இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை : மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை!!

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் பிரதேச சபை சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் வடை ஒன்றையேனும் கையில் பிடித்து விற்பனை செய்ய முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வழங்கினால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழச் செய்த பொலிஸ் அதிகாரி : கண் கலங்கும் மாணவர்கள்!!

 

பொலிஸ் அதிகாரி

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் முதலுதவி அளித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் செய்யும் மாணவர்களை அடித்து விரட்டும் நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு வியக்க வைப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக மாணவனுக்கு தேவையான முதலுதவிகளை செய்துள்ளார். அதேவேளை பாதிப்பு உள்ளாகிய ஏனைய மாணவர்களுக்கும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

இதன்போது தந்தையின் பாசம் ஒன்றை இந்த பொலிஸ் அதிகாரியிடம் உணர முடிந்ததாக குறிப்பிட்டு பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டினால் நெகிழ்ந்து போன பல்கலைக்கழக மாணவர்கள் தமது அன்பையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

3 வருடங்களில் 78 நாடுகளுக்கு பயணம் : இலங்கையில் சாதனை படைத்த 22 வயது இளைஞன்!!

 

சாதனை படைத்த 22 வயது இளைஞன்

உலகின் இளம் வயது சுற்றுலா பயணியாக பெயரிடப்பட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டவரான ஒஸ்கார் ஹெராரோ ரெகுவானா நேற்று இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். 22 வயதான ஒஸ்கார் இதுவரை 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இளம் வயதில் அதிக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவராக கின்னஸ் புத்தகத்தில் அவர் தனது பெயரை சேர்க்க முயற்சித்து வருகின்றார். இது தொடர்பில் இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர்,

“எனது பெயர் ஒஸ்கார் ஹெரோரா ரெகுவானா, எனது நாடு ஸ்பெய்ன். எனக்கு தற்போது 22 வயதாகின்றது. நான் தற்போது 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளேன். நான் சிறு வயது முதலே பிடித்த நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளேன். எனக்கு 19 வயதாக இருந்த போது நான் தனியாக பயணிக்க நினைத்தேன். நான் 3 வருடங்களில் 78 நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டேன்.

எனது பெற்றோர் இதனை கொஞ்சம் கூட விரும்பவில்லை. எனினும் நான் பல நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்புகின்றேன். அந்த நாடுகளின் கலாச்சாரம் அழகுகளை ரசிக்க நான் விரும்புகின்றேன். என்னால் அழகாக பாட முடியாது. எனினும் நான் கிட்டார் ஒன்றை எடுத்துக் கொண்டே செல்வேன். எனது தனிமைக்கு அது மாத்திரமே உள்ளது.

நான் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன். ரயிலில் மாத்தறைக்கு வந்தேன். இதன் போது பல அழகிய விடயங்களை நான் பார்த்தேன். இலங்கை மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்புடையவர்கள். அதேபோன்று மிரிஜ்ஜ கடல் மிகவும் அழகானது. அழகான இயற்கை வளம் நிறைந்த அழகான கடல்களில் அதுவும் ஒன்றாகும்.

இலங்கையின் எல்ல பிரதேசம் உட்பட பல இடங்களுக்கு செல்ல ஆசைப்படுகின்றேன். இவ்வாறு சுற்றுலா பயணம் மேற்கொள்வதென்பது ஒரு சவாலாகும்.

உண்மையை கூறினால் நான் தொழில் ஒன்றையும் செய்யவில்லை. சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு பெற்றோர் தான் பணம் வழங்குகின்றார்கள். எனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் என நான் நம்புகின்றேன். இது எனக்கும் எனது நாட்டிற்கும் பெறுமையாகும்.

அடுத்த சுற்றுலா பயணத்திற்கு பாகிஸ்தான் செல்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். மீண்டும் ஒரு முறை இலங்கை வருவதற்கு எதிர்பார்க்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண் மரணம்!!

 

இலங்கைப் பெண் மரணம்

சுவிஸ்லாந்தின் Adlikon – Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் என்ற 43 வயதுடைய பெண் உயிரிந்துள்ளதுடன், 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சுவிஸ்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப் படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைகலப்பில் 16 வயது இளைஞன் குத்திக் கொலை!!

 

இளைஞன் குத்திக் கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் (வயது 16) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக புதன்கிழமை மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. இளைஞர் அணிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி இளைஞர் பலியாகியுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் தோய்ந்த இளைஞனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!!

பிரித்தானியாவை தளமாககொண்டியங்கும்“ தமிழர் மருத்துவ அறிஞர்“ நிறுவனத்தின் வேல்ஸ் கிளையால் வவுனியா பொதுமருத்துவமனையின் குழந்தைகளிற்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கபட்டிருந்தது.

