2019 ஆம் வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் கால்கோள் விழா இன்று வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றது.
இதன் ஒரு அங்கமாக வவுனியா இலங்கை திருச்சசபை தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று (17.01.2018) காலை 9 மணியளவில் கால்கோள் விழா பாடசாலை முதல்வர் க.நவரட்ணம் தலமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை வலயபிரதிநிதி வசந்தி குலராஜா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜெரோன் பிரதாபன், உதவி அதிபர் தர்மரட்ணம், பகுதித்தலைவர் பு.சத்தியமூர்த்தி, சமயத்தலைவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் தரம் ஒன்றைச் சேர்ந்த பல மாணவர்கள் ஏனைய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் சிறப்பு நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன.
வவுனியா வளாகம் மாசி மாதமளவில் தனிப் பல்கலைக்கழகமாக மாறும் என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வளாகம் ஆரம்பிக்கபட்டு 28 வருடங்கள் முடிவடைந்து விட்டது. இந்த வளாகம் ஆரம்பிக்கபட்ட சமகாலத்தில் உருவான வளாகங்கள் எல்லாம் தற்போது சுயாதீன பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை சுயாதீனமான பல்கலைக்கழகமாகமாற்றுவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். பல்கலைக்கழகமாக மாற்றபடும் என்று பாராளுமன்றத்திலும் தெரிவிக்கபட்டிருந்த நிலையில் தொடர் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு சில தடைகள் இருக்கின்ற போதும் அடிப்படைக் காரணமாக வளாகத்திலே காணப்படும் கட்டுமான வசதிகள் போதாத நிலைமை இருக்கிறது.
எனவே இவ்விடயங்கள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தோம்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான், வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் ஆகியோரும் குறித்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில் வவுனியா வளாகத்தில் தற்போது இரண்டு பீடங்கள் மாத்திரமே இருக்கின்றன.
அதனை அதிகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், வவுனியா வளாகத்தை சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாற்றுவதென்றும், ஏற்கனவே இருக்கும் கற்கை நெறிகளை அதிகரிப்பதுடன் குறைந்தது நான்கு பீடங்களை கொண்ட பல்கலைக்கழகமாக மாற்றுவதென்றும் முடிவு காணப்பட்டது.
அநேகமாக எதிர்வரும் மாசிமாதம் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எமக்கு தெரியப்படுத்தபட்டுள்ளது.
பிரதமருடனும் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அவரும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார் எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வைத்து இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இந்த கொலை நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 21 வயதான Aya Masarwe என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், LaTrobe – Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்தவர் என்றும் அவுஸ்திரேலியாவில் கல்வியை தொடர்வதற்காக தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
LaTrobe பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை பார்வையிட்டதன் பின்னர் வீடு திரும்பும்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். Bundoora பிரதேசத்திலுள்ள சன நெருக்கடிமிக்க பகுதியில் புதர்கள் நிறைந்த பகுதியொன்றுக்கு பின்னால் அப்பகுதியில் சென்ற பணியாட்கள் குறித்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
புதர்களின் பின்னால் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது இவர் குற்றுயிராக காணப்பட்டார் என்றும் அவரது உடலில் மூச்சு இருந்துகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் அவர் இறந்து விட்டதாக பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Bundoora பகுதிக்கு வருகின்ற Tram வாகனத்தில் முதல் நாள் பின்னிரவில் வந்து இறங்கிய Aya Masarwe வீடு செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற வாய்ப்பை தாங்கள் மறுக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் மரணத்துக்கான எந்த சாட்சிகளோ ஆதாரங்களோ எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
