வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று (04.07.2025) காலை இடம்பெற்றது.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு செயலமர்வு!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் சித்தரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு வன்னி பிராந்திய பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான செயலமர்வு வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (03.07.2025) காலை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் (பதில்) தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் வைத்தியர் ஜிகான் குணதிலக வளவாளராக கலந்து கொண்டு,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளான, “நபர் ஒருவர் காவல்துறை காவலில் இருக்கும்போதும், காவல்துறையினருடனான கருத்து முரண்பாடுகளின் போதும் ஏற்படும் மரணங்களைத் தடுப்பது குறித்தும்,

இலங்கை காவல்துறைக்கு அனுப்பப்பட்ட 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை “மற்றும்
“மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு குறித்தான 2024 ஆண்டின் 01 இலக்க பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரை” போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குருணாகல் – கொழும்பு வீதியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!!

குருணாகல் – கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (03.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தரையிறங்குவதற்கு முன்னர் விபத்துக்குள்ளான விமானம் : மூவர் பலி!!

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.

சோமாலியாவில் அல் – ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், மொகடிஷு நகரில் உள்ள விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விமானத்தில் ஏழு பேர் இருந்ததாகவும் ஏனையவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்!!

இரத்தினபுரியில் தங்க சங்கிலிக்காக இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குருவிட்ட, தேவிபஹல – தொடன்எல்ல வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெண்ணின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, அவரது தங்க சங்கிலியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கத்திக்குத்து காயங்களுடன் சரிந்து விழுந்த பெண், இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குருவிட்ட, தேவிபஹல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருவிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கோர விபத்து : அதீத வேகத்தால் பலியான இரு இளைஞர்கள்!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (02.07.2025) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர்களில் ஒருவர் திங்கட்கிழமை (30) மோட்டார் சைக்கிள் ஒன்றினை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புத்தூர் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்த கம்பத்துடன் மோதியது.

இதில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

லொறி மற்றும் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று (03) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வந்த லொறி, எதிரே வந்த டிப்பருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி காயமடைந்து உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பரை ஓட்டிச் சென்ற சாரதி இடத்தைவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு!!

ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02.07.2025) பகல் இடம்பெற்றுள்ளது.

ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 வருட காதல் : பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில், காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசித்து வருபவர் ராகவேந்திரா யாதவ்(28). அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) எனும் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ரச்சிதாவுக்கு, அவருடைய பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து மீண்டும் அவரது காதலன் ரட்சிதா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பேசினார். ஆனால் தங்களுடைய பெண்ணை தருவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதே நேரத்தில் இளைஞரின் வீட்டிலும் இவர்களது திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் மன வேதனையில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. வனப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையின் படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் வைத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

26,000 அடி உயரத்தில் இருந்து திடீரென சரிந்த விமானம் – கதறி அழுத பயணிகள்!!

26,000 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சரிந்ததால் பயணிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

ஜப்பான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங்737 விமானம் ஒன்று கடந்த ஜூன் 30 ஆம் திகதி, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதில், விமான பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவை நோக்கி, 26,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானம், திடீரென கீழே சரிய தொடங்கியுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 10 நிமிடங்களில் 36,000 அடியிலிருந்து 10,500 அடிக்குக் விரைவாகக் கீழே இறங்கியுள்ளது.

கேபினில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, பயணிகள் உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதில், தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சியில் கண் விழித்தனர்.

விமானத்தை தரையில் மோதி விபத்தை சந்திக்க போகிறது என பயந்த பயணிகள் பலரும், உடனடியாக தங்கள் குடும்பத்தினருக்கு உயில், வங்கி கடவுச்சொல் மற்றும் காப்பீட்டுத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் இறுதித்தகவலை அனுப்ப தொடங்கியுள்ளனர்.

மேலும், விமானிகள் உடனடியாக அவசரநிலையை அறிவித்து, ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

இதில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு, இரவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இழப்பீடாக, 15,000 யென் (இந்திய மதிப்பில் ரூ.8,945) வழங்கப்பட்டது.

விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகள் பலரும், கண்ணீர் மல்க தங்களது பயண அனுபவம் குறித்து பேசினர்.