நிகழ்வில் வவுனியா வைத்தியசாலையின் உதவி அத்தியட்சகர் வைத்திய கலாநிதி செந்தூர்பதிராஜா, வைத்திய நிபுணர் ஜெயபாலன், தமிழர் மருத்துவ அறிஞர் நிறுவன உறுப்பினரான விபுலேந்திரன், தாதிய பரிபாலகர் மாலா அலோசியஸ், விடுதி சகோதரி உருத்திராதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த உபகரணங்கள் வைத்தியசாலையின் சேவையை மென்மேலும் மேம்படுத்தும் என உதவி அத்தியட்சகர் செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் பொங்கல் கொண்டாட்டம்!!

வவுனியா மாவட் ட செயலக பொங்கல் விழா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 8 மணியளவில் மேலதிக மாவட்ட செயலர் ரி.திரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

பொங்கல் நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலர் எம்.ஹனிபா ஏனைய திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மட்டக்களப்பில் பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி : கதறியழும் கணவர்!!

 

கதறியழும் கணவர்

மட்டக்களப்பில் தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக்கொடுக்கவில்லை என்ற காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32) என்பவரை, திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி (26) என்பவர் நான்கரை வயது பெண் குழந்தையொன்றுக்கு தாயாவார். ஓடாவித் தொழில் செய்து வரும் நிர்மலேஸ்வரனுக்கு சில நாட்களாக தொழில்கள் எதுவும் சரிவராததால், நேற்று (15.01) தைப்பொங்கல் பெருநாளை கொண்டாடக்கூட வசதியின்றி இருந்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் (14.01) காலை விழித்தெழுந்ததும், புத்தாடை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. நான்கரை வயது மகளுடன் வீட்டின் விறாந்தையில் இருந்து கொண்டிருந்த கணவருடன், தொடர்ந்து நச்சரித்துக்கொண்டு இருந்த மனைவியிடம் புதுவருடத்துக்கு கடனுக்கு வாங்கிய ஆடைகளுக்கே இன்னும் பணம் கொடுத்து முடியல்ல. கொஞ்சம் பொறுமையாயிரு! சித்திரைக்காவது எடுத்துத் தருகிறேன் என்று கூறியபோது, கணவனோடு சண்டையிட்டு, “இரு உனக்கு காட்டுறன் வேல ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

குழந்தையோடு விளையாடிகொண்டிருந்த கணவன், வீட்டுக்குள் சென்ற மனைவியை பத்து நிமிடமாகியும் காணவில்லை என்பதால், புஸ்பா, புஸ்பா என கணவரும், அம்மா, அம்மா என குழந்தையும் அழைத்த போது, பதிலேதும் கிடைக்காததால் வீட்டின் யன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கணவன்,

படுக்கையறை காற்றாடியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு, அயலவர்களை சத்தமிட்டு அழைத்து, கழுத்தில் கட்டப்பட்டிருந்த சாறியை கத்தியினால் அறுத்து, அவசரமாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது,
கடமையிலிருந்த வைத்தியர் மூலம், இவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பெற்றுள்ளனர்.

விடயத்தை ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்க, அவர்கள் மூலம் மரணவிசாரனை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட, நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக தடயவியல் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம் : பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 31ம் திகதி அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்துள்ளனர். உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் உரிய சிகிச்சை வழங்கப்பட்ட போதும், கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காய்ச்சல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளர்.

16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர் : அதிரவைக்கும் பின்னணி!!

 

அதிரவைக்கும் பின்னணி

இந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொலிசார் சிறுமியை தேட ஆரம்பித்தனர். அப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் வரவே அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து பொலிசார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனிடையில் சிறுமிக்கு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவியுடன் காதல் : ஒரு மாதம் கழித்து எலும்பு கூடாக கிடைத்த 17 வயது மகன்!!

 

பாடசாலை மாணவியுடன் காதல்

சிவகாசி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயது மகன் எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலிங்கம் என்ற சிறுவன் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் கூடலிங்கத்தை அடித்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கூடலிங்கம் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கூடலிங்கம் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளர்.

சம்பவ இடத்தை தடவியல்துறை நிபுணர்களும், மோப்பநாய் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், கூடலிங்கம் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மறுத்த தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்!!

 

தந்தையை கொன்ற மகன்

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் தடந்தேறி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவரது மகன் செல்லக்கண்ணு கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் செல்லக்கண்ணு சண்டையிட்டு தனது மனைவியின் அம்மா வீட்டில் சென்றுள்ளார். இதனிடையே, அவ்வப்போது தந்தையை பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் செல்லகண்ணு. இந்நிலையில் அவர் தந்தையை பார்க்க வந்த இடத்தில் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து செய்துள்ளார்.

