கொழும்பில் இளம் பெண்ணொருவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கொழும்பில் நகை மற்றும் பணத்தை பேருந்தில் தொலைத்த பெண்ணுக்கு அவை மீண்டும் கிடைத்துள்ளது.

தனியார் பேருந்தில் தொலைந்து போன 800,000 ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள தங்க சங்கி மற்றும் பணப்பையை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோட்டை மஹரகம பேருந்து நிலைய வீதியில் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பேருந்து நடத்துனர் மற்றும் சாரதியின் இந்த நேர்மையான செயல் நெகிழ்ச்சியடைய செய்ததாக பொருட்களை தொலைத்த பெண் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இவ்வாறு ஒன்று விட்டு சென்றால் மீளக்கிடைக்காத நிலையில் அவர்களின் செயல் ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (15) இடம் பெற்றுள்ளது.

விபத்து சம்பவம்

99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திரும்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்!!

கொழும்பு, மருதானை-டெக்னிக்கல் சந்தியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று மதியம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு குறித்த பெண், ஆண் ஒருவருடன் விடுதிக்கு சென்ற நிலையில் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறிய போதும் மீண்டும் திரும்பி வரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த பெண்ணும் ஆணும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வந்து விடுதியின் இரண்டாவது மாடியில் அறை ஒன்றை முன்பதிவு செய்தனர்.

பின்னர் ஆண் விடுதியை விட்டு வெளியேறி மது போத்தலுடன் திரும்பி வந்துள்ளார். அவர் பசறை பிரதேசத்தில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை அவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய போதிலும் மதியம் வரை வெளியேறாமையினால் விடுதியின் முகாமையாளர் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டார்.

அறையின் கதவு ஏற்கனவே பூட்டப்பட்டிருந்தது, மேலும் விடுதியின் முகாமையாளர் படுக்கையில் பெண் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் வந்து அறையை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்தப் பெண்ணின் ஆடைகள் அடங்கிய இரண்டு பைகள் மட்டுமே அங்கு காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் கொழும்பில் காலமானார்.

வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் இழப்பு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுபவர்.

அவர், தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து : 6 பேர் காயம்!!

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள பகுதியில், முச்சக்கர வண்டியும் சொகுசு சிறிய ரக வேனும் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம் : திகைப்பில் நிறுவனம்!!

கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பணப் பையில் 13,96,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகின்றது. மாயமான பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 3,90,000 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

வவுனியாவில் திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை : வவுனியா வர்த்தகர் சங்கம் தீர்மானம்!!

எம்.ஏ.சுமந்திரனால் எதிர்வரும் திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் திருடச் சென்ற இளைஞன் ஒருவர், இராணுவத்தினரிடம் சிக்கி, தாக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடும் போது முத்தையன்கட்டு குளத்தில் காணாமல் போனார். பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என வர்த்தகர்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இருதினங்களுக்கு முன்பாக நேரடியாக சந்தித்து ஆதரவை கோரியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்க்காக வவுனியா வர்த்தகர்சங்கத்தின் நிர்வாகசபை இன்று கூடியது. இதன்போது அநேகமான நிர்வாகசபை உறுப்பினர்கள் அன்றையதினம் வியாபார நிலையங்களை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர்சங்கம் கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 

40 கோடி பண மோசடி : இன்ஸ்டா பிரபலம் கைது!!

பண மோசடி வழக்கில் இந்திய அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர்.

12 இலட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும், அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது.

அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தீபா விர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொன்று புதைக்கப்பட்ட 2800 நாய்கள்!!

இந்தியாவின், கர்நாடகாவில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுவரை 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளதாக ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அவற்றை 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதியரசர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தை நாடிய முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா சட்ட சபையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்களுக்கும் விலங்குகள் மீது அக்கறை இருந்தாலும் நாய்க்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தான் சிக்மகளூர் நகராட்சி தலைவராக இருந்தபோது, நாய்களின் உணவில் விஷத்தை சேர்த்து சுமார் 2,800 நாய்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலத்தின் மேல் குழந்தையை வைத்து விட்டு ஆற்றில் குதித்த தம்பதி!!

