க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய எதிர்காலம் தொடர்பில் இப்போதே கூற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சை தொடர்பான தீர்மானம் தற்போது எடுப்பது அவசரமில்லை. மாணவர்களுக்கு வழங்க கூடிய நியாயமான தீர்மானத்தை எடுப்பதற்கு நான் பின்வாங்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் உயர்தர பரீட்சையை உரிய முறையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கு ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் முழுமையாக சேவைகளை பெற்றுக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் ஆணையாளர் ஆர்.ஜீ.ஏ. விமலவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், அது குறித்து தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகத்திற்கு செல்லாது வீட்டில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவ தொடர்பான யோசனை ஒன்றை தொழில் அமைச்சு முன்வைக்க உள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளான தனியார் நிறுவனங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்கும் கால அவகாசம் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் கடந்த 3 ஆம் திகதி முடிவடையவிருந்தது.
முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானம் தேவை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதி தற்பொழுது நாட்டில் உள்ள முடக்க நிலையை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், இவ்வாறு முடக்க நிலையை தளர்த்தினாலும் மிகுந்த அவதானம் அவசியமானது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
முடக்க நிலை தளர்த்தப்பட்டன் பின்னர் ஏதேனும் ஓர் பகுதியில் வைரஸ் தொற்று பரவினாலல் உடனடியாக அந்த பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா அ ச்சுறுத்தல் நீங்காத நிலையிலேயே அரசாங்கம் நாட்டை திறப்பதாகவும், இதனால் மிகுந்த அவதானத்துடன் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 1600 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் இது நாள்தோறும் 2500 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை சற்றே ஆரோக்கியமானது என்ற போதிலும் முடக்க நிலை தவிர்ப்பு அபாயத்தை உருவாக்கக் கூடிய நிலை உண்டு என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
யாழ். வணிகர் சங்கத்தினருக்கும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாத வண்ணம் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
21 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் அபாய வலயமாக கருதப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை நீடிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. மேல் மாகாணம் மற்றும் புத்தளத்திற்கு தற்போது வரையிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களிலும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்படாதென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பலர் சுயதனிமைப்படுத்தலின் போது சட்டங்களை மீறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று 9 ஆவது மரணம் பதிவாகியிருந்தது. கொழும்பு 15 மோதரை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கி பழகியவர்கள் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,
குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பதில் பிரச்சினையுள்ளதாக கூறியுள்ளார்.
அது தொடர்பில் இன்றைய தினத்திற்குள் கண்டறிவதாக தெரிவித்த அவர் அவ்வாறு கண்டறிய முடியாவிடின் அந்த பகுதியில் உள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.
குளிர்வலயக் கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன.
கொரோனோ அ ச்சுறுத்தல் நிறைந்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும், இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர்.
1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட்டது நுவரேலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பிள் செய்கை பின்னர் கைவிடப்பட்டது. எனினும், சில பகுதிகளில் வீட்டுத்தோட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குளிர் வலயங்களில் மாத்திரமல்ல வெப்ப வலயங்களிலும் அப்பிள் செய்கையை மெற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு கிளிநொச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.
லண்டனிலிருந்து சிறு கன்றினை எடுத்து வந்து கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் தனது தோட்டத்தில் நாட்டிய அவர் சாதாரண தாவரங்கள் போலவே பராமரித்து வந்துள்ளார். குறித்த அப்பிள் மரம் கடந்த வருடம் காய்த்துள்ளது.
அதனை அறுவடை செய்த அவர் தொடர்ந்தும் அதனை பராமரித்து வருகின்றார்.தற்போது குறித்த மரம் மீண்டும் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இறக்குமதி அப்பிள்களின் சுவையை கொண்டதாகவும் அதன் அளவில் சிறியதாக காணப்படுவதாகவும் அமரசிங்கம் தெரிவிக்கின்றார்.
எனினும் குறித்த தாவரத்தை முறையான ஆலோசனைகளுடன் பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறந்த பெறுபேற்றினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் அமரசிங்கம் என்ற இந்த விவசாயி தனது காணியில் திராட்சை, அன்னாசி உள்ளிட்ட குளிர்வலய தாவர உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.எனினும், குறித்த செய்கையில் ஓரளவு வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர்,
அதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும் இடத்தில் செய்கையில் மேலும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறை முகத்துவாரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் 6 மாத குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 6 மாத குழந்தையும், மோட்டார்சைக்கிளை செலுத்திய 17 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 6 மாத குழந்தையின் தந்தையான சேருநுவர – இலங்கை துறைமுகத்துவாரம், மத்திய வீதியைச் சேர்ந்த துஸேந்தன், அவரது மனைவி டிலக்ஸனா மற்றும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கே.மயூரன் (17 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஈச்சிலம்பற்று-புன்னையடி பகுதியைச் சேர்ந்த வர்ணகுமார் டிலக்சன் (17 வயது) என்பவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.
