இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளில் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த நடைமுறை திகதி குறித்த உரியமுறையில் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் 11ஆம் திகதி நாட்டில் இயல்புநிலை கொண்டு வரப்பட்டபின்னர் ஊரடங்கு அமுல்செய்யப்படும் இடங்களிலேயே தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மூலம் வெளியில் செல்லும் நடைமுறை அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் வாரத்தில் நோய்த் தொற்று நீக்குதல், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு சுகாதாரத் துறையினர் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் உயர் தரம் மற்றும் சாதாரண தரம் கற்கும் மாணவ மாணவியருக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்தரம், சாதாரணதரம் ஆகியனவற்றில் கற்கும் மாணவ மாணவியருக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் தரம் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 72 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அவர் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட 8வது மரணமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இந்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று எச்சரித்துள்ளது.
இக் கிருமி நாசினிகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தப்படமாட்டாது என, உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளதாகவும் அக் குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் என்பன கிருமி நீக்கம் செய்யப்படும் அறைகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இலங்கை நுண்ணுயிரியல் கல்லூரி, மக்கள் மீது குளோரின் கலவைகள், சவர்க்கார நீர் உள்ளிட்ட புற ஊதா கதிர்களை ஏற்படுத்தும் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செயன்முறை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீது தெளிக்கும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்துகிறோம்.
ஒரு நபர் அல்லது குழுவின் மீது கிருமி நீக்கும் இரசாயன தெளிப்பான்களை தெளித்தல் உடல் மற்றும் உளவியல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அது கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாது.
ஒரு நபரின் வெளி உடம்பிற்கு கிருமி நீக்கும் தெளிப்பான்களை தெளிப்பதால், உடலுக்குள்ளே காணப்படும் கிருமிகள் அழிக்கப்படாத அதேவேளை, குறித்த நபரின் உடல்நலம் மேலும் மோசமடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என குறித்த கல்லூரி வலியுறுத்தியுள்ளது.
கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடுவதால் வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதால், முழு உடலையும் கிருமி நீக்கம் செய்வதைவிட, கைகளை கிருமி நீக்கம் செய்வதே கொரோனா தொற்றை தடுக்க சிறந்த வழி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சோதனை அறைகளில் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது தீப்பற்றும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதோடு, இந்த இரசாயனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
”குளோரின் தெளிப்பு கண்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், அத்துடன் மூச்சுத்திணறல், வாந்தி, சுவாச பிரச்சினைகனை ஏற்படுத்தும்.
மேலும், நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும், வலிப்பு போன்ற தாக்கங்களும், நாள்பட்ட சுவாச நோய்களை அதிகப்படுத்துகிறது மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் உடலின் திறனை பாதிக்கும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற ஊதா ஒளிக் கதிர்கள் அதிகமாக வெளிப்படுத்துவதால் கண்கள், தோல் தீக்காயங்கள் மற்றும் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு, ஓசோன் வாயு அல்லது கதிரியக்க தயாரிப்புகளைக் கொண்டு, உயிரற்ற பொருட்களை சுத்தப்படுத்துவதற்கோ, தயாரிப்புகளை வெளியிடுவதற்கோ அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கவில்லை.
கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது, பொதுமக்கள் அடிக்கடி தொடக்கூடிய, கதவு பூட்டுகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆசனங்கள், மின்தூக்கி பொத்தான்களில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், நுண்ணுயிரியல் கல்லூரியின் பரிந்துரைத்துள்ளது.
வைரஸ் அத்தகைய அழுக்குபடிந்த மேற்பரப்பில் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் கூட வாழக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரிய அளவிலான கிருமிநாசினி மருந்துகளை சுற்றுச்சூழலுக்கு வெளியிடுவதானது, மாசு மற்றும் இராசாயன தாக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், மீன்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மேலும், மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கிருமிநீக்கும் நடவடிக்கை, எவ்வளவு தூரம் செயல்திறன் உடையது என்பது இதுவரை அனுமானிக்கப்படவில்லை என்பதோடு, சூரிய ஒளி போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் கிருமிநாசினிகளின் தாக்கம் குறைவதற்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது.
