வவுனியா நகரசபையின் பத்தாவது அமர்வு : எம்.ஜி.ஆருக்கு சிலைவைக்க அனுமதி!!

 

வவுனியா நகரசபையின் பத்தாவது அமர்வு

வவுனியா நகரசபையின் உறுப்பினர்களின் பத்தாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18.01) நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.

முக்கியமாக நகரப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுவதில் நகரசபையின் அசமந்தப்போக்கு குறித்தும் சுகாதாரத் தொழிலாளர்களின் பற்றாக்குறை குறைத்தும் விவாதிக்கப்பட்டதுடன்,

அண்மையில் வவுனியா நகரத்தின் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக மதுபானசாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கு எவ்வாறு நகரசபை அனுமதி வழங்கியது என நகரசபை உறுப்பினர் த.பரதலிங்கம் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த நகரசபை தவிசாளர் இ.கௌதமன் மதுபானசாலைக்கு அனுமதி அளித்தது மதுவரித்திணைக்களம் என பதிலளித்திருந்தார். அத்துடன் மதுபானசாலை அமைப்பதற்கு கடை வழங்கிய கட்டிட உரிமையாளர் அருகில் மாணவர்களின் மேலதிக வகுப்பிற்கு கட்டிடத்தை வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆருக்கு வவுனியா நகரத்தின் மையப்பகுதியில் சிலை அமைப்பது தொடர்பாக நகரசபை உறுப்பினர் ரி.ராஜலிங்கம் அவர்களினால் முன்மொழிவு ஒன்று வாக்கெடுப்புக்காக சபையில் முன்வைக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவானது நகரசபை தவிசாளரினால் சபையின் முடிவிற்கு விடப்பட்ட நிலையில் 21 உறுப்பினர்களை கொண்ட சபையில் 18 உறுப்பினர்கள் ஆதரவாகவும் பாஸ்கரன் ஜெயவதனி மற்றும் சமந்தா செபநேசராணி ஆகிய இருவர் எதிராகவும் ஒருவர் சமூகமளிக்காத நிலையில் தீர்மானம் பெரும்பான்மை பெற்றதன் காரணமாக எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க அனுமதி வழங்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை அமைச்சரின் காளை வீரரின் காற்சட்டையை கழற்றியதால் சலசலப்பு!!

 

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. லை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் அடக்கினர்.

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் வளர்ப்பு காளை வாடி வாசலை விட்டு வெளியே சீறி வந்தபோது அடக்க முயன்ற மாடுபிடி வீரர் ஒருவரின் கால் சட்டையை கழற்றிவிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு அதன் பின்னர் இயல்புநிலையில் போட்டி தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகளும், 697 வீரர்களும், பங்கேற்றனர். இந்த போட்டியில், 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டது.

சுமந்திரன் எம்.பிக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு!!

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் சுமந்திரனுக்கு வரவேற்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்ற வீதி மற்றும் ஆலய புணரமைப்பு செய்யப்பட்மை தொடர்பான “கம்பெரிலிய அபிவிருத்தி யுத்தம்” என்னும் திட்டத்தின் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி சுமந்திரனுடைய புகைப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. குறித்த பதாகையில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய புகைப்படங்கள் மீது எந்தவிதமான வர்ணங்களும் பூசப்படவில்லை.

எனினும் சுமந்திரனுக்கு எதிர்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்தப் பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வதிவிட விசா வழங்குவதன் மூலம் இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது திட்டத்தின் நோக்கம்.

நிரந்தர வதிவிட வஜசாவை பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளை பெற முடியும்.

இதன்மூலம் இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை குத்தகைக்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனுகூலங்கள் முக்கியமானவை என ஹெட்டியாராச்சி கூறினார்.

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஐயாயிரம் பேர் இரட்டை பிரஜாவுரிமைக்காக காத்திருப்பதாகவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் ஏற்பட்ட விபரீதம் : வெளிநாட்டிலிருந்து வந்தவரின் அவல நிலை!!

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அழுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இத்தாலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை ஏற்பட்டதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ சேரம் பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெலி ஹோட்லுக்கு அருகில் உள்ள ரயில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இத்தாலி பிரஜை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையின் தலைநகரில் தமிழரின் அடையாளமாக திகழும் சட்டத்தரணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற 25 சிரேஸ்ட சட்டத்தரணிகள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் காலை சத்திய பிரமாணம் செய்துள்ளனர்.

