வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்பு : 5 பேர் கைது!!

5 பேர் கைது..

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மலேசியா சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதன்போது குறித்த வீட்டினை உடைத்து அங்கு சென்ற கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, மின்னழுத்தி, வாயு அடுப்பு, சிலிண்டர், அவண், மிக்ஸ்சி, தண்ணீர் பில்டர், கிளாஸ், கரண்டி உள்ளிட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானாவடு அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரனித் திஸாநாயக்கா தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்ட் சந்தன (45769), பொலிஸ் கான்ரபிள்களான சமீர (75038), ரணசிங்க (75642), தயாளன் (91792) உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தேக்கவத்தை, கற்குழி, நெளுக்குளம், மகாறம்பைக்குளம், கோவில்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இச்சம்பவம் தொடர்பில் 18 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட தேக்கவத்தை, நெளுக்குளம், மகாறம்பைக்குளம் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் மழையுடன் கூடிய காற்றினால் 16 வீடுகள் பாதிப்பு!!

கனகராயன்குளத்தில்..

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மழையுடன் கூடிய கடும் காற்றுக் காரணமாக 16 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. அவற்றுக்கு இழப்பீடு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

நேற்று முன்தினம் (25.04) மாலை பெய்த மழையின் போது வீசிய கடும் காற்றினால் வவுனியா வடக்கு பிரதேச செலக பிரிவுக்குட்பட்ட கனகராயன்குளம் பகுதியில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் பாதிப்படைந்திருந்தனர். அவர்களுடைய 16 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

குறித்த 16 வீடுகளையும் நேற்று (26.04) பார்வையிட்ட மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினர் அவர்களுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்மாக 10 ஆயிரம் ரூபாயும் அதன் பின் மதீப்பீட்டின் படி இழப்பீடும் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இல்லை : வைத்திய அறிக்கை!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக நேற்று மாலை வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த நபரை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக அவருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பரிசோதனையில் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில் 25 இலங்கையர்கள் பலி?

பிரித்தானியாவில்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக 25 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து 900 பேர் வரையிலான இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“பி.எச்.டி மாணவர்கள், மேலதிக படிப்புக்கு வந்த வைத்தியர்கள், விடுமுறைக்காக பிரித்தானியா வந்தவர்கள், பிரித்தானியாவில் பணிபுரிந்தவர்கள் என பலர் இலங்கைக்கு திரும்புவதற்கு ஆதரவளிக்குமாறு உயர் ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தங்குமிடம் மற்றும் விடுதிகள் தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விசா நீட்டிப்பதில் உயர்ஸ்தானிகராலயம் தலையிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் லொக்டவுன் காலத்தில் அவற்றைப் பெற வழி இல்லாதவர்களுக்கு உயர் ஸ்தானிகராலயம் உதவிகளை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் இலங்கை சமூகத்தின் தகவல்கள் கூறியுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

எச்சரிக்கை..

இலங்கையர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp ஊடாக Google doc phishing மோசடி பரப்பப்படுவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடி “கடன் தகவல் பணியகத்திலிருந்து ‘நயா சஹானா 2020” என்ற தலைப்பில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google doc phishing மோசடி இலங்கையர்களின் வங்கி தகவல்களை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத்தில் தங்களது வங்கி விபரங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும்?

வாகனங்களின் விலைகள்..

வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில்,

இறக்குமதிக்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயர்வடையும் எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் ஒன்றியத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் வாகனங்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களே அதிகம் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் சுசுகீ வெகன் ஆர், டொயாடா விட்ஸ், ஹொன்ட வெஸல், டொயோடா ஒக்ஸியோ போன்ற வாகனங்கள் இரண்டு முதல் மூன்று லட்சங்கள் வரையில் விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்களில் வாகனங்களுக்கான கேள்வி நிலவக் கூடும் என்ற போதிலும் கையிருப்பில் போதியளவு வாகனங்கள் இல்லை என இந்திக்க சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களுக்கு எவ்வளவு கேள்வி நிலவும் என்பது சந்தேகமே என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் சொந்த வாகனம் ஒன்றை வைத்திருக்க பலரும் விரும்பக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் திரும்பினார்!!

கொரோனா தொற்றினால்..

ஈக்குவடோர் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் திரும்பியிருக்கிறார்.

ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது அஸ்தி கூறி ஒரு பெட்டியையும் உறவினர்களிடம் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார்.

மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரியை அழைக்குமாறு கேட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அஸ்தி யாருடையது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் ஏற்பட்ட குழப்பத்திற்காக மருத்துவமனை அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஈக்குவடாரில் இதுவரை 22,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 600 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மீண்டும் கொரோனா : ஜிம், நீச்சல்குளங்கள் பூட்டு : லொக்டவுனில் 1கோடி மக்கள்!!

சீனாவில் மீண்டும் கொரோனா..

தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலில் சீனாவில் வுகான் மாநகரில் கண்டறியப்பட்டது.

சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்றுக்கு தற்போது வரை 82,827 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 4632 பேர் உயிரிழந்ததாகவும் சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரையில் உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 29 இலட்சத்து 82ஆயிரத்து 647 என்பதோடு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 6 ஆயிரத்து 342 ஆகும்.

அதிகூடிய உயிரிழப்புக்களையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் பார்த்தோமானால் அமெரிக்காவே முதன் நிலையில் நிற்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா உட்பட, அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் நாட்டு எல்லைகளை மூடியதோடு, பாடசாலைகள் மதுபானவிடுதிகள் , விமானபயணங்களையும் மூடியிருக்கின்றது.

