உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குறியீடு இலங்கையின் மதிப்பெண்ணை 175 ஆகக் காட்டுகிறது, அதாவது வாகன விலைகள் உலகளாவிய சராசரி அளவுகோலான 100 ஐ விட இலங்கையில் விலை 1.75 மடங்கு அதிகமாகும்.

இலங்கையை முந்திக்கொண்டு சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவுகள் மட்டுமே வாகன கொள்வனவில் அதிக விலையை கொண்ட நாடுகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் என்பனவே வாகன உரிமையை பெரும்பாலான இலங்கையர்களுக்கு ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளன.

 

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் கிரவல் குவாரி வவுனியா வடக்கு தவிசாளரினால் முற்றுகை!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கனகராயன்குளம் வடக்கு, பெரியகுளம் பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கிரவல் குவாரியின் செயற்பாடுகள் வவுனியா வடக்கு பிரதேசபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஷ்ணவேணியின் நடவடிக்கையினையடுத்து முற்றுகை செய்யப்பட்டதுடன், உடனடியாக மறுஅறிவித்தல் வரை அகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த கிரவல் குவாரிக்கு தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பிரதேசசபையின் அனுமதியின்றி குவாரியின் செயற்பாடுகள் இடம்பெற்றமையினால் மறுஅறிவித்தல் வரை கிரவல் குவாரியின் செயற்பாட்டை நிறுத்தி வைக்குமாறு தவிசாளர் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது பொலிசாரும் வருகைதந்திருந்ததுடன் தொடர்ச்சியாக அனுமதியின்றி கிரவல் அகழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தவிசாளர் மற்றும் பொலிசாரினால் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் பிள்ளையார் ஆலய வளாகத்தினை இடிக்குமாறு பொலிஸில் முறைப்பாடு : வளாகமும் இடித்தழிப்பு!!

வவுனியா நெளுக்குளம் சந்தியில் வீதியோரத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச்சுவரை இடிக்குமாறு தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையுடன் ஆலய வளாகமும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் , பேருந்து தரிப்பிடம், முச்சக்கரவண்டிகள் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியிலேயே இவ் பிள்ளையார் ஆலய வளாகம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுமாறு தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் குறித்த ஆலய வளாகத்தினை அகற்றுமாறும் இல்லாவிடில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முறைப்பாட்டிற்கமைய நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்படும் என ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அச்சத்தினால் ஆலய நிர்வாகத்தினால் ஆலய வளாகம் இடித்தழிக்கப்பட்டது.

நகரில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பல மதஸ்தலங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையினுள் பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளமையுடன் வாடிகாலையும் ஆக்கிரமித்துள்ளனர்.

இருப்பினும் அவற்றினை அகற்றுவதில் அக்கறை செலுத்தாத வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இப் பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுவது இந்து சமய மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : 3065 பேர் பரீட்சைக்கு தகுதி!!

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 503 மாணவர்களும்,

தெற்கு வலயத்தில் 2562 பேரும் என 3065 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுக்காக 44 பரீட்சை மத்திய நிலையங்களும்,19 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் புலமைபரிசில் பரீட்சைக்கு சுமார் 3இலட்சத்து 7ஆயிரத்து951 மாணவர்கள் இன்றையதினம் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகையிரதத்துடன் மோதி வேன் விபத்து!!

களுத்துறையில் அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் சீலானந்த வீதியிலுள்ள ரயில் கடவையில் சிறிய வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (09.08.2025) இடம்பெற்றுள்ளது. வேனை செலுத்தி சென்ற பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் மீதே சிறிய வேன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135வது ஆண்டு நடைபவனி!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டினை கொண்டாடும் முகமாக இன்று (09.08.2025) நடைபெற்ற நடைபவனியால் வவுனியா நகரமே அதிர்ந்தது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 135 ஆவது ஆண்டினை கொண்டாடி வருகின்றது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக் கல்லூரியின் இந்நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேள தாள வாத்தியங்கள் மற்றும் இசை மழையுடன் நபைவனி ஒன்றை மேற்கொண்டனர்.

