மட்டக்களப்பு இளைஞனின் உயிரை பறித்த புகையிரதம்!!

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08.07.2025) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

புகையிரத கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலத்தினை மோதிய புகையிரதத்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழைச் சேர்ந்த 19 வயது மாணவி கொழும்பு வைத்தியசாலையில் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை? மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!!

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் எவ்வித தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு சிறிது சிறிதாக மீட்சிப் பாதையில் செல்வதால், சில வருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை கிட்டத்தட்ட 18,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், குறித்த காலகட்டத்தில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி திறைசேரிக்கு எந்த ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ வழங்கவில்லை என்று மத்திய வங்கியின் மூத்த அதிகாரியொருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மீண்டும் புதிய வரியை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கை குறித்த அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய சொத்து வரியை செயல்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் தரவு சேகரிப்பில் சிறிது தாமதம் இருந்தாலும், செயல்முறை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரிகளைக் கணக்கிடுவதற்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளம் உருவாக்கப்பட உள்ளது.

மேலும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து தொடர்புடைய தரவுகளும் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை செயல்படுத்துவதற்கு சொத்து வரி முறைகள் குறித்த ஒரே நேரத்தில் விவாதங்கள் அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!

அவிசாவளை – கேகாலை வீதியில் 69 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டித் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலை உணவாக அவகோடோ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பட்டர் ஃபுரூட் (Avocado) மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது வரை, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

அவகேடா நாம் உண்ணும் போது நம் உடலில் எவ்வாறான நன்மைகளை வழங்குகின்றது என இங்கு பார்ப்போம்.

செரிமானத்திற்கு உதவும் : ஒரு நாளைக்கு சுமார் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுவதால், இந்த ஒரு உணவு உங்கள் தினசரி தேவையான அளவில் மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை நார்ச்சத்தை உங்களுக்கு வழங்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு இன்றியமையாதது. இந்த பழம் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் : அவகேடோ பழம் ஆண்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் வெண்ணெய் பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவை இந்த பாதுகாப்பு விளைவுக்கு பங்களிக்கக்கூடும்.

வெண்ணெய் பழத்தை பல வழிகளில் சாப்பிடலாம். உப்பு, மிளகு, அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அப்படியே சாப்பிடுங்கள் அல்லது சத்தான காலை உணவாக டோஸ்ட்டில் சேர்த்து சாப்பிடுங்கள்.

சாலடுகள், சாண்ட்விச்கள், முட்டைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அவகேடோ சிறந்தவை. கிரீம் சுவைக்காக ஸ்மூத்திகளில் அவகேடோவை கலக்கலாம். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

 

கொழும்பு பெண் மருத்துவர் தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08.07) உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வைத்தியர் மகேஷி விஜேரத்னவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி , மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லொறி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : மூவர் காயம்!!

மொனராகலை – பிபில வீதியில் நன்னபுராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்னும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில்,

மெதகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி விபத்து : இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயம்!!

எல்ல – வெல்லவாய வீதியில் 03ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவவ்வாய்க்கிழமை (08.07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பள்ளிவாசல் அருகே தொடரும் அனுமதியற்ற கட்டுமானம் : மாநகரசபை நடவடிக்கை!!

வவுனியா நகரில் பள்ளிவாலுக்கு அருகே கட்டப்படும் அனுமதியற்ற கட்டிடட நிர்மாணத்திற்கு எதிராகவும் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஹொரவப்பொத்தானை வீதியில் நகர பள்ளிவாசல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் மாநகரசபையின் அனுமதியின்றி நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,

இன்று (07.07) குறித்த இடத்திற்கு விஐயம் மேற்கொண்ட மாநகர துணை முதல்வர், ஆணையாளர், செயலாளர் ஆகியோர் கட்டுமானத்தினை பார்வையிட்டதுடன் அனுமதியின்றி தொடர்ச்சியாக இக் கட்டுமானத்தினை தொடர வேண்டாம் என கட்டளை விதித்தமையுடன் எச்சரிக்கை அறிவித்தலையும் ஒட்டினர்.

மேலும் மரக்கறி சந்தைக்கு முன்பாக மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இரு வர்த்தக நிலையங்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தினை அகற்றுமாறு தெரிவித்து எச்சரிக்கை சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளன.