எனவே, கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வீதிகள் மற்றும் பொது இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதைவிட, பொதுமக்கள் அடிக்கடி தொடும் இடங்கைளை சுத்தப்படுத்தும் செயற்பாட்டை பரிந்துரைப்பதாக, இலங்கை நுண்ணுயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கு ழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை என கூறி குறித்த இலங்கையர்கள் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
இலங்கை மாணவர்கள் உட்பட 208 பேர் பிரித்தானியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் பலர் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஹோட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 7500 ரூபாய் இவர்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல்களை கல்வியமைச்சு தயாரித்துள்ளது. இந்த வழிக்காட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பின்னர், இந்த வழிக்காட்டல்கள் தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும் வழிக்காட்டல்கள் கிடைக்கும் வரை காத்திருக்காது, கைக்கழுவும் இடம், பிள்ளைகளின் உடல் உஷ்ணத்தை அளவிடும் வசதிகள், சுகவீனமான மாணவர்களை தங்க வைப்பதற்கான இடங்கள் என்பவற்றை தற்போதில் இருந்தே தயார்ப்படுத்துமாறு கல்வியமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்த வழிக்காட்டல்களை நடைமுறைப்படுத்த தேவையான கிருமி தொற்று நீக்கி போன்ற திரவங்கள் பற்றிய மதிப்பீடுகள் இரண்டாம் தவணை ஆரம்பமான பின்னர், பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட உள்ளது.
மதிப்பீடுகளுக்கு அமைய அத்திவசிய பொருட்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. யுனிசெப் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் இதற்கு அனுசரணை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பிரதேச மக்கள் சிலர் இணைந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கலேவெல, பல்லேபொல பிரதேசத்தை சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என்பவராகும்.
தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்ற இராணுவ சிப்பாய் தனது பயணப் பையை கழிப்பறைக்கு வெளியே வைத்து சென்றுள்ளார். வெளியே வந்த கழிப்பறைக்கு பணம் வழங்கும் போது திடீரென சிப்பாய் கீழே விழுந்துள்ளார்.
பார்ப்பதற்கு இராணுவ சிப்பாய் போன்று இருந்ததனை அறிந்துக் கொண்ட மக்கள், அரை மணி நேரம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவ்விடத்தில் சில இராணுவ சிப்பாய்கள் இருந்தும் அவரை காப்பாற்ற ஒருவரும் முன்வராத நிலையில், இளைஞர் மற்றும் யுவதிகள் சிலர் இணைந்து இராணுவ சிப்பாயை முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர். எனினும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வவுனியா மகாகச்சகொடி பகுதியைச் சோந்தவர்கள் உட்பட 216 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் தென்பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 35 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் ஓருவரின் தந்தையான,
செவனகல எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குறித்த நபரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தின் உணவில் புழு காணப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அதிரடியாக செயற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதர்கள் குறித்த உணவகத்தினை நேற்று (03.05.2020) காலை 10.30 மணியளவில் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினார்கள்.
குறித்த உணவகத்தினால் ஊரடங்கு காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று உணவு விநியோகிக்கும் செயற்பாடு (home delivery) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த உணவகத்தில் நேற்றுமுன்தினம் இரவு home delivery மூலம் ஓர்டர் செய்யப்பட்ட உணவில் புழு காணப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சான்று பொருளுடன் (புழு காணப்பட்ட உணவுடன்) இரண்டாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள குறித்த பிரபல உணவகத்தில் பொதுசுகாதார பரிசோதர்கள் நேற்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த உணவகத்தில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறிகள் (கோவா , கரட் , கொத்துரொட்டி , நூடில்ஸ், வெங்காயம்) , குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை கைப்பற்றிய பொதுசுகாதார பரிசோதகர்கள் அதனை எடுத்துச் சென்றதுடன் குறித்த உணவகம் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள், மரக்கறிகள் மற்றும் புழு காணப்பட்ட உணவு ஆகியவற்றினை பொதுசுகாதார பரிசோதகர்கள் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் சான்றுப்படுத்தியதுடன் உணவக உரிமையாளரையும் முன்னிலைப்படுத்தினர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய நீதவான் குறித்த பிரபல உணவக உரிமையாளரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் பாவனைக்கு ஒவ்வாத சான்று பொருட்களை அழிக்குமாறும் உத்தரவு இட்டார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் யூலை மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 7 மணிக்கு விளக்கேற்றுமாறு யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவன் அறக்கட்டளை, இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர்களை பாதுகாப்பதற்காக தமது உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் அங்கவீனமடைந்த பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம், கண்டி, கல்பிட்டி ஆகிய இடங்களில் சிறுவர் இல்லங்களை நடத்தி வருகிறது.
பொருளாதாரம் குறித்த உலகப் புகழ்பெற்ற பத்திரிகையான “தி எகனாமிஸ்ட்” கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களை மதிப்பிட்டுள்ளது.
இந்த தரவரிசைப்படி, தற்போதைய கொரோனா தொற்று நோயால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருக்கின்றது. 66 நாடுகள் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. இதில் இலங்கை 61வது இடத்தை பெற்றுள்ளது.
அதேசமயம் இலங்கையுடன் ஒப்பிடும்போது, அங்கோலா, லெபனான், பஹ்ரைன், சாம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் மோசமான பொருளாதார பதிவை கொண்டுள்ளன.
