மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடியவர் ஆகாஷ் சோபரா. 40 வயதாகும் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்றார்.

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஆகாஷ் சோப்ரா அங்குள்ள ஒரு இந்தியன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றார். அங்கு 6 உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு இந்தோனேசியன் ரூபாயில் 606,000 பில் வந்தது. அதோடு வரி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 7 லட்சம் (இந்தோனேசியன் ரூபாய் 699,930) பில் செலுத்தினர்.

தான் மதிய உணவு சாப்பிட்டதற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தனது டுவிட்டரில் பதிவு செய்து அனைவரையும் கலாய்த்து ஏமாற்ற நினைத்துள்ளார்.

இந்தோனேசியன் ரூபாய் கணக்கின் படி, ஒரு இந்திய ரூபாய்க்கு – 210 இந்தோனேசியன் ரூபாய்க்கு சமமாம். இதனால் அவர் கட்டிய 7 லட்சம் ரூபாய் பில்லுக்கு வெறும் ரூ. 3,334 இந்திய ரூபாய் தான்.

வவுனியா நொச்­சி­மோட்டையை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தின் ஒருபகுதி உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பாலம் அடிக்கடி இவ்வாறு சேதமடைவதாகவும், பின்னர் தற்காலிகமாக அதிகாரிகளால் சேதமடைந்த பகுதி மட்டும் திருத்தப்படுவதாகவும், தவிர நிரந்தரமாக அப்பாலம் அமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசண்டயீனமாக உள்ளதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இப்பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுடன் A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் பிரதான போக்குவரத்து மையமாக காணப்படுகின்றது.

இதனால் இப்பகுதிகளுக்கு இந்த பாலம் ஒன்றின் ஊடாகவே பயணத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தை தமது போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்துகின்றமையால் அதன் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பாலத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாது விரைவாக புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியை சேர்ந்த மக்களும் தொடர்ந்து இப்பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்!!

விபுலாநந்தாக் கல்லூரியில் இன்று காலை சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி உத்தியோகதரும், சிறப்பு விருந்தினராக பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி உறுப்பினர்கள், மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் மாலைவேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் தமிழ்மாமன்றத்தின் ஏற்பாட்டில் விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம்!!

வவுனியாவில் இன்று(19.07) காலை பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டது.

வவுனியா தமிழ்மாமன்றம் ஏற்பாடு செய்த நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் நிகழ்வினை ஏற்பாடுசெய்த தமிழ்மாமன்றத்தின் சார்பில் வைத்தியர் செ.மதுரகன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலங்கம், சு.காண்டீபன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.முல்லைக்குமரன், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ்மாமன்ற உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா அரசாங்க அதிபர் பயணித்த வாகனம் விபத்து!!

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பயணித்த மாவட்ட செயலக வாகனம் நேற்று இரவு அனுராதபுரம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து கலந்துரையாடல் ஒன்றினை முடித்துக்கொண்டு வவுனியாவிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அனுராதபுரம் பகுதியில் நேற்று இரவு மாவட்ட செயலகத்தின் வாகனம் வீதியிலிருந்த மாட்டுன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது

எனினும் வவுனியா மாவட்ட அரசங்க அதிபருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வேறு ஒரு வாகனத்தில் வவுனியாவை வந்தடைந்துள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல்வாதிகள், மக்களை திகைப்பில் ஆழ்த்திய பெண்!!

இலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று காலை அரிய காட்சி ஒன்றை காண முடிந்துள்ளது.

அங்கு பெண் ஒருவர் தனியாக வீதியை சுத்தப்படுத்தும் காட்சியே பலரும் கண்டுள்ளனர். அந்தப் பகுதியில் பணியாற்றும் பெண் ஊழியரே வீதியை சுத்தப்படுவதாக மக்கள் நினைத்துள்ளனர்.

இதன் பின்னர் ஆராய்ந்து பார்த்த போது அவர் ஹொரனை பிரதேச சபையின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

அவரிடம் சென்று பேசிய போது வித்தியாசமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

“பிரதேச சபை நியமிக்கப்பட்ட நாள் முதல் வீதியை சுத்தப்படுத்தி தறுமாறு நான் கேட்டு கொண்டேன். வீதியின் இரண்டு பக்கங்களும் காடுகள் போன்று காணப்படுகின்றன. அதனையும் சுத்தப்படுத்தி தரவில்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டால் சபையில் பணியாளர்கள் இல்லை என கூறுகின்றார்கள். தேடி பார்த்தால் தேவையான அளவு பணியாளர்கள் உள்ளனர்.

