ஊரங்கு சட்டம் தளர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்!!

ஊரங்கு சட்டம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நீக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அன்றையதினம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும் தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை நிறுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தும் நடவடிக்கை மக்களின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு சட்டத்தினால் ஏற்படும் சிரமங்களை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்கள் கொள்வனவு செய்யும் போது மிகவும் அவசியமான பொருட்களை மாத்திரம் பெற்றுக் கொள்ளுமாறும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டின் போது சம்பிரதாயங்கள் மற்றும் நபர்களுடனான தொடர்புகளை குடும்பத்தினருடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது!!

இளைஞர் ஒருவர்..

வவுனியாவில் கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குருமன்காட்டு பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் குருமன்காட்டு பகுதியில் வாடகை வீட்டில் இருப்பதாகவும் சமணன்குளம் பகுதியில் தன்னுடைய தற்காலிக பதிவு இருப்பதாகவும் கூறி, சமணன்குளம் கிராம சேவகரிடம் சென்று தான் வியாபாரம் செய்வதாகவும், ஊரடங்கு வேளையில் தான் வெளியில் சென்று வியாபாரம் செய்வதற்கு வாகனத்திற்குரிய அனுமதி பத்திரத்தை தருமாறும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் முதலும் இவ்வாறு கிராம சேவகரிடம் அனுமதி பத்திரத்தை தருமாறு விடாப்பிடியாக இருந்ததாகவும், அனுமதிபத்திரத்தை தராவிட்டால் கிராமசேவகரின் உயிரிற்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்றும் பிரதேச செயலகத்திற்கு குறித்த நபர் சென்று அனுமதி பத்திரம் தருமாறு முரண்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தம் கடைமைக்கு இடையூறு செய்வதாக சமணன்குள கிராமசேவகரால் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு இன்று தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கடமைக்கு‌ இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலும் , கிராமசேவகருக்கு விடுக்கப்பட்ட உயிரச்சுறுத்தலுக்கு அமைவாகவுமே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

-தமிழ்வின்-

கொரோனாவால் காரையே குடியிருப்பாக மாற்றிய மருத்துவர் : நெகிழ வைக்கும் பின்னணி!!

நெகிழ வைக்கும் பின்னணி..

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணி முடித்து தமது குடியிருப்புக்குன் செல்லாமல் அவரது காரிலேயே தங்கி வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

போபாலில் அமைந்துள்ள ஜே.பி.மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் சச்சின் நாயக். இவரே பணி முடித்து வீடு திரும்பாமல் காரில் தங்கி வருபவர்.

தான் வீட்டுக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தன் மனைவியையும் குழந்தையையும் பாதித்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்திலேயே தன்னுடைய காரை இருப்பிடமாக மாற்றியுள்ள சச்சின் நாயக், அதில் தன்னுடைய அத்தியாவசியப் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார்.

ஓய்வு நேரத்தில் காரில் வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பது. பின்பு, தன்னுடைய குடும்பத்தினரிடம் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசுவது என தனக்கான ஓய்வு நேரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கே செல்லாமல் காரிலேயே உறங்கியும் வருகிறார். இது குறித்துத் தெரிவித்துள்ள சச்சின் நாயக், கடந்த சில நாள்களாக போபாலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் என்னை நானே தனிமைப்படுத்திக்க முடிவு செய்தேன். எனவே நான் என்னுடைய காரிலேயே தங்கிவிடுவதென முடிவெடுத்தேன்

கொரோனா பரவாமல் இருக்க தங்களுக்குள் கடும் கட்டுபாடு விதித்து கொண்ட இலங்கைத் தமிழர்கள்!!

கொரோனா பரவாமல் இருக்க..

கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தின் பவானிசாகரில் வாழும் இலங்கை தமிழர்கள், பொதுமக்கள் வெளியாட்கள் நுழையத் தடை விதித்து சாலையின் குறுக்கே முள்வேலி அமைத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில், 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், சிலர் ஊரடங்கை மீறி சுற்றுலா செல்வது போல், குடும்பத்தினருடன் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இது போன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், முகாம் பகுதிக்குள் வெளிநபா்கள் நுழைவதால் கொரோனா நோய்த் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எழுந்ததால் இலங்கை தமிழர்கள், அனைத்து வழித்தடங்களையும் முள்களை வெட்டிப் போட்டு வழிமறித்துள்ளனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநபர்கள் முகாமிற்குள் நுழைய தடை விதித்திருப்பதாக தெரிவித்த மக்கள், தங்கள் முகாமில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் முகாமிற்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு : 1400 கிலோ மீற்றர் ஸ்கூட்டரில் கடந்து மகனை அழைத்து வந்த தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்..