இதேவேளை, பொதுக் கடன், வெளிநாட்டுக் கடன் மற்றும் நாடுகளின் கடன் செலவுகள் உள்ளிட்ட விடயங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வர முடியாமல் பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் சிக்கியிருந்த 207 இலங்கை மாணவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
207 மாணவர்களுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத்தந்துள்ளது.
லண்டன் ஹுத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல் 504 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இந்த மாணவர்கள் மற்றும் அவரது பொதிகளுக்கு 4ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தினால் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னர் பேருந்தில் ஏற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே தேசிய அடையாள அட்டை நடைமுறை பொருந்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் அடையாள அட்டை நடைமுறை அமுல்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அடையாள அட்டை நடைமுறைக்கு அமைய, அடையாள அட்டையின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட நாட்களில் வெளியே செல்ல முடியும்.
பாரிய மக்கள் கூட்டங்களைத் தடுக்கும் வகையில் அடையாள அட்டை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம் முதல் கொழும்பு. கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அடையாள அட்டை நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி பேணுதல் மிகவும் அவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமெனவும் தெற்கு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்க நிலையிலிருந்து விடுவிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் இணைய தளத்தில் இந்த விடயங்களை பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தொற்று தற்பொழுது சமூகத்தில் சிறிதளவில் தொற்றி வருவதாகவும் கடந்த 2ம் திகதி 15 நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் அவர்கள் அனைவரும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு பேணியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத் தொற்று நிலைமை மிகவும் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றால் இந்த நிலைமையை மேலும் வரையறுத்துக்கொள்ள முடியும் என டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் ஆயிரம் நோயாளிகளுக்கு என்றாலும் சிகிச்சை அளிப்பதற்கான ஆற்றல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு, சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில் வசித்துவரும் அருள் என்ற ஈழத்தமிருக்கு ஏற்பட்ட சம்பவம் நல்லதொரு உதாரணம்.
சுவிஸ் நாட்டில் சுக் மாநிலத்தில் உந்தரகிரி Zug- Unterägeri கிராமத்தினைச் சேர்ந்த ஒரு ஈழத்தமிழர், லொத்தர் கீறுவதில் ஆர்வமுடையவர் . கடந்த வாரம், அப்பகுதியில் உள்ள ‘கியோக்ஸ்’ என்று கூறப்படுகின்ற கடையில் லொத்தர் வாங்கி இலக்கங்களை கீறியுள்ளார் .
மொழியறிவு பெரிதாக இல்லாத அந்த மனிதர், மறுநாள் ‘கியோக்ஸ்’ கடையிலேயே தான் வரைந்த லொத்தர் சிட்டையை பரிசீலித்துக்கொள்வது வழக்கம். அந்த கடைக்காரரும் லொத்தரில் வென்றிருந்தால் அதற்கேற்ப பணத்தை வழங்குவார்.
ஆனால் கடந்த முறை அவரால் கீறி வழங்கப்பட்ட சிட்டையை பரிசீலித்த கியோக்ஸ் கடைக்காரர், “நீங்கள் பெருந்தொகைப் பணத்தை வென்றிருக்கிறீர்கள். இதனை நாம் வழங்க முடியாது. லொத்தர் நிறுவனத்தில்தான் பெற்றுக்கொள்ளமுடியும்” எனக்கூறி, ஒரு படிவத்தினையும் மேலதிகமாக வழங்கி, ‘இதனைப் பூர்த்தி செய்து, லொத்தர் சபையின் முகவரிக்கு அனுப்புமாறு’ அறிவுறுத்தியிருந்தனர்.
குறித்த ஈழத்தமிழரும் வீடு வந்து சேர்ந்தார் . இவரும் இவருடைய நண்பரும் மாலைப்பொழுதில் சந்திப்பதுண்டு. அந்த சமயத்தில் அவர் தனது நன்பருக்கு லொத்தரின் போது கியோக்ஸ்கில் இடம்பெற்ற சம்பவத்தினை விபரித்துள்ளார் . அப்போது தனக்கு எவ்வளவு பணம் லொத்தராக கிடைத்திருக்கும் என்பது பற்றி தெரியாது எனவும் குறித்த நண்பரிடம் கூறியுள்ளார்.
நண்பரும் ‘விபரங்கள் எல்லாவற்றையும் என்னிடம் தா! நான் இவற்றை எனது மகன் மூலமாக செய்து தருகிறேன்’ என்றிருக்கிறார் . மொழியறிவு இன்மை காரணமாக குறித்த லொத்தர் உரித்தாளரான அவர் தனது நண்பரிடம் யாவற்றையும் வழங்கியுள்ளார் .