உயிரிழந்த பெண் Tram வாகனத்தில் வந்து இறங்கியதற்கான கமரா காட்சி, அந்தப்பகுதி வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலுள்ள CCTV கமரா காட்சிகள், அன்றிரவு அந்த பகுதியால் பயணம் செய்தவர்களின் வாகன கமரா (DashCam) காட்சிகள் என்று பல ஆதாரங்களை விசாணை செய்து வருகிறார்கள். பொதுமக்களிடமும் உதவியை கோரியிருக்கிறார்கள். இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி குறிப்பிட்ட பெண்ணின் அடையாளம் மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் நன்மை கருதியும் அவர்களின் விபரங்களை கணனி மயப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சிகிச்சையளிக்கும் நடவடிக்கையுடன் மருந்து வழங்கும் நடவடிக்கை உட்பட அனைத்தும் இன்று முதல் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலகுவாக நோயாளர்களின் விபரங்களையும் அவர்களின் நோய்களையும் இலங்கையில் எப்பாகத்திலிருந்தும் பார்வையிட்டு கொள்ளக்கூடிய வகையில் இப் புதிய தொழிநுட்ப முறைமை பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு நோயாளர்களின் விபரங்கள் சேகரிக்க வசதி ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ள வருபவர்களுக்கு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வழங்கப்படும் கணனி சிட்டையை கொண்டுவரும் பட்சத்தில் வைத்தியர்கள் இலகுவாக கிசிச்சையினை மேற்கொள்ள முடியும் என்று வைத்தியசாலை தகவல்கள் சுட்டிகாட்டியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிரமமின்றி தமது நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலேந்திரன் பாலசந்திரன் (வயது 48) , பாலசந்திரன் தனுஜனி (வயது 44), அவர்களின் பிள்ளைகளான பாலசந்திரன் சுஜன் (வயது12) மற்றும் பாலசந்திரன் திபுஷா (வயது 08) ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர்.
அதேவேளை இவர்களுடன் விபத்திற்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தரான ரி.திவாகரனும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை பாலசந்திரன் சுஜன் எனும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரி. திவாகரன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை முற்படுத்த சுன்னாக பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை இளம் பெண் ஒருவர் அசால்ட்டாக தூக்கியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகில் இருக்கும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாளின் இரண்டாம் நாளான இன்று மட்டுப் பொங்கல் என்பதால், மதுரையில் இருக்கும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
துள்ளி வரும் மாடுகளை இளைஞர்கள் தீரத்தால் இளைஞர்கள் அடக்கினர். அதே போன்று பொங்கல் திருநாளன்று பாரம்பரிய விளையாட்டான இளவட்ட கல் தூக்கும் போட்டி கிராமங்களில் அதிகளவில் நடைபெறும்.
அந்த வகையில் சென்னை தாம்பத்தில் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 11 ஆண்களும், 1 பெண் மட்டும் கலந்து கொண்டனர்.
சுமார் 110 கிலோ எடை கொண்ட கல்லை தூக்குவதற்கு இளைஞர்களே சிரமப்பட்டு தூக்கிய போது, ஒரு பெண்ணாக கலந்து கொண்ட, அவர் அசால்ட்டாக கல்லை தூக்கி கீழே போட்டு சென்றார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34). இவருக்குத் திருமணமாகி பரத் என்கிற மகன் உள்ளார். குழந்தை பரத் கண்பார்வை இல்லாமல் பிறந்ததால் மகனுக்குச் சிகிச்சை செய்தும் பார்வை வராத நிலையில் ஏற்பட்ட பிரச்சினையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பத்மாவை விட்டுப் பிரிந்து சென்றார் கணவர்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பத்மாவுக்கு பார்வையற்ற மகனைப் பராமரிக்கும் பணியும், குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் பணியும் ஒருசேரத் தலையில் விழுந்தது.
இதனால் போதிய வருமானம் இல்லாததால் மகன் பரத்தை வளர்க்க வழி தெரியாமலும் தவித்துள்ளார் பத்மா. அடையாரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மகனைப் படிக்க வைத்துள்ளார்.
சில வேளைகளில் மகனுக்கு உணவு கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் பரிதாப நிலையைப் பார்த்தும் வறுமை நிலையை நினைத்தும் பத்மா விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டர்பர் 18 ஆம் திகதி மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என பத்மா முடிவு செய்துள்ளார்.
