இலங்கையில் புதிதாக மேலும் 7 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் ஆறு பேர் ஜா-எலயிலும் ஒருவர் தெஹிவளையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன் 270க்கும் அதிகமானோர் வைத்தியகண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட 7 நோயாளிகளும் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இலங்கையில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொரளை – டி.எஸ்.சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் அம்பியுலன்ஸ் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து மாத்தறை நோக்கி தாதியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸூம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் அம்பியுலன்ஸிலிருந்த சிறு குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சகோதரிகள் இருவரினதும் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், மன்னார் நோக்கி வந்த கெப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்தனர்.
40 வயதான சந்தியோகு லிண்டா மற்றும் 25 வயதான சந்தியோகு டெரன்சி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
குறித்த இருவரும் மன்னாரில் இருந்து கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த இருவரினதும் சடலங்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மாநிலம் பீகாரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16 ஆம் திகதி சிவான் மாவட்டத்தில் உள்ள பன்ஜ்வார் கிரமத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்ரல் 4 ஆம் திகதியே தெரிவந்தது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்பு, சிவான் மாவட்டத்திலுள்ள உறவினர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று வந்துள்ளார்.
இதனால் உறவினர்கள் 22 பேருக்கும், அவரது சொந்த கிராமமான பன்ஜ்வாரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களையும் சேர்த்து, சிவான் மாவட்டத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 23 பேரில் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் மேலும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சிவான் மாவட்ட எல்லை பகுதிகள் அதிகாரிகளால் மூடக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த பெப்ரவரி மாதம் இத்தாலியில் பரவ ஆரம்பித்தது. அன்று முதல் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு மருத்துவர்களின் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கொவிட் 19 காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 100, துரதிஷ்டவசமாக அந்த எண்ணிக்கை 101 ஆகவும் அதிகரிக்கலாம்” என இத்தாலி மருத்துவர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 94 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் கடந்த 7 ஆம் திகதி அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மூன்று தினங்களுக்குள் 6 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் 26 தாதியர்கள் உயிரிந்துள்ளதாக அந்நாட்டு தாதியர் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் 6 ஆயிரத்து 549 தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி வரை இத்தாலியில் சுகாதார சேவையில் ஈடுபடடுள்ள 12 ஆயிரத்து 681 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
முக கவனம், கை கவனம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மருத்துவர்கள், தாதியர், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற பிரதான காரணமாக அமைந்துள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடரங்குச் சட்டம் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டுக்குப் பின்னரும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் சில பகுதிகளில் மாத்திரமே ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதை பாதுகாப்புத் தரப்பினர் விரும்புவதாகவும் தெரியவருகின்றது.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போது நீடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரும், அதிகாரிகளும் கருத்துக்களை வெளியிட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர் ஊடரங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் ஆராயப்பட்டன.
தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம் என்று சுகாதாரப் பகுதியினரும், பாதுகாப்புத் தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
புத்தாண்டின் பின்னரும் ஊரடங்கு தளர்த்தப்படும்போது ஒவ்வொரு பொலிஸ் பிரிவாக ஊரடங்கைத் தளர்த்தலாம் என்றும், 4 மணிநேரம் ஊரடங்கை நீக்கலாம் என்ற யோசனையும் பாதுகாப்புத் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது. 4 மணி நேரம் ஊரடங்கு நீக்கம் என்ற விடயம் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மேலும், யாழ்ப்பாணக் குடநாட்டில் வடமராட்சி கிழக்கு, தென்மராட்சி, தீவகம் ஆகியவற்றில் மாத்திரம் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் ஒருமித்து இணக்கம் தெரிவித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அந்தப் பிரதேசத்துக்குள் மாத்திரமே நடமாட அனுமதி வழங்கப்படும் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
தாவடி, அரியாலை, மானிப்பாயில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமையைப் பொறுத்தே குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று மன்னார் தாராபுரத்தின் நிலைமையைப் பொறுத்தே அங்கு ஊடரங்கை நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், பாண்டியன்குளம், ஒட்டுசுட்டானின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் புத்தாண்டுடன் ஊரடங்கை நீக்க முடியும் என்றும் இதன்போது கூறப்பட்டுள்ளது.
நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொ ள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் மண்டுவில் பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீ ட்டை உ டைத்து உள்ளே புகுந்த கொ ள்ளையர்கள் வயோதிபர்களான கணவன், மனைவியை அ டித்து அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16000 ரூபா பணம் ஆகியவற்றைக் கொ ள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியினர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கககளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் துறை தொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நியாயமற்ற முறையில் மோசடியாக ஈடுபடும் வர்த்தக துறையினரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் அன்றாட பிழைப்பிற்கு அல்லலுறும் மக்களிடம் நியாயமற்ற விலையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நிர்ணய விலையிலும் பார்க்க அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஒருவகை தந்திரோபாயத்தை ஒரு சில வியாபாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தகைய வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை எமது புலனாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில் தாராளமாக அரிசி கையிருப்பில் உள்ள அதேவேளை அரிசியாக்கக்கூடிய நிலையில் நெல்லும் தாராளமாக உள்ளது.
அத்துடன் கட்டுப்பாட்டு விலையான 98.00 ரூபாவுக்கு நாட்டரிசி மற்றும் சம்பா அரிசியினை விற்பனை செய்ய முடியும். இங்கும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட விலையிலும் பார்க்க அதிக விலையில் பிற மாவட்டங்களுக்கு அரிசியினை சூட்சுமமாக விற்பனை செய்வது தொடர்பிலும் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இவை தவிர உள்ளூர் கடைகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நேரத்தில் அவசர தேவைக்காக பொருட்களை வாங்க வருபவர்களிடம் நியாயமற்ற விலையில் பின்கதவால் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளிலும், பொருட்களின் நிறையிலும் மோசடிகள் இடம்பெறுவது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகளிற்கு நாம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வர்த்தகர்கள் முறையற்ற வியாபாரத்தின் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கான தருணம் இதுவல்ல. மாறாக சேவை மனப்பாங்குடன் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னைடுக்க வேண்டிய சமயம் இது.
அசாதாரண சூழ்நிலை ஆரம்பித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயம் முதல் இன்றுவரை (கிட்டத்தட்ட 3வாரங்கள்) 50க்கும் மேற்பட்ட முறையற்ற வியாபார நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து வினியோகிக்கும் பிரதான முகவர்களும் மக்களின் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறைந்தபட்ச இலாபத்துடன் சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்களை வழங்குவதே வரவேற்கத்தக்கதும் நியாயமானதும்.
சூழ்நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் சிலர் சிலவகை பொருட்களை வீட்டிற்குகொண்டு சென்று(Home delivery) கொடுக்கிறார்கள். இது மக்கள் தம் தேவையினை இலகுவான முறையில் பூர்த்தி செய்யமுடிகிறது என்ற தோற்றபாட்டை காட்டினாலும் இத்தகைய சேவைக்காக அவர்கள் அறவிடும் சேவைகட்டணம் என்பது சில சமயம் உயர்வாக காணப்படுகிறது.
இது தொடர்பிலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் . அசாதாரண சூழ்நிலையிலும் நியாயமான விலையில் மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் விழிப்போடும் சமூக அக்கறையுடனும் பணியாற்றி வருகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மருத்துவத் துறைக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் சமூக இடைவெளி தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதில் பெரும்பாலான ஆய்வுகள் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே வருகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது, தும்மும் போது அல்லது பேசும் போது வெளிப்படும் நீர்த்துளி மூலமாக வைரஸ் பரவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதை மிகவும் ஆழமாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் புதுப்புது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்த நபர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில், கொரோனா வைரசை சுமந்து செல்லும் துகள்கள் இதற்கு முன்பு நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது, மிகச்சிறிய தூசிப்படலம் மூலம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைக் காட்டும் 3டி மாதிரியை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது, மக்கள் அதிகம் கூடும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களை தவிர்ப்பதன் முக்கியத்தை தங்கள் கண்டுபிடிப்பு வயுறுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அலமாரிகளுக்கு இடையில் ஒரு நபர் இருமுவதுபோன்ற காட்சியை மையமாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் 3டி வீடியோவை உருவாக்கி உள்ளனர். இருமிய நபரை சுற்றி காற்றுத்துகள்கள் பரவி மேகம் போன்று திரள்வதைவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக சிதறி மறைவதையும் அந்த வீடியோ மூலம் விளக்கி உள்ளனர். ஆனால் இவ்வாறு நடைபெறுவதற்கு பல நிமிடங்கள் வரை ஆகலாம் என கூறுகின்றனர்.
‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் சாதாரணமாக இருமிவிட்டு அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லலாம். ஆனால் கொரோனா வைரசை சுமக்கும் மிகச் சிறிய காற்றுத் துகள்களை அவர் விட்டுச் செல்கிறார்.
இந்த துகள்கள் பின்னர் அருகிலுள்ள மற்றவர்களின் சுவாசக் குழாய்க்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என பின்லாந்து ஆல்டோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் வில்லி ஊரினென் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள அனைத்து வகையிலான வைப்புப் பணங்களையும் இலங்கையில் வைப்புச் செய்வதற்கு இதுவரையில் காணப்பட்ட செலாவணி விதிமுறைகள் மற்றும் வரி கெடுபிடிகள் தளர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
இவ்வாறு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை பூரண அனுமதி வழங்கியுள்ளது.
அந்நிய செலாவணிகள் வைப்புச் செய்யப்படும் போது வழங்கப்படும் வழமையான வட்டிக்கு மேலதிகமாக 2 வீத கூடுதல் வட்டி வழங்கப்படும்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் முதலீடு செய்ய இது ஓர் சிறந்த சந்தர்ப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை நடத்திய காலி நகர திடீர் மரண விசாரணை அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை முத்திரையிட்டு, பொது சுகாதார பணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ், சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய 24 மணி நேரததிற்குள் தகனம் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் மகன் தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதுடன் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையை பார்க்க வந்து சென்றுள்ளார். இதனால், தந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அப்போது அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை.
எனினும் உயிரிழந்த நபரின் சளியை பரிசோதனை செய்வற்காக அதனை விசேட சட்ட வைத்திய அதிகாரி யு.சீ.பி. பெரேரா பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரியுடன் கலந்துரையாடிய சட்ட வைத்திய அதிகாரி, உயிரிழந்தவரின் சடலத்தை சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் சடலம் இன்று முற்பகல் காலி தெடெல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி மஹேஷ் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.காரப்பிட்டிய வைத்தியசாலையின் 37 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்லும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
1930 ஆம் ஆண்டு எதிர்நோக்கிய உலக பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் எதிர்நோக்க போகும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி இது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி Kristalina Georgieva தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் அரைவாசி வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம், உலகம் முழுவதிலும் 81 சத வீத மனித வளத்தில் இயங்கும் 3.3 மில்லியன் தொழில் இடங்கள் தற்போது முழுமையாக அல்லது அறைகுறையாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்த பொருளாதார வீழ்ச்சியில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாடுகளுக்கு பல பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகளை வழங்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஒக்ஸ்பார்ம் அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை கருத்திற் கொள்ளும் போது இலங்கை மரணங்கள் குறைவான நாடாக பதிவாகியுள்ளது.
இதுவரையில் இலங்கையில் 190 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 7 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளது.
அதற்கமைய ஏற்பட்ட மரணங்களுக்கமைய அது நூற்றுக்கு 3.6 வீதமாகும். அது இதுவரையில் உலகளவில் மரணங்கள் பதிவாகிய நாடுகளில் மிகக்குறைந்த வீதமாகும்.
இத்தாலியில் கொரோனா மரணங்களை ஒப்பிடும் போது அதன் எண்ணிக்கை நூற்றுக்கு 12.7 வீதமாகும். பிரான்ஸில் 10.3 வீதமாக மரணங்கள் பதிவாகியுள்ளது.
இலங்கை இதுவரையில் 190 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 50 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளை கணினி மயப்படுத்தும் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சைகள் ஆணையர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் குறிப்பிட்டார்.
இதே வேளை, ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தட்டாங்குளம் காட்டு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதிக்கு சென்ற குறித்த இளைஞர்கள் அப்பகுதியை முற்றுகையிட்ட நிலையில் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை முன்னெடுத்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்த நிலையில் கசிப்பு காச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும், பெரல்கள் என்பவற்றை வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
ஆரம்பத்தில் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டிருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கினறது.
அதிலும் குறிப்பாக அமெரிகாவை கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது. இது வரையில், அங்கு 466,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16,607 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாள் தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக கழக ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 1,973 பேர் பலியாகி உள்ளனர்.
இது அதற்கு முந்தைய நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட சற்று கூடுதலாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.