கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நாடுகளில் இலங்கை தெற்காசியாவிலேயே முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் அதற்கு உடனடியாக செயற்பட்டு முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் MSN தெரிவித்துள்ளது.
இலங்கையிடம் உள்ள முறையான மற்றும் வலுவான சுகாதாரத் துறை உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
நோயாளிகளை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்துவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் இலங்கை வெற்றிகரமாக உள்ளதெனவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெய்னில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். Maria Branyas என்ற 113 வயதான பெண்மணியே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
ஸ்பெய்ன் முடக்கப்பட்ட பின்னர் இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சில வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் இந்த பெண்மணி குணமடைந்துள்ளார்.
அவருக்கு சிறியளவிலான நோய் அறிகுறிகளே தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மரியா என்ற இந்த பெண்மணி 1919-1919 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காய்ச்சல் நோய், 1936-1939 ஆம் ஆண்டுகளில் ஸ்பெய்னில் நடந்த சிவில் யு த்தத்தின் போது பரவிய கொடிய நோயையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட பெண் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.
“ அவர் குணமடைந்துள்ளார். அவர் மிகவும் சிறப்பானவர். தனது அசாதாரண நிலைமை சம்பந்தமாக தெளிவுப்படுத்த அவர் விரும்புகிறார்” என அந்த பெண்மணியின் மகள் கூறியுள்ளார்.
மரியா 1907 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் பிறந்தார். இரண்டு ஆண்டுகளின் பின் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவுக்கு சென்று முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது ஊடகவியலாளரான தனது தந்தையுடன் ஸ்பெய்னின் கிரோனா மாகாணத்திற்கு வந்துள்ளார்.
மரியாவுக்கு மூன்று பிள்ளைகள். அவரது மூத்த மகனுக்கு தற்போது 86 வயது. மரியாவுக்கு 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இந்த பேரன், பேத்திகளுக்கும் 13 பிள்ளைகள் உள்ளனர். அவர் தற்போது 13 கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் கொள்ளுப்பாட்டி. எனினும் மரியா இரண்டு தசாப்தங்களாக முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த மரியா, தனக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை விட வேறு எந்த ஆசையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சிகரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே புகைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தனது தீவிரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன் மூலம் உயிரிழக்கும் ஆபத்து குறிப்பிடத்தக்களவு அதிகம் எனவும் கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
புகைப்பிடித்தல் கொரோனா வைரஸ் நோய் உச்சமடைவதில் குறிப்பிடத்தக்களவு ஆபத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிலையத்தின் மருத்துவர் பேராசிரியர் ஸ்டென்டன் கிளென்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
19 ஆய்வு கட்டுரைகள் ஊடாக ஆராயப்பட்ட இந்த ஆராய்ச்சியில் புகைப்பிடிக்காத 17.6 வீதத்துடன் ஒப்பிடும் போது புகைப்பிடிப்போரில் 30 வீதமானோருக்கு கொரோனா வைரஸ் மிக மோசமான வகையில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து அதிகம் இருப்பதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வ ன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்த கு ற்றச்சாட்டுக்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
தமது தளத்தின் குறைப்பாடு காரணமாக ஏற்பட்ட உண்மையான மனித உரிமை தா க்கங்களை ஏற்று அதற்காக மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இந்த சம்வங்களை அடுத்து, உள்ளூர் மொழித் திறன்களைக் கொண்ட உள்ளடக்க மதிப்பீட்டாளர்களை பணியமர்த்தல், வெறுக்கத்தக்க பேச்சின் அறிகுறிகளை தானாகவே கண்டறிந்து, தவறான உள்ளடக்கத்தை பரப்புவதைத் தடுக்கும் தொழிநுட்பத்தை செயல்படுத்துதல் மற்றும் உள்ளூர் சிவில் சமூக குழுக்களுடனான உறவை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் குழுக்கள் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய கிட்டத்தட்ட ஒரு தசாப்த எ ச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதையும் பேஸ்புக் ஏற்றுக்கொண்டுள்ளது.
சிங்கள பௌத்தர்களின் உணவில் ‘கருத்தடை மாத்திரைகள்’ கலப்பதை ஒப்புக் கொண்ட ஒரு முஸ்லிம் உணவகம் தொடர்பில் வெளியான பொய்யான தகவல் 2018ஆம் ஆண்டின் அமைதியின்மை மற்றும் உடல் ரீதியான தாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகளை வாரத்தில் 7 நாட்களும் திறந்து வைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின்போது மூடப்பட்ட காலத்தின் பாடநெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுக்குழுக்களாக நடத்தப்படும் இந்த வகுப்புக்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வாரத்தில் 7 நாட்களும் சமூகமளிக்க அவசியமில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்களுக்கு சமூகமளித்தால் கூட பாடத்திட்டங்களை நிறைவுச் செய்வது என்ற இறுதி இலக்கை அடைவது எவ்வாறு என்பது தொடர்பாக சிந்திக்கப்படுகிறது. இதன்கீழ் முன்கூட்டியே பொறிமுறை ஒன்றை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மாணவர் குழுக்களை பொறுத்தவரை 30 மாணவர்கள் இருந்தால் அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து கற்பிக்கும் முறை குறித்து ஆராயப்படுகிறது.
