பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சுறுத்தல்!!

மெட்டா நிறுவனத்தின் புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சங்களில் ஒன்றான கிளவுட் பிராசஸிங் (Cloud Processing) தொழில்நுட்பம், பயனர்களின் தரவுகளை மெகா-தரவகங்களில் பகுப்பாய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள், படங்கள், காணொளிகள் உள்ளிட்டவை மெட்டாவின் AI மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

அண்மையில், சில தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள், இந்த தொழில்நுட்பம் பயனர்களின் அனுமதியின்றி தகவல்களை சேகரிக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தனியுரிமை மீறலாகவும், கண்காணிப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.

மெட்டா நிறுவனம், இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல்முறை பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

அது மாத்திரமன்றி, ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் உள்ள புகைப்படங்களை அணுக மெட்டா ஏஐ-க்கு அனுமதி அளித்தால், அந்தப் படங்களை ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமித்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பயனர்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை என்பனவற்றை பெரிதும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.

மெட்டா நிறுவனம், தனது ஏஐ மொடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக பயனர்களின் தரவைப் பயன்படுத்துகிறது என முன்பிலிரந்தே குற்றம் சுமத்தப்பட்டு வருவதுடன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தரவுகள் ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இந்த புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்களின் தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் தானாகவே, குறிப்பிட்ட இடைவெளியில், மெட்டாவின் கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றப்படும்.

பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கான ஏஐ அடிப்படையிலான ஃபில்டர்கள், போட்டோ கோப்புக்கள் போன்ற உருவாக்க திட்டங்களை (Creative ideas) மெட்டாஏஐ இதன்மூலம் வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பாதுகாப்பானது என்று பயனர்களிடம் கூறப்பட்டாலும், பயனர்கள் பதிவேற்றாத புகைப்படங்களையும் மெட்டா ஏஐ அணுகும் என்பது குறிப்பிடத்தக்க தனியுரிமைச் சிக்கல் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த பயனர்கள விருப்பம் தெரிவிப்பதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம் என்றும் மெட்டா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து பல சந்தர்ப்பங்களில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வித் திட்டங்களின் போது இது குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாடசாலை நேர நீட்டிப்பு தொடர்பாக இதுவரை கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டாம் தவணையின் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்காக 6-11 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரத்தை பிற்பகல் 3:30 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்படும் என வடமேற்கு மாகாண வலயக் கல்வி இயக்குநர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை பாடத்திட்டத்தை உள்ளடக்கி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் பாடசாலையின் தினசரி கால அட்டவணையில் ஒவ்வொரு பாடத்திற்கு தலா 55 நிமிடங்கள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலையில் பதிவான சடுதியான மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30.06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 986,206 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,790 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 278,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,900 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,450 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 243,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான எயர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்!!

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 12 அன்று இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

விபத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள்

இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையிலான குழு விமானத்தின் முன் எதிர்கொள்ளும் பதிவாளரிலிருந்து தரவை அணுகியதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைப்பதும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால சம்பவங்களைத் தடுப்பதற்கும் பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று இந்தியாவின் சிவில் விமான அமைச்சகம் கூறியுள்ளது.

கதிர்காம யாத்திரிகர்களை இறக்கி விட்டு பயணித்த பேருந்து விபத்து!!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து இன்று காலை (30) கிரான்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும், உதவியாளர்கள் இருவரும் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் பரிதாபமாக பலியான ஓய்வுபெற்ற ஆசிரியை!!

பண்டாரகமயில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அதில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய சுமனாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.

மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும், முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எடுத்த விபரீத முடிவு!!

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையில் வசித்து வருபவர் 40 வயது சுக்தேவ் வோடர்கர். இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார்.

பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.

இதனையடுத்து நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அவரது மகள் தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த மகன் கூறிய விசித்திர கதை!!