அஜித்தின் ஆசை பட பாணியில் மகனின் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் இவரும் தூக்கில் தொங்கியபோது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளது.
இதனால், தனது மனதை மாற்றிக்கொண்டு மகனையும் காப்பாற்றவிடலாம் என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கே பரிசோதித்த மருத்துவர் பரத் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பத்மாவை பொலிசார் கைது செய்து அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் மாலை புழல் சிறையில் அடைத்தனர்.
தாயை சிறையில் அடைத்த பின்பு மகன் பரத்தின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்னை எழுந்தது. அதன் பின்னர் பொலிசார் அதே பகுதியில் வசித்து வந்த பரத்தின் தந்தை கோபிநாத்தை அழைத்து வந்து பரத்தின் உடலை ஒப்படைத்தனர்.
கொலை செய்து சிறை சென்ற தாய், ஜாமீனில் வந்ததும் மகன் பிரிவு வாட்டியதால் விரக்தி அடைந்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்து மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடியதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப்பட்ட உணவை நாய் ஒன்று சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையே தாங்கள் நிறுத்தி விட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்தன. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றதால், பொங்கல் கொண்டாடு வதையே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.
இதுதவிர, சிங்கிலிப்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்களும், வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு, திருமணம் ஆகி வந்துள்ள பெண்களும் கூட, பொங்கல் கொண்டாடுவதில்லை.
வாழைச்சேனை – மீராவோடையில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி மற்றும் முச்சக்கரவண்டி போன்றவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய கத்தியினால் குத்தப்பட்டதில் மீராவோடை கிராமத்தை சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீர் (வயது 16) என்ற இளைஞர் பலியாகியிருந்தார்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞனை சந்தேகநபர்கள் தாங்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கிடத்தி விட்டுத் தலைமறைவாகி இருந்தனர்.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய அதிகதாரியின் உடற்கூறாய்வு அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோயுடன் ஆறு மாத குழந்தை ஒன்று அவஸ்தைப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் கர்வால் நகரில் குடியிருக்கும் தம்பதிகளின் யாதாத் தத் என்ற ஆறு மாத குழந்தைக்கே இந்த அபூர்வ நோய் தாக்கியுள்ளது.
உலகமெங்கும் இதுவரை சுமார் 1,000 பேருக்கு இந்த அபூர்வ நோய் பாதிப்பு உள்ளதாக கூறும் மருத்துவர்கள் hypoventilation syndrome என இதை குறிப்பிடுகின்றனர். இந்த அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறாக மூச்சு வாங்குவதாகவும், இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தூக்கத்திலேயே உயிர் பிரியும் நிலை ஏற்படலாம். தங்களது பிஞ்சு குழந்தையின் இந்த நோய் தாக்கத்தால் தற்போது பெற்றோர்கள் இருவரும் தூங்காமல் கண்விழித்து காவல் இருந்து வருகின்றனர்.
தங்களது மகன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்தால் உடனே தட்டி எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
இதனிடையே தமது 20 ஆண்டு கால மருத்துவ வாழ்க்கையில் இதுபோன்ற நோய் பாதிப்புடன் இதுவரை இருவரை மட்டுமே சந்தித்துள்ளதாக மருத்துவர் கங்காராம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் உடலில் diaphragm pacing system என்ற கருவியை பொருத்த வேண்டும் எனவும் அவர் குறித்த பெற்றோருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது ஆயுள் காலம் முழுவதும் உடலில் பொருத்தியிருக்க வேண்டும். மட்டுமின்றி இந்த சிகிச்சையானது இதுவரை இந்தியாவில் பயன்படுத்தபட்டதில்லை. அமெரிக்காவில் சென்று சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் கங்காராம் பரிந்துரை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கல்லூரி காதலர்கள் பொங்கல் தினமான நேற்று காதலர்கள் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசியபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்வாணன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நர்ஸிங் படிக்கும் மாணவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று இருவரும் மாலைப்பொழுதில் மலைமாத கோயிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்த காட்டுப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது இதனை காதலன் தடுக்க முயன்றுள்ளார். இதில், தமிழ்வாணன் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, காதலியை தனியாக தூக்கி சென்று நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற அரசு பள்ளி மாணவன் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து பகிர்ந்துள்ளார். தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை, மேலை நாடுகளுக்கு வருடாவருடம் கல்விப் பயணம் அழைத்துச்செல்வது வாடிக்கை.