1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த காலகட்டத்தில், மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற இயலாமல் அங்காங்கே அவதியுற்று வருகின்றனர். இவ்வாறு மாட்டிக்கொண்ட பலர், நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், ஒரு தாய் மகனுக்காக 1400கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கடந்து அவரை அழைத்து வந்துள்ளார்.

இந்தியாவின் தெலுங்கான மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரைச் சேர்ந்தவர் ரெஜியா பேகம். 48 வயதான இவர், 15வருடங்களுக்கு முன்னரே கணவரை இழந்து, தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இவரது மூத்த மகன் பொறியில் பட்டதாரி. இரண்டாவது மகன், மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார். அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ரஜியா பேகம் தனது இரு மகன்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

இதில், ரஜியா பேகத்தின் இரண்டாவது மகனான 19 வயது நிஜாமுதீன், கடந்த 12ஆம் திகதி தனது நண்பருடன் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூருக்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் தந்தை உடல்நிலக்குறைவால் அவதிப்பட்டதால், நிஜாமுதீனால், ஊர் திரும்ப முடியவில்லை. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு போட்டப்பட்டது.

அதன்பின் ஊர் திரும்ப அவர் பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. இதனால், ரஜியா பேகம் தனது மூத்த மகனை அனுப்பி இளய மகனை அழைத்துவர திட்டமிட்டார். ஆனால், பொலிசாரின் கடும் கட்டுப்பாடுகளால் அது நடக்காது என்று அறிந்து. பொலிசாரின் அனுமதி பெற்ற ரஜியா பேகம் பயணம் மேற்கொள்ள துவங்கியுள்ளார்.

பகல், இரவு தொடர்ந்து ஸ்கூட்டரில் பயணித்த அவர்,மறுநாள் மகன் இருந்த நெல்லூரை அடைந்துள்ளார். அங்கிருந்து கொஞ்சமும் தாமதிக்காமல், மகனை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளார் ரஜியா.

வீடு வந்து சேர்ந்தபின் பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ ஒரு பெண்ணாக அதுவும் சின்ன இருசக்கர வாகனத்தில் பயணம் என்பது கடினமானதுதான். ஆனால், என் மகனை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்ற மன உறுதி, இதைச் செய்யவைத்தது.

வழியில் உணவு கிடைக்காது என்பதால், ரொட்டிகளைத் தயாரித்து கையில் எடுத்துச்சென்றேன். பசிக்கும்போது, வண்டியை நிறுத்தி சாப்பிடுவேன்.

தாமதிக்காமல் பயணத்தைத் தொடர்வேன். இரவில் பயணம் செய்ய அச்சமாகத்தான் இருந்தது. அதுவும், வாகனமோ மக்கள் நடமாட்டமோ இல்லாத காலி சாலையில் பயணம் செய்யும்போது பயம் இருக்கத்தான் செய்தது” என்று தெரிவித்துள்ளார்.

என் பொண்டாட்டி தான் எல்லாம் : வலியால் அவதிப்பட்ட மனைவியை காப்பாற்ற கணவன் செய்த செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!

மனதை உருக்கும் சம்பவம்..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் வலியால் துடித்த மனைவியை கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற கணவரின் செயல் மனதை உருக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரின் மனைவி மஞ்சுளா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் – புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார்.

மனைவி வலியால் துடிப்பதைப் பார்த்து கண்ணீர் விட்ட அறிவழகன் அவரை எப்படியாவது காப்பாற்ற முடிவெடுத்தார். அதன்படி தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர், எவ்வளவு நேரமாகும், என்றெல்லாம் அறிவழகன் யோசிக்கவில்லை. அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

எப்படியோ 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து அறிவழகனிடம் மருத்துவர்களிடம் கூறுகையில், என் பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

கொரோனா அபாய வலயத்திலிருந்து நீக்கப்படும் யாழ்ப்பாணம் : சந்தேகத்திலிருந்து 332 பேர் நீக்கம்!!