இந்நிலையில் சீனா இரண்டரை மாதங்களின் பின்னர் கொரோனா வைரஸ் நோயை வென்றுவிட்டோம் எனக்கூறி பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையில் இறங்கியதோடு தன் நாட்டு லொக்டவுணை தளர்த்தியதோடு மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இதற்கமைய ரஷியாவுக்கு சென்றிருந்த சீனர்கள் எட்டுபேர் சொந்த நாடு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் நாட்டிற்குள் கொரோனா நுழைந்து விட்டது என சீனா அஞ்சுகிறது. இதனால் ரஷியா எல்லையில் உள்ள ஷான்ஜி மகாணத்தை முற்றிலும் முடக்கியுள்ளது. சுமார் ஒரு கோடி மக்கள் தற்போது லொக்டவுனில் உள்ளனர். மேலும், பீஜிங்கில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல் குளங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவை ஒழித்துவிட்டோம் என பெருமூச்சுவிட்ட சீனாவுக்கு, இந்த விவகாரம் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அடையாள அட்டை எண் முறைமை கொரோனா பரவலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

அடையாள அட்டை எண் முறைமை..

அடையாள அட்டையின் இறுதி எண்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கும் நடைமுறையானது கொரோனா நோய்த் தொற்று பரவுகையை அதிகரிக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் வெளியே செல்லும் நடைமுறை ஒன்றை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த முறைமையினால் நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாய நிலைமை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு தினங்களிலும் ஒவ்வொரு நபர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதிப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று எல்லா வீடுகளையும் தாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் என தெரிவித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையை கருத்திற்கொள்ளாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவுகையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய இடங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவியதாக பதிவாகியுள்ள நிலையில் அந்த நோயாளிகளை அண்டிய பகுதிகளின் பரவுகை பற்றி மதிப்பீடு செய்யாது, இந்த அடையாள அட்டை நடைமுறை பின்பற்றப்படுவது ஆபத்தானதாகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையை பாதித்த கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிலிக்கா மலவிகே தலைமை தாங்கியுள்ளார்.

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸை விஞ்ஞான பெயரில் சாஸ் கொவிட் என்றே அழைக்கப்படுகின்றது. A, B மற்றும் C ஆகிய மூன்று அடிப்படை வகைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொவிட் 19 B வகையே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய எல்லையில் அதிகமாக பரவும் கொரோனா C வகையை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தற்போது பரவும் கொரோனா A வகையை சேர்ந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த A வகை கொரோனா அதிகமாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைரஸின் ஒவ்வொரு பிரிவினாலும் ஏற்படும் சிக்கல்கள் வேறுபட்டவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சில நாடுகளில் கோவிட் -19 இறப்பு விகிதம் பாரிய அதிகரிப்பிற்கு இந்த மாற்றங்கள் காரணமாகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு மற்றொரு நாட்டில் காணப்படும் தடுப்பூசி இன்னும் ஒரு நாட்டிற்கு பொருத்தமானதா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த நாட்டில் பரவும் வைரஸ்களின் வகைகளை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகளவு கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கையில் நேற்றையதினம் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரு நாளுக்கு பதவாகிய அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவாகும் என தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரொனா தொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 396 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை 505 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் மொத்தமாக 45 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 120 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 378 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட 150 இராணுவத்தினர் : உடனடியாக மூடப்பட்ட இராணுவ சிறப்புபடை முகாம்!!

இராணுவத்தினர்..

நீர்கொழும்பு சீதுவை இராணுவ விசேட படையின் இராணுவ முகாம் பூட்டப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய 150 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்நிலையிலேயே இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிரு க்கின்றது. இதேவேளை உயிரிழந்த சிப்பாய் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதானவர் என கூறப்படுகின்றனர்.

இவருக்கு இம்மாதம் தொடக்கத்தில் விடுமுறையில் வீடு சென்று கடந்த 14 தினங்களிற்கு முன்பே மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வாறு பணிக்குத் திரும்பிய சிப்பாய் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுக்காலை குறித்த இராணுவச் சிப்பாய் முகாமில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் குறித்த இராணுவச் சிப்பாயின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பிற்கு கொரோனா காரணமாக எனக் கண்டறியும் நோக்கில் மாதிகரிள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் உடலம் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? மரணத்திற்கு கொரோனா காரணமா? என ஆராய்வதற்காக, நேற்று மாலையே உயிரிழந்த சிப்பாயின் இரத்த மாதிரிகள் அனுராதபுரத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்தது.

குறித்த பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த இராணுவ சிப்பாய்கு கொரோனா தொற்றில்லை என இன்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு சிறுநீரகங்கள் செயலழிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டை சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்!!

கடுமையாகும் சட்டம்..

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் சட்டத்தை மீறுபவர்கள் குறித்து பொலிஸ் பாதுகாப்பு படையினரும் விழிப்புடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாக கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியம் அல்லது அவசிய நடவடிக்கைகளுக்காக பயணிக்கும் நபர்களுக்கு இந்த சட்டம் தாக்கம் செலுத்தாது என பிரதி பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறையின் ஒரு நாளில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முழுமையான நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் கொரோ தொற்றுடன் இணங்காணப்பட்டுள்ளார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில்,

வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள தன வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 38 வயதான குறித்த கடற்படை வீரரை கொரோனா தடுப்பு வைத்தியச்சாலைக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் கொரனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

சிறைச்சாலை உத்தியோகத்தர்..

கொரனா தொற்று சந்தேகத்தில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், கொரனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த மாதிரி பெறுபேறு வந்த பின்னரே கொரனா தொற்று உள்ளதா என்பதை தெரிவிக்க முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த நபர் நோய் தொற்று இருந்த பகுதியில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.