அத்துடன் நகரை அழகுபடுத்தும் முகமாக இலுப்பையடிசந்தியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (14.07) திகதிக்கு முன்பாக அவ்விடத்திலிருந்து அகன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்து இருக்குமாறும் மீறினால் மாநகரசபையினால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையம் அகற்றப்படும் எனவும் மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெடிவைத்தகல்லில் 1000 ஏக்கர் வனப் பகுதியை அழித்து ஆக்கிரமிப்பு முயற்சி : நேரில்சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி!!

வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில் திரிவைத்தகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல்நிலங்கள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1000 ஏக்கர் வரையான பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், இதுதொடர்பில் அப்பகுதிக்குரிய வனவளத் திணைக்கள உத்தியோகத்தருடனும், வவுனியா வடக்கு பிரதேச செயலருடனும் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வெடிவைத்தகல் கிராமஅலுவலர் பிரிவில், திரிவைத்தகுளம்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன்,

மகாவலி (எல்) வலயத்திட்டத்தினூடாக பாரிய வனப்பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச்செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந் நிலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக பயிற்செய்கை மேற்கொண்டுவந்த திரிவைத்த குளம் பகுதியை முற்றாக அபகரித்துள்ள பெரும்பான்மையினத்தவர்கள் அங்கு நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருவதை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.

அத்தோடு மகாவலி (எல்) வலயத் திட்டத்தினூடாக திரிவைத்தகுளம் பகுதியை அண்டியுள்ள பாரிய வனப்பகுதிகளில், சுமார் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோத காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு அபகரிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் வனவளத் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் ஆகியோரையும் நாடிளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மேலும் இதுதொடர்பில் உரிய அமைச்சுக்களுடனும் பேசுவதுடன், பாராளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

குறித்த களவிஜயத்தில் வன்றிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் பூபாலசிங்கம், வெடிவைத்தகல்லு கிராம மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இளம் கோடீஸ்வரர் கொலை : சிக்கிய பாடசாலை மாணவன்!!

புத்தளம், கட்டுனேரிய பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் தொழிலதிபரின் உடலை மறைத்து வைத்ததற்காக சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

19 வயது மெக்கானிக் மற்றும் அவரது 15 வயது தம்பி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 15 வயது சகோதரன் மாரவில பிரதேசத்தில் உள்ள உள்ள பிரபலமான பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

இரத்தினபுரியில் பெண் ஒருவர் தங்க சங்கிலிக்காக கொலை செய்யப்பட்டதாக வெளியான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவன் அதிர்ச்சிகரமான தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

குருவிட்ட, தேவிபஹல பகுதியில் 26 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 17 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் சிறிது காலமாக அந்தப் பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவர் தொடர்ந்து நிராகரித்ததால் தான் அவரை கொலை செய்துள்ளதாக சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் கொலை

குருவிட்ட, தேவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயது ஷானிகா மதுஷானி, வேலை முடிந்து திரும்பும் போது கடந்த 2 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம் போட்டமையால் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பயணித்த வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது, மேலும் அவர் கழுத்து வெட்டி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் காப்பகம்

அவரது தங்க சங்கிலி, கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவையும் திருடப்பட்டன.

கைது செய்யப்பட்ட 17 வயது சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திறக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்த பொன்னையா தேவராசா என்கின்ற 64 வயதுடைய முதியவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மகேந்திரா ரக வாகனம் தப்பிச் சென்ற நிலையில் குறித்த வாகனத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள் கைது!!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்,

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படிருந்தது.

அது தொடர்பில் , சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு,

மருத்துவர் அதிகாரப்பூர்வ மருத்துவமனை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது.

அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்கப்பட்டன.

பல நாட்களாக மூளைச் சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் சமீபத்தில் தெரியவந்தது.

குறித்த வைத்தியரும் அவரின் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு கூட்டாளிகளும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வீழ்ச்சியடையும் தேங்காய் விலை : மக்கள் மகிழ்ச்சி!!

நாடளாவிய உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்து வருவதாலும், தேங்காய் விற்பனை அதிகரிப்பதாலும் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக, ஒரு தேங்காய் ரூபா. 220க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது, ரூபா.100 முதல் ரூபா.170 வரை தேங்காய்கள் விற்கப்படுகின்றன.

சில வியாபாரிகள், அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் தங்கள் வருமானமும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும், தற்போது சந்தையில் ஏனைய தேவையை விட தேங்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.