பாடசாலை முன்பாக ஆரம்பித்த நடைபவனியானது இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பாடசாலை முன்றலை சென்றடைந்தது. பல பெற்றோர்கள், பழைய மாணவிகளுக்கு பள்ளிக்கால நினைவுகளை மீள மீட்டுத் தந்த நிகழ்வாக குறித்த நடைபவனி அமைந்திருந்தது.

வவுனியா வடக்கில் கிரவல் அகழ்ப்பு நடவடிக்கை தவிசாளரின் தலையீட்டில் உடனடியாக நிறுத்தம்!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட நெடுங்கேணி சூடுவெந்தான் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கிரவல் குவாரியின் செயற்பாடுகள் தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு தலையீட்டினால் உடனடியாக மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிரவல் குவாரிக்கு தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமென்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது பிரதேச சபையின் கோரிக்கைகளை மீறி குவாரியின் செயற்பாடுகள் இடம்பெற்றமையினால் மறு அறிவித்தல் வரை கிரவல் குவாரியின் செயற்பாட்டை நிறுத்தி வைக்குமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளமையுடன் தொடர்ச்சியாக அனுமதியின்றி கிரவல் அகழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கையினை முன்னெடுப்பதுடன் அவர்களின் உரிமமும் இரத்துச்செய்யப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகே 4 ஏக்கர் அரச காணி தனியாரினால் அபகரிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வவுனியாவில் பல்கலைக்கழகத்திற்கு அருகே 4 ஏக்கர் அரச காணி தனியாரினால் அபகரிக்கப்பட்ட நிலையில் அக்காணியினை கையப்படுத்தி பிரதேச செயலகத்திற்கு வழங்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2024ம் ஆண்டு இறுதியில் தனியாரினால் குறித்த அரச காணியினை அபகரிக்கப்பட்டமையுடன் தொடர்ச்சியாக ஏனைய தனிநபர்களினாலும் காணி தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டன.

இதனையடுத்து இவ்வருடம் ஆரம்பத்தில் பிரதேச செயலகத்தினால் அரச காணியிலிருந்து வெளியேறுமாறு முதலாவது வெளியேற்றல் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அவ் வெளியேற்றல் கட்டளையினை ஏற்றுக்கொள்ளாமையினால் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. இவ் வழக்கினை பிரதேச செயலாளர் இந்திரராசா பிரதாபன் மற்றும் காணி உத்தியோகத்தர் வசந்தன், காணிக்கிளை அதிகாரிகள் அரச காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி வழக்கினை வாதாடி வந்தனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அரச காணியிலுள்ளவர்களை வெளியேற்றி காணியினை பிரதேச செயலகத்திற்கு கையளிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்ற பதிவாளரின் தலைமையில் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் நிலான் , குடியேற்ற உத்தியோகத்தர் பண்டார, நீதிமன்ற மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சகிதம் சகிதம் சென்ற குழுவினர்,

அரச காணியிலுள்ளவர்களை வெளியேறுமாறு தெரிவித்தமையுடன் கட்டிடங்களை இடித்து காணியினை பிரதேச செயலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறும் இன்று முதல் இக் காணி பிரதேச செயலக காணி என தெரிவித்து காணியிலிருந்து ஒரு பிடி மண்ணை நீதிமன்ற பதிவாளர் கையில் எடுத்து குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரின் கையில் ஒப்படைத்தார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!!

யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றிரவு வியாழக்கிழமை (07.08.2025) உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 74 வயதுடைய என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 1 ஆம் அரைக்கும் ஆலையில் மிளகாய் தூள் திரித்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்றுகொண்டிருந்தார். இதன்போது அராலி மத்தி சமுர்த்தி வங்கிக்கு அருகேயுள்ள கிளை வீதிக்குள் துவிச்சக்கர வண்டியை திருப்புவதற்கு முயற்சித்தவேளை திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் பெண் : கணவனின் வெறிச் செயல்!!