எனவே இந்த புதிய முறை பாரிய இலக்காக இருக்காது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
1000 மாணவர்களுக்கு மேல் உள்ள சுமார் 868 பாடசாலைகளை புதிய பொறிமுறையின் கீழ் கொண்டு வருவது இலகுவான காரியமல்ல.
எனினும் 4.5 மில்லியன் மாணவர்கள் மற்றும் 3 லட்சம் ஆசிரியர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பை கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இந்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மொத்தம் 10194 பாடசாலைகளையும் திறக்கும் முன்னர் அவை அனைத்தும் கிறுமிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரயிலில் பயணிப்பதற்கு முன்னர் ரயில் ஆசனம் ஒதுக்கிக் கொள்ளாத பயணிகளை திருப்பி அனுப்பியமையினால் பெலியத்த ரயில் நிலையத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை தளர்வுபடுத்திய மூன்றாவது நாளான இன்றும் பெலியத்த ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10 மணியளவில் கொழும்பு நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளது.
இன்று முதல் ரயில் ஆசனங்களுக்கு சமமான அளவிற்கு ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இதன் காணரமாக பாரிய அளவிலான மக்கள் கூட்டம் ஒன்று பெலியத்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.
எப்படியிருப்பினும் 4 பயணிகள் மாத்திரம் முன்னரே ஆசனம் ஒதுக்கி கொண்டுள்ளனர். ஒதுக்கிக் கொண்டவர் நால்வரையும், சரியான அனுமதி பத்திரங்கள் வைத்திருந்த 7 பேரும் ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னரே ஒதுக்கிக் கொள்ளாதவர்களுக்கு ரயில்ல செல்ல சந்தர்ப்பம் வழங்காமையினால் அவர்கள் மீண்டும் வீடு நோக்கி செல்ல நேரிட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பயணிகள் ரயில்வே திணைக்கள அதிகாரிகளை கடுமையாக திட்டி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எப்படியிருப்பினும் ரயில் பெட்டிகள் மக்கள் கூட்டமின்றி பயணித்துள்ளதனை காண முடிந்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தொடர்ந்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் திணைக்களத்தின் பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எனினும் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளுதல்,
கடவுச்சீட்டு விண்ணப்பம் ஆகிய தேவைகள் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
2020ம் ஆண்டிற்கான சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டத்திற்கு வவுனியா மாவட்ட விவசாயிகளை எதிர்வரும் 20.05.2020ம் திகதிக்கு முன்னாராக விண்ணப்பிக்குமாறு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.
சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டம் வழங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சோளம், எள்ளு, நிலக்கடலை, குரக்கன், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, மஞ்சள், இஞ்சி, வெள்ளைப்பூடு ஆகிய 16வகையிலான பயிர்களுக்கு அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படவுள்ளமையினால் விவசாயிகளை உடனடியாக தங்களது பகுதி விவசாயப் போதனாசிரியரிடம் பதிவுகளை மேற்கொள்ளவும்.
மேலும் இம்மாதம் 20ம் திகதி பதிவுகளை மேற்கொள்வதற்கு இறுதித்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கு முன்னர் பதிவுகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் விதை மானியம் வழங்கும் திட்டத்தின் இணைந்து பயன் பெறவும்.
மேலதிக விபரங்களுக்கு 024 – 2222 324 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் அல்லது புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் காரியாலயத்தினை தொடர்பு கொள்ளவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள நகரசபை பொது மலசல கூடத்தினால் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மலசல கூடம் எச்சில் துப்பல்கள், குப்பைகள் , புகையிலை மிகுதி துண்டுகள் போன்றவற்றினால் அசுத்தமான முறையில் காணப்படுவதினால் குறித்த மலசல கூடத்தினை உபயோகப்படுத்துபவர்களினால் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதுற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அண்மையில் வீதியில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்த போதிலும் அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் இவ்வாறு எச்சில் துப்பல்கள், அழுக்காக காணப்படும் குறித்த நகரசபை பொது மலசலம் கூடம் தொடர்பில் நகரசபை கவனம் செலுத்துமா என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 வைரஸ் தாக்கம் எச்சில் மூலம் பரவும் என வைத்தியர்கள் தெரிவிக்கும் நிலையில் வவுனியா நகரசபை பொது மலசல கூடத்தினால் கோவிட்-19 வைரஸ் மக்களிடையே பரவுமா?
குறித்த நகரசபை மலசல கூடத்தில் அங்கவீனர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மலசலகூடமும் பாவனைக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வவுனியாவில் பூட்டப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டுள்ளன.
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்களிடையில் நேற்று முன்தினம் (11.05.2020) இடம்பெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டன.