எனினும் அவர்கள் இந்த வேலைகளை செய்ய வருவதில்லை. அலுவலக வேலைகளை தான் செய்கின்றார்கள். வாக்களித்த மக்களின் முகத்தை எப்படி பார்ப்பது. அதனால் நானே அனைத்து வேலைகளையும் செய்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நண்பனை தாக்கி கப்பம் கோரிய நண்பர்கள்!!

நண்பனை தாக்கி, அவரிடம் இருந்த தேசிய அடையாள அட்டையை கொள்ளையிட்டு, அதனை திரும்பி கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய மூன்று பேரை உடுகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காலி, உடுகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முறைப்பாடு செய்த நபரின் நண்பர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

உடுகம தெற்கு பகுதியில் வசித்து வரும் 28 வயதான தொழிலாளியிடமே சந்தேக நபர்கள் கப்பம் கோரியுள்ளனர்.

இந்த நபர் அளுத்வத்தை சந்தி பகுதியில் வந்து கொண்டிருந்த போது இரண்டு சந்தேக நபர்கள் அங்கு சென்று தாக்கியுள்ளதுடன் அவரது சட்டை பையில் இருந்த தேசிய அடையாள அட்டையை பலவந்தமாக பறித்துச் சென்றுள்ளனர். அதனை திரும்ப கேட்ட போது 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால், அடையாள அட்டையை திரும்ப தருவதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற மற்றுமொரு நபர், பணத்தை கொடுத்தால் மாத்திரமே அடையாள அட்டையை வழங்க முடியும் எனக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து உடுகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைதசெய்துள்ளதுடன் தேசிய அடையாள அட்டையையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திடீரென மறைந்து போன நுவரெலியா!!

மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகரம் முழுவதும் பனிமூட்டத்தால் முடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் மஸ்கெலிய, பொகவந்தலாவை வீதியிலும், நுவரெலியா செல்லும் அனைத்து வீதிகளும் கடும் பனி மூட்டத்தால் மறைத்துள்ளது.

முன்னால் பயணிக்கும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டமாக உள்ளமையினால் இந்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்துக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வாகனத்தின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை அவதானமாக ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிக பனி மூட்டத்துடன் மலையத்தில் கடும் காற்று வீசுவதோடு, இடைக்கிடையே அடை மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் வழமைக்குமாறு மாறாக அண்மைக்காலமாக கடும் குளிராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அறிமுகமாகும் அதிநவீன முச்சக்கர வண்டி : சாரதிகளுக்கு மகிழ்ச்சி!!

இலங்கையில் புதிய வகை முச்சக்கர வண்டியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன், பால் மற்றும் மரக்கறி உட்பட இயற்கையான தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதியை கொண்ட முச்சக்கர வண்டியே இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இயற்கை உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை குறைத்து கொள்வதற்காக விசேடமாக இந்த முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள குளர்சாதன பெட்டி சூரிய சக்தியில் இயங்கவுள்ளது. இதனை மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

இந்த தயாரிப்பின் மூலம் மின்சாரத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த முச்சக்கர வண்டியில் ஒரே முறையில் 1000 லீற்றர் பால், 300 கிலோ இறைச்சி வகைகள் கொண்டு செல்ல முடியும்.

சீரற்ற காலநிலை காரணமாக சூரிய சக்தியை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சார்ஜ் செய்து கொள்ள கூடிய வகையில் பெட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூழலுக்கு நெருக்கமான இந்த முச்சக்கர வண்டிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

வேறு நபரை மணக்க முடிவெடுத்தால் ஆத்திரம் : நடுரோட்டில் கழுத்தறுத்து ஆசிரியை படுகொலை!!

தமிழ்நாட்டில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவித்ரா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற பவித்ரா ரோட்டில் ஒரு இளைஞரை சந்தித்தார்.

