நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிற்சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் கடமையாற்றுவதுடன் குழுவின் பரிந்துரைகள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 800ஐ தாண்டியது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவையே அதிகமாக புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பிற்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் பாதிப்பிற்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய கொரோனா புள்ளிவிபர வெளீயீட்டின்படி 2528 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதம் நாளாந்தம் சுமார் 2000க்கு மேர்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 2000க்கும் குறைவான உயிரிழப்புக்களையே பதிவிட்டது அமெரிக்கா.
எனவே கொரோனாவின் தாக்க வீரியம் குறைந்து வருகின்றது என உலகளவில் அனைவரும் நினைத்திருந்த வேளையில் கடந்த இரு நாட்களாக அமெரிக்க உயிரிழப்புக்கள் மீண்டும் 2350, 2528 என அதிகரித்திருப்பது மீண்டும் நிலைகுலைய வைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிக உயிரிழப்புக்கு காரணம் அங்கு வாழும் அமெரிக்க கறுப்பினத்தவர்கள் தான் என தெரியவந்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எனப்படும் கறுப்பின அமெரிக்கர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர்.
கறுப்பின அமெரிக்கர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பது, அமெரிக்காவின் 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 100 பகுதிகளை ஒப்பிடுகையில், கறுப்பின அமெரிக்கர்கள் அதிக அளவு வாழும் பகுதிகளில் 52 சதவீத நோய் தாக்கமும், 58 சதவீத உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற பகுதிகளை ஒப்பிடும் போது கருப்பின அமெரிக்கர்கள் அதிகளவு வாழும் பகுதிகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 50 சதவீதம் கூடுதலாக உள்ளது.
கொரோனா வைரஸால் அதிக அளவு கறுப்பின அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் உடல்நிலை காரணம் அல்ல என்றும், மாறாக சமூக நிலை உள்ளிட்டவையே காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உண்மையில் கொரோனா, ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களைத்தான் அதிகம் பாதிக்கின்றது என பிரித்தானிய ஆய்வுகள் அடிக்கடி தெரிவித்திருந்தன. மேலும், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 084க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.
அத்தியாவசிய அலுவலக கடமைகளைத் தொடங்கும் போது ஊழியர்களின் போக்குவரத்தினை எளிதாக்குவதற்கு தேவையான வகையில் அலுவலக ரயில்களை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பத்து முக்கியமான ஆலோசனை குறிப்புகள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இதற்கு இணங்காத பயணிகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார், இராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ரயில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் தூரத்தை கடைபிடித்தல், ரயில் நிலையத்தில் கைகளை கழுவுதல், கிருமிநாசினி தெளித்தல்,
ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் வந்து சேருதல், ரயிலில் பயணிப்பதற்கு குறுந்தகவல் பெற்றிருத்தல், கூட்டாக ஒன்றுகூடுவதை தவிர்த்தல், எச்சில் துப்புதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்த்தல்,
பொது கழிப்பறைகள் பயன்படுத்தவதனை முடிந்தளவு தவிர்த்தல், ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பயணித்தல் போன்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதென ரயில்வே கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் அறிகுறிகள் தென்படாத 80 வீதமான நோயாளிகள் சமூகத்தில் ஆங்காங்கே இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர ஜயருவான் பண்டார எச்சரித்துள்ளார்.
இதனால், இந்த நபர்கள் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால், நோயாளிகள் மீண்டும் பெருக கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளில் 20 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை. 60 வீதமான நோயாளர்களுக்கு குறைந்தளவிலேயே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன.
இதனால், இவர்கள் மிகப் பெரிய நோய் காவிகளாக மாறக்கூடும். இவர்கள் தொடர்பாகவே கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால், வேலைகளுக்கு சென்று வரும் நபர்கள் மூலம் வீட்டுகளுக்குள் கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்பதே தற்போதுள்ள பெரிய பிரச்சினை.
இந்த நிலைமையில், வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க கட்டாயம் சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.
தொழில்களுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என்பதுடன் தனி நபர் இடைவெளியை பேண வேண்டும் எனவும் ஜயருவான் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
வெலிகந்த – கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 25 பேர் எட்டு மாத காலத்திற்கு கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
போ தை பழக்கத்திற்கு அடிமையான 25 பேர் இவ்வாறு கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 25 முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் இன்று பொலநறுவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த அனைவரும் கந்தகாடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொழும்பு, மோதரை மற்றும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் கடந்த மாதம் 16ம் திகதி வெலிகந்த தனிமைப்படுத்த முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனிடையே, குறித்த அனைவருக்கும் தொழில்பயிற்சி வழங்கப்படும் என வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது திட்டமிட்டுள்ளதனை போன்றே எதிர்வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு பொது மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் முறை தொடர்பில் அனைத்து பிரிவுடனும் சுகாதார அதிகாரிகள் தற்போது கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரேனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா குழுக்கள் ஊடாகவே பரவுகின்றன.
அந்த குழுக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொழும்பு, களுத்துறை, புத்தளம் பகுதிகளில் உட்பட கொரோனா சமூக பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கையை விடவும் கொ டூரமாக கொரோனா பரவிய நாடுகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே வெசாக் காலப்பகுதியில் கொரோனாவினால் மிக மோசமான நிலைமை ஒன்று ஏற்படவில்லை என்றால் நிச்சியமாக நாடு முழுவதும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 210க்கும் மேற்பட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது. மேலும், தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று அவர் கூறியுள்ளார். கோடை காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களின் மாத வாடகையை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வீட்டு உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் இக்கால கட்டத்தில் மாத வடகைகளை அறவிடுவதை தவிர்க்குமாறும் அல்லது வாடகையில் ஒரு பகுதியை மாத்திரம் அறிவிடுமாறும் அரசாங்கம் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சரவையில் மக்களுக்கு விசேட கோரிக்கையொன்றை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதாவது கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் பல்கலைக்கழங்கள் செல்வோர் மற்றும் தொழிலுக்கு செல்வோர் அதிகமாக வாடகை அறைகளிலேயே தங்கியிருக்கின்றனர்.
