கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பலி!!

அனுராதபுரத்தில் சம்பவித்த கோர விபத்தில் 21 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கல்னேவ கலங்குட்டிய பகுதியில் உயிரிழந்த பெண்ணின் காதலன் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற நிலையில் அவரது வலது கால் உடைந்து இடது காலின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விஜிதபுர புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தை ஆகியோர் பலத்த காயங்களுடன் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் தசந்தி நேத்மா பெரேரா, கலாவேவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் விஜிதபுர மகா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவியாகும்.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த அவரது காதலன் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 25 வயது ஜெயிலராக பணியாற்றி வருகின்றார்.

தங்களின் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கான சுப நிகழ்வில் கலந்து கொள்ள இருவரும் கல்னேவாவின் கலங்குட்டியவுக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

தசாந்தி நேத்மாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளன. விபத்து குறித்து கல்னேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தாண்டிக்குளம் கொல்களணை மூடு : நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள்!!

தாண்டிக்குளம் கொல்களணை மூடு, கோ மாதா இந்து புத்த குல மாதா, தாண்டிக்குளம் கொல்களன் இந்து புத்த அறங்களின் கொல்களன் போன்ற வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளின் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபைக்கு சொந்தமான சோயா வீதியில் அமைந்துள்ள மாடுத்தொழுவத்தில் அதிகளவில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருவதாக மாநகரசபை சுகாதாரக் குழு நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையிலையிலேயே சிவசேனை அமைப்பு என உரிமை கோரி இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா மாநகரசபை வீதி, பூங்கா வீதி, மன்னார் வீதி, ஏ9 வீதி என வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையுடன் சுவரொட்டியின் கீழ்ப்பகுதியில் சிவசேனை என உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 04.08.2025 அன்று கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் ஒருவர் பலி : மற்றுமொருவர் படுகாயம்!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08.08.2025)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து : ஆறு பேர் காயம்!!

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (07.08.2025) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மத்துகம பகுதியில் இருந்து யாத்திரைக்கு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தின் பின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 வயது தங்கையின் உயிரைப் பறித்த அக்காவின் பாடசாலைப் பேருந்து!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பள்ளிப் பஸ் முன் சக்கரத்தில் சிக்கி 3 வயது ஆஷியா என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது அக்காவை பார்த்ததும் ஓடி சென்ற தங்கை ஆஷியா பஸ்சின் முன்புற சக்கரத்தின் அருகில் சென்றாள்.

இதை அறியாத சாரதி பஸ்ஸை இயக்கியதால் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும் சாரதியை கைது செய்யக்கோரி தேன்கனிக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியான புனித், கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள கரோதி கிராமத்தைச் சேர்ந்தவர். ப்ரீத்தியின் கணவர் சுந்தரேஷ் ஆட்டோ ஓட்டுநராகவும், ப்ரீத்தி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவராகவும் இருந்தார்.

ப்ரீத்தி புனித்துக்கு பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை அனுப்பினார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ப்ரீத்தி புனித்திடம் காதல் தெரிவித்து, நேரில் சந்திக்க அழைத்தார்.

ப்ரீத்தி, தனது நண்பரின் மகளின் சடங்கில் கலந்து கொள்வதாக வீட்டில் கூறிவிட்டு, இருவரும் ஒரு லாட்ஜில் தங்கி ஒன்றாக இருந்துள்ளனர். புனித்துடன் மீண்டும் நேரம் செலவிட ப்ரீத்தி விரும்பினார், புனித் மறுத்ததால் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இருவரும் வீடு திரும்பும் போது புனித் அவளை கட்டரகட்டா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு உச்சமடைய கல்லால் அடித்து ப்ரீத்தியை கொலை செய்து பின்னர், உடலை தனது விவசாய நிலத்தில் கொண்டு சென்று, தென்னை ஓலையால் மறைத்து வைத்தார்.

ப்ரீத்தி வீடு திரும்பாததால், அவரது கணவர் சுந்தரேஷ் ஹாசன் எக்ஸ்டென்ஷன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ப்ரீத்தியின் தொலைபேசி கே.ஆர்.பேட்டை பகுதியில் செயல்பட்டதை கண்டறிந்த பொலிஸார், புனித்தை தொடர்பு கொண்டபோது, அவர் ப்ரீத்தி தனது காரில் தொலைபேசியை விட்டுவிட்டு பேருந்தில் சென்றதாக கூறினார். இதற்கிடையில், கரோதி கிராமவாசிகள் ஒரு பெண்ணின் உடல் கிடைத்ததாக தகவல் அளித்தனர்.

விசாரணையில், அது ப்ரீத்தி என்று உறுதியானது. புனித் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.

காதல் கைகூடாததால் உயிரை மாய்த்த பதின்ம வயது மாணவி!!