அத்துடன் 6 மாத குழந்தையான கன்சிகாவின் சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் நிர்வாக முறைமையினால் இயல்பு வாழ்க்கைக்கு தடையேற்பட்டாலும் இந்த பயங்கரமான வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை கடைபிடித்து உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ள ஜனாதிபதி, நாம் போராடுவது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா டெப்லிஸ் இன்று முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிப்பது சம்பந்தமாக இதன் போது இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மாத்திரமல்லாது கூட்டு ஒத்துழைப்புகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மலேரியாவை முழுமையாக தடுக்கும் மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால்,
இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தினால் மலேரியாவை இவ்வுலகத்திலிருந்து முற்றாக ஒழிக்கமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் மலேரியாவினால் நான்கு லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்பதோடு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் படுகொ லை செய்யப்பட்டு இன்றுடன் 34வது வருடத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (05.05.2020) வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மண்டபத்தில் சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரால் (சிறி ரெலோ) அனுஷ்டிக்கப்பட்டது.
சிறிரெலோ இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலமையில் மதியம் 1.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளான அஜித், அன்ரன், சங்கர் ஆகியோர் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றி வைத்திருந்தனர்.
தொடர்ந்து கட்சியின் முக்கியஸ்தர்கள், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அந்தோணி, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களான சாந்தமேரி, ஜூட், சந்துரு ஆகியோருடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினரான விஜயகுமார், மற்றும் சிறி ரெலோ இளைஞணியினரும் சுடர்களை ஏற்றியதுடன் மலர் அஞ்சலி செலுத்தி நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்திருந்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் இன்றைய தினம் நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 9 ஆவது நபரான கொழும்பு 15 ஐ சேர்ந்த பெண் சுமார் ஒரு மாதகாலமாக சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டமையை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொற்றுறுதி செய்யப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியதாகவும், அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமையவும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைகளுக்கு அமையவும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உ யிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக மக்களின் உ யிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை பாதிக்கின்றது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கிறது, என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை.
2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5-ல் ஒருவர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழக்கிறார் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள்? என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.
இதன் தொடக்க நிலை ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள், விட்டமின்-டி சத்து குறைபாட்டால் கொரோனா வைரஸிடம் உயிரை பறிகொடுத்திருப்பது, தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து விட்டமின்-டி சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விட்டமின்-டி சத்து கூடுதலாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம்.
ஏனென்றால் இந்த சத்து குறைபாடு காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக பாதித்துள்ளது. இ றந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விட்டமின்-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்தான்” என்றனர்.
விட்டமின்-டி சத்து எவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது? * இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் விட்டமின்-டி மனிதர்களுக்கு நிறைய கிடைக்கிறது. * சூரை, பாரை உட்பட பல மீன் வகைகளில் விட்டமின்-டி உள்ளது. * தோடம்பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் விட்டமின்-டி தாராளமாக கிடைக்கிறது.
கொரோனாவின் தாக்கத்திலிருந்து இருந்து தப்பிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, அவ்வப்போது சோப்பால் கை கழுவது போன்றவற்றுடன் விட்டமின்-டியும் நல்ல ஆயுதமாகத்தான் தெரிகிறது.
இருப்பினும் விட்டமின் டி கொரோனா வைரஸின் அபாயத்தை குறைக்கிறது என்று சில தகவல்கள் வந்துள்ளன, ஆனாலும் தற்போது இதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
பாரிய இடி, மின்னல்களுடன் கூடிய கனமழைப் பெய்யும் எனக் கூறி இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று சிகப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்றிரவு 10.30 மணி வரை செல்லுப்படியாகும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், மத்திய, சபரகமுவை, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் ஆங்காங்கே மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் எனவும் பலத்த மின்னல்கள் ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை ஓன்றில் அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் செய்தியை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு அ ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அண்மையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலை பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டு குறித்த அரிசி ஆலைக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இச் சம்பவத்தை ஊடக அறிக்கையிட்ட ஊடகவியலாளரை மிரட்டும் வகையில் குறித்த அரிசி ஆலை உரிமையாளரால் அரச அதிகாரிகள் முன்னிலையில் அ ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மி ரட்டல் தொடர்பில் ஊடகவியலாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.