தற்போதைய நிலைமையில் பல்கலைக்கழகங்கள் , நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் அறை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மாத வாடகை பணம் கேட்கலாம்.
ஆனால் இது அவர்களின் வருமானம் என்றாலும் தற்போதைய நிலைமையில் இந்த விடயத்தில் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும்.
சில இடங்களில் அதில் இருந்தவர்கள் தமது வீடுகளுக்கு சென்றிருந்தால் அந்த அறைகளில் இல்லாத நிலையிலும் வாடகை கேட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அனால் இதில் மானிதாபினமான அடிப்படையில் வாடகையில் ஒரு பகுதியை மாத்திரம் அறவிடுமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக அவர் கூறினார்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 68 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் – 3 பேர். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டவர்கள் – 45 பேர்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர். சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அ ச்சம் காரணமாக வவுனியா நகரசபையில் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வவுனியா நகரசபைக்கு சேவையினை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் , நகரசபை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட செயற்றிட்டமொன்று முன்னேடுக்கப்பட்டுள்ளது.
கதைக்கும் சமயத்தில் எச்சில் மற்றும் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வாடிக்கையாளருக்கும் ஊழியருக்குமிடையில் பொலித்தீன் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியா சுகாதார திணைக்களத்தினால் இன்று (06.05.2020) விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா சுகாதார திணைக்களத்தினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக வவுனியா நகர், வங்கிகள், பஜார் வீதி, ஏ9 வீதி, ஹொரவப்பொத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பழகியிருந்தால் தாங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
மற்றவர்களுடன் பழகும் சமயத்தில் குறைந்த பட்சம் ஒரு மீற்றர் தூரத்தினை பேணுதல் அவசியமாகும். மேலும் சுகாதார பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் வேண்டும் . இருமல் இ தும்மல் வருகின்ற சமயத்தில் முகத்தினை மறைத்தல் அவசியமாகும்.
கொரோனா நோயாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருப்பது தண்டனைக்குறிய குற்றமாகும் என வவுனியா சுகாதாரத் திணைக்கள வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி (11.05.2020) தொடக்கம் சில நடைமுறைகளை அமுல்ப்படுத்தவுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
நடைமுறைப்படுத்தவுள்ள புதிய நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர்,
கொரோனா வைரஸ் அச்சத்தினையடுத்து ஊடரங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நகரில் பல பகுதிகளில் விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டு பரவலான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தோம்.
தற்போது மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதினால் வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவதுடன் கோழி, மீன், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்குறிய அனுமதிகளை எதிர்வரும் 11ம் திகதியுடன் நிறுத்தப்படும் என்பதுடன்,
மேலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மரக்கறிகளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வீதியோரங்களில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொவிட்-19 பாதிப்பு மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், சமகால நிலமைகள் தொடர்பிலும் விசேட கூட்டம் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(06.05.2020) பிற்பகல் 2.30 இற்கு நடைபெற்றது.
இதன்போது கொவிட் 19 தொடர்பில் வவுனியாவின் தற்போதைய நிலை, கொவிட் பாதிப்பை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள், அரசாங்கத்தின் நிவாரண உதவிகள், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையபடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, எம்.பி.நடராஜா,
உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், இராணுவ அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மே- 11ம் திகதிக்கு பின்னர் நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் குழுக்களோடு கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறையின் அனைத்துச் சேவைகளையும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இந்த ஆராய்வின்போது வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விரிவான திட்டங்களை சுகாதாரத் துறையினருக்கு முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து நடவடிக்கைகள் உரிய சுகாதார முறைமைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன்,
நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதில் அந்தந்த நிறுவனங்களின் நலன்புரிச் சங்கங்களுடன் இணைந்து திட்டமிடக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கையில் ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் போது அந்தந்த நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களைத் தீர்மானிக்க முடியும். சேவைக்குச் சமூகமளிக்கும் நேரத்தை ஒரு நிர்ணயமாக அன்றி, நிறுவனத் தேவையின் படி தீர்மானிக்க வேண்டும். வீடுகளில் இருந்து பணிபுரியும்போது சில நிறுவனங்கள் விரிவான ஒழுங்கில் சேவைகளை வழங்கியுள்ளன.
அந்த முறைகளை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன், அதற்கு சட்ட ஏற்பை வழங்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அடையாள அட்டை, கடவுச் சீட்டு மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வலய கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைத் திறக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது நீர் வசதி, துப்பரவு ஏற்பாடு மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்திப் பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மே 11ம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் மாவட்டங்களிலும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட முடியும்.
வேலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்களைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கள் முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனடகிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதி தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உட்பட இன்னும் சிலர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கொழும்பு நகரில் பாண் வியாபாரி கோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளமையினையடுத்து நடமாடும் பாண் வியாபாரிகளுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்குமிடையிலான அவசர கலந்துரையாடல் வவுனியா சுகாதார அதிகாரி பணிமணையில் இன்று (06.05.2020) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது காலாவதியான பாண்,பணிஸ் விற்பனை , ஜாம் பணிசினுள் ஜாம் இல்லை , உரிய முறையில் வேகாத பாண், பணிஸ் விற்பனை செய்வதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிலும் பேரிலும் கோவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக நடமாடும் பாண் வியாபாரத்தினை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் 20க்கு மேற்பட்ட நடமாடும் பாண் வியாபாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.