மட்டக்களப்பு இளைஞன் மர்ம மரணம் : அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள்!!

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (11.08) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில் ஒன்றில் வேலை செய்து வரும் லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடற்கரையை அண்மித்ததாக உள்ள சவுக்கு தோட்டப் பகுதியில் இளைஞனின் சடலம் பிரதேச மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சடலமாக அடையாளம் காணப்பட்ட இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் கொலை, தற்கொலையா எனப்து தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!!

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலங்கையின் முதற்தர பணக்காரர் வரிசையில் மாற்றம்!!

தற்போதைய நிலையில் இஷார நாணயக்காரவே இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருப்பதாக கல்ப் நியூஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருந்த தம்மிக்க பெரேராவை மீறி இஷார நாணயக்கார முதலிடத்திற்கு வந்துள்ளதாக குறித்த செய்தியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் உரிமையாளரான இஷார நாணயக்கார, பல்வேறு நாடுகளில் மைக்ரோ கடன் திட்டங்கள், தேயிலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார்.

அதன் மூலம் தற்போதைக்கு அவர் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டிருப்பதாக கல்ப் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் : மேலதிக விசாரணையில் பொலிஸார்!!

யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு முதலாம் வட்டார பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் என்ற 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10.08.2025) இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில்,

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த தாயின் ஆசையை நிறைவேற்ற அரசியல் கைதியின் சகோதரியின் நெகிழ்ச்சியான செயல்!!

அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் தனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக சிறார்களுக்கு உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று யாழ்.அராலியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் தனது கையினால் தனது மகனுக்கு உணவூட்ட வேண்டும் என்ற அவாவில் இருந்து வந்துள்ளார்.

இருப்பினும் அவரது மகனான பார்த்தீபன் விடுதலையாகாத நிலையில் தாயாரின் இறுதி ஆசையும் நிறைவேறாத நிலையில் இயற்கை எய்தினார்.

பார்த்தீபன் இதுவரை விடுதலையாகாத நிலையில் அவரது தாயாரின் ஆசையை நிறைவேற்றும் முகமாக பார்த்தீபனின் சகோதரி வாஹினி இன்றையதினம் அராலி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தனது கரங்களால் உணவூட்டி தாயாரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், அரசியல் கைதிகளின் விடயத்தில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினது போலி முகங்களின் மீதான வெறுப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பெறுமதியான திமிங்கல வாந்தி வைத்திருந்தவர் கைது!!

பெரும் தொகை பெறுமதியான அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.

தமிழர் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரதேச வாசிகளால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் யாழ். இளைஞன் உயிர்மாய்ப்பு!!

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் உயிரிழந்த இளைஞன், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஜோன் ஜெத்தா என்ற குறித்த இளைஞன் 32 வயதுடைய திருமணமாகாத நபர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இளைஞனின் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மன்னார் – வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இளைஞரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

மேலும், நேற்றையதினம் இரவு குறித்த நபர் இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காதலனுடன் ஓட்டமெடுத்த தாய் : தீயில் கருகி பலியான மகன் : இலங்கையை உலுக்கிய சம்பவம்!!

பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று முன்தினம் (09.08) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக 08 திகதி இரவு மனைவி வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவரும் மனைவியை தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் சமயத்தில் எட்டு வயது மட்டும் வீட்டில் இருந்துள்ளதுடன் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததுள்ளது. அதனை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் அந்த நேரத்தில் கணவரும் வீடு திரும்பியிருந்தார்.

இது தொடர்பாக, இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் மனைவிக்கு சிறிது காலமாக திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும் அதன் காரணமாக தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் வீடு தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி – அக்கராயன் முறிகண்டி பகுதியில் வாகன விபத்து : பெண் பலி!!

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் எதிரே வந்த கார் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண் 44 வயதுடைய இயக்கச்சி பளை பகுதியை சேர்ந்தவர் ஆவார். விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“Queen of the International Tourism” பட்டத்தை வென்ற இலங்கைப் பெண் நாடு திரும்பினார்!!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான “Miss Tourism Universe” போட்டியில் பங்குபற்றி “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஆதித்யா வெலிவத்த என்ற பெண் இன்று திங்கட்கிழமை (11) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற “Miss Tourism Universe” போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 17 அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.

“Miss Tourism Universe” போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆதித்யா வெலிவத்த என்ற பெண்ணும் பங்குபற்றியிருந்தார்.

ஆதித்யா வெலிவத்த என்ற பெண் “Miss Tourism Universe” போட்டியில் “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், ஆதித்யா வெலிவத்த என்ற பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 

 

ஏ -9 வீதி கொடிகாமம் பகுதியில் வாகன விபத்து – ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் மீது மோதுவதைத் தடுக்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் இருந்து வந்த கூலர் லொரியானது டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

அதன் தாக்கத்தில் டிப்பர் வாகனம், நிருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதோடு, கூலர் லொறி எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கடுமையாக காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, டிப்பர் வாகன சாரதி, கூலர் லொரி வாகன சாரதி ,வாகனத்தின் ஓட்டுநர், காரின் சாரதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவில் இறந்த கேரளப் பெண் : இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது!!

கேரள பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த அதுல்யா (29) என்ற திருமணமான பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுதொடர்பில் அவரது கணவர் சதீஷ் (40) மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் புகார் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சதீஷ் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு திரும்பியுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர் : காதலன் காதலி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காதலன் தற்கொலைச் செய்துக் கொண்டதால் விரக்தியில் அதே தேதியில் காதலியும் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி புஷ்பம். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செல்லத்துரை உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் புஷ்பத்தின் 3 மகள்கள் காதலித்து திருமணம் கொண்டனர். இதனால் அவரது கடைசி மகள் வித்யா (23) மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

வித்யா அருகில் உள்ள தென்னைநார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் பணியாற்றிய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அருணை காதலித்ததாக தெரிகிறது. இவர்களுடைய காதலை பெற்றோரை இழந்த அருணின் உறவினர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை 5ம் தேதி வீட்டில் அருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வித்யா வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கழிவறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் வித்யா தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக உறவினர்கள் வித்யாவை மீட்டு குளச்சல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் சென்ற மாதம் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல், அதே தேதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!!

களுத்துறை, அளுத்கமை, மொரகல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11.08.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.சம்பவத்தன்று, வெளிநாட்டுப் பெண் மேலும் சில நபர்களுடன் இணைந்து மொரகல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

பின்னர், நீரில் மூழ்கி காணாமல்போன வெளிநாட்டுப் பெண்ணின் சடலம் பெந்தர கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.