அபாய வலயத்திலிருந்து நீக்கப்படும் யாழ்ப்பாணம்..

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களை விடுவிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 14 பேரை தவிர ஏனையவர்களை நாளை மறுதினம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பவுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 பேர் பலாலியில் தனிமைபடுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தகட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23ம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது.

குறித்த 14 பேர் தவிர்ந்த 332 பேருக்கும் இறுதி பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் எதிர்வரும் 13ம் திகதி அனைரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்கள் என பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 7 நோயாளர்களும் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயத்திலிருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வயல் காவலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

காவலுக்கு சென்றவர்..

திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் வயலுக்குச் செல்லும் வீதியின் ஓரத்தில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மஹதிவுல்வெவ – தெவனிபியவர, சமகிகம பகுதியைச் சேர்ந்த பீ.உபசேன (52 வயது) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்து தனது வீட்டாருடன் சண்டை போட்டு விட்டு வயல் காவலுக்காக துவிச்சக்கரவண்டியில் சென்றதாகவும், இன்று காலை அவர் வீதியோரத்தில் துவிச்சக்கரவண்டிக்கு அருகில் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன், சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் அவரது சடலத்துக்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்று காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசொப்ட் ஒபீஸ் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

மைக்ரோசொப்ட் ஒபீஸ் பயனர்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பதற்றம் நிலவி வரும் இந்தக் காலப் பகுதியில் சைபர் தாக்குதல் நடத்தும் குழுக்கள் இணைய வழியாக சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இரகசிய சேவையினால் இந்த விடயம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருட்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் ஒபீஸ் மென்பொருளின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைப்பது போன்று ஓர் பிஸ்ஸிங் மெயில் (போலி மின்னஞ்சல்) ஒன்று அனுப்பி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் வேர்ட், மைக்ரோசொப்ட் எக்ஸல் உள்ளிட்ட மைக்ரோசொப்ட் ஒபீஸ் மென்பொருள் கோவைகளாக இந்த மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இதனை திறந்து பார்ப்பதன் மூலம் கணனியில் வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் வைரஸின் ஊடாக கணனிப் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் விபரங்கள் களவாடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிறக்கவுள்ளது சர்வரி புதுவருடம் : தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

சித்திரைப் புதுவருடத்தினை அமைதியாக வரவேற்போம் என இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்கள் தெரிவித்துள்ளார்.

புதுவருடப்பிறப்பு தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

தமிழ் சித்திரை புத்தாண்டான சர்வரி புது வருடப்பிறப்பானது எதிர்வருகின்ற திங்கட்கிழமை 13.04.2020 மாலை 07 மணி 26 நிமிடமளவில் இடம்பெறவுள்ளது.

எனவே அடுத்த நாள் 14.04.2020 ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற காரணத்தினால் மக்கள் அதிகளவாக கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே அதனை தவிர்க்க வேண்டியது அனைவரது கடமையுமாகும்.

அதிகளவாக மக்கள் ஒரே நேரத்தில் ஆலயத்தில் கூடுவதனைத் தவிர்க்கவும். தற்கால சூழ் நிலைகளை அனைவரும் அனுசரித்து போக வேண்டிய தேவைகள் உள்ளன.

எனவே முடிந்த வரை உங்கள் குல தெய்வங்களை வணங்கி அமைதியாக கொண்டாடுங்கள். ஆலயங்கள் எந்த குறைவுமின்றி பூஜைகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

எமது செயற்பாடுகள் அதனை குழப்புவதாக அமைந்து விடக்கூடாது. எனவே கால தேச வர்தமானங்களை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே அமைதியான முறையில் இப்புதிய வருடத்தினை வரவேற்றுக் கொள்ளுங்கள் என கோரியுள்ளார்.

மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்படும் தாமரைக் கோபுரம்!!

தாமரைக் கோபுரம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் இன்று மாலை 6.45 மணியளவில் மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட உள்ளது.