பாலத்திம் மேல் குழந்தையை வைத்து விட்டு, தம்பதியர் இருவரும் தற்கொலைச் செய்துக் கொள்வதற்காக பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குதித்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில், குஜராத்தில் இருந்து பேருந்தில் வந்திறங்கிய தம்பதியர் கைக்குழந்தையுடன் சிறிது தூரம் நடந்து சென்று, ஒரு பாலத்தின் அருகே நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து குழந்தையை பாலத்தில் வைத்து விட்டு திடீரென ஆற்றில் குதித்து விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காட்சிகளை ஆய்வு செய்த போது,

குழந்தையின் தந்தை அருகில் உள்ள கடைக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக செல்வதை காட்டுகிறது. அப்போது பாலத்தின் அருகே குழந்தையும், தாயும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் அவர் வந்ததும் குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தண்ணீரில் குதித்துள்ளனர். இது குறித்து அறிந்த மீட்பு படையினர் உடனடியாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்த போது இரவு நேரம் ஆகியதால் சிறிது சிரமம் ஏற்பட்டது.

அதனால் மறுநாள் காலை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இருப்பினும் தம்பதியர் குறித்து எந்த ஒரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை தவிக்க விட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற வற்புறுத்திய காதலன் : உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலி எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வயது 21 . இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் ரமீசும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த கடிதத்தில் ரமீஸ் வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார். அத்துடன் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதால் நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என எழுதியிருந்தார்.

இதனையடுத்து ரமீஸ் மீது தற்கொலைக்குத் தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் மோசடி : அவதானம் மக்களே!!

யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், தொண்டு நிறுவனம் ஒன்றிடம் துவிச்சக்கர வண்டிகள் உள்ளதாகவும்,

அவற்றை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும், ஒருவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் ஏமாந்த நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு : நுகர்வோர் கவலை!!

நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலையும் அதிகமாக உள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் பலியான தம்பதி நிர்க்கதியாக தவிக்கும் 3 குழந்தைகள்!!

ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் 35 வயது சையத் வாஹீத் . இவர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி 27 வயது சனா பேகம். இவர்கள் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர்கள் குடும்பத்துடன் சமீபத்தில் சையத் வாஹீத் தனது மனைவியின் தம்பியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று இருந்தார்.

ஜூலை 24ம் தேதி அபுதாபி வந்தனர். சையத் மற்றும் சனா ஆகியோர் அமீரகத்தை தங்கள் சொந்த ஊராக கருதி 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்துடன் அபுதாபியில் வசிக்கும் மனைவியின் மற்றொரு தம்பி வீட்டிற்கு சென்று விட்டு, தான் வசிக்கும் அல் ருவைஸ் பகுதிக்கு சையத் காரில் திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பிறகு அருகில் இருந்த இரும்பு தூணில் மோதி நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் சிக்கி சையத் மற்றும் சனா ஆகியோர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வயது ஆண் குழந்தை, பெண் குழந்தைகளான 2 வயது சாதியா மற்றும் 7 வயது சித்ரா பேகம் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பலியான தம்பதியின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. பெற்றோர் உயிரிழந்தது கூட தெரியாமல் மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

100 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு : இத்தாலியில் துயர சம்பவம்!!

இத்தாலி – லம்பேடுசாவுக்கு அருகில், சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிர் பிழைத்த சுமார் அறுபது பேர் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மேலும் உயிர் பிழைத்தவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதிக சுமைக் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பத்துடன் மோதிய லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!!

நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று நானுஓயா பங்களாவத்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமுற்ற சாரதியும் மற்றொருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

அதேவேளை, விபத்தின் காரணமாக லொறிக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா,

ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது. இதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள்

செலுத்தும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.