வவுனியாவில் பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு கெளரவிப்பு!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரக் கிளையின் ஒழுங்குபடுத்தலில் வட்டார பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 03.08.2025 அன்று சாஸ்திரிகூழாங்குளத்தில் இடம்பெற்றது.

சாஸ்திரிகூழாங்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் மேளதாள வாத்திய இசை வரவேற்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு கௌரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கெளரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், உறுப்பினர்களான மகாதேவா ரவீந்திரன், திருமதி.பத்திமா கெபிரியல், திருமதி.தர்சினி கேதீஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள், வட்டார பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை கூட இல்லை ஈழத்தமிழ் பெண்ணின் சாதனை!!

இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார்.

இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,”1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன்.

சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அநுர : இப்படியொரு எளிமையான ஜனாதிபதி!!

இலங்கையின் ஜனாதிபதிகளில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிகவும் மாறுபட்ட ஒரு தலைவராக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் செயற்பாடுகளில் இருந்து மாறுபட்டு, மக்களை கவர்ந்த ஒருவராக செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதியின் செயற்பாட்டினை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

எளிமையான ஜனாதிபதி

சித் ரூ-2025 கலை நிகழ்ச்சி நேற்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது விருது வழங்கும் போது மாற்று திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும் போது, அரச தலைவர் என்ற நிலையை கடந்து, முட்டிக்காலில் அமர்ந்திருந்து திறமையாளரை மகிழ்வித்துள்ளார்.

மக்களுக்கான அரச தலைவர்

கடந்த காலங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறான பணிவினை வெளிப்படுத்தி, மக்களுக்கான அரச தலைவர் என்பதை வெளிப்படுத்தவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்றதொரு நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விருது வாங்கிய மாற்றுத்திறனாளி ஒருவர், மிகவும் சிரமப்பட்டு அவரின் காலிற்கு கீழிருந்து விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை பெண்ணின் முறைப்பாடு : சிக்கிய இந்திய அதிகாரி!!

இலங்கையின் 24 வயதான பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் கீழ் இந்திய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரே ஹைதராபாத் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் அமைந்துள்ள நிலையம் ஒன்றில் இளங்கலை இசைப் பட்டம் பயின்று வரும் 24 வயதான இந்த இலங்கை பெண், 2025 ஆகஸ்ட் 3ஆம் திகதி, இலங்கையில் இருந்து விமான நிலையத்துக்கு வந்தபோது, குறித்த அதிகாரி அவரை பின்தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் கடமையில் இருந்த அதிகாரி, பயண ஆவணங்களை சரிபார்த்த நேரத்தில் இருந்து தம்மை அவர் பின்தொடர்ந்ததாக இலங்கை பெண், பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இலங்கையில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள ஜெர்மனிய பெண் ராஜதந்திரி!!

இலங்கைக்கு பணியாற்ற வந்துள்ள ஜெர்மனியை சேர்ந்த பெண் அதிகாரியின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மனியின் புதிய துணைத் தூதரக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரா ஹெசல்பார்த் கொழும்பில் தனது அதிகாரபூர்வப் பணிகளை முச்சக்கர வண்டி சவாரி மூலம் ஆரம்பித்துள்ளார்.

இலங்கையில் இருப்பது மகிழ்ச்சியான அனுபவம் என தெரிவித்த ஹெசல்பார்த், தனது பயணத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியின் தேசிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணிக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், எனது பயணத்தை தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் விருந்தோம்பல் பற்றியும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார். இலங்கை மக்களின் விருந்தோம்பல் நம்பமுடியாத அளவுக்கு சிறந்தது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மன் தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமை எனக்கு பெரும் பாக்கியம்.

நட்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இவை அனைத்தும் ஒரு முச்சக்கர வண்டி சவாரியுடன் தொடங்குகின்றன!” என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடன் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த, அர்த்தமுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் ஊக்கமாக செயல்படவுள்ளதாக ஹெசல்பார்த் தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் 4794 இலங்கையர் உயிரிழப்பு : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கடந்த 14 வருடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்ற 4794 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3242 பேர் இயற்கை மரணம் எய்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பணியகம் தகவல்

அதோடு கைத்தொழில் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துகளால் 428 பேரும், வீதி விபத்துக்களால் 446 பேரும் உயிரிழந்துள்ளதுடன், 377 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 61 இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொழும்பு, காலி, கம்பஹா, கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2010 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 72,718 பேர் இலங்கைத் தூதரகங்களுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு இல்லங்களில் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்குத் தடை!!

எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள்,

விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை

விதிகளை மீறுவோர் மீது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை அறைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.

 

பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம் : கதறும் உறவுகள்!!

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்து விபத்து!!

யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.

இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. அதன்பின்னர் நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது.

பசுமாட்டை விற்ற கணவன் : மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்!!

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் விசைத்தறி கூலி தொழிலாளியான 44 வயதுடைய கணவன் மற்றும் இவரது மனைவி 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

குடிப்பழக்கம் கொண்ட கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவியிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் வீட்டில் உள்ள அறையில் மனைவி தூக்கில் தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிசார், மனைவியின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று கணவன், மனைவியை கொன்றதாக கூறி பொலிஸில் சரணடைந்ததுடன் அதிர்ச்சி வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.

தன் மனைவியுடன் தொடர்ந்து தகறாரில் ஈடுபட்டதுடன், வீட்டில் வளர்த்து வந்த பசுமாட்டையும், கன்றையும் விற்று விட்டேன். வீட்டில் மாடு இல்லாதது குறித்து கேட்டு மனைவி என்னுடன் சண்டையிட்டார்.

அப்போது, அவரை தாக்கினேன். அதன்பிறகு, துண்டால் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்ததை மறைப்பதற்காக, தூக்கில் தொங்க விட்டேன்.

ஆனால், எப்படியும் பொலிசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தால் சரணடைந்து விட்டேன் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

பத்தரமுல்லையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!!

கொழும்பு, பத்தரமுல்லை, அக்குரேகொட வெவ வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கம்பத்தில் மோதியதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பிய பணம் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்!!

மாத்தளை மாவட்டத்தின் நாவுல பிரதேசத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.

நண்பர் ஒருவர் மற்றொரு நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நிரோஷன் மதுசங்க குமாரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாவுல, நிகுலா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கடனாகக் கொடுத்த 75 ஆயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது, நிகுலா பகுதியில் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஒரு விவசாயி ஆகும். அவர் தனது நான்கு வயது மகனுடன் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரது மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது மருமகள் அனுப்பிய பணத்தை ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டு, சிறிது காலமாக அது கிடைக்கவில்லை எனவும் அதனால் பகலில் பணத்தை மீள கோர சென்றதாகவும் உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுதும் குறைந்த விலையில் சீனி அமைச்சர் உறுதி!!

இலங்கை சீனி நிறுவனத்தினூடாக குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு சீனி வழங்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனி நிறுவனத்தின் மொத்த விற்பனை விநியோக மையங்களின் வலையமைப்பு அடுத்த மாதத்திற்குள் 25 மாவட்டங்களில் நிறுவப்பட்டு சீனி குறைந்த விலையில் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

லங்கா சீனி நிறுவனத்தைச் சேர்ந்த பெல்வத்த மற்றும் செவனகல கரும்பு விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இந்த நிறுவனங்களின் நிதி நெருக்கடி தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன், நாங்கள் இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியபோது, பெல்வத்தவில் 3,847 ஊழியர்களும், செவனகலவில் 1,269 ஊழியர்களும் இருந்தனர்.

மேலும் நிலையான சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் 3,977 மில்லியன் ரூபாவாக இருந்தன. விவசாயிகளுக்கு 609 மில்லியன் ரூபாவும், 510 மில்லியன் ரூபா வழங்குனர்களுக்கும் 1,176 மில்லியன் ரூபா வங்கிக் கடன்கள் உட்பட 6,279 மில்லியன் ரூபா கொடுக்க வேண்டி இருந்தது.

அத்தோடு சுமார் 33,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்ட சீனி மற்றும் சுமார் 5.5 மில்லியன் லீட்டர் எத்தனோல் ஆகிவற்றோடு பொறுப்பேற்றோம். 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அனைத்து சிரமங்களையும் மீறி, பெல்வத்தையில் 14,201 மெட்ரிக் டன் சீனி உற்பத்தி செய்தோம்.

