இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அமெரிக்க படையினர், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க ஒப்பந்தகார்களின் பயன்பாட்டுக்காக வானொலி வலையமைப்பை நடத்தி செல்ல இலங்கை அரசாங்கம் இடமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை சம்பந்தமான இரகசிய ஆவணம் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கைக்கு வரும் அமெரிக்க விமானங்கள், கப்பல் துறைமுக கட்டணங்களோ வேறு கட்டணங்களோ அறவிடப்பட கூடாது என அமெரிக்க தூதரகம் யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் அமெரிக்க படையினர் சுதந்திரமாக எந்த இடத்திற்கு செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு தனியாக தொடர்பாடல் கட்டமைப்பை ஏற்படுத்தவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக இலங்கை அரசும், அமெரிக்க அரசும் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை, ஹபரண பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் நபர் ஒருவரை கொலை செய்துள்ளமை தொடர்பிலேயே பௌத்த பிக்கு இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்குக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த பொலிஸார் பிக்கு உள்ளிட்ட மூவரை இன்று கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அனுராதபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்மில்லவெவ – கனேகொட பிரதேசத்தை சேர்ந்த சவ்பாக்யா என்ற 17 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டுத் தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த மாதம் அவர் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
அவரது தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றமையினால் அவர் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதல் தொடர்பு தந்தை மற்றும் சகோதரனுக்கு தெரியவந்தமையினால் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கறுப்பு மழை பெய்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹெதல பிரதேசத்தில் இரவு நேரத்தில் கறுப்பு மழை பெய்வதால் பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒருவகை திரவம் போன்று கறுப்பு மழை காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் இந்த கறுப்பு நிற மழை தொடர்பில் பல அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்த போதிலும் அது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வத்தளை, ஹெதல காதினல் குரே மாவத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் 1500 குடும்பங்கள் வாழ்கின்றன.
கறுப்பு மழை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கறுப்பு நிறத்திலான இந்த திரவம் விழுவதனால் பிரதேசத்தின் வீடுகள், மரங்கள், பூக்களில் இந்த திரவம் படிந்து காணப்படுகின்றன.
இதனால் அந்த பகுதி மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வான்வெளி ஊடாக பயணிக்கும் விமானங்களிலிருந்து இவ்வாறான திரவங்கள் கொட்டப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ஏ9 வீதி வழியாக வவுனியா நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிகள் கடவையினை பாதசாரிகள் கடக்க முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி நின்றுள்ளது.
இதன் போது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியின் பின் புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சுமார் 100 வருடம் பழமையான ஸ்ரீகந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரத்தேர் இன்று மதியம் 1.30 மணியளவில் வெள்ளோட்டத்தில் இறங்கியுள்ளது.
வவுனியா ஸ்ரீகந்தசாமி ஆலயத்தின் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எண்கோண பூசாந்தர சித்திரத் தேர் கடந்த 5 மாதகாலமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளதுடன் நேற்று பூர்த்தியாகியுள்ளது.
24அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத் தேர் இரண்டு கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
100வருடம் பழமையான ஆலயத்தின் வெள்ளோட்டம் இன்று இடம்பெறுகின்ற அதேவேளை நாளை தேர் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
ஸ்காட்லாந்தில் 16 வயதில் பள்ளியில் விட்டு வெளியேறிய மாணவி தற்போது, வருடத்திற்கு £1 மில்லியன் வரை சம்பாதித்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர் லிவ் கான்லான் (20). இவர் தன்னுடைய 16 வயதில், ஆசிரியரை சந்தித்து, படிப்பை நிறுத்திக்கொள்வதாக கூறியுள்ளார். அப்போது இதனை கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதற்கு பதிலாக நான் புதிதாக ஒரு தொழில் துவங்க போகிறேன் என கூறிவிட்டு, கான்லான் பள்ளியிலிருந்து நடையை கட்டியுள்ளார்.
அந்த இளம் தொழிலதிபர், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, ஆன்லைன் விற்பனை மூலம், முதல் வருடம் 5,000 பவுண்டுகள் சம்பாதித்து அசத்தியுள்ளார். அதன் பிறகு, ThePropertyStagers என ஒரு இணையதளத்தை துவங்கி அதில், எந்தவொரு நிதி ஆதாரமும் இல்லாமல் வெற்று வீடுகளை உருவாக்கி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
அதன் முதல் ஆண்டில் £ 30,000 பவுண்டுகள் என, இரண்டாவது ஆண்டில் £ 1 மில்லியன் பவுண்டுகள் வரை சம்பாதித்துள்ளார். கான்லான் தற்போது ஒரு வருடத்திற்கு 300 க்கும் அதிகமான வீடுகளை வாங்கி மெருகேற்றி வருகிறார்.
