யாழில் பாடசாலை மாணவர்கள் மூவரின் மோசமான செயல்!!

யாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லிணக்கபுரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பளையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்கு சென்றுள்ளனர். நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும், மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும், மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் இவர்கள் கிடந்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தகாதவார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழு வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தாம் பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாணவரொருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள அந்த மருந்தகங்களுக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குழு அங்கு பரிசோதனை மேற்கொண்டு அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக குறித்த சுகாதார தை்திய அதிகாரி குழு தெரிவித்துள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளதாக விசனம்!!

 

கோழிக்கழிவுகள்

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்று அதிகாலை வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த வேளையிலேயே இவ்வாறு கோழிக்கழிவு குப்பைகள் வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருகை தரும் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரியவருகிறது.

வெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா? கொந்தளிக்கும் மக்கள்!!

 

கொந்தளிக்கும் மக்கள்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கின்றமை தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரை பதவி விலக கோரி திருகோணமலை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் இன்று டயர்கள் எரித்தும், கடைகளை அடைத்தும் மக்கள் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுத்திட்டங்கள் மூலம் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என ஜனாதிபதிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன துவேசம் பேசிவந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்திருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஜனாதிபதிக்கு இருந்த காழ்ப்புணர்ச்சிக்கு தமிழ் மக்களை பலி கடாவாக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் இருப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமான பேச்சுகளடங்கிய கானொளிகள் வெளிவந்த நிலையில் நாடாளுமன்றில் வட, கிழக்கு இணைந்தால் ‘இரத்த ஆறு ஓடும்” என தூபமிடும் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தமிழர்கள் இருப்புக்கு ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் இந்துக்களின் வணக்கஸ்தலங்களை இடித்து மீன் சந்தை தொகுதிகளை தனது இனத்திற்கு அமைத்து கொடுத்த ஒருவரை ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மீது மைத்திரிபால சிறிசேனவிற்கு இருக்கின்ற குரோத மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் ஆதகங்களை தெரிவித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு, பாடசாலைகள், வங்கிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹர்த்தாலுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிகளில் அமைதி நிலவுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சாப்பாட்டுத் தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!!

 

மீன் முள்ளு

சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த நபர், தனது மகள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் மீன் முள்ளு குத்தியதாகவும், இந்த நிலையிலேயே அவர் சாப்பிட்ட சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் அனுமதியறையில் கடமையாற்றும் வைத்தியரிடம், தற்பொழுது தான் மதுபோதையில் இருப்பதாகவும் அதனால் முள்ளு தொண்டையில் இருப்பதை அவதானிக்க மாட்டார்கள் என நினைத்து சாப்பிட்ட சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் MGRஐ அடுத்து நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி?

 

நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி?

வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம்.ஜி.ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரில் பொது இடங்களில் சினிமா நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு நகர சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகர உப பிதா சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் வவுனியா நகரசபைக்கு எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் நகரின் முக்கிய பகுதியான தர்மலிங்கம் வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் பகுதி முச்சந்தி ஒன்றில் எம். ஜி.ஆரின் சிலை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சிலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சிலைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவர் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்தியதுடன் நகரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த நற்பணி மன்றம் பதிவு செய்யப்படவில்லை. எனவே பதிவு செய்யப்படாத ஒரு மன்றத்தின் கோரிக்கையினை நகரசபையினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு அருகில் அமைக்கப்படும் இச்சிலைக்கு பெருமளவானர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகரசபை நகர உபபிதாவிடம் தொடர்பு கொண்டபோது, அவர்களின் அனுமதிக்கடிதம் கிடைத்துள்ளது. எனினும் எமது சபையில் அவ்விடம் ஆராயப்பட்ட பின்னரே இதற்கு பதில் வழங்க முடியும் இதைவிடுத்து அப்பகுதியில் அனுமதியற்ற விதத்தில் சிலை அமைப்பதற்கு அனுமதிக்க முடியாது அத்துடன் வவுனியா பொது இடங்களில் நடிகர்களுக்கு சிலை அமைப்பதற்கு சபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறான இடங்களில் தமிழ் அறிஞர்கள், புலவர்களின் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இவ்வாறு எம்.ஜி.ஆரின் சிலை அமைப்தாக செய்திகள் பரவியதும் நடிகர் விஜயின் ரசிகர்களும் தமது தலைவரின் சிலையை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை!!

