ஆசைகாட்டி மோசம் செய்த இளம் பெண்ணை தேடும் பொலிஸார்!!

ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த கல்கிஸ்ஸ பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு வருட Work Visa வழங்குவதாகக் கூறி, இந்தப் பெண் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பணம் மோசடி செய்ததாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, கம்பளை பகுதியில் வசிக்கும் ஒருவர் 2023 நவம்பர் 14ஆம் திகதி குறித்த பெண்ணிடம் 5 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்.

இருப்பினும், குறித்த பெண் இன்னும் பணத்தைத் திருப்பித் தரவில்லை அல்லது ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அந்தப் பெண்ணுக்கு எதிராக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த பெண் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில் சந்தேகநபரான பெண் பண மோசடி தொடர்பில் பலரை ஏமாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவான பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலாவ – கெக்கிராவை வீதியில் வேன் விபத்து : 6 பேர் காயம்!!

தலாவ – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி பின்னர் வீடொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்!!

வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், செவ்வாய்க்கிழமை (12.08.2025) தொழில் நிமித்தமாக தனது துவிச்சக்கர வண்டியில் சின்னப்படம்பன் வீதியின் ஊடாக பயணித்த வேளையிலேயே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் பெரியமடு, நெடுங்கேணியினை சேர்ந்த 61 வயதுடைய நாகேசு தெய்வேந்திரன் என்பவரே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க!!

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (13.08.2025) பார்வையிட்டிருந்தார்.

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலிட்டு அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல் உள்ளது.

இந்நிலையில் அதனை இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதற்கான முன் ஆயத்த பணிகளை அமைச்சர் இன்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், பல மில்லியன் ரூபாய் பணம் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் செலவிடப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப்பணிகளை செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபார சந்தையில் உள்ள 35 வியாபாரிகளுக்கு மத்திய நிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

அந்த திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயவேண்டும். அபிவிருத்திப் பணிகளையும் மக்களுக்கு செய்யவேண்டிய தேவை உள்ளது.

நாட்டில் மின்சாரம் தொடர்பாக பல பிரச்சனைகள் உள்ளது. அதனை நிவர்த்திசெய்யவேண்டும். எனவே மக்களின் எதிர்ப்பினையும் கருத்தில் எடுத்து அந்த திட்டம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.

சுப்ரீம்செற் செயற்கைகோள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் பிரச்சனையை ஏற்ப்படுத்த சிலர் முனைகின்றார்கள். அப்படி எவராலும் செய்யமுடியாது.
உத்தியோகத்தர்கள் வழங்கிய பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே பிரதமர் அந்த விடயத்தை கூறியிருந்தார்.

பிழையான தகவல்களை வழங்கியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்க்கவேண்டும். அதனை சரிசெய்ய வேண்டியது எமது பொறுப்பு. அதனாலேயே நான் அவ்வாறு கூறியிருந்தேன். அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்ப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்தவிதமான பேச்சும் இல்லை என்றார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மற்றும் அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தேசியமக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை தமிழ் யுவதி!!

மன்னாரில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணப் பையுடன் நின்றிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை மாவட்டம், ஆண்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அங்கிருந்து கள்ளத்தனமாக படகில் தப்பிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் அப்பெண்ணை மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதில், தலைமன்னாரில் இருந்து நள்ளிரவு கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு அதிகாலையில் அரிச்சல்முனை வந்திறங்கியது தெரியவந்தது. படகுக்கு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பிவந்து தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தற்போது தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வவுனியா மாநகரசபையின் தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை!!

வவுனியா மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (12.08.2025) காலை இடம்பெற்றது.

மாநகரசபையினால் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளையும் மக்களின் பிரதேசங்களுக்கே சென்று நேரடியாக வழங்கும் நோக்கில் குறித்த நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள்திருத்தம், சேதனப் பசளை விற்பனை, கழிவகற்றும் சேவைகள்,

மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு, வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள் உள்ளடங்கலாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்பிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்மொழிவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சேவையில் பெருமளவான வட்டாரமக்கள் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.

நிகழ்வில் வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன், துணை முதல்வர் ப.கார்த்தீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை!!

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12.08.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாந்த முதுன்கொட்டுவ, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, காரில் வந்த கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

மேலும், அவரது சடலம், ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், நிலத் தகராறுகள் தொடர்பாக சாந்த தொம்கொடுவ பலமுறை பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி சொந்த ஊருக்கு கொண்டு சென்ற இளைஞன்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் வசித்து வருபவர் அமித் யாதவ் இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கியார்ஸியுடன் சொந்த ஊரான மபி மாநிலம் கரன்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தியோலாபரில் கனரக வாகனம் பைக் மீது மோதியதில் கியார்ஸி உயிரிழந்தார். இந்த விபத்தில் அமித் காயமடைந்தார்.அப்போது உடலை எடுத்து செல்ல வாகன ஓட்டிகளிடம் அமித் உதவி கேட்டிருந்தார். அவருக்கு யாருமே உதவ முன்வரவில்லை.

