சோகத்தில் முடிந்த சுற்றுலா பெண் உட்பட 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நண்பர்கள் 12 பேர் ஒன்று சேர்ந்து பெங்களூரில் இருந்து டெம்போ டிராவலர் வண்டியில் இன்ப சுற்றுலாவாக பாண்டிசேரிக்கு வந்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஆனந்தமாக கடற்கரையில் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து, கடலில் குளிப்பதற்காக இறங்கி ஆட்டம் போட்டனர்.

அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்றிருந்த எச்சரிக்கை கயிற்றை கவனிக்காமல் அதைத் தாண்டியும் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலில் குளித்தவர்களில் பெண் என்ஜினியர் உட்பட 5 பேர் திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த மேகா (29), ஹூப்ளியைச் சேர்ந்த மேத்தி (23), குஜராத்தைச் சேர்ந்த அதிதி (23), ஜீவன் (23), விஜயவாடாவைச் சேர்ந்த பவன்குமார் (25) உட்பட 12 பேர் ஒரு டெம்போ டிராவலர் வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நிலையில் அரியாங்குப்பம் அருகே சின்னவீராம்பட்டினத்தில் உள்ள “ஈடன்” கடற்கரையில் குளித்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

அலையில் சிக்கிய மேகா, பிரட்சுவால் மேத்தி, பவன்குமார், அதிதி, ஜீவன் ஆகிய 5 பேரும் கூச்சலிட்ட நிலையில் அருகில் நின்ற நண்பர்களும், பொதுமக்களும் காப்பாற்ற முயன்றனர்.

அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மூழ்கிய 5 பேரையும் கடற்கரைக்கு இழுத்து வந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 3 பேர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மேகா, மேத்தி, பவன்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்தோஷமாக சுற்றுலா வந்த நிலையில், நண்பர்கள் 3 பேரை பறிகொடுத்த துயரம் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் பேசாதே தமிழில் பேசு அம்மா : வைரலாகும் சிறுவன்!!

தாய் ஒருவர் தன் மகனிடம் ஆங்கிலத்தில் பேசியபோது ஆங்கிலத்தில் பேசாதே… தமிழில் பேசு அம்மா என சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சிறுவன் ஒருவனிடம் அவனுடைய தாய் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது பிடிக்காமல், அந்த சிறுவன் அழுது கொண்டே, ஒழுங்கா பேசுமா என கூறுகிறான். அதற்கு, அழக்கூடாது என ஆங்கிலத்தில் கூறியபடியே, ஒழுங்காக என்றால் எப்படி? என அவர் தமிழில் கேட்கிறார்.

அதற்கும் தமிழில் பேசு அம்மா என கூறி சிறுவன் அடம்பிடிக்கின்றார் பள்ளியில் ஆசிரியர் எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா என கேட்க, சிறுவன் யோசித்தபடி ஆங்கிலத்தில் என பதில் கூறுகிறான்.

உடனே அந்த தாய், அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என ஆங்கிலத்தில் கூற, அதற்கு சிறுவனோ நான் சொன்னத கேளு என மழலையாக கூறுகிறான். இந்நிலையில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழில் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் கலந்த தமிழிலேயே பலரும் பேசி வருகின்றனர்.

அலுவலகங்களில்ம் , வெளியேறும் ஏன் வீடுகளிலும் இதே நிலமைதான். இந்நிலையில் தமிழில் தாயை பேசவைக்க சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வயல்வெளியில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு!!

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (18) காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலின் உரிமையாளர் வயலுக்கு வந்தபோது குறித்த நபரின் உடலைக் கண்டு, பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பதுளை பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இறந்தவர் சுமார் 65 வயதுடைய ஒருவராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பதுளை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசித்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் : ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பரபரப்பு!!

போக்குவரத்து சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் இன்று ஏறியுள்ளார்.

போக்குவரத்து சமிஞ்ஞை மேல் ஏறிய நபர் விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஓர் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த நபர் சமிஞ்ஞை கம்பத்தில் ஏறியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. திடீரென நபரொருவர் சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து சமிஞ்ஞைக் கம்பத்தில் ஏறியிருந்ததால் போக்குவரத்தில் மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டுள்ளது. கம்பத்தில் ஏறிய நபரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொரளையில் கடந்த வாரம் நபரொருவர் மின்விளக்குக் கம்பத்தில் ஏறியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை பொலிஸார் மின்தூக்கியால் மீட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இரு கார் மோதி கோர விபத்து!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில் வீதியில் திருப்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்ஒண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி மரணம்!!

இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 220 ஆண்களும் 37 பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் துணைக் காவல்துறை அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய 69 உள்ளுர் பிரஜைகளும் 33 வெளிநாட்டுப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் உயிர் காப்புப் பிரிவினர் இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டில் 135 பெண்கள் உள்ளிட்ட 645 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பரீட்சயமற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீராடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மது போதை காரணமாக அதிகளவான நீரில் மூழ்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சுற்றுலாப் பயணங்களின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் நீர்நிலைகளில் நீராட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்கச் சென்றவர் குழிக்குள் மூழ்கி உயிரிழப்பு!!

செவனகல பகுதியிலுள்ள ஹபுருகல போதிராஜா ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குழியொன்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செவனகல பகுதியிலுள்ள மகாகம காலனியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஆவார்.

சடலம் எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. இது இயற்கையான வழியில் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும் ஒரு நல்ல உணவாகும்.

அந்த வகையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வாறான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.

மூளை மற்றும் கண்களுக்கு நன்மை பயக்கும்

நெல்லிக்காய் இயற்கையான வழியில் உடல் வலிமை பெற ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தினமும் நெல்லிக்காயை உட்கொள்வதன் மூலம், நீங்கள் வலுவான உடலையும், சிறந்த ஆரோக்கியத்தையும், கூர்மையான மூளையையும் பெறலாம்.

சளி, இருமல் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. ஒரு நெல்லிக்காய் பழத்தில் 600-700 மி.கி வைட்டமின் சி காணப்படுகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சளி மற்றும் இருமலுக்கு எதிராக உடலை பாதுகாக்கிறது, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

நெல்லிக்காய் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் செயல்படுகிறது,

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இதய நோய்களிலும் இதை உட்கொள்ளலாம்.

செரிமானத்திற்கு உதவும்

நெல்லிக்காய் செரிமான அமைப்புக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று கோளாறுகளை போக்குவதில் குறிப்பாக நன்மை பயக்கும். இது மட்டுமல்லாமல், இது குடலை சுத்தம் செய்து வயிற்று பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்கிறது.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குறிப்பாக கருப்பான மற்றும் அடர்த்தியான, நீண்ட கூந்தலை விரும்பும் நபர்கள், தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொள்ளலாம். இது கூந்தலின் வேர்களை வலுப்படுத்துகிறது, முடி உதிர்தலைக் குறைக்கிறது மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் அதன் நுகர்வு முடியை பளபளப்பாக்குகிறது.

 

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் காயம்!!

காலியில் கலேகான – கிந்தொட்ட வீதியில் லந்தெவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை மீது மோதி வேன் விபத்து : 6 பேர் காயம்!!

மாத்தறை – மொனராகலை பிரதான வீதியில் தணமல்வில, கித்துல்கொட பிரதேசத்தில் காட்டு யானை மீது மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (18.08) காலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கிய காட்டு யானை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் தணமல்வில பொலிஸார் மற்றும் தணமல்வில வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இயல்புநிலை : சில செயற்ப்பாடுகள் ஸ்தம்பிதம்!!

வடகிழக்கு தழுவிய ரீதியில் இன்று(18.08.2025) கர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. நகரத்தில் அநேக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றது.

இதேவேளை கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழைய பேருந்து நிலையம் மற்றும் பசார்வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் பூட்டப்பட்டிருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம்,நெடுங்கேணி,கனகராயன்குளம்,புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

வவுனியா குழுமாட்டுசந்தியில் வாராந்த சந்தை அங்குரார்ப்பணம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் நேற்று (17.08.2025) வாராந்த சந்தை குழுமாட்டுச் சந்தி – நெளுக்குளம் பகுதியில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இச் சந்தையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழில் துறைசார் உற்பத்திப்பொருட்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் விற்பனைப் பொருட்களையும் இன்றிலிருந்து பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் விற்பனை செய்யமுடியும் எனவும்,

இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோர்களின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வாழ்வாதாரத்தினை திடப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தை தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மாலை வரை நடைபெறும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் வவுனியா நகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, நெளுக்குளம் கிராம சேவையாளர், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து : பெண் உட்பட இருவர் பலி : 13 பேர் காயம் : பலரது நிலை கவலைக்கிடம்!!

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் இன்று (17.08.2025) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள், சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி (வயது 33), சுயன் (வயது 30) என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் கர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு : 3 பிரதேச சபைத் தலைவர்களும் அறிவிப்பு!

எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக வவுனியா வடக்கு, தமிழ் தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

குறித்த கர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் தாஜூதீன் முகமது இம்தியாஸ், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, ஆகியோர் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்களது பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள்,மற்றும் ஏனைய தரப்புக்களும் குறித்த கர்த்தாலுக்கான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். நல்லூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்தில் தீ!!

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

சாரதி பேருந்தில் இருந்த நிலையிலேயே பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில், அவ்விடத்தில் நின்றவர்கள், யாழ் .

மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.

தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.

இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி : 22 பேர் காயம்!!

மொனராகலை, வெலியாய பகுதியில் தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. விபத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.