மோட்டார் வாகனங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் இந்த வருட இறுதி முதல் வானலை அலைவரிசை அடையாளத்தை (The Radio-Frequency Identification – RFID) பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே.ஜெகத் சந்திரஶ்ரீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த முறையை கொண்டு வாகனங்களை நிறுத்தாமலேயே பொலிஸாருக்கு வாகனங்களை அடையாளம் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குற்றமிழைக்கும் வாகன சாரதிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த வானலை அலைவரிசை கருவிகள் விரைவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த கருவிகள் ஏற்கனவே இந்தியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நள்ளிரவில் பெருமளவு வெளிநாட்டு பெண்களின் அட்டகாசம் : சுற்றிவளைத்த அதிரடிப் படையினர்!!

 

வெளிநாட்டு பெண்களின் அட்டகாசம்

அம்பலதொட்டை, உஸ்ஸன்கொட கடற்கரையில் பெருந்தொகையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3000 சுற்றலா பயணிகளின் பங்களிப்புடன் உஸ்ஸன்கொட கடற்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் சுற்றுலா முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா முகாம் 10 நாட்களுக்கு நடைபெறும். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலா முகாம்களை ஏற்பாடு செய்யும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதி மற்றும் போக்குவரத்து சேவைகளுக்காக அந்த பிரதேசத்தில் பல வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சுற்றுலா பயணிகளின் பயண வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாம் எல்லைக்குள் இலங்கையர்கள் எருவரும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது. தனிப்பட்ட பாதுகாப்பு சேவை ஒன்று முகாமை சுற்றி பாதுகாப்பு வழங்கியுள்ளது. எனினும் இம்முறையில் அந்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பகுதி மற்றும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சத்தமாக இசைக்கருவிகளை இசைப்பதுடன். மதுபானம் மற்றும் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உஸ்ஸன்கொட கடற்கரையில் இவ்வாறான பாரிய அளவு சுற்றுலா பயணிகளின் செயற்பாடுகள் அந்த பகுதி மக்களுக்கு சற்று சிக்கலாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த சுற்றுலா முகாம் காரணமாக இலங்கைக்கு பாரியளவு முதலீடு கிடைப்பதுடன் அந்த பகுதி மக்களுக்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம் : இரட்டிப்பு மகிழ்ச்சியில் பயணிகள்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, ஓய்வறையில் சினிமா படங்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய Sky Light தொழில்நுட்பம் ஊடாக VR சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்மூலம் விசேட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Allo Sky மற்றும் Sky Kids மூலம் புதிய திரைப்படங்கள், 2D தொழில்நுட்பத்திலான நாடகங்கள், 3D மற்றும் 360 View தொழில்நுட்பம் ஊடாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த வசதி நீண்ட விமான பயணங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமானங்களிலும் அறிமுகம் செய்ய ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.

HD சினிமா அனுபவத்தை ஆசியாவில் முதல் முறையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிமுகம் செய்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

காதலிக்கு இப்படியொரு நிலையா : காதலனின் விபரீத முடிவு : கொழும்பில் நடந்த துயர சம்பவம்!!

கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவரின் விபரீத செயற்பாடு தொடர்பில் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதல் தொடர்பு காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொரளை பேஸ்லைன் வீதியில் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யேஷான் பிரபாத் பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகனின் மரணம் தொடர்பில் சாட்சியம் வழங்கிய தந்தை,

உயிரிழந்தவர் எனது மூத்த மகன். அவர் உயர்தரத்தில் கல்வி கற்கின்றார். கடந்த 6ஆம் திகதி நானும் மனைவியும் எனது மற்ற இரண்டு மகன்களும் வீட்டில் இருந்தோம். உயிரிழந்த மகன் மேல் மாடியில் இருந்தார். அவர் சற்று கோபமாக இருந்தமையினால் மனைவியிடம் மேலே சென்று பார்க்குமாறு கூறினேன்.