இரத்தினபுரியில் தேயிலை வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை கணவன் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் முறையற்ற உறவின் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 52 வயதுடைய பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஆகும். அவர் இரத்தினபுரி, தெல்வல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரின் கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் தற்போது தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பலி!!

அனுராதபுரத்தில் சம்பவித்த கோர விபத்தில் 21 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கல்னேவ கலங்குட்டிய பகுதியில் உயிரிழந்த பெண்ணின் காதலன் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற நிலையில் அவரது வலது கால் உடைந்து இடது காலின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விஜிதபுர புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தை ஆகியோர் பலத்த காயங்களுடன் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் தசந்தி நேத்மா பெரேரா, கலாவேவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் விஜிதபுர மகா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவியாகும்.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த அவரது காதலன் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 25 வயது ஜெயிலராக பணியாற்றி வருகின்றார்.

தங்களின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கான சுப நிகழ்வில் கலந்து கொள்ள இருவரும் கல்னேவாவின் கலங்குட்டியவுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

தசாந்தி நேத்மாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளன. விபத்து குறித்து கல்னேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தாண்டிக்குளம் கொல்களணை மூடு : நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள்!!

தாண்டிக்குளம் கொல்களணை மூடு, கோ மாதா இந்து புத்த குல மாதா, தாண்டிக்குளம் கொல்களன் இந்து புத்த அறங்களின் கொல்களன் போன்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடுத்தொழுவத்தில் அதிகளவில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதாக மாநகரசபை சுகாதாரக் குழு நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையிலையிலேயே சிவசேனை அமைப்பு என உரிமை கோரி இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபை வீதி, பூங்கா வீதி, மன்னார் வீதி, ஏ9 வீதி என வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையுடன் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் சிவசேனை என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 04.08.2025 அன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் ஒருவர் பலி : மற்றுமொருவர் படுகாயம்!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08.08.2025)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து : ஆறு பேர் காயம்!!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (07.08.2025) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மத்துகம பகுதியில் இருந்து யாத்திரைக்கு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தின் பின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 வயது தங்கையின் உயிரைப் பறித்த அக்காவின் பாடசாலைப் பேருந்து!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளிப் பஸ் முன் சக்கரத்தில் சிக்கி 3 வயது ஆஷியா என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது அக்காவை பார்த்ததும் ஓடி சென்ற தங்கை ஆஷியா பஸ்சின் முன்புற சக்கரத்தின் அருகில் சென்றாள்.

இதை அறியாத சாரதி பஸ்ஸை இயக்கியதால் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் சாரதியை கைது செய்யக்கோரி தேன்கனிக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார்.

ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, நேரில் சந்திக்க அழைத்தார்.

ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, இருவரும் ஒரு லாட்ஜில் தங்கி ஒன்றாக இருந்துள்ளனர். புனித்துடன் மீண்டும் நேரம் செலவிட ப்ரீத்தி விரும்பினார், புனித் மறுத்ததால் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இருவரும் வீடு திரும்பும் போது புனித் அவளை கட்டரகட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு உச்சமடைய கல்லால் அடித்து ப்ரீத்தியை கொலை செய்து பின்னர், உடலை தனது விவசாய நிலத்தில் கொண்டு சென்று, தென்னை ஓலையால் மறைத்து வைத்தார்.

ப்ரீத்தி வீடு திரும்பாததால், அவரது கணவர் சுந்தரேஷ் ஹாசன் எக்ஸ்டென்ஷன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ப்ரீத்தியின் தொலைபேசி கே.ஆர்.பேட்டை பகுதியில் செயல்பட்டதை கண்டறிந்த பொலிஸார், புனித்தை தொடர்பு கொண்டபோது, அவர் ப்ரீத்தி தனது காரில் தொலைபேசியை விட்டுவிட்டு பேருந்தில் சென்றதாக கூறினார். இதற்கிடையில், கரோதி கிராமவாசிகள் ஒரு பெண்ணின் உடல் கிடைத்ததாக தகவல் அளித்தனர்.

விசாரணையில், அது ப்ரீத்தி என்று உறுதியானது. புனித் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.