கிளிநொச்சியில் வன்முறை கும்பல் வெறியாட்டம் : அச்சத்தில் உறைந்த வீட்டினர்!!

கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று(13) இரவு இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்ட சம்பவத்தால் வீட்டினர் அச்சத்தில் உள்ளனர்.

முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

நான்கு நபர்களில் ஒருவர் வீட்டின் வாசல் கதவுடன் நிறுத்தப்பட்டதுடன் ஏனைய மூவர்களும் கத்தி, வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்டுள்ளனர்.

இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கிய நிலையில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் மின் கம்ப உச்சிக்கு ஏறிய இளைஞனால் பரபரப்பு!!

கொழும்பின் பொரளைப் பகுதியில் உள்ள மின் கம்பம் மீது இளைஞன் ஒருவன் ஏறிய சம்பவம், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மின் கம்பத்தின் மீது ஏறியிருந்த அந்த இளைஞன், மின்சாரம் பாயும் ஆபத்தான நிலையில் இருந்தான்.

இந்நிலையில் இளைஞன் மின் கம்ப உச்சியில் ஏறியதை கண்ட அங்கிருந்தவர்கள் பதட்டத்திலும் அச்சத்தில் இருந்ததுட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் பற்றி அறிந்ததும், பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மீட்புப் படையினர் லாவகமாக இளைஞனை பிடித்து கிழே இறகியுள்ளனர்.

அதேவேளை மின் கப்ப உச்சிக்கு ஏறிய இளைஞன் மனநனலம் பாதிக்கபப்ட்டவர் எனவும் சமூக வலைத்தள பதிவுகள் கூறுகின்றன.

தென்னிலங்கையில் சிறுவர்கள் இருவரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

களுத்துறை, வரக்காகொட பகுதியில் 8 வயது சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் மிக கொடூரமான முறையில் பாலியல் ரீதியான நடத்தைக்கு உட்படுத்திய 15 வயது மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.

இரவில் அவரது தாயார் சிறுமியை குளிக்க வைக்கும் போது சிறுமிக்கு ஏற்பட்ட வலி காரணமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சிறப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வட்ஸ்அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஊடறுப்பு செய்யப்படுவது தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன் இந்த ஆண்டு இதுவரை 64 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், பல சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும் இதனால் சரியான புள்ளிவிபரத் தரவுகளை வெளியிட முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

64 முறைப்பாடுகள்

ஊடறுப்புக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளின் உரிமையை மீண்டும் பெறுவதற்கு கணனி அவசர பதிலளிப்பு பிரிவினை தொடர்பு கொள்ள முடியும் என சிரேஸ்ட பொறியாளர் சாருக டமுனுபொல தெரிவித்துள்ளார்.

சூம் கூட்ட இணைப்புக்களை கிளிக் செய்ததன் மூலம் இந்த ஊடறுப்புக்களில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் பாதிக்கப்பட்டவரின் வாட்ஸ்அப் குழு உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, அவர்களின் தொழிலைப் பொறுத்து, தொடர்புகளுக்கு பணம் கோரும் செய்திகளை உருவாக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

சூம் கூட்டத்திற்கான அழைப்பு விடுப்பது போன்று பயனர்களின் கணக்கினை ஊடறுப்பு செய்வதாகவும், பயனர்களின் கடவுச் சொல் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ள ஓ.ரீ.பீயை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உதவித் தொகை

ஊடறுக்கப்பட்ட கணக்கின் உரிமையாளர் ஆபத்தில் இருப்பதாகக் கூறி 50000 ரூபா அல்லது ஒரு லட்சம் ரூபா உதவி கோரப்படுவதாகவும், பயனர்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களிடம் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கோரிக்கைகள் வந்தால் வாட்ஸ் அப் ஊடாக மட்டுமன்றி சாதாரண தொலைபேசி அழைப்பு மூலம் குறித்த கோரிக்கை உண்மையானதா என்பதை சரிபார்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஹெக்கர்களின் கோரிக்கைக்கு அமைய பணம் வைப்புச் செய்தவர்கள் காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டவர்கள் இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் OTP-ஐ மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எச்சரிக்கை!!

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மூலம் அடையாளம் காணும் நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வேண்டுக்கோளை மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் ஆய்வாளருமான வாருணி கேஷலா போகாவத்த விடுத்துள்ளார்.

பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆண்கள் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, அவற்றை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர் கப்பம் கோரிய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் புறக்கோடை பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பொலிஸ் ஆய்வாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பெண்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் ஆண்கள் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கேட்டால், அவற்றை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.

நீங்கள் அறியாமலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பல பெண்கள், மற்றும் சிறுவர்கள் மிரிஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகிறார்கள். ஒன்லைன் குற்றவாளிகளுக்கு பலியாகாதீர்கள்” என வாருணி கேஷலா மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் யானை தாக்கி இருவர் படுகாயம்!!

வவுனியா கனகராயன்குளம், விஞ்ஞானகுளம் பிரதான பாதையில் இரு தினங்களில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இருவர் காயம்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளத்தில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விஞ்ஞானகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில்

சென்று கொண்டிருந்த தே.நிஷாந்தன் என்ற 32 வயது இளைஞனே கனகராயன்குளம் பாலத்துக்கு அருகில் பிரதான வீதியில் வைத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன் போது தலையில் காயம் அடைந்த அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றுமுன் தினமும் (12) குறித்த பகுதியில் வயோதிபர் ஒருவர் குறித்த வீதியால் சென்றபோது யானை தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை : கண்டியில் பயங்கரம்!!

