அவர்கள் ரேஷ்மாவின் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டியும் நீண்ட நேரமாக பதில் கிடைக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவல் பெறப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1.5 ஆண்டில் இளம்பெண் உயிரிழந்ததால், விதிமுறைப்படி ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

உயர் தரப் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்டோர் பயணித்த பேருந்து விபத்து : அறுவர் மரணம்!!

தலாவ விபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு : அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வாகனங்களை கொள்வனவு செய்ய சரியான நேரம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு!!

விலை ஏற்றத்தைத் தொடர்ந்து தற்போது சந்தை நிலைத்தன்மையை கொண்டிருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

வாகன விலைகள் மீதான அண்மைய மேல்நோக்கிய அழுத்தம் தணிந்துள்ளது. தற்போது சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே கூறியுள்ளார்.

2026 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி குறித்து கருத்து தெரிவித்த மெரென்சிகே, இது ஒரு புதிய வரி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

வாகன விற்பனைக்குப் பிறகு அல்லாமல் சுங்கத்தின்போது இந்த வரியை வசூலிக்கக் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விற்பனைக்குப் பிறகு வரி வசூலிப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியதால் இந்த மாற்றம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனை : தொடர்ச்சியாக 8 சிக்ஸ்!!

உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, படைத்துள்ளார்.

அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை அடித்து, முதல் தர கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அதிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார். சூரத்தின் பித்வாலா மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிரொபி பிளேட் குரூப் போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே அணி 576 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என வலுவான நிலையில் இருந்த நிலையில், 8ஆவது வீரராகக் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி களமிறங்கியுள்ளார்.

ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்ட அவர், அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி, தொடர்ச்சியாக எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வெறும் ஒன்பது நிமிடங்கள் மற்றும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

அரைசதம் கடந்த பிறகு அவர் சந்தித்த மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காத நிலையில், மேகாலயா அணி 628 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்த மைல்கல்லின் மூலம், ரஞ்சி டிரொபி வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரவி சாஸ்திரியுடன் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆகாஷ் குமாரின் ஆதிக்கம் துடுப்பாட்டத்துடன் முடிவடையவில்லை; பந்துவீச்சிலும் புதிய பந்தை எடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றி, அந்த நாளை தனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிக்கொண்டார்.

இந்த சாதனையின் மூலம், 2012ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக வெய்ன் வைட் 12 பந்துகளில் அரைசதம் அடித்த 13 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி டிரொபியைப் பொறுத்தவரை, 2015ஆம் ஆண்டு திரிபுராவுக்கு எதிராக ஜம்மு & காஷ்மீர் வீரர் பன்தீப் சிங் 15 பந்துகளில் அடித்த அரைசதமே முந்தைய சாதனையாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் (21 பந்துகள்) வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடல் நீரை உறிஞ்சும் வானம் சமூக வலைதளங்களில் பரவலாகும் காணொளி!!

கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமான வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் பாம்பன் வடகடல் பகுதியில் திடீரென மேக கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த கடற்றொழிலார்கள் கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு கண்டுக்களித்தோடு அதனை எடுத்து காணொளி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை அடுத்து தற்போது வேகமாக பரவி வருகின்றது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் (10.11.2025) தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,235,455 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 43,580 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 348,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 39,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 319,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 38,140 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 305,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம் : கிரிக்கட் மைதானத்தில் நடந்த சோகம்!!

இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று(9) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை ஓருவருடன் ஒருவர் மோதிக் கொண்டுள்ளனர். இவ்வாறு மோதிக் கொண்டதில் பளுகஹாவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தினைத் தொடர்ந்து மினுவன்கொட ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிடியெடுப்பதற்காக முயற்சித்த போது மோதிக்கொண்ட மற்றைய வீரருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. டென்னிஸ் பந்தின் மூலம் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டியொன்றின் போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார்.

7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச் சேர்ந்தவர்.

19 வயதான இவர், ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் “உலகின் உயரமான இளைஞர்” என்ற பெருமை பெற்றவர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.

மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.

அண்மைக்காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாகவும் கூறி,

பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயல்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் தூக்கத்திலேயே மரணம் : திரைத்துறையினர் இரங்கல்!!

நடிகர் அபிநய் இன்று (10) காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர் அபிநய் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அபிநய் கடந்த 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அத்துடன் சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ ஆகிய திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களுக்குப் பின்னணி குரல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் நடிகர் அபிநய்யின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.