அந்த வகையில், தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 21-ல் சென்னையிலிருந்து புறப்பட்டு, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதற்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் தெரிவாகியுள்ளான். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க பெற்றோர் கூலி வேலை பார்த்துதான் என்னைப் படிக்க வைக்கிறாங்க.
நான் இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டி போனதில்லை. ஆனா, இன்னைக்கு ஸ்வீடன், பின்லாந்து வரை செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
ஒரு விஞ்ஞானியாக வேண்டியதுதான் எனது லட்சியம். அதற்கான முதல் பயணம் தான் இந்த வெளிநாட்டு பயணம் என நெகிழ்ந்துள்ளார் சதீஷ்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள் போராடி நாய் ஒன்றினை காப்பாற்றியுள்ளனர். கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான நாளை காப்பாற்ற 7 அரை மணித்தியாலங்கள் போராடிய நெதர்லாந்து தம்பதியர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் நாய் ஒன்று விபத்துக்குள்ளாகி கால் ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற நெதர்லாந்து நாட்டு தம்பதியினர் அதனை அவதானித்துள்ளனர்.
அவர்கள் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் பயணிக்கும் ரயிலில் கண்டி நோக்கி செல்லவிருந்த இருவராகும்.
இதன்போது பயணத்தை இடையில் நிறுத்திய வெளிநாட்டு தம்பதி, நாய் மீது பரிதாபம் ஏற்பட்டு உடனடியாக கால் நடை வைத்தியர் ஒருவரை அவ்விடத்திற்கு அழைத்து வருவதற்கு முயற்சித்துள்ளனர்.
காலை 9.00 மணியளவில் காலநடை வைத்தியருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் மாலை 4 மணிக்கே அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
சுமார் 7 மணித்தியாலங்கள் இந்த நாயின் காலுக்கு சிகிச்சை வழங்க முயற்சித்த தம்பதி தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அறிவித்துள்ளார். அவர் உடனடியாக கால்நடை வைத்தியர் ஒருவரை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
7 அரை மணித்தியாலங்கள் செலவிட்டத்தன் பின்னர் அந்த வெளிநாட்டு தம்பதி மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை, தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 2 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் தீப்பரவல் இன்று காலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் நிலவிவரும் கடும் வெயில் மற்றும் கடும்காற்று காரணமாக தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தலவாக்கலை பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும், இராணுவத்தினரும் பொதுமக்களும் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்பாசன வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று காலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது சுமார் 15 நிமிடங்கள் வரையில் நீடித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரியவருகிறது.
நிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தமானில் இந்த வருடத்தில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சீனா, இலங்கையுடனான நல்லுறவிற்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. மேலும் இருநாடுகளும் அடைந்துகொள்ளத்தக்க நிலைபேறான அடைவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றது. துறைமுக நகரத்திட்டப் பணிகளில் முக்கியமானதாகக் கருதத்தக்க 269 ஹெக்டேயர் கடற்பரப்பை மண்ணால் நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
இது சீன – இலங்கை நாடுகளுக்கு இடையிலான நெடுங்கால நட்புறவின் அடையாளமாகத் திகழும். அதேபோன்று சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நெருங்கிய பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாகவும் அமையும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சுயுவான் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 269 ஹெங்டேயர் கடற்பரப்பிற்கு மணல் நிரப்பும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.