ஆனால் செல்லமுத்து பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த செல்லக்கண்ணு, வீட்டில் இருந்த ஆடு வெட்டும் கத்தியால் செல்லமுத்துவை குத்தி கொலை செய்துவிட்டு அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு வந்த பொலிசார் செல்லமுத்துவின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்ல கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் நடந்த சோகம் : நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!!

 

நீரில் மூழ்கி 8 பேர் மரணம்

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் நேற்று சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்!!

 

அசத்திய நபர்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றை தங்கத்தால் தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக தேவன் தெரிவித்துள்ளார். 1 கிராம் 900 மில்லி தங்கம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை!!

 

கொடூர கொலை

சென்னையில் ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி பகுதியில் கணவர் வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரோஜா என்ற பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

வீட்டிற்கு வந்த கணவன் இருவரும் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்சியடைந்துள்ளார். தாயும் மகளும் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய ஆவடி பொலிசார் இந்த கொலை செய்தது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து அதற்கு பார்வை வரவைத்த இளைஞன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் பார்வையிழந்த நல்ல பாம்பிற்கு பார்வை வரச் செய்து அதை பாதுகாப்பான இடத்தில் விட்ட இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாம்பு இருக்கிறது என்று தகவல் கிடைத்தால், இவர் உடனடியாக அங்கே சென்று பாம்புகளை பத்திரமாம மீட்டு காட்டுப்பகுதியில் விட்டுவிடுவார்.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி கோயமுத்தூரின் மலுமிச்சைபட்டி அருகே நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற இவர், பாம்பினை பத்திரமாக பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் பாம்பின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளார்.

சாதரணமாக நல்ல பாம்பு மனிதர்களைப் பார்த்தால் சீறும் தன்மை கொண்டவை. ஆனால் இவர் கொண்டு வந்த பாம்போ மனிதன் தொட்டால் மட்டுமே சீரியது. இதனால் அதை சற்று உற்று கவனித்த போது பாம்பின் கண்களில் அதன் தோல் உரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டுள்ளார். பாம்பின் கண்ணில் தான் பிரச்சனை, என்பதை அறிந்த இவர், உடனடியாக பவானிசாகரில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு தன்னுடைய பாம்பை கொண்டு சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையில் அசோகன் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு கட்டு விரியன் பாம்பு அடிப்பட்டு கிடந்த போது, அதற்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியவர்.

அவர் பாம்பை பரிசோதனை பார்த்த போது, பாம்பின் கண்ணில் அடிபட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார். பாம்பிற்கு மீண்டும் கண் தெரிய வேண்டும் என்றால், அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ளார்.

அதன் பின் பாம்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 24-ஆம் திகதி பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பிறகு பாம்பு வெளிச்சத்தைப் பார்க்க கூடாது என்பதால் வெளிச்சம் பரவாத இடத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

பாம்பின் நடவடிக்கைகளைக் கவனித்த மருத்துவர் பாம்பு சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரிவித்திருந்தார். அதன் படி தொடர்ந்து நான்கு நாட்கள் பாம்பின் கண் திறனை பரிசோதித்து வந்த மருத்துவர், பாம்பிற்குப் பார்வை தெரிகிறது என்பதை உறுதி செய்ததும் மீண்டும் சுரேந்திரனிடம் கொடுத்துள்ளார்.

சுரேந்திரனும் அந்த பாம்பை பத்திரமாக வாங்கிச் சென்று, ஒரு காட்டுப்பகுதியில் விட்டுள்ளார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், விவசாயம்தான் நம்முடைய முதுகெலும்பு, அப்படியான உணவு உற்பத்தியில் மனிதனுக்கு உதவியாக இருப்பதில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விவசாயிகளுக்குத் தொல்லையாக இருக்கிற எலிகளைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படியான பாம்புகளைக் கொல்வதும் அவற்றைக் காயப்படுத்துவதும் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் எதிரான செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எது விஷம் கொண்ட பாம்பு, எது விஷமில்லாத பாம்பு போன்றவை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பாம்பை கண்டவுடன் மக்கள் கொல்ல தயாராகிவிடுகின்றனர். இனிமேல் பாம்பைக் கண்டால் அருகில் இருக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுவரை சுரேந்திரன் குழுவினர் 4000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். சுரேந்திரன் தனியார் நிறுவனத்தில் இரவு நேர மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். பணி நேரம் போக இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.