கண்டி – பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் பேராதெனிய பகுதியை சேர்ந்த தர்மசேன குரே (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

இதன்போது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சொக்லெட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து முதியவரை தமது கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழில் குடும்பஸ்தர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு தப்பியோடிய நபர்கள்!!

35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீது பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சை

அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது.

 

வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல் : கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க கோரிக்கை!!

வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (13.08.2025) இடம்பெற்றது.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை போன்ற விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் ஆதரவினை வழங்குமாறு கோரியே இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி வடகிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15.08) அதனை அனுஸ்டிக்குமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அதனை 18ஆம் திகதி என மாற்றியுள்ளோம்.

அந்தவகையில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. பிரதானமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் அழைக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது பகுதிகளில் மக்கள் மத்தியில் தேவைக்கு அதிகமான இராணுவக் குவிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் இப்படியான தொடர் விளைவுகள் ஏராளமாக நடக்கின்றது.

எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். மக்களின் சாதாரண வாழ்க்கையிலே அவர்களின் ஈடுபாடு இருக்க கூடாது என நீண்டநாட்களாக நாங்கள் சொல்லிவருகின்றோம். அதன் விளைவே இந்த மரணமும் கூட.

எனவே இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் செம்மணி மனிதப் புதைகுழியானது மிகவும் மோசமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றது. குழந்தைகளது சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆதாரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி இந்த கர்த்தாலை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

வடகிழக்கை முற்றிலுமாக முடங்கச்செய்யும் போராட்டமாக இதனை நாம் நடாத்தவேண்டும். வடக்கின் ஏனைய மாவட்டங்களின் வர்த்தக பிரதிநிதிகளுடனும் நாங்கள் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளோம்.

அவர்கள் ஆதரவினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர். கிழக்கிலும் முழுமையான ஆதரவு வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரை பாரியளவிலான ஆதரவு இந்த கர்தாலுக்கு கிடைத்துள்ளது என்றார்.

விசா கிடைக்கவில்லை : காதலனை காண தமிழகத்திற்கு தனியாக சென்ற இலங்கைப் பெண்!!

காதலனை கரம் பிடிப்பதற்காக இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படகில் கடல் தாண்டி தனுஷ்கோடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மன்னார் ஆண்ட குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா என்ற குறித்த பெண் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மறு வாழ்வு முகாமில் வசித்துள்ளதுடன் அப்போது அவர், ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளதுடன் இங்கிருந்து திரும்பி இந்தியா செல்ல அவருக்கு விசா கிடைக்காததால் காதலனை கரம்பிடிக்க படகில் தமிழகம் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதற்காக அப்பெண் தனது நகையை விற்று 2 லட்சம் ரூபாய் பணத்தை திரட்டி படகோட்டியிடம் கொடுத்து, அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு சென்றுள்ளார்.

அந்த பெண்ணை இறக்கி விட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காதலனை கரம்பிடிக்க இலங்கையிலிருந்து படகில் இளம்பெண் ஒருவர் கடல் கடந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.

அந்த வகையில் நேற்று (12) தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 

கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி!!

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலையைச் சேர்ந்த குழந்தையின் குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இநிலையில் இன்று (13) கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்தது.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் மாணவியே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு வெளியேறுவோர் மீண்டும் நாட்டுக்கு வருவதில்லை என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் நடத்திய ஆய்விற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விசேடமாக அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் கற்ற மாணவர்களின் இடம்பெயர்வு மேலும் அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக கல்விக்காக 87 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த பணம் வரி செலுத்துவோரின் மூலமாக நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் சொந்த வருமானம் மூலமும் செலவிடப்படுகின்றது.

ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 400,000 முதல் 1.4 மில்லியன் ரூபாய் வரை செலவிடுகிறது.

இலவச கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கையை விட்டு சென்றுவிட்டால், அதற்கு அரசாங்க செலவினை திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்புணர்வு அவசியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்திற்கு விட்டு செல்லும் பட்டதாரிகள் குறைந்தது 10,000 – 15,000 டொலர்கள் வரை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். அல்லது தங்கள் குடும்பத்தினருக்காக ஆண்டுக்கு 50,000 டொல் வரை வரை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் நாட்டில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. வேலையின்மை மற்றும் குறைந்த ஊதிய வாய்ப்புகள் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடு செல்லுமாறு தூண்டுகின்றனர்.

இந்த ஆய்வு இன்னும் தொடரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இளம் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை ஏமாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மூலம் அறிமுகமாக 35 வயதான நபரும் 21 வயது யுவதியும் காதல் தொடர்பில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என அறிந்த யுவதி, அந்த உறவில் இருந்து விலகியமையினால் கோபம் அடைந்த குடும்பஸ்தர் இந்த செயலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரியை வசிக்கும் 35 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, ஒரு வருடமாக அந்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் தம்பதியின் மோசமான செயல் : பொலிஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் குறித்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துக் குறித்த போதைப்பொருட்களை விநியோகம் செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினரை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : சாரதியின் தூக்க கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்!!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் யாருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் சேதமாகியுள்ளன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார ஊர்தியானது, ஈச்சிலம்பற்று – பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.

இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. பாரவூர்தி வாகனச் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.