தனது தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் அநுராதபுரம் – கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு, கல்னேவ – ஹெலபதுகமவில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், தடயவியல் மருத்துவ அறிக்கையில் இந்த மரணம் நீரில் மூழ்கியதால் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இறந்தவரின் தலை திசு சேதமடைந்ததால், இந்த மரணம் ஒரு கொலையா என்பதை தீர்மானிக்க பல பிரிவுகள் மூலம் விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன. குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட நேரத்தில், அந்தப் பெண்ணின் இளைய மகன், தனது தாய் அவிசாவளையைச் சேர்ந்த ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்ததாகவும்,

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் தங்களது வீட்டை விட்டுச் சென்றதால் மனமுடைந்த தாயார் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவிகள் மூவருக்கு நேர்ந்த துயரம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் 3 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 13 வயதுடைய 2 சிறுமிகளும் 16 வயதுடைய ஒரு சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரனை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், அவர்களை அவ்வாறு செய்ய கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு, 16 வயது சிறுமி பாடசாலைக்கு நடந்து செல்லும் போது அவருக்கு உதவுவதாக கூறி சந்தேக நபர் தனது காரில் ஏற்றியுள்ளார். மாணவியுடன் நட்புறவை ஏற்படுத்திய யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவியுடன் மேலும் இரண்டு மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்தும் நோக்கில் செயற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த வாகனம் விபத்து!!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் வெல்வேரி பகுதியில் டிமோ பட்டா லொரியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் நேற்று (29.06.2025) இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாதையை விட்டு விலகிய லொரி மின்கம்பத்துடன் மோதியுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்!!

கனடாவில்(Canada) சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வகையிலான காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.

இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த காணொளியே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த காணொளி கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது.

குறித்த காணொளியில், “வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும்.

ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும். இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது.

வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும். இது கனடாவின் யதார்த்தம்.

நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும்” என குறிப்பிட்டுள்ளார். கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பூநகரியில் திடீரென தீப்பற்றி எரிந்த வேனும் மோட்டார் சைக்கிளும்!!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி, முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30.06.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரு வாகனங்களும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் முற்றிவும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தேங்காய் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியமையினால் பற்றி எரிந்த வீடு!!

வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30.06.2025) காலை 8 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீட்டிலுள்ள சுவாமி அறையிலுள் விளக்கு ஏற்றுவதற்காக விளக்கினுள் தேங்காய் எண்ணெய் என நினைத்து வீட்டில் பிரிதொரு காணில் சேமித்து வைத்திருந்த பெற்றோலை ஊற்றியமையினால் வீட்டில் சுவாமி அறையில் தீப்பற்ற ஆரம்பித்தமையுடன் தீப்பரவல் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.

உடனடியாக விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் சில பொருட்களும் தீயில் கருகி நாசமாகியிருந்தன.

சம்பவ இடத்திற்கு மாநகரசபை முதல்வர், துணை முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

யாழில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம்(26) அதிகாலையில் குறித்த நபர் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலிற்காக சென்றுள்ளார்.

வழமையாக காலை 9 :00 மணியளவில் கரை திரும்பும் குறித்த கடற்றொழிலாளி அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.

இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் கட்டுமரத்தை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாமல்போன மணல்காடு கடற்றொழிலாளியை பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.

இரண்டு நாளும் சடலம் கண்டுபிடிக்கப்படாத. நிலையில் இன்று காலை சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

9 வயது சிறுமிக்கு தாயின் காதலனால் நேர்ந்த துயரம்!!

புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 9 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக தொடர்ந்து தகாத உறவுக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடையவராகும். அவர் ரயில் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் சிறுமியின் தாயின் திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதலன் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வீட்டில் வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தபோதும், வீட்டில் இல்லாதபோதும் சந்தேக நபர் தன்னைத் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் முதலில் தன்னை துஷ்பிரயோகம் செய்த திகதிகள் குறித்து தனக்கு தெளிவான நினைவில் இல்லை எனவும் 2023 ஆம் ஆண்டு முதல் தன்னை துஷ்பிரயோகம் செய்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொங்கிரீட் கல்லில் மோதிய முச்சக்கரவண்டி ; பலர் படுகாயம்…..!!

அநுராதபுரம் – கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27.06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.