மொனராகலையில் காதல் கைகூடாததால் பதின்ம வயது மாணவி உயிரை மாய்த்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கல்ல 16வது மைல்கள் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியின், தாய் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சிறுமி, தனது பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் மாணவி அப்பகுதியில் இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

அந்த இளைஞன் மாணவிக்கு கைத்தொலைப்பேசி ஒன்றையும் பரிசளித்துள்ளார். இந்த விவகாரம் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து அவர் தனது மகளை எச்சரித்ததுடன் , கைத்தொலைபேசியை பிடுங்கி உடைத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி பாட்டியுடன் வீட்டில் தனியாக இருக்கும் போது படிப்பதாக கூறி அறையின் கதவை மூடிக்கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் பேத்தி வெளியே வராமையால், அச்சமடைந்த பாட்டி, கதவை தட்டியுள்ளார்.

கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மாணவி கிடந்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் சிறுமையை மீட்டு உடனடியாக அவரை மீட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி எழுதிய கடிதமொன்று அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக. தெரிவித்த மொனராகலை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி : குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

பரந்தன் நகர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணுக்கு நீதி கோரியும் அவரது ஆத்ம சாந்திக்காகவும் விபத்து நடந்த இடத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (06.08.2025) இரவு 7 மணியளவில் டிப்பர் ரக வாகன விபத்தில் உயிரிழந்த சந்திரசேகரம் யதுகிரி என்பவருக்கு ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரார்த்தனையும் வாகன சாரதிகள் பாதுகாப்பாக வாகனங்களை வீதி விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களை குறைக்கவும் வேண்டி விபத்து நடைபெற்ற இடத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் நகர் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி டிப்பர் ரக வாகன விபத்தில் சந்திரசேகரம் யதுகிரி என்பவர் உயிரிழந்தார்.

செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு : கண்கலங்க வைத்த நிமிடங்கள்!!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி நேற்றையதினம் (06.08.2025) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ,எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா – செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார்.

அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வத்தீக்கான் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் கடும் வெப்பம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்,வெப்பம் மிக்க வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், வெப்பக் குறியீடு – மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை – ‘எச்சரிக்கை நிலைக்கு’ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்புறங்களில் வேளைகளில் ஈடுபட்டால் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.அதே நேரத்தில் வெப்பப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, முடிந்தவரை அடிக்கடி நிழலை நாடுமாறும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யாழில் நடந்த துயரம் : மகள் காதலனுடன் சென்றதால் தாய் விபரீத முடிவு!!

மகள் காதலனுடன் தலைமறைவான விரக்தியில் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் வங்கி ஒன்றில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த தாயார் வங்கி அலுவலக வளாகத்தில் நஞ்சருந்தி மரணமானதாக தெரியவருகின்றது.

பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபபட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கோர விபத்தில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கிய நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேன்பிந்துனுவெவ-கெகிராவ பிரதான வீதியில் யக்கல்ல 22வது சந்தி பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீட்டின் வாயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கலேன்பிந்துனுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கலேன்பிந்துனுவெவ மஹரம்பேவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜனக சம்பத் மற்றும் ஹேஷான் இஷார ஆகிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!!

வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று (06.08.2025)இரவு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். சம்பவத்தில் நட்டாங்கண்டல் பிரதேசத்தை சேர்ந்த ச.உதயராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

அவரது சடலம் பெரிய பண்டிபிரிச்சான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பறையநாலன்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் காட்டு யானை தாக்குதலில் பலி!!

வவுனியாவில் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். வவுனியா பூனாவ,குடாஹல்மில்லேவா பகுதியில் நேற்று இரவு 7.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவர் ஜே. விஜேசிங்க என்ற ஓய்வுபெற்ற பொலிஸ் ஆய்வாளர் ஆவார், ஒரு குழந்தையின் தந்தையான அவர் சுமார் 71 வயதுடையவர்.

ஓய்வு பெற்ற பிறகு, புனேவா பகுதியில் ஒரு தோட்டத்தை நடத்தி வந்த அவர், நேற்று இரவு தோட்டத்திற்குச் சென்றபோது காட்டு யானையால் தாக்கப்பட்டார். அவரது உடல் மதவாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதல்களில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர், மேலும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பிடிபட்ட மாட்டிறைச்சி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

வவுனியாவில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட சட்டவிரோத மாட்டிறைச்சி தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும், மாட்டிறைச்சியினை கிளிநொச்சியிலிருந்து அனுப்பி வைத்தவருக்கும் எதிராகவும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கடந்த (04.08.2025) அன்று மாலை கையகப்படுத்தப்பட்டமையுடன்,

குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சுகாதார பிரிவினர் மாட்டிறச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தவர், மாட்டிறைச்சியினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி இருவர் என மூவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் (05.08.2025) ஆஜர்படுத்தினர்.

இதன் போது மாட்டிறைச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தரை 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறும் முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் கிளிநொச்சியிலிருந்து மாட்டிறைச்சியினை வழங்கியவருக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.