ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. நேற்று 13,642 வளாகங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் பெருகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

396 இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமது சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாத 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வரையான காலப்பகுதியில், 111,031 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 2,999 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குப்பைத் தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் : பொலிஸார் அதிர்ச்சி!!

மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03.07.2025) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களுக்கு இரவு இரங்கல் தெரிவித்த இளைஞன் காலையில் உயிரிழந்த சோகம்!!

யாழில் நேற்று மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனது நண்பனுக்கான அனுதாப செய்தியை முகநூலில் பதிவேற்றிய சிலமணிநேரத்திலேயே குறித்த இளைஞனும் உயிரிழந்துள்ளமை சமூக ஊடகவாசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு நேற்று விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாகினர்.

சம்பவத்தில் அதி வேகத்தில் பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பனின் இழப்பை அறிந்து இரங்கலை வெளியிட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரும் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனும் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், திடீர் நெஞ்சுவலியால் பாதிப்புற்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸ் அவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்த பயணி : விமான நிலையத்தில் ஜெக்கெட்டை கழற்றியதால் நேர்ந்த கதி!!

இலங்கையை சேர்ந்த விமானப் பயணி ஒருவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை, தனது ஜெக்கெட்டில் மறைத்து வைத்து, 19 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

மருதானை சங்கராஜ மாவத்தையை சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரேகைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 என்ற விமானத்தின் இன்று காலை 09.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சந்தேக நபர் வந்துள்ளார்.

சுங்க அதிகாரிகள் குறித்த நபர் கொண்டு வந்திருந்த காலணிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது, ​​அதுவரை தான் அணிந்திருந்த ஜெக்கெட்டை கழற்றி அதை ஒரு நாற்காலியில் வைத்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரி, சோதனை செயல்முறையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் கழற்றிய ஜெக்கெட்டை எடுத்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 847 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரையும் குஷ் போதைப்பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

17 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்து : அதிகாலையில் நேர்ந்த துயரம்!!

இன்று (04.07.2025) அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில்,

படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உழவு இயந்திரம் விபத்து : சிறுவன் பரிதாபமாக பலி!!

அநுராதபுரத்தில் அளுத்திவுல்வெவ மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கொகாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் புதன்கிழமை (02.07.2025) மாலை இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுளள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் இருந்த சாரதியும் சிறுவனும் காயமடைந்துள்ள நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அளுத்திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகாவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்திலிருந்து விழுந்த பாடசாலை மாணவன் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03.07.2025) இடம்பெற்றுள்ளது. பேருந்து பயணித்துக்கொண்டிருக்கும் போது மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்தவுடன் பேருந்து நிறுத்தப்படுகின்றது.

அதன்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மாணவனை தூக்குகின்றார்கள். இந்தநிலையில்,இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உள்ளாடைக்குள் பாம்புகள் : வெளிநாட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கையர்!!

நாட்டிலிருந்து மூன்று மலைப்பாம்புகள் உள்ளாடைகளில் மறைத்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த குறித்த சந்தேக நபர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்த மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏற்கனவே பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர் வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை முகாமுக்கு அருகில் விபத்து!!

காலி – மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறைக்கப்படுகிறது பேருந்து கட்டணம் : வெளியான விபரம்!!

பேருந்து கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 0.55 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தின்படி இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் முன்னர் அறிவித்திருந்தாலும், கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து குறித்த முடிவு கைவிடப்பட்டது.

இதன்படி, புதிய எரிபொருள் விலை நிலவரப்படி, பேருந்து கட்டணங்களை 0.55 சதவீதத்தால் மட்டுமே குறைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பேருந்து கட்டணமான 100 ரூபாவில் எந்த மாற்றமும் இருக்காது. வழக்கமான சேவைகளுக்கு ரூ.27, இரண்டாவது கட்டணத்திற்கு ரூ.35, மற்றும் மூன்றாவது கட்டணம் ரூ.45.

பொது சேவைகள், அரை சொகுசு சேவைகள், அதி சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளுக்கும் இந்த பேருந்து கட்டணக் குறைப்பு பொருந்தும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

காற்பந்து உலகில் அதிர்ச்சி : திருமணமான 10 நாட்களில் உயிரிழந்த காற்பந்து வீரர்!!

லிவர்பூல் கிளப் மற்றும் போர்த்துக்கல் அணியின் முன்கள கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் டியோகோ மற்றும் 26 வயதான அவரது சகோதரர் ஆண்ட்ரே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஜோட்டாவிற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஜோட்டாவின் மறைவு காற்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது காற்பந்து வாழ்க்கையை பாசோஸ் டி ஃபெரெய்ரா கழகத்தில் தொடங்கிய ஜோட்டா, பின்னர் 2016இல் அத்லெட்டிகோ மாட்ரிட் கழகத்தில் சேர்ந்தார்.

2016இல் எஃப்சி போர்டோவிலும், 2017இல் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் (வோல்வ்ஸ்) அணியிலும் தற்காலிகமாக விளையாடினார். 2018இல் வோல்வ்ஸ் அணியில் நிரந்தரமாக இணைந்து, 131 போட்டிகளில் 44 கோல்கள் அடித்தார்.

தொடர்ந்து 2020இல் லிவர்பூல் கழகத்திற்காகவும் போர்த்துக்கல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவர் நாடு கடத்தப்பட்டனர்!!

மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் மூவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மன்னாரிலிருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கையர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை (03) மாலை 05.20 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது இந்த இலங்கையர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் புத்தளம் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நீ்ர்கொழும்பு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து விபத்து : 15 பேர் காயம்!!

கண்டி, வத்தேகம, அரலிய உயன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (03.07.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகமவிலிருந்து குடுகல நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 15 பேர் காயமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாமையால் மாணவன் போராட்டம்!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையால் இன்றையதினம் (04.07.2025) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றுலா ஒன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார்.

இருப்பினும் இன்று காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.

இதனையடுத்து வலயக்கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அரச கரும மொழிகள் வாரம் அனுஸ்டிப்பும் சித்திரக் கண்காட்சியும்!!

தேசிய அரச கரும மொழிகள் வாரம் ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை வவுனியா மற்றும் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு அரச கரும மொழிகள் தினம் வாரத்தை நடை முறைப்படுத்துகிறது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் அரச கரும மொழிகள் தினம் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (03.07.2025) காலை 9 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அரச கரும மொழிகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் வரவேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் தமிழ் சிங்கள கலச்சார நடனம், சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கல், அதிதிகள் உரை, சிங்கள /தமிழ் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

வவுனியாவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!!

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, வவுனியா மாநகர சபையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 மற்றும் அதன் கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வ நிலையங்களை நடத்த முடியாது என தீர்மானம் எட்டப்பட்டதுடன்,

10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடஙகளில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கான மலசலகூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.