மேலும் அவருக்கு கீழ் 10 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். இதில் அவருடைய தாய் அலி (52) மற்றும் சகோதரர் ஜாக் (22) ஆகியோரும் அடங்குவர். இந்த வெற்றிக்கு பின்னால் நிச்சயமாக என்னுடைய தந்தையும், நம்பிக்கையாக லோன் கொடுத்த வங்கியுமே உள்ளது என கான்லான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காதலில் விழுந்த தருணம் குறித்து நடிகர் விஷால் முதல் முறையாக பகிர்ந்துள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா என்பவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. விஷால் கூறியதாவது, விசாகப்பட்டினத்தில் ’அயோக்யா’ பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது அறிமுகமானார் அனிஷா. பார்த்ததுமே பிடித்துப் போனது.
அவரை கடவுள் அனுப்பியதாக நினைத்துக் கொண்டேன். பின்னர் நண்பர்களாக பழகினோம், நாளடைவில் அவரை நான் காதலிக்க ஆரம்பித்தேன். நான்தான் காதலைச் சொன்னேன். அவர் உடனே சம்மதம் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து சம்மதம் சொன்னார். அனிஷா, தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் அவரது வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு புலியை தூங்க செய்வதற்கான பயிற்சியளித்தார். அது தொடர்பான நடத்தை பயிற்சியை அவர் கற்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது.
மார்ச் மாதம் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இன்று (18.01) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தினர் வழிமறித்த போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 31 வயதுடைய தா.விக்கினேஸ் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் குறித்த தனியார் பேரூந்தின் நடத்துனர் மற்றும் சாரதியினை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார். இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த கொழும்பு மருதானையை சேர்ந்த 41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற நபர் இன்று (18.01) மதியம் 1மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை வைத்தியசாலையில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சையில் 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்று வருகிறார் முதியவர் ஒருவர். தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், தனது கடையின் வெளியே இருக்கும் பலகையில் தினம்தோறும் ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் எழுதி வைப்பார்.
டீ குடிக்க வருபவர்கள் அந்த திருக்குறளை படித்து செல்வர். சிலர் திருக்குறளை படிப்பதற்காகவே இவரின் கடைக்கு வருவதுண்டு. அப்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தன்று தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
அதன்படி திருவள்ளுவர் தினமான நேற்றும் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ விற்றார். அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு திருக்குறளையும் அதன் மேன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த பெரியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இப்படி ஒரு பக்கம் நம் முதியோர்கள் தமிழை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சில பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் பிள்ளைகள் தமிழில் பேசுவதையே தடை செய்து வைத்திருக்கும் கொடுமையை எங்கே சென்று சொல்வது.
இந்தோனேஷியாவில் செயல்பட்டு வந்த முத்து பண்ணைக்குள் இருந்த முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
700 கிலோ எடை கொண்டிருக்கும் மெரி என்ற முதலைக்கு 44 வயதாகும் டீசி டுவோ என்ற பெண்மணி உணவு கொடுக்க சென்றபோது தவறுதலாக வேலிக்குள் விழுந்துள்ளார். இதில், முதலை அப்பெண்ணை கடித்து குதறியதில் உயிரிழந்துள்ளதார். இவர் இறந்து அடுத்தநாள் கழித்துதான் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு விரோதமாக இந்த முதலை வளர்க்கப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் உடல் பாகங்கள் இன்னமும் 4.4 மீட்டர் நீளம் உள்ள அந்த முதலையின் இரைப்பைக்குள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்தப் பண்ணை மற்றும் முதலை இரண்டுக்கும் உரிமையாளரான ஒரு ஜப்பானியரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். West Nusa Tenggara என்ற பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Ilham Cahyani என்ற பெண்மனி தனது கணவர் Dedi Purnama – யிடம் செல்போனின் பாஸ்வோர்ட் எண்னை தருமாறு கேட்டுள்ளார், அதற்கு கணவர் மறுத்துள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மனைவி பெட்ரோலை எடுத்து தனது கணவனின் மீது ஊற்றியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், கட்டிட உரிமையாளருக்கும் நகரபிதா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் த.பரதலிங்கம் குறித்த மதுபான நிலையம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் நகரசபையால் அனுமதி எதுவும் கொடுக்கபட்டதா என கேட்டதுடன் அதனை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன்பொழுது நகரபிதா இ.கெளதமன் குறித்த மதுபானசாலை அகற்ற வேண்டும் என சபை ஓர் தீர்மானம் கொண்டுவரவேண்டும். அத்துடன் குறித்த மதுபானசாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டிட உரிமையாளரால் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்பதுடன் எமது சமூகத்தை சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். குறித்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என்ற பரதலிங்கத்தின் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் இன்று மதியம் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் (16.01) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் குறித்த மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட பாடசாலையின் அதிபரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.