மதுபானம் தயாரிப்பது குறித்து சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தால் கடூழியச் சிறை!!

கடூழியச் சிறை..

மதுபானம் தயாரிப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பிரசாரங்களை செய்யும் நபர்களுக்கு எதிராக இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை வழங்க முடியும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமூக ஊடகங்களில் மதுபானம் தயாரிப்பது சம்பந்தமான காணொளிகள் மற்றும் பிரசாரங்கள் வழமையை விட அதிகரித்துள்ளதாகவும் அவை மேற்கொள்ளப்படும் விதம் குறித்து பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுபானம் தயாரிப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை செய்வது இலங்கையின் சட்டத்திற்கு அமைய குற்றம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், வீடுகளில் எப்படி மதுபானத்தை தயாரிக்க முடியும் என்பது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கொரோனாவில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை!!

4 மாத குழந்தை..

இலங்கையில் பதிவாகிய மிக குறைந்த வயதுடைய கொரோனா நோயாளியான நான்கு மாத குழந்தை குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாத்தண்டிய பிரதேசத்தை சேர்ந்த குழந்தை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழந்தைக்கு கடந்த 30ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டது.

இந்த குழந்தை சிலாபம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இந்த குழந்தையை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்ப வைத்தியர் கபில மல்லவஆராச்சி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த குழந்தைக்கு கொரோனா தொற்றிய போதிலும் குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா தொற்றாமையானது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாக காணப்பட்டது.

அதற்கமைய இந்த குழந்தைக்கு தாத்தாவிடம் இருந்து கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாத்தா கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இறுதியில் இந்த குடும்பத்தில் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மூவர் குணமடைந்துள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை : சுகாதார பணிப்பாளர்!!

சுகாதார பணிப்பாளர்..

நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத இறுதிக்குள் ஊரங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொளள்ப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, சமூக விலகலை உறுதி செய்து, ஒரு சாதாரண வாழ்க்கையை பராமரிப்பதில் பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து : இளைஞன் பலி!!

முல்லைத்தீவில்..

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சிறுபோக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைக்காக உழவு இயந்திரம் ஒன்றை இன்று காலை வீட்டில் இருந்து பிரதான வீதிக்கு செலுத்தியுள்ளார்.

இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் தினம் குறித்து அறிவிப்பு!!

பல்கலைக்கழங்கள்..

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழங்கள் மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு அடுத்த செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தப்படும்.

மே மாதம் 11ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் 18ஆம் திகதி ஏனைய மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்களில் ஏ.சி பயன்படுத்துவது ஆபத்தானது : மருத்துவர் எச்சரிக்கை!!

மருத்துவர் எச்சரிக்கை..

காற்று சீராக்கி (ஏ.சி) பயன்படுத்தும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் சுலபமாக வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக விசேட நிபுணத்துவ மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் வைரஸ் கிருமிகள் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நபர் ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதன் ஊடாக பரவக்கூடிய வைரஸ்கள், சூரிய வெளிச்சம் உள்ள இடத்தை விடவும் காற்று சீராக்கிகளைக் கொண்ட அறைகளில் நீண்ட நேரத்திற்கு உயிர்ப்புடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் பணியிடங்களிலும் காற்று சீராக்கிகளை விடவும் இயற்கை காற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளை பின்பற்றுவது உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்று சீராக்கிகளைக் கொண்ட பெரிய பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட கட்டடங்களில் நீண்ட நேரம் இருப்பது வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயத்தை அதிகரிக்கும் என டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகள் : விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பிணை!!

உயிரிழந்த சகோதரிகள்..

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் சடலம் கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபரை மன்னார் பதில் நீதவானினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும், குடும்ப எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மன்னார் நீதி மன்றத்தில் நேற்று பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரும், சட்டத்தரணி ஒருவரும் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும், பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிராந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோர் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்களே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நாசா வெளியிட்ட செயற்கைகோள் படம்!!

செயற்கைகோள் படம்..

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகளின் செயலிழப்பு ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதனிடையே, இருபது ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காணப்படுகின்றன. தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்லாத நிலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக திரிவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏழு மாதக் குழந்தைக்கு கொரோனா வைரஸ்!!

கொரோனா வைரஸ்..

ஜா – எல பகுதியில் மட்டும் இதுவரை 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுள் ஏழு மாதக் குழந்தையும் உள்ளடங்குகின்றார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஜா – எல பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது 6 பேருக்கும், நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜா – எல, சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். ஓட்டோ சாரதியான அவர் போ தைப்பொருள் பாவனையாளராவார். அதையடுத்து அவரின் குடும்பத்தினரும் அவருடன் நேரடித் தொடர்புபட்ட போதைப்பொருள் பாவனையாளர் சிலரும் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

எனினும், அவர்கள் அதனைப் பின்பற்றாமல் தவிர்த்து வந்ததன் காரணமாக, சோதனை நடவடிக்கையின் மூலம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் கடற்படைக்குச் சொந்தமான ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்றுமுன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது.