பின்னர் 8 மணியளவில் மகனை உணவருந்த அழைத்த போது உணவு வேண்டாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பியவுடன் மேல் மாடிக்கு சென்று விட்டார். மீண்டும் அவரது அறைக்கு சென்று பார்க்கும் போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். மகனின் கையடக்க தொலைபேசிக்கு பல குறுந்தகவல் வந்திருந்தது. அதில் மாணவி ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் தான் இன்னும் 4 நாட்களில் உயிரிழந்து விடுவதாகவும், மகனையும் உயிரிழக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு முன்னர் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய மகன் கழுத்தை வெட்டி அந்த பெண்ணுக்கு புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். மகனின் காதலை நாங்கள் விரும்பவில்லை. மகன் இரகசியமாக தான் காதலித்தார். பின்னரே அவர் இவ்வாறு தூக்கில் தொங்கியுள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் காதலி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நான் அவரை 4 மாதங்களாக காதலித்தேன். நாங்கள் கையடக்க தொலைபேசியில் தான் பேசினோம் அவர்களின் வீட்டவர்களை எங்களுக்கு தெரியும்.

எனக்கும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தது. நான் மருந்து எடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றேன். எனக்கு வருத்தம் என அவருக்கு தெரியும். எனினும் எனது நோய் என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

எனினும் எனக்கும் எதுவும் ஆபத்தாகவிடும் என அச்சத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி : பலர் காயம்!!

 

திரையரங்கில் அடிதடி

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் நேற்று (10.11) இரவு இடம்பெற்ற அடிதடியில் பலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தென்னிந்திய திரைப்படநடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்” திரைப்படத்தை காண்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுச்சீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறியது.

குறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைக்கவசங்களால் குழுக்களாக பிரிந்து இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர். இதனால் கண்டி வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.

சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 30நிமிடங்களுக்கு பின்னரே பொலிசார் குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு நேற்று கூடியது.

இந்த கூட்டத்தின் போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்!!

 

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான டி.ஜீ.கொரநேரீஸ் எனும் 5 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மகனே அவரைக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சந்தேக நபருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் குடித்துவிட்டு, அவரது மனைவியையும் குழந்தைகளையும் தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று தப்பியதாக பொலிஸாரிடம் சந்தேக நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகனான சந்தேக நபரை (48 வயது) சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மரண பரிசோதனை நடைபெற்றதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலாந்துவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!!

 

மாணவன் பலி

அநுராதபுரம் பலாகல- புதுகேஹீன்ன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் மீது கொங்கிரீட் தூண் விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட்டு மண்டபத்தின் கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

 

செல்ஃபி

மாத்தறை கிரிந்த கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

மாத்தறை, முலட்டியான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கதிர்காமம் யாத்திரை சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

அவர்களுடன் இருந்த இந்த இளைஞன் கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வந்த அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கடற்படையின் சுழியோடிகள் அணி, காணாமல் போன இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!!

சமூக வலைத்தள ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளஙக்ளில் பொய்யான தகவல்களை பரப்புவது தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இவற்றுக்கு எதிராக சட்டத்தை இயற்றி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா, இணையத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய முடியும். அதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வவுனியா மதுபானசாலை விவகாரம் : பொது அமைப்புகள் அரச அதிபருடன் சந்திப்பு!!

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், மக்கள் குடிமனைக்கு முன்பாகவும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொது அமைப்பக்கள் நேற்று அரசாங்க அதிபரை சந்தித்திருந்தனர்.

மக்கள் குடியிருப்பு மற்றும் அரசின் கருத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக குறித்த மதுபானசாலை அமைந்துள்ளமை தொடர்பாகவும் அதனை அகற்றக்கோரி குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனருக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியாவில் நேற்று முன்தினம் ஒன்று கூடிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றக்கோரி வெகுஜனப் போராட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இந் நிலையில் நேற்று வவுனியா அரசாங்க அதிபரை சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி எழுத்து மூலமான கோரிக்கையை வழங்கியிருந்ததுடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏதுவான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபர் ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதாக பொது அமைப்புக்களிடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா நகரசபை தலைவரிடமும் இது தொடர்பாக முறையிடப்பட்ட போது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முயற்சியை எடுப்பதாகவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் நகரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.