இதனால் தனது பைக்கில் மனைவியின் உடலை கட்டி எடுத்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாக்பூர்-சியோனி நெடுஞ்சாலையில் நடந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இடத்தில் போலீசார் சென்று பார்த்த போது வாகனத்தையோ உடலையோ காணவில்லை. நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக நாக்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பைக்கை போலீசார் நிறுத்தினர். பெண்ணின் உடலை கைப்பற்றி நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜெயக்குமார் (30), ர.ஹரி ஹரன் (30), சே.மணிகண்டன் (30), அ.மணிவேல் (28). இவர்கள் 4 பேரும் நன்னிலத்தை அடுத்த புத்தாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

நான்கு பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததில், 4 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது.

இதில் அனைவரும் தண்ணீரில் தத்தளித்த நிலையில், இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அவர்களது முயற்சி பலனளிக்காமல் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த மணிகண்டன், அய்யம்பேட்டை அருகே உள்ள மானந்தங்குடி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஹரிஹரனுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். மற்ற இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சருமத்தை வெண்மையாக்க கிறீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தேசிய மருத்துவமனையின் நிபுணர் கே.டி.சி. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களில் பெரும்பாலும் பாதரசம், ஹைட்ரோகுவினோன் மற்றும் பிற கன உலோகங்கள் உள்ளன.

அவற்றினால் உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறுவர்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய விஷக் கட்டுப்பாட்டு வாரத்துடன் இணைந்து சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணியகத்தில் “நாம் வெள்ளையாக இருக்க வேண்டுமா?

நாம் நோய்வாய்ப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நமது சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அதிகப்படியான முகப்பரு, தோல் மெலிந்து இரத்த நாளங்களின் தோற்றம்,

தோல் இறுக்கம், தேவையற்ற முடி வளர்ச்சி, நிறமாற்றம், சிறுநீரக பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளார்.

அத்தகைய அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் இருப்பதால், அவை சருமத்தில் மெலனின் நிறமியைக் குறைக்கின்றன. மெலனின் குறைவது சூரியனின் கதிர்களால் சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். தங்கள் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் கற்றாழை,

வெள்ளை சந்தனம் மற்றும் வெந்தயத்தை இயற்கையாகவே தங்கள் சருமத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது இரசாயன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

இருபத்தி ஐந்து வயதான இளம் தாயொருவருக்கு பாலியல் சீண்டல்கள் செய்த குற்றச்சாட்டில் 70 வயதான வயோதிப மருத்துவர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (11) அநுராதபுர உயர்நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள தனியார் சிகிச்சை நிலையமொன்றில் கருப்பைப் பையினுள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமொன்றை

அகற்றுவதற்காக குறித்த மருத்துவரிடம் வந்த இளம் தாயொருவரிடம் அந்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளனின் மூலம் குறித்த மருத்துவர் பாலியல் சீண்டல்கள் செய்த விவகாரம் நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து நேற்றைய தினம் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த மருத்துவருக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் திசாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான மருத்துவர் ஒருவருக்கே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று!!

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது பெர்சீட் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை அதிகாலை 5 மணியளவில் வடக்கு திசையில் இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த விண்கல் மழையின் சிறப்பு, ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், ஏனெனில் சில விண்கல் மழைகளில் மட்டுமே இத்தகைய அளவு விண்கற்களைக் காண முடியும்.

பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும்.

இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால், ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் அறிவிப்பால் தங்கத்தின் விலை சரிவு : மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

அமெரிக்கா இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது வரிகளை விதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்த நிலையில் , சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சரிந்தது.

அமெரிக்காவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் தங்கக் கட்டிகளை வொஷிங்டன் நாடு சார்ந்த இறக்குமதி வரிகளின் கீழ் கொண்டுவரக்கூடும் என்றும்,

இது உலோகத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கும் என்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு கடந்த வெள்ளிக்கிழமை தனது வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ட்ரம்ப் திங்களன்று தனது சமூக ஊடகப் பதிவில், தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது என்று பதிவிட்டார். இந்த அறிவிப்பினை உலகளாவிய தங்கச் சந்தைகள் வரவேற்றன.

டிரம்பி இன் இந்த அறிவிப்பு இது மஞ்சள் உலோகம் உலகளாவிய வர்த்தகப் போரில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற பல நாள் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதேநேரம் ட்ரம்பின் பதிவிற்குப் பின்னர் நியூயோர்க்கில் திங்கட்கிழமை (11) பிற்பகல் வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.2 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் $3,357 ஆக இருந்தது. அமெரிக்க தங்க எதிர்காலம் சுமார் 2.5 சதவீதம் சரிந்து $3,407 ஆக இருந்தது.

இதேவேளை, கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (12) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 270,000 ரூபாவாக காணப்படுகிறது.

மேலும் 22 கரட் தங்கத்தின் விலையானது 248,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் கோர விபத்து : பெண் பரிதாபமாக பலி!!

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12.08.2025) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ9 வீதியில் ஏற முற்பட்ட உந்துருளியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து வந்த உந்துருளி மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்ததாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மின்னேரியா – ஹபரணை வீதியில் விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

மின்னேரியா – ஹபரணை வீதியில் பட்டுஓயா பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி ஒன்றுடன் எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மின்னேரிய பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பெரியாஸ்பத்திரி,ஹபரனை மற்றும் ஹிங்குரன்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 32 பேரில் 26 பேர் சாதாரண வாட்டுக்களில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல் மூலம் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை மின்னேரியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.