இந்த சத்தியபிரமாண வைபவத்தில் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரப்படுத்திக் கொள்வதை விரும்பாது, தமிழ் மக்கள் பிரச்சினைகளில் சிக்கும் போது தனது வாதத்திறமையால் வெற்றிப் பெற்றுக் கொடுத்த சட்டத்தரணி கே.வி.தவராசாவிற்கு ஜனாதிபதியால் மிகச் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

1903ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிகாலத்தில் முதன் முதலாக மூன்று சிரேஸ்ட சட்டத்தரணிகளான, மூவருக்கு( பொன்னம்பலம் இராமநாதன், தோமஸ் டி சம்பயோ, பரட்ரிக் டோநொஜ்ட்) ராஜசட்டத்தரணியாக பதவி வழங்கப்பட்டது தொடக்கம் இராணி சட்டத்தரணியாக Queen Councel சத்தியபிரமாணம் எடுத்த சட்டத்தரணிகள் முதல் 1972ஆம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முதல் வழக்காக குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து கடந்த கார்த்திகை மாதம் மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கு வரை பல நூற்றக்கணக்கான வழக்குகளில் அரசியல் கைதிகளுக்காக ஆஜராகியவர்.

குற்றவியல் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, பாணந்துரை மற்றும் நீர்கொழும்பு ஆகிய மேல் நீதிமன்றங்களில் 38 வருடங்களாக வாதாடி, பல அரசியல் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச்சட்டம், மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பபட்ட இளைஞர்கள், யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள் பொறியியளாளர் உள்ளக சர்வதேச ஊடகவியளாளர்கள் கோவில் தர்மகர்த்தாக்கள் கிறிஸ்தவமதப் போதகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள், சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், புலம்பெயர் தமிழர்கள், வங்கி முகாமையாளர் என சமூகத்தின் பல தரப்பட்டவர்களுக்காகவும் ஆஜராகிய வழக்குகளான

(1) கலதாரி குண்டுத் தாக்கதல் வழக்கு

(2) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பிரிவு 157

(3) விடுதலைப் புலிகளின் கடற்புலி பகிரதி கைதும் விடுதியும் (பிரான்ஸ்)

(4) ஊடகவியளாளர், பரமேஸ்வரி, சுசந்திகா

(5) வத்தளை எலகந்த மின்மாற்று நிலைய தாக்குதல்

(6) டென்மார்க் சித்ரா நாடு கடத்தல் வழக்கு

(7) மேஜர் முத்தலிப் கொலை முயற்சி வழக்கு

(8) பாரமி குலதுங்க கொலை வழக்கு

(9) ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதி கைதும் விடுதலையும்

(10) விடுதலைப் புலிகளுடன் நிதித்தொடர்பு கொண்டதாக கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை

(11) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு

(12) முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கு

(13) முன்னால் வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு

(14) குறிபிட்டு கூறக் கூடிய இந்த வழக்குகளில் அரசியல் கைதிகள் விடுதலையும் என்பவைகள் அடங்கும்.

தமிழ் பேசும் சமூகம் சார்ந்த சட்டதரணிகளில் இவருடன் சேர்த்து இன்னுமொருவர் சத்தியபிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை : பாடசாலை அதிபர் கடிதம்!!

 

வவுனியா ஓமந்தையில் மதுபான நிலையம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென கடிதமொன்று மதுவரி ஆணையாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் கெ.தனபாலசிங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் படி கண்டி வீதி, ஓமந்தை பகுதியில் அமைக்கப்படும் மதுபான விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருப்பதனால் பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பொது அமைப்புக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் தமது சபையினரின் அனுமதியின்றி அமைக்கப்படும் குறித்த மதுபான விற்பனை நிலையத்தினை அனுமதிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நாயை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

 

நாய் துஸ்பிரயோகம்

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் நாய் ஒன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று பலாங்கொடை நீதவான் ஜயருவான் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகியிருக்கவில்லை. சந்தேக நபரை மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

50 வயதான சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான, மூன்று மாத பொமனேரியன் நாய்க் குட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இரவு சந்தேக நபரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்க் குட்டியை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறந்த நாயின் சடலத்தை பலாங்கொடை கால்நடை மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவி : அச்சத்தில் மக்கள்!!