8,468 மெட்ரிக் டன்களை விற்பனை செய்ததில் 1652 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது. அவ்வாறே செவனகலயில் 877 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டினோம். ஜூலை 31 நிலவரப்படி பெல்வத்தை மற்றும் செவனகலை இரண்டிலிருந்தும் 27,292 மெட்ரிக் டன் சீனி மற்றும் 857,185 லீட்டர் எத்தனோல் தற்போது விற்பனைக்கு இருக்கிறது.

இதனால் விவசாயிகள், வழங்குனர்களுக்கு பணம் செலுத்துவதில் இரண்டு மாத தாமதம் ஏற்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் பெல்வத்தை மற்றும் செவனகலையை அரசாங்க எதிர்ப்பு மையமாக மாற்ற விவசாயிகளை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த மாணவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கேகாலை பகுதியை சேர்ந்த 24 வயதான ஆசிரி ஷானக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சாட்சியமளித்த இறந்த மாணவரின் தந்தை, மகன் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லாமையினால் அது குறித்து வினவிய போது, வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. என் மகனும் மகளும் அந்த நாயை மிகவும் நேசித்தார்கள். அந்த நாய் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டது.

நாய் இறந்த பிறகு, என் மகன் மிகவும் சோகமாக இருந்தார். பின்னர், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் மகனை அழைத்து செல்ல முன்பதிவு செய்திருந்தேன்.

கடந்த 2 ஆம் திகதி, என் மனைவி, மகன் மற்றும் மகள் என நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்தோம். காலையில், என் மகன் என்னுடன் சாப்பிட்டார். என் மகனிடம் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவர் நன்றாக இருந்தார்.

பின்னர் நான் சுமார் 8.30 மணிக்கு கேகாலை பொது மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றேன். மனைவி, மகன் மற்றும் மகள் வீட்டில் இருந்தனர். என் மகன் வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் இருந்தார்.

காலை 9.45 மணியளவில், என் மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து, சீக்கிரம் வீட்டிற்கு வரச் சொன்னார். நான் சீக்கிரம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மகன் உயிரிழந்து கிடந்தார்” என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் தாயார் தொழில் ரீதியாக மருத்துவர்கள், அவரது ஒரே சகோதரியும் மருத்துவ மாணவியாகும். உயிரிழந்த மாணவன் ஆசிரி ஷானகவின் இறுதிச் சடங்குகள் நேற்று கேகாலை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.

சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“கடவுளிடம் போகப் போறேன்” திடீரென 5வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்!!

கடவுளிடம் போகப் போறேன் எனக் கூறி திடீரென இரண்டு குழந்தைகளின் தாய், தனது வீட்டின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் அருண்குமார் ஜெயின்.

தொழிலதிபரான இவரிது மனைவி பூஜா ஜெயின். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இவர்கள் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் இருந்தனர்.

இந்நிலையில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்த பூஜா, மதியம் 2 மணியளவில் அறையில் இருந்து வெளியே வந்தப்படியே, தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து

அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இந்த ஆண்டு ராக்கி கட்ட நான் இருக்க மாட்டேன் அண்ணா ” கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் விபரீத முடிவு!!

இந்தியா முழுமைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறைகளுக்குள் சிக்கி தவிக்கும் பெண்களின் துயரம் சொல்லி மாளாது, கடந்த மாதம் தமிழகத்தில் ரிதன்யா உட்பட பல பெண்கள் தொடர்ந்து மரணித்தனர்,

அந்த சோகமே இன்னும் மாறாத சூழலில் நிலையில் நேற்று ஆந்திராவில் 24 வயதான பெண் விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதிவ்யா (24), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் இவருக்கும், ராம் பாபு என்ற நபருக்கும் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் திருமணமான ஒரே மாதத்தில், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து, ஸ்ரீ திவ்யாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மோசமாக துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு ஒரு பெண்ணின் முன்பு “இவள் எதுக்கும் லாயக்கில்லை”என பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலை கடிதத்தில் “என்னால் இந்த உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது,

எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டரும்தான் காரணம். அண்ணா.. என்னால் இந்தமுறை உன்னோடு ராக்கி கொண்டாட முடியாது” என எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். 24 -வயதே ஆன விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் இருந்திருப்பது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.