உலக தொற்று நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸில் இருந்து இலங்கையை மீட்பதற்காக பாடுப்படும் சுகாதாரத்துறையினர், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில்

தாமரை கோபுரம் மின் வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட உள்ளது என தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேட தொனிப் பொருளின் கீழ் இந்த மின் வெளிச்ச அலங்காரம் செய்யப்பட உள்ளது.

கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க புதிய நீர்குழாய் கண்டுபிடிப்பு!!

நீர்குழாய் கண்டுபிடிப்பு..

கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க புதிய கால் அழுத்ததுடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாயொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமிகளிடமிருந்து கைகளினை பாதுகாக்கவும்,சுகாதாரத்திற்கு ஏற்ற விதமாக கைகளை சுத்தம் செய்ய விஷேட தொழினுட்பங்களை பயன்படுத்தி குறித்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதை சேர்ந்த மாத்தறை பல்கலை கல்லூரியில் பயின்று வரும் ஏ.எம்.எப் செளபாத் என்ற மாணவரினால் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைகளினால் பரவும் கிருமிகளை தடுக்க கால்களின் அழுத்த உதவியுடன் இயங்க கூடிய கை கழுவும் உபகரணம் குறைந்த உற்பத்தி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்பு காலின் சிறிய அழுத்தம் மூலம் நீர் மேலே அனுப்பப்படுகிறது.கைகளை பயன்படுத்தி குழாயை (Tap) திறக்க தேவையில்லை, உற்பத்தி செலவு குறைவு, கைகளினால் பரவும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது,இலகுவாக வேண்டிய இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.

சூரிய சக்தியின் மூலம் இதற்கு மின் வழங்கப்படுகிறது.நீர் இல்லாத போது நீரை இதில் சேமித்து வைக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது இவரின் மூன்றாவது கண்டுபிடிப்பு எனவும்,இவர் 2019 ஆண்டு ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் ஊடாக எடின்பார்க் சர்வதேச விருதினைபெற்ற வருமாவார். இவர் கல்முனை, ஸாஹிறா கல்லூரி பழைய மாணவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

இணையம் மூலம் 1.4 மில்லியன் ரூபா மோசடி : ஆறு பேர் கைது!!

1.4 மில்லியன் ரூபா மோசடி..

அமெரிக்காவில் வசிக்கும் செல்வந்தர் ஒருவரின் 1.4 மில்லியன் ரூபாவை இணையம் மூலம் களவாடி அதனை உள்ளூர் வங்கி ஒன்றுக்கு மாற்றம் செய்தமை தொடர்பில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இணைய களவு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தமையை அடுத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது களவாடப்பட்ட பணத்தின் கணிசமான தொகை கைப்பற்றப்பட்டது.

இதுவரையில், இலங்கைக்குள் இணையம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அதிக தொகையடங்கிய களவு இது என்று நம்பப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோ கண்டுபிடித்த இலங்கை மாணவன்!!

இலங்கை மாணவன்..

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் அருகில் சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய ரோபோ ஒன்றை எல்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலயத்தின் எஸ்.ஆர்.தெஜன தெவ்மின என்ற மாணவன் உருவாக்கியுள்ளான்.

நோயாளிக்கு மருந்தளித்தல், நோயாளரின் இரத்தத்தை பரிசோதித்தல் ஆகிய செயற்பாடுகளை தூரத்தில் இருந்தவாறே வைத்தியர் ஒருவரால் மேற்கொள்ள முடியும்.

அத்துடன் ரோபோவில் உள்ள ஒலிவாங்கியின் மூலம் நோயாளியுடன் உரையாடவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வெல்லவாய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கொரோனா நோயாளி ஒருவருக்கு செயற்கை சுவாசமளிக்க கூடிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

வீட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை உபயோகித்து இந்த கருவியை உருவாக்கியதாகவும் அது வெற்றிகரமாக செயற்படுவதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இந்த கருவியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் 20 லட்சத்துக்கும் அதிகமான பணம் செலவாகும் எனவும் ஆனால் 15000 ரூபாவுக்குள் உள்நாட்டில் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்?

கல்வி நடவடிக்கைள்..

பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை,சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் எனவும், இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பாடசாலைகளுக்கும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம் : பொலிஸார் அறிவிப்பு!!

கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்..

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாய வலையங்களாக கருதப்படும் பிரதேசங்களை தொடர்ந்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.