இதன் போது சிகையலங்கரிப்பு நிலையத்தை நடாத்துவதற்கான சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்டு காட்சிப்படுத்த வேண்டும்,
முடிவெட்டுதல், முடிக்கு டை பூசுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை கழுவுவதற்கான ஏற்பாட்டினை நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செய்தல் வேண்டும்,
பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும், காலினால் செயற்படுத்தப்படும் கழிவகற்றல் கூடை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதனை பின்பற்றி சுகாதார வைத்திய அதிகாரிகளின் சிபாரிசினை பெற்று வவுனியாவில் பெரும்பாலான சிகையலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 129 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அந்தவகையில், வெலிசறை கடற்படையினருடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த,
அவிசாவளை, குருநாகல், நாவலம்பிட்டி, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளைச் சோந்த 129 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,
அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர். இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த 129 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் 6 பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸிற்க்கு எதிரான போராட்டத்தில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என அவர் குறிபபிட்டுள்ளார்.
இதேவேளை தொடரந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பொது மக்களின் செயற்பாடு திருப்தி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கண்டுபிடிக்கப்பதற்காக இன்று முதல் சிசிடீவி மற்றும் புலனாய்வு பிரிவு செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றதா என இன்று முதல் சோதனையிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியாவில் 6 நாட்களில் மாத்திரம் 168.4 மில்லி மீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இம் மாதம் 7 ஆம் திகதி 62.4 மில்லி மீற்றர் , 8ஆம் திகதி 0.0 மில்லி மீற்றர் , 9ஆம் திகதி 73.4 மில்லி மீற்றர் , 10ஆம் திகதி 16.5 மில்லி மீற்றர் , 11ஆம் திகதி 13.8 மில்லி மீற்றர் , 12ஆம் திகதி 2.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மழையினுடான காலப்பகுதியில் காற்றுடன் கூடிய இடிமின்னல்களும் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மேலும் தெரிவித்தார்.
இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையினை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அனைத்து குடிமக்களின் தரவுகளையும் வாழ் நாளில் ஒரு முறை மாத்திரம் பெற்று வெளியிட எதிர்பார்க்கும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.
புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவை இணையம் ஊடாக பார்ப்பதற்கான அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய அடையாள அட்டையில், மிகவும் துல்லியமான தரவுகள் உள்ளடக்கப்படுவதுடன், பல்வேறு சட்டங்களால் நிர்வகிக்கப்படும் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் இந்த அடையாள அட்டையல் உள்ளடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப் பயணம் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பெறுதல் முதல் ஓய்வூதியங்கள், சமுர்த்தி சலுகைகள், வருமான வரி மற்றும் வாக்களிப்பு என பல சந்தர்ப்பங்களில் வழங்கப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படும்.
சமகால ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையின் அத்தியாவசியத்தை தெரியப்படுத்தினார். அதன் ஆரம்ப திட்டமிடல் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அடையாள நிபுணர்களின் குழுவின் கீழ், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முழு வழிகாட்டுதலுடன் மற்றும் ஜனாதிபதி பணிக்குழுவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.
அனைத்து மக்களுக்கும் புதிய அடையாள அட்டையை விரைவில் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று (12.05.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா, சாம்பல்தோட்டம் குளப்பகுதியில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சாம்பல் தோட்டம் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகர மற்றும் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன ஆகியோர் இணைந்து இத் திட்டத்தை பார்வையிட்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஜப்பான் நாட்டில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறப்பான நீர் முகாமைத்துவத்தின் கீழ் விவசாய செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இம் முறையைப் பின்பற்றி இலங்கையில் முதன்முதலாக வவுனியா சாம்பல்தோட்டம் குளத்தில் இருந்து குழாய் வழியாக விவசாய நடவடிக்கைளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
48 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயற்திட்டம் மூலம் 75 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது காலபோகத்தில் 59.5 ஏக்கரும், சிறுபோகத்தில் 15 ஏக்கரும் செய்கை பண்ணப்பட்டு வரும் நிலையில் இத் திட்டத்தின் மூலம் 75 ஏக்கர் வரை கால போக்கத்திலும், 30 ஏக்கர் வரை சிறு போகத்திலும் நெற் செய்கை பண்ணக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாம்பல் தோட்டம் குளத்தில் இருந்து கால்வாய்களைப் பயன்படுத்தாது குழாய் மூலம் நீர் வயல் நிலங்களுக்கு, விநியோகிப்பதால் நீர் வீண்விரயம் செய்யப்படுவது தடுக்கப்பட்டு விளைநிலப்பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த திட்டமானது வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், வவுனியா வடக்கு நாகர்குளம் ஆகிய இடங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்துறை பேருந்துகளுக்கு இது பொருந்துமாகும். ஏற்கனவே 3 அடிக்கு ஒரு ஆள் என்ற அடிப்படையிலான சமூக இடைவெளியில் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இதற்கு தனியார்துறை தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.