சமீபத்தில், அகமதாபாத்தில் போயிங் ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று, விபத்தை சந்தித்தில், 274 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மற்றொரு போயிங் விமானத்தில் நடந்துள்ள சம்பவம் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

யுனெஸ்கோவின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் இலங்கையின் வரலாற்று அடையாளம்!!

சீகிரியா யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் துசித் மென்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சீகிரிய குன்றில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்.அவற்றை அகற்றுவதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவில்லையாயின் யுனெஸ்கோ உலக கலாசார பாரம்பரிய பட்டியலிலிருந்து சீகிரியா நீக்கப்படும் அபாயம் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

தற்போதைக்கு அவ்வாறான அபாயம் இல்லை என்றாலும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற முற்படாவிட்டால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண் வேடமிட்டு மகனுக்கு அழகு பார்த்த தாய் : குடும்பமே உயிரிழந்த சோகம்!!

ராஜஸ்தானில் கணவன், மனைவி மற்றும் இரு மகன்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லால் மேக்வால்(வயது 35), இவரது மனைவி கவிதா( வயது 32), இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர்.

கடைசி மகனான ராமதேவ்(வயது 8) என்பவருக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக நேற்று காலை நால்வரின் உடல்களும் வீட்டின் அருகில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

செவ்வாயன்று மாலை இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது, அன்றைய தினம் மேக்வால் தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நிலையில் இது நடந்துள்ளது.

மேக்வால் மற்றும் கவிதா இருவரும் தங்களது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

அவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், மூன்று பேர் இதற்கு காரணம் என்றும், மேக்வாலின் இளைய சகோதரர் காரணம் எனவும் எழுதப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய கவிதாவின் மாமா, மேக்வால் தனியாக வீடு கட்ட நினைத்தார் என்றும் இதற்கு தாய் மற்றும் இளைய சகோதரர் தடையாக இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்தியாவுக்கு தப்பியோடிய முல்லைத்தீவு நபர் உட்பட மூவர் நாடுகடத்தல்!!

இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்துக்குச் சென்றனர்.

மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல்தீடையில் தஞ்சம் அடைந்ததாக தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்டனர்.

இதனையடுத்து தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலும் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் மேற்படி மூவரும் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழில் கனடா பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசித்து வரும் 59 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். உயிரிழந்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன் : விசாரணையில் அதிர்ச்சி!!

காலியில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மனைவியை ஒரு கட்டையால் அடித்துக் கொலை செய்து, ஊருபொக்கவில் உள்ள வீட்டிற்கு அருகே கணவர் புதைத்துள்ளார்.

பின்னர் தனது மனைவியைக் காணவில்லை என்று எல்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து நாடகமாடியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் 18 வயது மகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தகவல்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு அனைத்து விவரங்களையும் வழங்கினார். “எனது மனைவியை திருமணம் செய்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன்.

மனைவிக்கு தகாத உறவுகள் இருந்தன. இது குறித்து நான் அவரை பலமுறை எச்சரித்தேன், ஆனால் அவர் உறவை நிறுத்தவில்லை.

இறுதியாக, என்னால் எதுவும் செய்ய முடியாததால், என் மனைவி மற்றும் மகளுடன் தெனியாயவின் ஊருபொக்க பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றேன்.

ஆனால் அவர் மீண்டும் தொலைபேசியில் முன்பு உறவு வைத்திருந்தவர்களுடன் ரகசியமாக உறவு வைத்திருப்பதை அறிந்து கொண்டேன்.

அது குறித்து வினவிய போது ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கொலை செய்து விட்டு உடலை வீட்டிற்கு அருகில் புதைத்தேன். இந்த சம்பவம் 2024ஆம் பெப்ரவரி மாதம் நடந்தது. 4 நாட்களுக்கு பின்னர் மனைவியை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன்.

தற்போதே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உடலை தோண்டி எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்!!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து (02) பாலி நோக்கி பயணிகள் படகு புறப்பட்டது, மேலும் 23 பேர் விபத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கப்பலில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாகவும், 14 கனரா வாகனங்கள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாக இந்தோனேசியா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. எனினும் மோசமான வானிலை காரணமாக கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.