 

கடத்தப்பட்ட மாணவி

கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வக – இரிதாபொல நகரத்தில் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டில் இருந்து சென்ற மாணவி ஒருவர், துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தப்பட்டுள்ளார்.

எனினும் கடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்ட மாணவி அவர் அல்ல என தெரியவந்தவுடன் இடை நடுவில் விட்டுச் சென்றுள்ளனர். ஹேனயாய பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே கடத்துவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த மாணவி கடத்தல்காரர்களின் இலக்கு அல்ல என்ற போதிலும், வேறு ஒரு மாணவியை கடத்தவே இந்த கும்பல் முயற்சித்துள்ளது. கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு 2 சந்திர கிரகணங்கள், 3 சூரிய கிரகணங்கள் தென்படும் : யாழ். மற்றும் திருகோணமலை மக்களுக்கு அரிய வாய்ப்பு!!

இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்களும், மூன்று சூரிய கிரகணங்களும் உலக மக்களுக்கு தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே மாதம் 21 மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.

ஜூலை மாதம் 16ஆம் திகதி ஏற்படும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கையர்களால் காணக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் முற்றாக அவதானிக்க முடியும் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் சம்பவம் : காணொளி வெளியானது எப்படி?

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும், சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியானது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு நேற்று கொழும்பில் இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது. அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த காணொளி வெளியாகி கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஆராய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், காணொளி எவ்வாறு வெளியானது என்பது விசாரணை தொடங்கியுள்ளதாக நீதித்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!!

 

அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பகுதியில் கடமையாற்றும் அரசு ஊழியர்கள் குறித்து தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அரச ஊழியர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

இந்நிலைமை தவறும் பட்சத்தில் நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கிணங்க அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!!

 

ஐந்து பிள்ளைகளின் தாய் பலி

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று நேற்று 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நீர் இறைக்கும் மோட்டர் மூலம் நீர் இரைத்துக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக அதில் சிக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய மணிவண்ணன் சுமதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் : மாணவி வைத்தியசாலையில்!!

 

மாணவி மீது அதிபர் தாக்குதல்

வவுனியா நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி மீது நேற்றையதினம் (16.01.2018) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலமணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரையில் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக ஒமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லை என தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் கட்டிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். ஆனால் இதுவரையில் ஒமந்தை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பில் பலத்த காயங்கள் உள்ளது. ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமென தெரிவித்தார்.

வவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு!!

வவுனியா மதகு வைத்தகுளத்தில் அமைந்துள்ள சென் சூ லான் முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியை நிருபா சச்சிதானந்தன் தலைமையில் இன்று (17.01) நடைபெற்றது.

இலங்கை மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி குணரத்தின தேரர் மற்றும் வவுனியா மதகுரு சர்மா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு முன்பள்ளி மாணவர்களுக்கு ஆசிகள் வழங்கியிருந்தனர்.

சென் சூ லான் முன்பள்ளி பொங்கல் நிகழ்வை முன்னிட்டு சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தால் வழங்கப்பட்ட ஒருதொகை உலர் உணவுப்பொதிகள் மற்றும் இனிப்பு வகைகள் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் இருவருக்கு மடிக்கணணிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா!!

 

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் கால்கோள் விழா இன்று (17.01) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் வாயிலில் அதிதிகளுக்கு பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அதிதிகள் மங்கள விளக்கேற்ற இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

பாடசாலை மாணவர்களின் கலாசார நடனம் மேலைத்தேய நடனம், குழுநடனம், மாணவிகளின் அபிநய நடனம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் முதலாம் தர மாணவர்களுக்கான பாட நூல்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக செலான் வங்கி முகாமையாளர் கெ.அமுதன், பாடசாலை மேம்பாட்டு திட்ட வலயப் பிரதிநிதி என்.கே.கிறேனியம், ஆசிரிய ஆலோசகர் எம்.தேவசேனா, ஓய்வு நிலை அதிபர் ஜி.நடராஜா, பிரதி அதிபர், பகுதி தலைவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.