மறுநாள் தொடர்பு கொண்ட குறித்த நண்பர், “உமக்கு 2500 சுவிஸ் பிராங் லொத்தர் தொகையாக விழுந்துள்ளது’ என்று கூறி, அவற்றை தான் பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார் . அதனை இவரும் ஏற்றுக்கொண்டுள்ளார் .
பின்பு அவசரமாக தொடர்பு கொண்ட நண்பர் – ‘லொத்தர் சிட்டை, மற்றைய விபரங்கள் ஏதாவது போட்டோ பிரதி எடுத்து வைத்திருக்கிறீர்களா’ என வினாவி உள்ளார். ‘அவ்வாறு எடுத்திருந்தால் அவற்றை உடனே அழிக்கும் படியும் கூறியுள்ளார். குறித்த லொத்தர் உரிமையாளர், வழமையாக லொத்தர் கொள்வனவு செய்தால் அதனையும், தான் புள்ளடியிட்ட இலக்கங்களையும் தனது தொலைபேசியில் போட்டோ எடுத்து வைத்திருப்பது வழக்கம்.
அதனடிப்படையில் இந்த லொத்தர் சிட்டையையும், புள்ளடி இட்ட இலக்கங்களையும், கைத்தொலைபேசியில் போட்டோ எடுத்து வைத்திருந்தார். நண்பரோ அடிக்கடி தொடர்பு கொண்டு, போட்டோ எடுத்து வைத்துள்ளவற்றை அழிக்கும் படி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
கடைசியாக, 2500 சுவிஸ் பிராங்க் பணத்தை அவர்டம் வழங்கி, ‘இதுவே லொத்தர் மூலம் கிடைத்த பணம்’ என கூறி, லொத்தர் உரிமையாளிடம் கையளித்தும் விட்டார் . அதன் பின்னரும் கூட அவருடைய லொத்தர் சம்பந்தமான போட்டோ ஆவணங்களை அழிக்கும் படி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், கைத்தொலைபேசியில் உள்ள ஆவணங்களை தனது வேறு ஒரு நண்பரிடம் காட்டி வினாவியுள்ளார் . அவர் இந்த லொத்தர் இலக்கத்தினை பரிசிலித்து, அவர் 45000 சுவிஸ் பிராங்குகளை வென்றிருப்பதாக ஆதாரபூர்வமாக காட்டி நிருபித்தார் . இதனைக் கண்ட லொத்தர் உரிமையாளர் தான் ஏமாற்றப்பட்டதனை அப்போது தான் உணர்ந்தார்.
இந்தவிடயம் தொடர்பாக லொத்தர் பணத்தைப் பெற்றுத்தந்த நண்பரோடு பேசிய போது அவர் மறுத்துவிட்டார் . இதனால் ஏமாற்றப்பட்ட ஈழத்தமிழர், சுக் மாநிலத்திலுள்ள சில சமூக ஆர்வலர்களின் உதவியோடு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
காவற்துறையின் விசாரணையின் போது 45,000 சுவிஸ் பிராங்கை லொத்தர் சபையிடம் இருந்து பெற்றதனை, குறித்த நண்பர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த லொத்தர் இலக்கங்களை தானும் தனது நண்பரும் இணைந்தே புள்ளடி இட்டதாகவும், அந்தப்பணம் தனக்கே சொந்தமானது என பொய்யுரைத்துள்ளார்.
ஆனாலும் சுவிஸ் காவல்துறை இதனை நுணுக்கமாக ஆராய்ந்து, குறித்த நண்பரின் பொய்யான கட்டுக்கதையை கண்டுபிடித்துள்ளார்கள். காவல்துறை விசாரணைகள் தற்பொழுதும் தொடர்கிறது . தண்டனைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து. தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும் என்கிறார் திருவள்ளுவர் ! ஆனால் இந்த நட்பு நட்பையே இழிநிலைப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது என்கின்ற நிலையில் தமிழனை தமிழனே மோசடி செய்தான் என்பது வருத்திற்கு உள்ளான செயலாகிறது.
இந்த சம்பவம் பற்றிய செய்தி ஒரு எச்சரிக்கையும் மிகப் பெரிய பாடத்தினையும் புலம்பெயர் மண்ணில் உள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறது .
வெளிநாட்டில இருந்து இலங்கை வரும் நபர்களின் தேவைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆடம்பர வசதிகள் தேவையான நபர்கள் பணம் செலுத்தி தனிமைபடுத்தலில் ஈடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வரும் நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த ஹோட்டல் அறைகளுக்கான அனைத்து வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். சாதாரணமாக குறித்த ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளுக்காக நாள் ஒன்றுக்கு 35000 ரூபாய் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் பல நட்சத்திர ஹோட்டல்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனைத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் இராணுவ கண்கானிப்பின் கீழ் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இராணுவத்தினால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்ந்தும் செயற்படவுள்ளது. அதற்காக எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.