இதில் 5 பேர் போ தைப்பொருள் பாவனையாளர்கள். மற்றவர் ஜா – எலவில் கொரோனாத் தொற்றுடன் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபரின் மனைவியாவார். இந்நிலையில், அவரின் 7 மாதக் குழந்தைக்கும் தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஜா – எலவில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவராவார். ஜா – எலவில் இதுவரை மொத்தமாக 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விடுக்கும் கடும் எச்சரிக்கை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

ஊரடங்கு சட்டம்..

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாஸ் அனுமதியினை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனிப்பட்ட நோக்கங்களுக்காக தங்களது உத்தியோகபூர்வ ஊரடங்கு அனுமதி அடையாள அட்டையை பலர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 43 பிரிவின் கீழ் செயற்படுபவர்களுக்கு மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்!!

ஈழத்தமிழர்கள்..

சுவிஸ்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை சுவிஸ் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர்.

புலம்பெயர் தேசத்தில் கொரோனாவிற்கு பலியான யாழ். இளைஞன் : தொடரும் சோகங்கள்!!

அழகரத்தினம் ஜீவிதன்

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவருமான அழகரத்தினம் ஜீவிதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் இறப்பதற்கு முன்னர் லண்டனில் பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் இதற்கு முன்னர் ஒரு சிலர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது அரசாங்கம்!!

பாடசாலைகள்..

இலங்கையின் அனைத்து அரச பாடசாலைகளும் 2ம் தவணைக்காக மே மாதம் 11ம் திகதி ஆரம்பமாகுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் நாட்டின் நிலைமை அவதானிக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திகதி குறிப்பிடாமல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் குடியிருப்பில் தனித்திருந்த சிறுமி : உணவு வாங்கி திரும்பிய தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தனித்திருந்த சிறுமி..

மெக்ஸிகோ நாட்டில் ஊரடங்கு காரணமாக குடியிருப்பில் தனித்திருந்த 13 வயது சிறுமியை நபர் ஒருவர் வீடு புகுந்து கொ லை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோகலேஸ் நகரில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் படுக்கை அறையில் 13 வயதேயான அன்னா பவுலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா பரவலை அடுத்து குடியிருப்பில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடுகளால், சம்பவத்தன்று அன்னாவின் தாயார் உணவு பண்டம் வாங்க வெளியே சென்றுள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்னா இச் சம்பவத்திற்கு இரையாகியுள்ளார். வீடுபுகுந்த அந்த நபர் சிறுமி அன்னாவை து ஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் கொ லையும் செய்துள்ளார்.

இதனிடையே அன்னா தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது முன்னாள் கணவர் தெரிவிக்க, பல்பொருள் அங்காடியில் இருந்து விரைந்த அந்த தாயாருக்கு, அன்னாவின் சடலமே காண முடிந்தது.மிகவும் கொ டூரமான முறையில் அன்னா படுக்கை அறை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த விவகரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கு ற்றவாளியை உடனடியாக கைது செய்து அன்னாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

முகநூல் ஊடாக போலி செய்தி வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

முகநூல் ஊடாக..

முகநூல் ஊடாக கொரோனா வைரஸ் சம்பந்தமாக போலியான செய்தியை வெளியிட்ட நபர் ஒருவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட மாட்டார்கள் என இந்த நபர் முகநூல் ஊடாக பிரசாரப்படுத்தியுள்ளார். இப்படியான பொய் பிரசாரங்களை அனுமதிக்க முடியாது எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுத்துள்ள தீர்மானங்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மாவட்ட அடிப்படையில் தளர்த்த அரசு தீர்மானம்!!

ஊரங்கு..

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரங்கு நேரத்தில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் தளர்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இல்லாத அல்லது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களின் அடிப்படையில் இந்த மீளாய்வு நடவடிக்கையை ஜனாதிபதி செயலணியும் சுகாதார அதிகாரிகளும் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அநுரதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்இதுவரை கொரோனா வைரஸ் அச்சம் ஏற்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு நேரத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் மக்களின் நடமாட்டங்களில் ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்படும்.

குறிப்பாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னுமொரு மாவட்டத்துக்கு வருவோர் தொடர்பில் இந்த ஒழுங்குவிதிகள் அமையும் அத்துடன் ஒரு வீட்டில் ஒருவருக்கே சந்தை மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்றுவர அனுமதி வழங்கப்படும்.

பொது இடங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி அவசியமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.