இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு நடத்தப்படுவதாகவும், இது தொடர்பில் பெற்றோர்களும் அவதானிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணம் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீமை சந்தித்த போதே இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டுகோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
உயர்கல்வி அமைச்சருடனான சந்திப்பில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் 52 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (12.01) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் கே.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.
வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டினைத் தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய, இன மத கட்சி பேதமின்றி எந்த மக்களுக்கு வீடுகள் இல்லையோ அந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
அத்துடன் ஓமந்தை பிரதேசத்தில் வீடில்லாத 247 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையின் உறுப்பினர் ஆர்.ஏ.அமலியா, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.ஜானக மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்த வகையில் மு.பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கும், குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் வித்தியாலயத்தினைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கும், பெரியகுளம் அ.த.க பாடசாலையினைச்சேர்ந்த 44 மாணவர்களுக்கும், வ.கொல்லர் புளியங்குளம் ஸ்ரீ ராம கிருஷ்ண வித்தியாலயத்தினைச் சேர்ந்த 38 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் நிறுவனத்தின் உப தலைவர் T.நடராசா, இணைப்பாளர் வே.பிரேமானந்தன், நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில் பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இன்று (12.01) நடைபெற்றது.
தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்விபயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பான பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
நிகழ்வில் அமைதி கல்வித்திட்டத்தின் இணைப்பாளர் பி.விமலநாதசர்மா, உளவளத்துணை ஆலோசகர் செல்வி.குகானந்தராஜா கீர்த்திகா மற்றும் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 596 பேர் என வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் அவரிடம் இன்று வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் நோக்கில் மீன்கள் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று கடந்த வருட இறுதியில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த பெண் காப்பாற்றப்பட்ட நிலையில், வவுனியாவிற்கே அழைத்து வந்து அந்த பெண்ணின் கணவன் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை பூர்வீமாக கொண்ட லண்டன் இளைஞருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். எனினும், திருமணம் முடிந்த ஒரு மாதகாலத்திற்கு பின்னர் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி நேரத்தில் கணவனின் குடும்பத்தினரால் அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணத்தை அந்த பெண்ணிடம் வினவிய போது, திருமணத்திற்கு முன்னர் இளைஞர் ஒருவரை காதலித்தாகவும், எனினும், பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து வைத்ததாவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணை வவுனியாவிற்கு அழைத்து வந்த அவரின் கணவர், நடந்ததை பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு அங்கேயே விட்டிட்டு லண்டன் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி இடமாற்றத்தினால் மனமுடைந்த அரச வங்கி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலையைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கை வங்கியில் கடமையாற்றிய ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது கணவர் மற்றும் உறவினர்கள், இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்த குறித்த பெண் தற்காலிகமாக மொரவெவ இலங்கை வங்கிக்கு இடமாற்றம் கிடைத்தமையினால் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கருத்து முரண்பாட்டின் காரணமாக அம்பலந்தொட – அரவனமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலந்தொட – பகலபெரகம – அரவனமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளகைளின் தந்தையே தனது மகனின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொலையுடன் சம்பந்தப்பட்ட மகன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டு தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், சில இந்தியர்களைப் பறவைக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
வெளியே அமர்ந்திருக்கும் அரபு மனிதர் கையில் கம்பு வைத்துக் கொண்டு, அடைபட்டுக் கிடப்பவர்களிடம் `யாருக்கு நீங்கள் சப்போர்ட் செய்வீர்கள்’ என்று கேட்கிறார். உள்ளே இருப்பவர்கள். `இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் செய்வோம்’ என்கிறார்கள்.
நீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்கள், அதனால் அமீரகத்துக்கு தான் சப்போர்ட் செய்யவேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் அமீரகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்று சொன்ன பிறகே வெளியே விடப்படுவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ அமீரகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அரபு மனிதரின் செய்கை நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அரபு நபர் மீண்டும் வெளியிட்ட வீடியோவில், நான் உள்நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை, விளையாட்டாக செய்தேன். இவர்கள் எனது தோட்டத்தில் 22 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.
மதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
திருமணமாகாத இவர் தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி தனது நண்பருடன் பழனிக்குமார் மோட்டார் சைக்களில் சென்றபோது, எதிரே 3 நபர்களுடன் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியுள்ளது.
அந்த மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி வாகனத்தை ஓட்டியவர் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மருத்துவர்கள் தெரிவித்த இந்தத் தகவலால் கதறித் துடித்த பழனிக்குமாரின் தாயார் தமது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதித்துள்ளார்.
பழனிக்குமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உடலுறுப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.
தற்போது பழனிக்குமாரின் உடல் உறுப்புகளால் 8 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். கணவரையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 65 வயதான தாயாரின் இந்த முடிவு அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
தன்மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய ஒரு நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரச் செய்து, தன் மீது சபலம் கொண்ட ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியாகிய இன்னொரு நபரையும் விட்டு, தாக்கி கொலை செய்யச் செய்த ஒரு இந்திய வம்சாவளிப்பெண், பிரித்தானியாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரின் மனைவியாக இருப்பதால் பிரபலமடைய உள்ளார்.
Mundill Mahil, சீக்கியரான Gagandip Singh (21) என்னும் தொலைக்காட்சி ஊழியர் ஒருவரை தன் அழகால் மயக்கி தனது அறைக்கு வரவழைத்தார்.
முன்பு தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய அவரை Mundill நயவஞ்சகமாக ஏமாற்றி வரவழைக்க, அவரது அறையில் மறைந்திருந்த Harvinder Shoker என்னும் சீக்கியரும், Darren Peters என்னும் நபரும் தலையில் அடித்து, மின்சார கேபிளால் கட்டி அவரது காரின் பின்பக்கத்திலேயே அடைத்து தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்தனர்.
இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட Mundillக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் லேபர் கட்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியான Varinder Singh Bola மணந்து கொண்டார் Mundill. Varinder Singh Bola தற்போது லண்டனிலுள்ள சிறு நகரம் ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
இதனால் கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற அந்த பெண், ஒரு மேயரின் மனைவியாக மரியாதைக்குரிய ஒரு நபராக மாற இருக்கிறார்.
ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.
மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரி ஹெல்மெட்டால் குறித்த இளைஞனின் தலையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு, இளைஞர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் உட்பட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி, நாவற்குழி மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் இருவர் மற்றும் பிரதேச இளைஞர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, அதிபர், ஆசிரியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை போதைப்பொருளுக்கு அடிமையாகியமையினால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் இவர்களை தண்டித்துள்ளனர்.
பின்னர் இந்த மாணவர்கள் தங்கள் நண்பர்கள் சிலரை அழைத்து சென்று பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதோடு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடாத்தியபோதே குறித்த நபர்கள் கைதுசெய்யபட்டனர்.
கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல் வடிசாராய போத்தல்கள் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்ய பயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(11.01) அதிகாலை மஹயிலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 58 வயதுடைய இஹலகம மஹயிலுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டுக்கு சென்ற போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.