இருவரும் முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் ஏறி சென்ற நிலையில் உடனிருந்த வாலிபர் பவித்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பழனி பூங்கா ரோட்டில் ஆட்டோ சென்றபோது, பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்த வாலிபர் பின்னர் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

பவித்ராவின் கழுத்தை அறுத்தவர் அவரது உறவினர் மாயவன் என தெரியவந்துள்ளது. கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற மாயவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

மாயவனும் பவித்ராவும் காதலித்து வந்திருக்கலாம் எனவும், பவித்ராவுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாயவன் அவரை கொன்றிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி கடன் சுமை காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே பீச்ரோடு பகுதியை சேர்ந்த வேலப்பன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக சுய உதவிக்குழு மற்றும் சிலரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.

வாங்கிய பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் தவித்து வந்த பெற்றோர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களின் வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த பொலிசார் வீட்டினுள் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய வேலப்பன் மற்றும் அவரின் மனைவி அமுதாவின் உடலை கைப்பற்றினர்.

இவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் முதல் திருமணத்தை கண்டுபிடித்த மனைவி : இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!!

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த 13ம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மாயங்குக்கு ஏற்கனவே திருமணமானதை பத்ரா, தான் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் தெரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 2016-ல் இருவருக்கும் திருமணம் ஆனது. ஆனால் கடந்த மாதம் தான் மாயங்க் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என பத்ராவுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுவரை மாயங்க் மற்றும் அவர் குடும்பத்தார் கைது செய்யப்படாத நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்துவோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகையின் கடைசி வரிகள்!!

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா. கூடைப்பந்து வீரர் அருண்பாலாவை கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவரது மன வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட கடந்த 2 மாதங்களாக கணவரை பிரிந்து சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தனியாக வாழ்வது தனிமை அல்ல, நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையே தனிமை என்ற வரிகளை கடைசியாக தனது வாட்ஸ் அப்பின் முகப்புப் பக்கமாக மாற்றியிருந்தார் பிரியங்கா.

தனிமையே அவர் கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளது என கூறப்படுகிறது.

நடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய பிரபல நடிகை!!

பிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும் பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வம்சம் சீரியலில் அவருடன் நடித்த நடிகை கிருத்திகா கூறுகையில், படபிடிப்பு தளத்தில் ரொம்ப சுட்டியான பொண்ணு பிரியங்கா. விஜேவாக இருந்ததால் அந்தக் கலகலப்பும் துருதுருப்பும் எப்பவும் அவளிடம் இருக்கும்.

ஒரு நிமிடம்கூட அவளால் அமைதியா இருக்கவே முடியாது. அவளுக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் இருந்துச்சு. எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் – மனைவி பிரச்னைதான்.

ஆனாலும், அவள் என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா’னு சொல்வா. அவளுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா.

அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. ரெண்டு பேருக்குள் என்ன பிரச்னைன்னு தெரியலை. ரொம்பவே பாஸிட்டிவான பொண்ணு,

இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கல, ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பார்லர் ஓப்பன் பண்ணினாள்.

நாங்க எல்லாரும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவளைப் பார்த்தேன். இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என வருத்தப்பட்டார்.

அபூர்வ ராகங்கள் டீம் ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு அந்த குரூப்ல எல்லோரும் வருத்தப்பட்டு பேசினோம் எனவும் கூறியுள்ளார்.

கணவனை கொன்று வீட்டிலேயே புதைத்து சடலத்துடன் தங்கிய மனைவி : திடுக்கிடும் பின்னணி!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்து விட்டு அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஹசிதி கிராமத்தை சேர்ந்தவர் பாசு. இவர் மனைவி ஜமுனா தேவி. ஜமுனாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் தகாத உறவு இருந்த நிலையில் பாசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் பாசுவை கொல்ல முடிவெடுத்த ஜமுனா உணவில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டு படுக்கையறையில் பாசுவை புதைத்த ஜமுனா அங்கேயே ஒரு வாரம் எந்த பயமும் இன்றி தங்கியுள்ளார்.

ஆனால் இதன்பின்னர் சடலத்திலிருந்து நாற்றம் வர தொடங்கியதால் பயந்து போன ஜமுனா நேராக ஊர்பஞ்சாயத்து தலைவரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார்.

பாசுவின் உடலை இருவரும் சேர்ந்து எரித்து விடலாம் எனவும், அதற்கு தான் பணம் தருவதாகவும் தலைவரிடம் ஜமுனா கூறியுள்ளார்.

இதற்கு ஒப்பு கொள்ளாத தலைவர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பாசுவின் சடலத்தை கைப்பற்றியதோடு ஜமுனாவையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் ஜமுனா வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.